உள்ளடக்கத்துக்குச் செல்

யாக்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிணம் வைத்துள்ள பூப் பல்லாக்குப் பாடை[1]
பிணக்குவியல்

யாக்கை என்பது உடலும் உயிரும் கட்டிக்கொண்டு இருக்கும் நிலைமை. எலும்பு, தசை, நரம்பு முதலான நிலப் பொருள்களும், குருதி போன்ற நீர்ப்ப் பொருளும், சூடு போன்ற நீப்பொருளும், மூச்சோட்டமாகிய காற்றுப் பொருளும், உயிரோட்டமாகிய ஆகாயப் பொருளும் என ஐம்பூதப் பொருளும் ஒன்றோடொன்று கட்டிக்கொண்டு இயங்குவதை [2] [3] யாக்கை என்பது தமிழ்நெறி.

பிணம்

[தொகு]

'விண் விண்' என உடலில் துடிக்கும் விண்ணை ஆகாயம் என்பர். காயம் படக்கூடிய உடம்பைக் 'காயம்' என்கிறது தமிழ். காயப்படுத்த முடியாத இயக்கம் 'ஆகாயம்'. ஆகாயமாகிய உயிர் இல்லாத பொருளில் மூச்சு ஓடாது. இதனைப் பிணம் என்றனர். [4] [5] [6]

பிணச் சடங்குகள்

[தொகு]

ஒப்பாரி வைத்து அழுதல், பிணத்தைக் குளிப்பாட்டுதல், கொட்டு-முழக்கு, பாடையில் சுமந்து செல்லல், சுடுகாட்டில் எரித்தல், [7] [8] இடுகாட்டில் எறிதல், இடுகாட்டில் புதைத்தல், முதலானவை இறந்த உடலுக்குச் செய்யும் சடங்குகள். நடுகல் விழா எடுத்தல் இறந்தவரின் உயிருக்குச் செய்யும் சடங்குகள்.[9]

தொடர்புடைய சொல் விளக்கம்

[தொகு]
  • யாக்கையை 'ஆக்கை' என்பர். [10] [11]
  • பிணத்தைச் 'சவம்' என்பர். உயிர் இல்லாதது 'சவம்'. உயிர் உள்ளது 'சிவம்'. [12]

சங்கநூல் சொல்லாட்சிகள்

[தொகு]
  • சென்ற உயிரின் நின்ற யாக்கை இரு நிலம் தீண்டா அரு நிலை [13]
  • இரு பேர் உருவின் ஒரு பேர் யாக்கை [14]
  • குரூஉ மயிர் யாக்கைக் குடா வடி உளியம் [15]
  • புல்லென் யாக்கைப் புலவு வாய்ப் பாண! [16]
  • படலைக் கண்ணிப் பரு ஏர் எறுழ்த் திணி தோள், முடலை யாக்கை, முழு வலி மாக்கள் [17]
  • படலைக் கண்ணி, பரு ஏர் எறுழ்த் திணி தோள், முடலை யாக்கை, முழு வலி மாக்கள் [18]
  • மெய்ப்பை புக்க வெரு வரும் தோற்றத்து, வலி புணர் யாக்கை, வன்கண் யவனர் [19]
  • சான்ற கொள்கை, சாயா யாக்கை, ஆன்று அடங்கு அறிஞர் [20]
  • பிணம் தின் யாக்கைப் பேய் மகள் [21]
  • முறி மேய் யாக்கைக் கிளை (கடுவன், மந்தி) [22]

யாக்கை படங்கள்

[தொகு]

அடிக்குறிப்பு

[தொகு]
  1. சென்றே எறிப ஒருகால் சிறுவரை
    நின்றே எறிப பறையினை - நன்றேகாண்
    முக்காலைக் கொட்டினுள் மூடித்தீக் கொண்டுஎழுவர்
    செத்தாரைச் சாவார் சுமந்து.(நாலடியார் 24)
  2. யாத்துக்கொண்டு யாப்பு = சொல், பொருள், இசை ஆகியவை கட்டிக்கொண்டிருக்கும் மொழிநடை
  3. யாக்கையை யாப்புடைத்தாப் பெற்றவர் தாம்பெற்ற
    யாக்கையா லாய பயன்கொள்க - யாக்கை
    மலையாடு மஞ்சுபோல் தோன்றிமற் றாங்கே
    நிலையாது நீத்து விடும் (நாலடியார் 28)
  4. பிணம் என்பது உயிர் பிளவுபட்டுப் போன பொருள்.
  5. பிள் < பிள < பிள் + ட்(இறந்த கால இடைநிலை) + அம்(பெயர் இடைச்சொல்) = பிணம்
  6. கணம் கொண்டு சுற்றத்தார் 'கல்' என்று அலறப்
    பிணம் கொண்டு காடு உய்ப்பார்க் கண்டும் - மணம் கொண்டு ஈண்டு
    உண்டு உண்டு உண்டு என்னும் உணர்வினால் சாற்றுமே
    'டொண் டொண் டொடு' என்னும் பறை (நாலடியார் 25)
  7. ஈம ஒள் அழல் குறிகினும் குறுகுக, குறுகாது சென்று விசும்பு உற நீளினும் நீளுக (உயிரினம் உண்ண வானமெல்லாம் நாறிக் கிடந்தாலும் கிடக்கட்டும்) - புறம் 131
  8. கள்ளி போகிய களரிஅம் பறந்தலை, வெள் வேல் விடலை சென்று மாய்ந்தனனே (கள்ளிக் காட்டில் வீசப்பட்டான்) (புறம் 239)
  9. அறன் இல் கூற்றம் திறன் இன்று துணிய,
    ஊழின் உருப்ப எருக்கிய மகளிர்
    வாழைப் பூவின் வளை முறி சிதற,
    முது வாய் ஒக்கல் பரிசிலர் இரங்க,
    கள்ளி போகிய களரிஅம் பறந்தலை,
    வெள் வேல் விடலை சென்று மாய்ந்தனனே: (புறம் 239)

  10. ஆக்கையால் பயன் என் அரன் கோயிலை வலம் வந்து
    பூக் கையால் அட்டிப் போற்றி என்னாத இவ்
    ஆக்கையால் பயன் என் (அப்பர் திரு அங்கமாலை, 8)
  11. ஆ < ஆகு < ஆகிறான் - முதியவர் ஆகிறார் - இயல்பு வினை
    ஆ < ஆக்கு < சோறு ஆக்கினாள் - செயற்கை வினை
    ஆவதும், ஆக்குவதும் ஆக்கை.
  12. சிவம் < > சிவன் < சீவன்
  13. தொல்காப்பியம் 3-71
  14. திருமுருகாற்றுப்படை 57
  15. திருமுருகாற்றுப்படை 313
  16. பெரும்பாணாற்றுப்படை 22
  17. பெரும்பாணாற்றுப்படை 60
  18. நெடுநல்வாடை 31, 32
  19. முல்லைப்பாட்டு 60, 61
  20. மதுரைக்காஞ்சி 480, 481
  21. பட்டினப்பாலை 260
  22. மலைபடுகடாம் 313
"https://ta.wikipedia.org/w/index.php?title=யாக்கை&oldid=3388295" இலிருந்து மீள்விக்கப்பட்டது