யானா, இந்தியா
யானா, இந்தியா | |
---|---|
கிராமம் | |
அடைபெயர்(கள்): தென்னிந்தியாவின் தூய்மையான கிராமம் | |
ஆள்கூறுகள்: 14°35′23″N 74°33′58″E / 14.5897°N 74.56625°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கருநாடகம் |
மாவட்டம் | வடகன்னட மாவட்டம் |
ஏற்றம் | 357 m (1,171 ft) |
மொழிகள் | |
• அலுவல் | கன்னடம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
சிர்சி, கும்டா ஆகியவை அருகிலுள்ள நகரங்கள் |
யானா (Yana) என்பது இந்தியாவின் கருநாடகாவின் வடகன்னட மாவட்டத்தின் கும்தாவின் காடுகளில் அமைந்துள்ள ஒரு கிராமமாகும். இது அசாதாரண சுண்ணாம்புக் கரடு அமைப்புகளுக்கு பெயர் பெற்றது. இது மேற்குத் தொடர்ச்சிமலையின் சக்யாத்ரி மலைத்தொடரில் கார்வார் துறைமுகத்திலிருந்து சுமார் 60 கிலோமீட்டர் (37 மைல்), சிர்சியிலிருந்து 40 கிலோமீட்டர் (25 மைல்), கும்தாவிலிருந்து 31 கிலோமீட்டர் (19 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. யானா உலகின் ஈரப்பதமான கிராமங்களில் ஒன்றாகும். இது கருநாடகாவின் தூய்மையான கிராமமாகவும், இந்தியாவின் இரண்டாவது தூய்மையான கிராமமாகவும் உள்ளது. கிராமத்திற்கு அருகிலுள்ள இரண்டு தனித்துவமான பாறைகள் ஒரு சுற்றுலா அம்சமாகும். மேலும் அருகிலுள்ள சாலையிலிருந்து 0.5 கிலோமீட்டர் (0.31 மைல்) அடர்த்தியான காடுகளின் வழியாக ஒரு சிறிய மலையேற்றத்தால் எளிதில் அணுகலாம்..[1][2][3][4]
இரு சிகரங்கள்
[தொகு]பைரவேசுவர சிகரம் என்றும் மோகினி சிகரம் எனவும் அழைக்கப்படும் இந்த இரண்டு பிரம்மாண்டமான பாறைகளுக்கு யானா பிரபலமானது. பிரமாண்டமான பாறைகள் திடமான கருப்பு, படிக சுண்ணாம்புக் கற்களால் ஆனவை. பைரவேசுவர சிகரம் 120 மீட்டர் (390 அடி) உயரமும், சிறியதாக இருக்கும் மோகினி சிகரம் 90 மீட்டர் (300 அடி) உயரமும் கொண்டது. பைரவேசுவர சிகரத்திற்குக் கீழே உள்ள குகைக் கோயிலால் யானா ஒரு புனித யாத்திரை மையமாகவும் அறியப்படுகிறது. அங்கு ஒரு சுயம்புலிங்கம் உருவாகியுள்ளது. இலிங்கத்தின் மேல் விமானத்திலிருந்து நீர் சொட்டுவது இந்த இடத்தின் புனிதத்தை அதிகரிக்கிறது.[1][2][3]
மகா சிவராத்திரியின் போது இங்கு நடைபெறும் விழாக்களில், தேரோட்டமும் நடத்தப்படுகிறது. இந்த இடமும், சுற்றியுள்ள மலைகளும் எப்போதும் பசுமையாக உள்ள இயற்கை காடுகளால் அறியப்படுகின்றன.[1][2][3]
நிலவியல்
[தொகு]அடர்ந்த காடுகள் மற்றும் நீரோடைகளால் சூழப்பட்ட இரண்டு பாறைகள் அல்லது மலைகள், யானா கிராமத்திற்கு அருகிலுள்ள சுற்றியுள்ள பகுதிக்கு மேலே கூர்மையாக உயர்ந்து நிற்கின்றன. அவைகள் தென்னிந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள சக்யாத்ரி மலைத்தொடரின் ஒரு பகுதியாகும். மேலும் யானாவிற்கும் முழு மலைத்தொடருக்கும் ஒரு தெளிவான அடையாளத்தை அளிக்கின்றன. முதல் பாறை மலையான பைரவேசுவர சிகரத்தில், பாறை முகத்தில் 3 மீட்டர் (9.8 அடி) அகல திறப்பு உள்ளது. இது ஒரு குகைக்குள் செல்கிறது. குகைக்குள், துர்க்கையின் அவதாரமான 'சண்டி' என்ற தெய்வத்தின் வெண்கல சிலை உள்ளது. இந்த குகைக்குள் ஒரு சுயம்புலிங்கம் உள்ளது. அதன் மேல் சுரங்கப்பாதையின் கூரையிலிருந்து நீரூற்று விழுகிறது. சண்டிதுளை என்று அழைக்கப்படும் ஒரு சிறிய நீரோட்டமாக வெளிவந்து, இறுதியில் உப்பினபட்டனத்தில் உள்ள அகனாட்சினி ஆற்றுடன் இணைகிறது. உள்ளூர் மக்கள் இதை 'கங்கோத்பவா' (கங்கை ஆறு ) என்ற ஆற்றின் தோற்றம் என்று கூறுகிறார்கள்.[1][3] 3 கி.மீ சுற்றளவில் சுமார் 61 சுண்ணாம்பு பாறை கட்டமைப்புகள் உள்ளன.
குகையில் சிவலிங்கத்தின் இயற்கையான உருவாக்கம் சுண்ணாம்புப் பாறை மற்றும் புற்றுப்பாறைகளால் உருவாகியது என்று விஞ்ஞானிகளால் கூறப்படுகிறது.[5] சிமென்ட் தொழிற்சாலை போன்ற தொழில்களுக்கு இந்தப் பாறைகளைப் பயன்படுத்துவதற்கான திட்டம் இருந்தது.[1]
8 கி.மீ. தூரத்திலுள்ள விபூதி அருவி (" விபூதி" என்றால் "சாம்பல்" (திருநீறு)) சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. இதை அடைய அரை கிலோமீட்டர் கீழ்நோக்கி மலையேற வேண்டும்.[3]
வரலாறு
[தொகு]பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் பிரித்தானிய அதிகாரி பிரான்சிஸ் புக்கானன்-ஹாமில்டன் என்பவர் 1801 இல் இந்த இடத்தை ஆய்வு செய்தார். அந்த நேரத்தில், அவரது அறிக்கையின்படி, இந்த இடத்திலும் அதைச் சுற்றிலும் பத்தாயிரத்திற்கும் அதிகமான மக்கள் இருந்தனர். பல ஆண்டுகளாக, மக்கள் தங்கள் தொழிலைத் தொடர மற்ற பகுதிகளுக்கு குடிபெயர்ந்துள்ளனர். தற்போது, இந்த இடத்தில் ஒரு சில குடும்பங்கள் மட்டுமே வசிக்கின்றன, அவற்றில் ஒன்று கோவிலின் பூசகர் குடும்பமும் ஒன்று.[1] 16 கி.மீ மலையேற்றத்துடன், யானா 20 ஆம் நூற்றாண்டில் ஒரு மலையேற்ற வீரர்களுக்கு ஒரு மகிழ்ச்சிகரமான இடமாக இருக்கிறது. பிரபலமான கன்னட திரைப்படமான 'நம்மூரா மந்தாரா ஹூவ்' இங்கு படமாக்கப்பட்டபோதும், அனைத்து சாலையும் எளிதில் அணுகக்கூடியதாக அமைக்கப்பட்டபோது, இந்த இடம் பிரபலமடைந்து. ஒவ்வொரு வாரமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது.[6]
புராணக் கதை
[தொகு]இந்து புராணங்கள் இந்த இடத்தை அசுரன் பசுமாசுரனின் வாழ்க்கையின் ஒரு நிகழ்வோடு இணைக்கின்றன. பசுமாசுரன், தனது கடுமையான தவத்தால், சிவனிடமிருந்து தான் ஒருவரின் தலையில் கையை வைத்தால், அவர் எரிந்து சாம்பலாக (பசுமம்) மாறிவிடவேண்டும் ஒரு வரத்தைக் கேட்டுப் பெற்றான். தனது வரத்தை சோதிக்கும் பொருட்டு, அவன் வரமளித்த சிவனின் தலையில் கை வைக்க விரும்பினான். அவனால் துரத்தப்பட்ட சிவன் விஷ்ணுவின் உதவியை நாடினார். சிவனுக்கு உதவுவதற்காக விஷ்ணு தன்னை மோகினி என்ற அழகான பெண்ணாக தன்னை மாற்றிக் கொண்டு. அசுரன் முன் தோன்றினார். மோகினியின் அழகால் ஈர்க்கப்பட்ட அசுரனை ஒரு நடனப் போட்டிக்கு அழைத்தார்.[2]
நடனப் போட்டியின் போது, விஷ்ணு புத்திசாலித்தனமாக தனது தலையில் கை வைத்து ஒரு நடன அசைவினை செய்தார். இந்தச் செயலின் ஈர்ப்பை உணராமல், அசுரனும் தன் தலைக்கு மேல் கையை வைத்து, தன் கைகளின் நெருப்பால் அழிந்து, சாம்பலாக மாற்றப்பட்டான்.[2] இந்தச் செயலின் போது வெளிப்பட்ட நெருப்பு மிகவும் தீவிரமாக இருந்ததால் யானா பகுதியில் சுண்ணாம்பு படிவங்கள் ஏற்பட்டன என்று நம்பப்படுகிறது. இப்பகுதியில் உள்ள இரண்டு பெரிய பாறை அமைப்புகளைச் சுற்றி காணப்பட்ட தளர்வான கறுப்பு மண் அல்லது சாம்பல் புராணக்கதைக்கு சான்றாக மேற்கோள் காட்டப்படுகிறது. அவை தீ காரணமாக பசுமாசுரனின் மரணத்தால் உருவான சாம்பல் என்றும் பக்தர்கள் கருதுகின்றனர். இந்த நிகழ்வின் காரணமாக இரண்டு மலைகளுக்கு பெயரிடப்பட்டுள்ளன: உயரமான சிகரம் பைரவேசுவரர் சிகரம் ("சிவனின் மலை"), என்றும், அதற்கு சில படிகள் கீழே, பார்வதியின் சிலை இருக்கும் சிறிய சிகரம், மோகினி சிகரம் ("மோகினியின் மலை") என்றும் அழைக்கப்படுகிறது. மேலும், இதன் அருகில் இன்னும் பல சிறிய குகைகளும் உள்ளன. அருகிலேயே ஒரு பிள்ளையார் கோயிலும் உள்ளது .
திருவிழா
[தொகு]மகா சிவராத்திரியின் போது, ஆண்டு விழாக்கள் இங்கு 10 நாட்கள் நடத்தப்படுகின்றன.[7] இந்த சமயத்தில், பக்தர்கள் (சுமார் 10,000 பேர்) இந்த இடத்திற்கு புனித யாத்திரை மேற்கொள்கின்றனர். குகையிலுள்ள நீரூற்றிலிருந்து புனித நீரை கோகர்ணம் எனப்படும் அருகிலுள்ள நகரத்திற்கு கொண்டு சென்று அங்குள்ள மகாபலேசுவரனுக்கு அபிசேகம். செய்கிறார்கள்.
போக்குவரத்து
[தொகு]தேசிய நெடுஞ்சாலை எண் 17 என்பதிலிருந்து கும்தா - 25 கிலோமீட்டர் (16 மைல்), சிர்சி - 40 கிலோமீட்டர் (25 மைல்), கோகர்ணம் - 52 கிலோமீட்டர் (32 மைல்), ஹூப்ளி - 142 கிலோமீட்டர் (88 மைல்) மங்களூர் - 230 கிலோமீட்டர் (140 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. அருகிலுள்ள இருப்புபாதை நிலையம் கும்தாவிலும், அருகிலுள்ள விமான நிலையம் ஹூப்ளியிலும் உள்ளது. இங்கிருந்து தேசிய நெடுஞ்சாலை எண் 4 மூலம் 410 கிலோமீட்டர் (250 மைல்) சிர்சி வழியாக பெங்களூரை அணுகலாம்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 Krishnanand Kamat (2001-05-07). "The Rocks Caves and Beauty of Yana". Kamat's potpurri. பார்க்கப்பட்ட நாள் 2009-09-28.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 "The twin pinnacles of Yana". Financial daily of THE HINDU group of publications. 2001-05-07. பார்க்கப்பட்ட நாள் 2009-09-28.
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 "Coastal Karnataka: Yana". Archived from the original on 2018-01-16. பார்க்கப்பட்ட நாள் 2009-09-28.
- ↑ "Yana near Sirsi / Yallapur, North Karnataka". Archived from the original on 2016-09-10. பார்க்கப்பட்ட நாள் 2009-09-28.
- ↑ Infrastructure development and its environmental impact: study of Konkan Railway. Concept Publishing Company.
- ↑ B V (10 March 2009). "Spires of Yana". http://archive.deccanherald.com/Content/Mar102009/spectrum20090309122987.asp. பார்த்த நாள்: 4 January 2014.
- ↑ Ramaswamy, Chitra (17 January 2013). "Mohini’s scorching dance". The HIndu. http://www.thehindubusinessline.com/features/weekend-life/mohinis-scorching-dance/article4315760.ece. பார்த்த நாள்: 4 January 2014.