மொழிபெயர்ப்பு
மொழியாக்கம் அல்லது மொழிபெயர்ப்பு (translation) என்பது மூல மொழியில் (Source Language) உள்ள சொல் அல்லது சொற்றொடர்களை (விடயத்தை எந்தவொரு மேலதிகமான உட்சேர்த்தலுமின்றி), பொருள் மாறாமல் மற்றொரு மொழிச் சொற்களை கொண்டு இலக்கு மொழியில் (Target Language) அறியத் தருதல் ஆகும்[1]. இங்கு மேலதிகமான உட்சேர்த்தல் என்பதாவது, மூல மொழியில் குறிப்பிடப்பட்ட விடயத்திற்கு மேலதிகமாக இலக்கு மொழியில் இணைத்தல் என்பதாகவே பொருள்படும். மாறாக தெளிவாக்கல் என்பது எழுத்துக்கு முந்தையதாக, பேச்சை வேறுமொழியில் தருவதாகும். மொழியாக்கம் எழுதப்பட்ட இலக்கியத்தை அடுத்தே உருவானது; சுமேரியர்களின் கில்கமெசு காப்பியத்தை (கி.மு. 2000 வில்) தென்மேற்கு ஆசிய மொழிகளில் பகுதியாக மொழிபெயர்க்கப்பட்டது[2].
மொழிபெயர்ப்பாளர்கள் மூலமொழியில் உள்ள மரபுத்தொடர்களையும் பயன்பாட்டு பாணிகளையும் மாற்றுமொழி ஆக்கத்தில் புழங்கும் தீவாய்ப்பு உள்ளது. அதேநேரம் இத்தகைய இறக்குமதிகளால் இலக்குமொழி வளப்படுத்தப்பட்டுள்ள நிகழ்வுகளும் உள்ளன. மொழிபெயர்ப்பாளர்களால் பல மொழிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன[3].
தொழிற்புரட்சிக்குப் பிறகு, வணிக ஆவணங்களின் தேவைக்காக 18வது நூற்றாண்டின் நடுவிலிருந்து சில மொழிபெயர்ப்பு கூறுகள் முறையான வடிவில் இதற்கென தனிப்பட்ட பள்ளிகளிலும் தொழில்முறை சங்கங்களிலும் கற்பிக்கப்பட்டன.[4]
வரலாறு
[தொகு]கி.மு.240-இல் இலீவியசு அந்திரோனிகசு என்பார் கிரேக்க மொழியில் ஓமர் எழுதிய ஒடிசி என்ற காப்பியத்தை இலத்தீன் மொழியில் மொழிபெயர்த்ததே தொன்மையாகும்.இதன்பின், சிசிரோ, காட்டலசு முதலானோர் பண்டைக் கிரேக்க இலக்கிய படைப்புகளையும் பிற துறைசார் நூல்களையும் இலத்தீன் மொழியில் மொழிபெயர்த்தனர்.
கி.பி.எட்டாம் நூற்றாண்டில் அரேபியர்கள் பகுதாது நகரில் மொழிபெயர்ப்பு மையம் ஒன்றை நிறுவி கிரேக்க மொழியிலிருந்து,மெய்யியல், மருத்துவம், வானநூல்,உடலியல், பொருளியல், எண்ணியல், சொற்களஞ்சியம் ஆகியவற்றை அரேபிய மொழியில் உருவாக்கினர்.
ஐரோப்பாவில் மொழிபெயர்ப்பு
[தொகு]கி.பி.பன்னிரண்டாம் நூற்றாண்டில் சுபெயின் நாட்டிலுள்ள டொலடோவில் அரபு மொழியிலிருந்த யுகிலிட்சின் கொள்கைகள், குரான், அறிவியல் நூல்கள் முதலானவை இலத்தீன் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டன. அதன்பின், 15 ஆம் நூற்றாண்டில் விவிலியம் மற்றும் சமய நூல்கள் எபிரேயம், ஆங்கிலம், பிரெஞ்சு, செருமன், இடச்சு மொழிகளில் மொழிபெயர்ப்பு மேற்கொள்ளப்பட்டது.
இந்தியாவில் மொழிபெயர்ப்பு
[தொகு]பதினேழாம் நூற்றாண்டின் இறுதியில் கிறித்தவ சமயத்தைப் பரப்பிடும் பொருட்டு இந்திய மொழிகளில் விவிலிய கருத்துகள் மொழிபெயர்த்து வழங்கப்பட்டன.பிறகு, இலக்கியம்,தத்துவம், மருத்துவம், வேதங்கள், அறிவியல் சார்ந்த நூல்கள் ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டன.
மொழிபெயர்ப்பிற்கு சலிக்காத உழைப்பு தேவையிருப்பதால் 1940களில் பொறியியலாளர்கள் தானியக்கமாக மொழிபெயர்க்க (இயந்திர மொழிபெயர்ப்பு) அல்லது மனித மொழிபெயர்ப்பாளருக்கு துணையாக இருக்க கருவிகளை உருவாக்கி வருகிறார்கள்.[5] இணையத்தின் வளர்ச்சி உலகளவில் மொழிபெயர்ப்பு சேவைகளுக்கான சந்தையை விரிவுபடுத்தி உள்ளது. மேலும் இடைமுக மொழியின் உள்ளூராக்கலுக்கும் வழிவகுத்துள்ளது.[6]
மொழிபெயர்ப்பின் கோட்பாடு, விவரிப்பு, செயற்பாடு ஆகியவற்றைக் குறித்த முறையான கல்வியை மொழிபெயர்ப்பியல் வழங்குகிறது.[7]
மொழிபெயர்ப்பின் தேவைகள்
[தொகு]மொழி என்பது தொடர்பாடலுக்கு இன்றியமையாததொரு ஊடகமாகும். மேலும் இவ்வுலகில் சுமார் 6500 மொழிகள் பேசப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது. இவ்வுலகில் உள்ள அனைவராலும் அனைத்து மொழிகளிலும் தங்களது தொடர்பாடல்களை மேற்கொள்ள முடியாது, அதாவது அனைவருக்கும் அனைத்து மொழிகளும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பதாகும். இச்சந்தர்ப்பத்தில்தான் மொழிபெயர்ப்பு என்பது அவசியமாகின்றது. மொழிபெயர்ப்பானது தொடர்பாடலை இலகுபடுத்தவும், மற்றவரினது கருத்துக்கள் மற்றும் சிந்தனைகளை பரிச்சயமான மொழியில் புரிந்து கொள்வதற்கும் உதவுகின்றது. பெறுமதிமிக்க ஆவணங்கள், புத்தகங்கள், கட்டுரைகள், போன்ற பல்வேறு விடயங்களில் மொழிபெயர்ப்பின் தேவைப்பாடு வேண்டப்படுகின்றது. எழுத்தாளர்களின் கருத்துகள் மற்றும் சிந்தனைகள் ஆகியன மொழிபெயர்ப்பின் மூலமாகவே விரிபுபடுத்தப்படுகின்றது.
வினைத்திறனான மொழிபெயர்ப்பு முறை
[தொகு]மொழிபெயர்ப்பு என்பது ஒரு கலை; அதை அனைவராலும் மேற்கொள்ள முடியாது; அதாவது போதுமான அனுபவம், மூல மற்றும் இலக்கு மொழிகளின் தேர்ச்சி, கிரகித்தல், ஆக்கபூர்வமான சிந்தனை மற்றும் புரிந்து கொள்ளல் போன்ற இன்றியமையாத விடயங்கள் அவசியமாகின்றன. ஒரு வினைத்திறனான மொழிபெயர்ப்பை மேற்கொள்வதற்கு மேற்கூரியவை உதவி புரிகின்றன. மொழிபெயர்ப்புகள் அனைத்தும் ஒரே விதமாக மேற்கொள்ளப்படுவதில்லை. அதாவது மூல மொழியில் உள்ளடக்கப்பட்டிருக்கும் விடயத்தை பொருத்தே அது எவ்வாறான முறையில் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்பதானது தீர்மானிக்கப்படுகின்றது. சொல்லுக்கு சொல் மொழிபெயர்ப்பு, வசனத்திற்கு வசன மொழிபெயர்ப்பு, பந்திக்குப் பந்தி மொழிபெயர்ப்பு போன்ற மொழிபெயரப்பு முறைகள்தான் பயன்படுத்தப்படுகின்றன. தகுந்த மூல மொழி உள்ளடக்கத்திற்கு ஏற்றவாறான மொழிபெயர்ப்பு முறை பயன்படுத்தும் போதுதான் வினைத்திறனான மொழிபெயர்ப்பு விளைவாகும்.
மொழிபெயர்ப்பாளர்
[தொகு]மிகவும் பொறுப்பு வாய்ந்ததொரு தொழிலாகவே கருதப்படுகின்றது. மொழிபெயர்ப்பாளர் என்பவர் நிச்சயமாக தேடலை மேற்கொள்ளுபவராகவே இருக்க வேண்டும். அதுவே அவரை சிறந்த மொழிபெயர்ப்பாளராக சமூகத்திற்கு அடையாளங் காட்டும். பல்வேறு துறைகள் பற்றிய அறிவு மற்றும் தெளிவுத்தன்மையானது ஒரு மொழிபெயர்ப்பாளரை ஏனைய சாதாரன மக்களிடமிருந்து வேறுபிரிக்கின்றது. வினைத்திறனானதொரு மொழிபெயர்ப்பு வெளியீட்டை வழங்குவதற்கு ஒரு மொழிபெயர்ப்பாளர் பல்வேறு விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும். மொழிபெயர்ப்பாளர் ஒருவர் கொண்டிருக்க வேண்டிய பண்புகள்:
- கிரகித்தல் மற்றும் எளிதாக புரிந்து கொள்ளல் - மொழிபெயர்ப்பின் மிகவும் முக்கியமானதொரு விடயமாகவே இது உற்று நோக்கப்படுகின்றது. அதாவது மூல மொழியின் உள்ளடக்கத்தை இலகுவாக விளக்கிக் கொள்ளும் போதுதான் மொழிபெயர்ப்பை இலகுவாகவும், விரைவாகவும், வினைத்திறனாகவும் மேற்கொள்ள முடியும்
- நேர முகாமைத்துவம் - மொழிபெயர்ப்பாளர் கொண்டிருக்க வேண்டிய மிகவும் பிரதானமான பண்புகளில் ஒன்று. குறிப்பிட்ட நேரத்திற்குள் குறிப்பிட்ட மொழிபெயர்ப்பை பூர்த்தி செய்ய வேண்டிய கடப்பாட்டை மொழிபெயர்ப்பாளரொருவர் கொண்டிருப்பது அவசியமாகும். அதுவே அவரின் வெற்றிக்கும் மூலமாகும்.
- தேடல் மற்றும் அடையாளங்கானல் - நிச்சயமாக மொழிபெயர்ப்பாளர் ஒருவர் மூல மற்றும் இலக்கு மொழிகளில் மிதமிஞ்சிய பாண்டித்தியம் பெற்றொருவராக இருக்க மாட்டார். ஆனால், பல்வேறு விடயங்களின் மீதான தேடல்கள் மூலம் மென்மேலும் தன்னை மெருகூட்டிக் கொள்ளும் அளவுக்கு தயார்படுத்தலாம். இணையப் புரட்சியினால் தேடல்களை மேற்கொள்ளலானது இன்றைய சூழலில் மிகவும் இலகுபடுத்தப்பட்டதொரு முறையாகவே மாற்றங் கண்டுள்ளது.
சத்தியப்பிரமான மொழிபெயர்ப்பாளர்
[தொகு]அரச அங்கீகாரம் பெற்ற மொழிபெயர்ப்பாளர்களாவே இவர்கள் கருதப்படுகின்றார்கள். உறுதிப்படுத்தப்பட்ட மொழி பெயர்ப்புச் சேவைகள் இவர்கள் மூலமாக மேற்கொள்ளப்படுகின்றது. அதாவது பிறப்புச் சான்றிதழ்கள், இறப்புச் சான்றிதழ்கள், கல்விச் சான்றிதழ்கள், அரச ஆவணங்கள், சட்டக் கோவைகள், உறுதிப் பத்திரங்கள், தேசிய அடையாள அட்டைகள் போன்ற பல்வேறு விதமான ஆவணங்கள் இவர்களால் மாத்திரமே மொழிபெயர்க்கப்பட்டு உறுதிப்படுத்தப்படுகின்றன. பல்வேறு நாடுகளில் இப்பதவியானது அந்நாடுகளின் நீதி அமைச்சுகளினால் வழங்கப்படுகின்றன. இலங்கையை பொறுத்தமட்டில் மொழிபெயர்ப்பாளர் பரீட்சை மூலமாக சத்தியப்பிரமான மொழிபெயர்ப்பாளர்கள் தெரிவு செய்யப்படுகின்றார்கள். மாவட்ட நீதி மன்றம் ஒன்றில் சத்தியப்பிரமானம் மேற்கொள்ளும் பட்சத்தில் குறிப்பிட்ட தெரிவு செய்யப்பட்ட மொழிபெயர்ப்பாளர் ஒருவர் சத்தியப்பிரமான மொழிபெயர்ப்பாளரொருவராகின்றார்.
நவீன மொழிபெயர்ப்பு
[தொகு]நவீன மொழிபெயர்ப்பானது புராதன மொழிபெயர்ப்பிலிருந்து சற்று தொழில்நுட்ப ரீதியாக முன்னேற்றமடைந்ததொரு முறையாக காணப்படுகின்றது. இணையப் புரட்சி மற்றும் கணினி மென்பொருள் மேம்பாடு போன்றன நவீன மொழிபெயர்ப்புக்கு ஊக்கியாக அமைந்து விடுகின்றது. நவீன மொழிபெயர்ப்பானது முற்று முழுதாக கணினி மயப்படுத்தப்பட்டதொரு முறையாகவே உருவாக்கப்படுகின்றது. பல்வேறு மொழிபெயர்ப்பு மென்பொருட்கள் மனித மொழிபெயர்ப்பை இலகு படுத்துவதற்காக கையாளப்படுகின்றன. மிகவும் செம்மையான மொழிபெயர்ப்பொன்றை விரைவாகவும், வினைத்திறனாகவும் மேற்கொள்வதற்கு மொழிபெயர்ப்பு மென்பொருட்கள் கைகொடுக்கின்றன. வேட்-பாசிட், எசுடிஎல் ரெடோசு போன்றன மிகவும் பிரபலமான மொழிபெயர்ப்பு மென்பொருட்களாக தரப்படுத்தப்பட்டுள்ளன.
மொழிபெயர்ப்புக்கான கேள்வி
[தொகு]மொழிபெயர்ப்பு என்பது தற்போதுள்ள பல்வேறு துறைகளில் மிகவும் தேவைப்பாடுள்ள ஒரு விடயமாக அவதானிக்கப்படுகின்றது. இணையப் புரட்சியில் மொழிபெயர்ப்பின் பங்கு அளப்பறியதொன்று. தகவல் தொழில்நுட்ப பயன்பாட்டை இலகுவாக கையாள்வதற்கு மொழிபெயர்ப்பானது உதவி புரிகின்றது. தற்போது கணினிகள் மற்றும் கைபேசிகளை விரும்பிய மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்து பயன்படுத்தலாம். இதன் மூலம் மொழிப் பிரச்சினைக்கு இலகுவான தீர்வு எட்டப்படுகின்றது. குறிப்பாக அன்றி பொதுவாக அனைத்து துறைகளிலும் மொழிபெயர்ப்பின் கேள்வி வேண்டப்படுகின்றது. சட்டத்துறை, வைத்தியத்துறை, தொழில்நுட்பத்துறை, அரசியல்துறை, மனிதவளத்துறை போன்ற ஒருநாட்டின் பிரதான அனைத்து துறைகளிலும் இதன் தாக்கம் செல்வாக்கு செலுத்துகின்றது.
மொழிபெயர்ப்பின் ஊதியம்
[தொகு]நாளொன்றுக்கு அதிகமாக ஊதியம் பெறக்கூடிய தொழில்களில் மொழிபெயர்ப்பும் தன்னை உட்படுத்தியிருக்கின்றது என்று சொல்லும் அளவுக்கு மிகவும் சௌகரியமான மற்றும் கௌரவமானதொரு வருமானம் இதன் மூலம் பெறப்படுகின்றது. பக்கம் ஒன்றிற்கான கட்டணம், சொல் ஒன்றிற்கான கட்டணம், மணித்தியாலம் ஒன்றிற்கான கட்டணம், திட்டம் ஒன்றிற்கான கட்டணம் என்ற அடிப்படையில் மொழிபெயர்ப்பின் கட்டண விபரங்கள் அமையப்பெற்றுள்ளன.
மொழிபெயர்ப்பின் சிறப்பியல்புகள்
[தொகு]மொழிபெயர்ப்புப்பின் தனித்துவத்தை மொழிபெயர்ப்பின் சிறப்பியல்புகள் வெளிப்படுத்துகின்றன.இப்பண்புகள் நான்கு வகைப்படும்.அவையாவன:
இதுதவிர,எளிய மொழிநடை,ஆற்றொழுக்கான வாசிப்புத் தன்மைக்கு இடங்கொடுத்தல்,பொருள் நயத்திற்கு முக்கியத்துவம் அளித்தல்,மயக்கத்திற்கு இடமளிக்காமை,கருத்துத் தெளிவு,பொதுவழக்குச் சொற்களைப் பயன்படுத்துதல்,மூல ஆசிரியரின் கருத்து, உணர்ச்சிக்கு மட்டுமே வாய்ப்பளித்தல்,மூலமொழிச் சொல்லிற்கு நிகரான சொற்களை அகராதியைக்கொண்டு பெறுமொழியை வளப்படுத்துதல் போன்ற பண்புகளை மனத்தில்கொண்டு மொழிபெயர்ப்புப் பணி மேற்கொள்ளப்படுதல் நல்லது.
உசாத்துணை
[தொகு]- ↑ The Oxford Companion to the English Language, Namit Bhatia, ed., 1992, pp. 1,051–54.
- ↑ J.M. Cohen, "Translation", Encyclopedia Americana, 1986, vol. 27, p. 12.
- ↑ Christopher Kasparek, "The Translator's Endless Toil", The Polish Review, vol. XXVIII, no. 2, 1983, pp. 84-87.
- ↑ Andrew Wilson, Translators on Translating: Inside the Invisible Art, Vancouver, CCSP Press, 2009.
- ↑ W.J. Hutchins, Early Years in Machine Translation: Memoirs and Biographies of Pioneers, Amsterdam, John Benjamins, 2000.
- ↑ M. Snell-Hornby, The Turns of Translation Studies: New Paradigms or Shifting Viewpoints?, Philadelphia, John Benjamins, 2006, p. 133.
- ↑ Susan Bassnett, Translation studies, pp. 13-37.