மௌனமாக்கப்பட்ட குரல்கள் (ஆவணப் படம்)
மௌனமாக்கப்பட்ட குரல்கள் (Silenced Voices - Tales of Sri Lankan Journalists in Exile) என்பது இலங்கையில் ஊடக அடக்குமுறை பற்றியும், இலங்கையில் தமிழ், சிங்கள ஊடகவியலாளர்களின் நிதர்சன வாழ்வு, நெருக்கடிகள், ஆகியவற்றையும் எடுத்துக்காட்டும் ஆவணப்படம் ஆகும். இதனை நோர்வே நாட்டின் ஆவணப்படத் தயாரிப்பாளர் பியட்டா அர்னெஸ்டாட் ஆங்கிலத்தில் தயாரித்துள்ளார். இது முதன் முதலாக 2012 பெப்ரவரியில் நோர்வே நாட்டில் வெளியிடப்பட்டது[1].
இலங்கையில் இருந்து தப்பித்து வெளியேறிய இரண்டு சிங்கள ஊடகவியலாளர்களின் கதைகளையும், ஒரு தமிழ் ஊடகவியலாளரின் கதையையும் உள்ளடக்கிய ஆவணப்படமாக இது வெளிவந்திருக்கிறது.
லோகீசன் அப்புத்துரை
[தொகு]இலங்கையில் ஆதாரங்கள் மறைக்கப்பட்டுத் தமிழ் மக்கள் மீது இலங்கை அரசு நடத்திய போரை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்தியவர் தமிழ்நெற் இணையத்தளத்தின் போர்க்காலச் செய்தியாளார் லோகீசன் அப்புத்துரை. போர்க் காலத்தில் அவர் ஆற்றிய பணியையும், போரின் பின்னர் இலங்கையை விட்டு பாதுகாப்பான இடத்திற்கு சென்றடைவதையும்[2] இந்த ஆவணப்படம் விபரிக்கிறது[3]. குறித்த ஆவணத்திரைப்படத்தின் மூலம் இலங்கைத்தீவில் இடம்பெற்ற யுத்தின் முக்கிய சாட்சிகளில் ஒருவரான லோகீசன் அவர்கள் வெளி உலகிற்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறார். அவர் வன்னியிலிருந்து ஆற்றிய பணியின் பயங்கரத்தைச் சுருக்கமாக ஆனால் மிகவும் வலுவாக வெளிப்படுத்துகிறது இந்த ஆவணப்படம்.
பாசன அபயவர்தனா
[தொகு]போர்க்குற்றக் காணொளியை சேனல் 4 இற்குக் கையளித்து வெளிக்கொணர்ந்தவர் சிங்கள ஊடகவியலாளரான பாசன அபயவர்தனா. செருமனியில் வசித்துவரும் இவர் தராக்கி சிவராம், லசந்த விக்கிரமதுங்க ஆகியோரின் படுகொலையின் பின் இலங்கையை விட்டு வெளியேறி மேற்குலக நாட்டில் தஞ்சமடைந்த இவரின் மனநிலையை இந்த ஆவணப் படம் மூலம் விளக்குகிறார் பியட்டா[3]. தமிழ் மக்கள் மீது சிறிலங்கா அரசு மேற்கொண்ட யுத்தத்தின் மறுபக்கத்தை உலக அரங்கின் கண்களில் முன்னால் எடுத்துரைக்கும் பணிகளில் ஈடுபடும் சிங்கள இனத்தைச் சேர்ந்த ஒருவர்.
சொனாலி விக்கிரமதுங்க
[தொகு]தென்னிலங்கையின் பிரபல பத்திரிகை ஆசிரியரும், படுகொலை செய்யப்பட்டவருமான லசந்த விக்கிரமதுங்கவின் மனைவியும், ஊடகவியலாளருமான சொனாலி விக்கிரமதுங்க தனது கணவரின் படுகொலையின் பின் நாட்டை விட்டு வெளியேறி தனது கணவனுக்கு இழைக்கப்பட்ட கொடுமை குறித்து சர்வதேசப் பரப்பில் மனித உரிமை, ஊடக சுதந்திரம் குறித்துச் செயற்படுகிறார். இவரும் இந்த ஆவணப் படத்தின் மூல பாத்திரங்களில் ஒருவராவார்[3].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Arnestad’s ‘Silenced Voices’ documentary gains momentum, தமிழ்நெற், செப்ரம்பர் 8, 2012
- ↑ TamilNet wartime correspondent from Vanni reaches a free country, தமிழ்நெற், 04 நவம்பர் 2010
- ↑ 3.0 3.1 3.2 மௌனமாக்கப்பட்ட குரல்கள் – இலங்கையில் ஊடகவியலாளர் களின் நிதர்சன வாழ்வு- புதிய ஆவண படம்![தொடர்பிழந்த இணைப்பு], தினக்கதிர், பெப்ரவரி 2, 2012
வெளி இணைப்புகள்
[தொகு]- Award winning filmmaker presents documentary on exiled Sinhala, Tamil journalists, தமிழ்நெற், 24 சனவரி 2012