உள்ளடக்கத்துக்குச் செல்

யாதகிரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

யாதகிரி என்பது இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள யாதகிரி மாவட்டத்தின் நகரம் மற்றும் நிர்வாக தலைமையகம் ஆகும். இது மாவட்டத்தின் மூன்று தாலுகாக்களில் ஒன்றான யாதகிரி தாலுகாவின் நிர்வாக தலைமையகமாகும்.

புவியியல்

[தொகு]

இந்த நகரம் 5.6 சதுர கிலோமீட்டர் (2.2 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டுள்ளது.[1] பீமா நதி யாதகிரி நகரம் வழியாக பாய்கிறது.

கண்ணோட்டம்

[தொகு]

யாதகிரி வரலாற்று ரீதியாக யட்டகிரி என்று அழைக்கப்படுகிறது.[2] இந்த நகரத்தில் பல வரலாற்று நினைவுச்சின்னங்கள் காணப்படுகின்றது. மேலும் மூன்று சுற்று கோட்டைகளைக் கொண்ட ஒரு மலை கோட்டையைக் கொண்டுள்ளது. மூன்று பழங்கால கோவில்கள், இடைக்கால மசூதிகள், தொட்டிகள் மற்றும் கிணறுகள் மலையின் மேல் அமைந்துள்ளன. தொட்டியொன்று சன்னா கெரே நகரின் மையத்தில் அமைந்துள்ளது.

வரலாறு

[தொகு]

இந்த நகரம் 10 முதல் 12 ஆம் நூற்றாண்டு வரை மேற்கு சாளுக்கியர்களின் பேரரசின் ஒரு பகுதியாக இருந்தது. யாதகிரி (வரலாற்று ரீதியாக யெட்டகிரி) என்ற பெயர் அதன் ஆரம்பகால இடைக்கால ஆட்சியாளர்களான 'யாதவர்களிடமிருந்து' பெறப்பட்டது. அவர்கள் ஒரு மலையில் தங்கள் ஆட்சியை நிறுவினார்கள். கன்னடத்தில் 'கிரி' என்றால் மலை என்று பொருள்படும். யாதவர்கள் இன்றைய ஆந்திராவைச் சேர்ந்தவர்கள். நகரத்தின் ஒரு பெரிய பொருளாதார வளர்ச்சி ஷோராபூரின் அதிபரின் நிர்வாகியான பிலிப் மெடோஸ் டெய்லரின் கீழ் நடைப்பெற்றது.

புள்ளிவிபரங்கள்

[தொகு]

2011 ஆம் ஆண்டில் யாதகிரியின் மக்கட் தொகை 1,172,985 ஆக இருந்தது. இதில் ஆண் மற்றும் பெண் முறையே 591,104 மற்றும் 581,881 என்ற எண்ணிக்கையில் காணப்பட்டனர். 2001 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பில் யாதகிரியின் மக்கட் தொகை 956,180 ஆக இருந்தது. இதில் ஆண்கள் 482,347 நபர்களும், பெண்கள் 473,933 ஆக இருந்தனர். யாதகிரி மாவட்ட மக்கட் தொகை மொத்த கர்நாடக மக்கட் தொகையில் 1.92 சதவீதமாகும். 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி யாதகிரி மாவட்டத்திற்கான இந்த எண்ணிக்கை கர்நாடக மக்கட் தொகையில் 1.81 சதவீதமாக இருந்தது.

2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி வெளியிடப்பட்ட ஆரம்ப தற்காலிக தகவல்களின் படி 2011 ஆம் ஆண்டிற்கான யாதகிரி மாவட்டத்தின் அடர்த்தி ஒரு கி.மீ. 2 க்கு 224 பேர் என்பதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. 2001 ஆம் ஆண்டில் யாதகிரி மாவட்ட மக்கள் அடர்த்தி ஒரு கி.மீ. 2 க்கு 183 பேராக இருந்தது. யாதகிரி மாவட்டம் 5,225 சதுர கிலோமீற்றர் பரப்பளவில் நிர்வகிக்கிறது.

2011 ஆம் ஆண்டில் 39.90 உடன் ஒப்பிடும்போது 2011 ஆம் ஆண்டில் யாதகிரி மக்களின் சராசரி கல்வியறிவு விகிதம் 52.36 ஆக இருந்தது. பாலின அடிப்படையில் ஆராய்ந்தால் ஆண் மற்றும் பெண் கல்வியறிவு முறையே 63.33% வீதமாக, 41.31 வீதமுமாக இருந்தது.[3]

கலாச்சாரமும், மதமும்

[தொகு]

யாதகிரியில் மயிலாப்பூர் மல்லையா போன்ற பல ஆன்மீக இடங்கள் அமையப் பெற்றுள்ளன. ஷோராபூர் தாலுகாவில் உள்ள ஸ்ரீ க்ஷேத்ரா மவுனேஷ்வர் கோயில் திந்தானி கோயில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்களை ஈர்க்கிறது. குர்மிதக்கலில் மாதா மணிகேஸ்வரி யாதகிரி ஆன்மீக பாரம்பரிய இடங்களில் ஒன்றாகும். செடம் சாலைக்கு அருகில் மொகல் கார்டன் செயற்பாட்டு மண்டபம் அமைந்துள்ளது.

விவசாயம்

[தொகு]

யாத்கிர் மாவட்டத்தின் பொருளாதிரத்தில் விவசாயம் முக்கிய இடத்தை வகிக்கின்றது. விவசாயம் முக்கியமாக மழையை சார்ந்துள்ளது மற்றும் விதைக்கப்படும் நிகர பரப்பளவு 38% வீதம் ஆகும். இது மாநில சராசரியான 24% வீதத்தை விட அதிகமாக உள்ளது. கிருஷ்ணா, பீமா மற்றும் தோனி ஆறுகள் மாவட்டத்தில் பாய்கின்றன. மாவட்டத்தில் நடுத்தர நீர்ப்பாசன திட்டங்கள் ஹட்டிகுனி மற்றும் சவுதா கர் என்பனவாகும்.

போக்குவரத்து

[தொகு]

யாதகிரி சாலை மற்றும் ரயில்வே வழியாக இணைக்கப்பட்டுள்ளது.[4] யாதகிரியில் இந்நகரிற்கு உரிய தொடருந்து நிலையம் அமைந்துள்ளது.  இது மும்பை மற்றும் சென்னை இடையேயான பரந்த ரயில் பாதையில் உள்ளது. மேலும் இது குண்டக்கல் பிரிவின் கீழ் தென் மத்திய ரயில்வேயின் கீழ் வருகிறது. இந்த நகரம் குல்பர்காவில் இருந்து 78 கி.மீ தூரத்தில் ரயில் வழியேயும் மற்றும் சாலை வழியாக 84 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. மேலும் ரைச்சூரிலிருந்து 81 கி.மீற்றர் தூரத்திலும் உள்ளது.[5]

சாலை

[தொகு]

பிஜாப்பூர், ஐதராபத்தை இணைக்கும் மாநில நெடுஞ்சாலை 15 இந்த நகரத்தின் வழியாக செல்கிறது. பெங்களூரு , ஹப்பல்லி, தாராவாடா, பெலகாவி, சிர்சி, ஹோசாபெட் , வாஸ்கோ டா காமா, கோவா, ஐதராபாத், பல்லாரி , ரைச்சுரு ஆகியன நகரத்திலிருந்து பேருந்துகள் மூலம் இணைக்கப்பட்டுள்ள முக்கியமான நகரங்கள் ஆகும்.[6]

தொழில்

[தொகு]

யாதகிரி நீர்வளம் மிக்க பகுதியாகும். கிருஷ்ணா மற்றும் பீமாவை ஆகிய இரண்டு நதிகள் பிரதானமாக பாய்கின்றன. இதனால் எதிர்காலத்தில் தொழில்மயமாக்கலுக்கான நிறைய வாய்ப்புகள் உள்ளன. சர்க்கரை மற்றும் எரிபொருள் நிறுவனமான "கோர் கிரீன்" ஹிரெட்டும்கூர் கிராமத்திற்கு அருகில் நிறுவப்பட்டது. சமீபத்தில் கோகி, உக்கினல், ஷாஹாபூர் தாலுகாவின் தர்ஷனாபூர், மற்றும் தின்தினி மற்றும் சூராபூர் தாலுகாவில் உள்ள பிற இடங்களை உள்ளடக்கிய கோகி வாரில் யுரேனியம் வைப்புக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இங்கு பதப்படுத்தப்பட்ட யுரேனியம் பாதுகாப்பு மற்றும் மின் உற்பத்தி நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும்.[7]

சான்றுகள்

[தொகு]


  1. "Population of Corporation/CMC/TMC/TP". web.archive.org. 2009-04-10. Archived from the original on 2009-04-10. Retrieved 2019-11-22.
  2. "A strong hold on the past". Deccan Herald (in ஆங்கிலம்). 2011-01-03. Retrieved 2019-11-22.
  3. "Yadgir District Population Census 2011-2019, Karnataka literacy sex ratio and density". www.census2011.co.in. Retrieved 2019-11-22.
  4. ""Yadgir District Map Showing Railway Line"". Archived from the original on 2013-02-06.
  5. ""Yadgir railway station plays it cool"". {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  6. ""NEKRTC Yadgir Division"". Archived from the original on 2017-10-08.
  7. "India's third uranium mining unit at Gogi". Deccan Herald (in ஆங்கிலம்). 2010-05-13. Retrieved 2019-11-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யாதகிரி&oldid=4249622" இலிருந்து மீள்விக்கப்பட்டது