யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி | |
---|---|
அமைவிடம் | |
யாழ்ப்பாணம், இலங்கை | |
தகவல் | |
வகை | அரசுப் பள்ளி |
குறிக்கோள் | கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக |
தொடக்கம் | 1890 |
அதிபர் | திரு. இரட்ணம் செந்தில்மாறன்[1] |
தரங்கள் | 6–13 |
மாணவர்கள் | 2500 வரை |
நிறம் | நீலம் மற்றும் வெள்ளை |
இணையம் | http://www.jhc.lk/ |
யாழ் இந்துக் கல்லூரி (Jaffna Hindu College) இலங்கையின் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஒரு தேசியப் பாடசாலை ஆகும்.[2][3] இது யாழ்ப்பாணத்தில் புகழ்பெற்ற பாடசாலைகளில் ஒன்றாகவும் விளங்குகிறது. இது மாணவர்களுக்குக் கல்வி புகட்டும் ஒரு பாடசாலையாக மட்டுமன்றி தமிழ் தேசிய எழுச்சியின் ஒரு சின்னமாகவும் விளங்குகிறது. இது ஒரு ஆண்கள் பாடசாலை ஆகும். 1890 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை பல்கலைக்கழகங்களின் பல துறைகளுக்கும் பெருமளவில் யாழ்ப்பாண மாணவர்களை அனுப்பும் முதன்மை நிறுவனமாக உள்ளது. இதனால், நாட்டில் அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் பல உயர் பதவிகளையும் இக் கல்லூரியின் பழைய மாணவர்கள் வகித்து வருகிறார்கள். இன்று பெருமளவில் யாழ்ப்பாணத்து மக்கள் வெளிநாடுகளில் வாழ்ந்து வருவதால் இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் சங்கங்களும் பல நாடுகளில் காணப்படுகின்றன. 1960களில் பெரும்பாலான பாடசாலைகள் அரசுடைமை ஆக்கப்பட்டதில் இருந்து இலங்கை அரசின் பொறுப்பில் இயங்கி வரும் யாழ் இந்துக்கல்லூரியில் கல்வி கற்பதற்கு மாணவர்களிடையே கடும் போட்டி உள்ளது.
வரலாறு
[தொகு]பின்புலம்
[தொகு]19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து யாழ்ப்பாணத்தில் உருவான பாடசாலைகள் அனைத்தும் கிறித்தவ மிசன்களாலேயே நடத்தப்பட்டு வந்தன. இப் பாடசாலைகள் மேனாட்டுக் கல்விமுறையை அறிமுகப்படுத்தின. ஆங்கில மொழி மூலம் கல்வி புகட்டிய இப் பாடசாலைகள் கிறித்தவ சமயத்தைப் பரப்புவதையே முக்கிய நோக்கமாகக் கொண்டிருந்தன. இதனை எதிர்த்துத் தமிழ் மாணவர்களுக்கு அவர்களது பண்பாட்டுப் பின்னணியிலேயே கல்வி புகட்ட வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டவர்களில் முதன்மையானவர் ஆறுமுக நாவலர். இவர் இதற்காகத் சைவத் தமிழ்ப் பாடசாலைகளை உருவாக்கினார். எனினும் இவை எதிர்பார்த்த அளவு வெற்றியைத் தரவில்லை. அக்காலத்தில் நிலவிய சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு மேனாட்டுக் கல்விமுறை, ஆங்கிலக் கல்வி என்பவற்றையும் தக்க வைத்துக்கொண்டே சொந்தப் பண்பாட்டையும் முன்னிலைப்படுத்த வேண்டும் என்ற நிலை உணரப்பட்டது. 1888 ஆம் ஆண்டில் ஆறுமுக நாவலரின் முயற்சியால் உருவான யாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபை, தனது நோக்கங்களில் ஒன்றாக இந்து சமயச் சூழலில் ஆங்கில வழிக் கல்வி புகட்டும் பாடசாலைகளை உருவாக்கும் எண்ணத்தை வெளியிட்டிருந்தது. எனினும் கிறித்தவ மிசன்களின் எதிர்ப்புக் காரணமாக இவ்வாறான பாடசாலைகளை அமைப்பது இயலாத ஒன்றாக இருந்தது.
தேசிய நகரப் பாடசாலை
[தொகு]இவ்வாறான பாடசாலை ஒன்றைத் தொடங்க வேண்டும் என்ற உள்ளூர் மக்களின் நோக்கம் எதிர்பாராத ஒரு முறையில் நிறைவேறியது. 1887 ஆம் ஆண்டில் வில்லியம் நெவின்சு முத்துக்குமாரு சிதம்பரப்பிள்ளை என்னும் யாழ்ப்பாணத் தமிழ்க் கிறித்தவர் ஒருவர் தேசிய நகர உயர் பாடசாலை (Native Town High School) என்னும் பெயரில் ஆங்கிலப் பாடசாலை ஒன்றைக் கிறிஸ்தவ மிசன் தொடர்புகள் ஏதுமின்றித் தனியாகவே தொடங்கினார். இப் பாடசாலை யாழ்ப்பாணத்தின் கிறித்தவப் பெரும்பான்மைப் பகுதியான பிரதான வீதிப் பகுதியிலேயே அமைக்கப்பட்டது. எனினும் இதனை நடத்துவதில் உள்ள பொருளாதாரப் பிரச்சினை காரணமாக, அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் பெயர் பெற்ற வழக்கறிஞர்களில் ஒருவரும், பண வசதி படைத்தவருமான எஸ். நாகலிங்கம் என்பாரின் துணையை சிதம்பரப்பிள்ளை நாடினார். அதனை ஏற்றுக்கொண்ட நாகலிங்கம், அதன் காப்பாளராக இருந்து அதன் நடவடிக்கைகளில் மிகுந்த அக்கறை காட்டிவந்தார். 1889 ஆம் ஆண்டில் பாடசாலையை நாகலிங்கம் அவர்களிடம் முழுதாகவே ஒப்படைத்தார் சிதம்பரப்பிள்ளை. பாடசாலையின் புதிய உரிமையாளரான நாகலிங்கம், பாடசாலையை உள்ளூர் இந்து மக்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த வண்ணார்பண்ணைப் பகுதிக்கு இடம் மாற்றினார். இதன் பெயரும் நாகலிங்கம் நகர உயர் பாடசாலை (Nagalingam Town High School) எனப் பெயர் மாற்றப்பட்டது.
இந்து உயர் பாடசாலை
[தொகு]நாகலிங்கம் இந்து சமயத்தவர். சைவ பரிபாலன சபையை உருவாக்குவதில் முன்னின்று உழைத்தவர். இதனால் அவர் தனது பாடசாலையைச் சைவ பரிபாலன சபையின் மேலாண்மையின் கீழ்க் கொண்டுவர விரும்பினார். இதற்கிணங்க 1890 ஆகஸ்ட் 19 ஆம் தேதி சபையின் தலைவர் தா. செல்லப்பாபிள்ளை என்பவரின் தலைமையில் கூடிய சபையின் செயற்குழு பாடசாலையைப் பொறுப்பேற்க முடிவெடுத்தது. பாடசாலையின் பெயரும் அவ்வாண்டிலேயே இந்து உயர் பாடசாலை (Hindu High School) என மாற்றப்பட்டு தற்போதுள்ள இடத்தில் ஒரு தற்காலிக கட்டடத்துக்கு இடம்பெயர்ந்தது. நாகலிங்கம் அவர்களே இதன் முதல் மேலாளராகவும் பொறுப்பேற்றார். 1892 இல் வில்லியம் சிதம்பரப்பிள்ளையின் மகன் என். செல்வத்துரை இதன் தலைமை ஆசிரியரானார்.
பாடசாலைக்கு நிரந்தரமான கட்டிடங்கள் தேவைப்பட்டன. இதற்கான நிலம் வாங்கப்பட்டது. கட்டிடங்களுக்கான நிதி உள்ளூரில் வீடுவீடாகத் திரட்டப்பட்டது. இந்து வணிக நிறுவனங்களும் தாராளமாக உதவின. 100 ஆண்டுகளைத் தாண்டி இன்றும் நிலைத்திருக்கும் இக் கட்டிடம் செப்டம்பர் 28, 1895 ஆம் ஆண்டில் திறந்து வைக்கப்பட்டது. நவம்பர், 1909 இல் என். செல்வதுரை கண்டி திரித்துவக் கல்லூரிக்கு தலைமை ஆசிரியராக இடமாற்றம் பெற்றுச் சென்றார். ஜி. சிவா ராவ் (G. Shiva Rau) என்பவர் இந்துக் கல்லூரிக்குத் தலைமை ஆசிரியரானார். மே 30, 1910 இல் கல்லூரியில் மாணவர்களுக்கான விடுதி (Boarding House) திறந்து வைக்கப்பட்டது.
சுவாமி விவேகானந்தர், மகாத்மா காந்தி முதல் இன்றிருக்கும் குரு சிறீரவிசங்கர் வரை பல ஆன்மீக பெரியார்கள் யாழ் இந்துக்கல்லூரிக்கு வருகை தந்து சொற்பொழிவுகள் நிகழ்த்தியிருக்கிறார்கள். இந்தியவில் மேனாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள் 2012ஆம் ஆண்டு கல்லூரிக்கு வருகை தந்திருந்தார்.
அதிபர்கள்
[தொகு]யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் அதிபர்களாக இருந்தவர்கள்:[4]
- எஸ். கோதமன் அப்பாபிள்ளை 1890 - 1892
- என். செல்வதுரை 1892 - 1909 [5]
- ஜி. சிவ ராவ் 1910 -1913
- பி. சஞ்சிவ ராவ் 1913 - 1914
- என். செல்வதுரை 1916 - 1926
- டபிள்யூ. ஏ. திரௌபே 1926 - 1927
- எம். சபரத்னசிங்க்ஹ 1927 - 1928
- வி. ஆர். வெங்கடரமணன் 1928 - 1933
- ஏ. குமாரசுவாமி 1933 - 1952
- வி. எம். ஆசைபிள்ளை 1952 - 1961
- சி. சபாரத்தினம் 1962 - 1964
- என். சபாரத்தினம் 1964 - 1971
- எம். கார்த்திகேசன் 1971 - 1971
- ஈ. சபாலிங்கம் 1971 - 1975
- பி. எஸ். குமாரசுவாமி 1975 - 1984
- எஸ். பொன்னம்பலம் 1984 - 1990
- எஸ். குகதாசன் 1990 - 1991
- ஏ. பஞ்சலிங்கம் 1991 - 1996
- ஏ. ஸ்ரீகுமரன் 1996 - 2005
- வி. கணேசராசா 2005 - 2014
- ஐ. தயானந்தராஜா 2014 - 2017
- ச. நிமலன் 2017 - 2019 செப்டெம்பர்
- இ.செந்தில்மாறன் 2019 ஒக்டோபர் - இன்றுவரை
கழகங்கள்
[தொகு]இக்கல்லூரி பல கழகங்களைக் கொண்டதாகும். பல மாணவர்கள் இதை நோக்கி வருவதற்கு இங்குள்ள கழகங்களும் காரணமாகும். இந்துக் கல்லூரியின் கழகங்கள்:
- சிறுவர் செயற்பாட்டுக் கழகம்
- கூடைபந்தாட்ட கழகம்
- இந்து இளைஞர் மன்றம்
- சேவைக்கழகம்
- சதுரங்கக் கழகம்
- சாரணர் இயக்கம்
- இன்டராக்ட் கழகம்
- செஞ்சிலுவை சங்கம்
- St. Johns Ambulance
- பூப்பந்தாட்டக் கழகம்
- விஞ்ஞான மன்றம்
- மாணவர் மன்றம்
- கவின் கலை மன்றம்
- மேலைத்தேய band group
- கீழைத்தேய இன்னிய குழு (culture band)
பழைய மாணவர் அமைப்புக்கள்
[தொகு]கல்லூரியின் பழைய மாணவர்கள் இலங்கை மற்றும் புலம்பெயர் நாடுகளில் பழைய மாணவர் சங்கங்களையும், கழகங்கள் ரீதியிலான அமைப்புக்களையும் உருவாக்கியுள்ளனர்.
- பழைய மாணவர் சங்கம் - யாழ்ப்பாணம்
- பழைய மாணவர் சங்கம் - கொழும்பு
- பழைய மாணவர் சங்கம் - விக்ரோறியா
- பழைய மாணவர் சங்கம் - சிட்னி
- பழைய மாணவர் சங்கம் - நியூஸ்லாந்து
- யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச சங்கம் - கனடா
- பழைய மாணவர் சங்கம் -ஐக்கியராச்சியம்
- பழைய மாணவர் சங்கம் - ஜேர்மனி
- பழைய மாணவர் சங்கம் - அமெரிக்கா
- பழைய மாணவர் முதல்வர் சபை
- யாழ் இந்து திரிசாரணர் குழு
கல்லூரிக் கீதம்
[தொகு]கல்லூரிக் கீதத்தில் பாடசாலையின் சிறப்புக்கள் எடுத்துக் கூறப்பட்டுள்ளன.
வாழிய யாழ்நகர் இந்துக் கல்லூரி
வையகம் புகழ்ந்திட என்றும் (வாழி)
இலங்கை மணித்திரு நாட்டினில் எங்கும்
இந்து மதத்தவர் உள்ளம்
இலங்கிடும் ஒருபெருங் கலையகம் இதுவே
இளைஞர்கள் உளம் மகிழ்ந் தென்றும்
கலைபயில் கழகமும் இதுவே பல
கலைமலி கழகமும் இதுவே - தமிழர்
தலைநிமிர் கழகமும் இதுவே
எவ்விடமேகினும் எத்துயர் நேரினும்
எம்மன்னை நின்னலம் மறவோம்
என்றுமே என்றுமே என்றும்
இன்புற வாழிய நன்றே
இறைவன தருள்கொடு நன்றே!
ஆங்கிலம் அருந்தமிழ் ஆரியம் சிங்களம்
அவையியல் கழகமும் இதுவே
ஓங்குநல் லறிஞர்கள் உவப்பொடு காத்திடும்
ஒருபெருங் கழகமும் இதுவே!
ஒளிர்மிகு கழகமும் இதுவே!
உயர்வுறு கழகமும் இதுவே!
உயிரின கழகமும் இதுவே!
தமிழரெம் வாழ்வினிற் தாயென மிளிரும்
தனிப்பெருங் கலையகம் வாழ்க!
வாழ்க! வாழ்க! வாழ்க!
தன்னிகர் இன்றியே நீடு
தரணியில் வாழிய நீடு.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-03-19. பார்க்கப்பட்ட நாள் 2018-03-17.
- ↑ Schools Basic Data as at 01.10.2010. வட மாகாண சபை. 2010. Archived from the original on 2013-12-03. பார்க்கப்பட்ட நாள் 2016-01-23.
- ↑ "Province - Northern" (PDF). Schools Having Bilingual Education Programme. கல்வி அமைச்சு. Archived from the original (PDF) on 2013-12-03. பார்க்கப்பட்ட நாள் 2016-01-23.
- ↑ "Past Principals". Jaffna Hindu College. Archived from the original on 2013-05-04. பார்க்கப்பட்ட நாள் 2016-01-23.
- ↑ Manickavasagar, K. (2 சனவரி 2007). "Jaffna Central College Old Boys' Association centenary". டெய்லிநியூசு இம் மூலத்தில் இருந்து 2013-07-03 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130703022941/http://www.dailynews.lk/2007/01/02/fea06.asp.