உள்ளடக்கத்துக்குச் செல்

மேற்குப் பாலைவனப் போர்த்தொடர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேற்குப் பாலைவனப் போர்த்தொடர்
வடக்கு ஆப்பிரிக்கப் போர் முனையின் பகுதி

டோப்ருக்கில் பிரிட்டானிய மாட்டில்டா ரக டாங்குகள்
நாள் ஜூன் 11, 1940 - பெப்ரவரி 4, 1943
இடம் லிபியப் பாலைவனம், எகிப்து மற்றும் லிபியா
நேச நாட்டு வெற்றி
பிரிவினர்
 ஐக்கிய இராச்சியம்
  •  இந்தியா
  • பிரிட்டானிய்க் கட்டுப்பாட்டு பாலசுதீனம்
  • பிரிட்டானிய-எகிப்து கட்டுப்பாட்டு சூடான்

 ஆத்திரேலியா
 நியூசிலாந்து
 தென்னாப்பிரிக்கா
 சுதந்திர பிரான்ஸ்
போலந்து போலந்து
 கிரேக்க நாடு
செக்கோசிலோவாக்கியா செக்கஸ்லொவாக்கியா

 இத்தாலி
 ஜெர்மனி
தளபதிகள், தலைவர்கள்
ஐக்கிய இராச்சியம் ரிச்சர்ட் ஓ கானர்  (கைதி)
ஐக்கிய இராச்சியம் ஃபிலிப் நியேம்  (கைதி)
ஐக்கிய இராச்சியம் நோயல் பெரசுஃபோர்ட்-பியர்சே
ஐக்கிய இராச்சியம் ஆலன் கன்னிங்காம்
ஐக்கிய இராச்சியம் நீல் ரிச்சி
ஐக்கிய இராச்சியம் கிளாட் ஆச்சின்லெக்
ஐக்கிய இராச்சியம் பெர்னார்ட் மோண்ட்கோமரி
இத்தாலி இட்டாலோ பால்போ  
இத்தாலி ரொடால்ஃபோ கிராசியானி
இத்தாலி இட்டாலோ கரிபால்டி
இத்தாலி எட்டோரே பாஸ்டிகோ
நாட்சி ஜெர்மனி எர்வின் ரோம்மல்
நாட்சி ஜெர்மனி கெயார்க் ஸ்டம்  
நாட்சி ஜெர்மனி வில்லெம் ரிட்டர் வான் தோமா  (கைதி)

மேற்குப் பாலைவனப் போர்த்தொடர் (Western Desert Campaign) அல்லது பாலைவனப் போர் (Desert War) என்பது இரண்டாம் உலகப் போரின் வடக்கு ஆப்பிரிக்கப் போர் முனையின் முதல் கட்டத்தைக் குறிக்கிறது. இதில் மூன்று முறை அச்சு நாட்டுப் படைகள் நேச நாட்டுக் கட்டுப்பாட்டில் இருந்த எகிப்து மீது படையெடுத்தன. மூன்று முறையும் அவற்றின் முயற்சிகள் முறியடிக்கப்பட்டு இறுதியில் துனிசியாவுக்குப் பின்வாங்கின.

1940ல் ஐரோப்பிய மேற்குப் போர்முனையில் நாசி ஜெர்மனியின் படைகள் பல நேச நாடுகளைத் தோற்கடித்தன. ஐரோப்பாவில் ஜெர்மனிக்குக் கிடைத்த வெற்றியைப் போலவே வடக்கு ஆப்பிரிக்காவில் தனது படைகளும் வெற்றிபெற வேண்டும் என்று இத்தாலிய சர்வாதிகாரி முசோலினி விரும்பினார். ஆப்பிரிக்காவில் இத்தாலிய காலனியான லிபிய நாட்டிலிருந்து நேச நாட்டுக் கட்டுப்பாட்டிலிருந்த எகிப்து மீது இத்தாலியப் படைகள் படையெடுத்தன. ஆனால் நேச நாட்டுப் படைகளின் எதிர்த்தாக்குதலால் எகிப்திலிருந்து விரட்டப்பட்டன. முசோலினியின் உதவிக்கு இட்லர் தளபதி ரோம்மல் தலைமையிலான ஆப்பிரிக்கா கோர் என்ற படைப்பிரிவை வடக்கு ஆப்பிரிக்காவுக்கு அனுப்பினார். ரோம்மலின் தலைமையில் அச்சுப்படைகள் உடனடியாக மீண்டும் கிழக்கு நோக்கிப் படையெடுத்தன. ரோம்மலின் போர் திறனினால் நேச நாட்டுப் படைகளை முறியடித்து வேகமாக முன்னேறின. நேச நாட்டுக் கட்டுப்பாட்டிலிருந்த டோப்ருக் நகரை முற்றுகையிட்டன. 1941ல் நேச நாட்டுப் படைகள் பலமுறை முயன்று தோற்ற பின்னர் குரூசேடர் நடவடிக்கை மூலம் டோப்ருக் முற்றுகையை முறியடித்து ரோம்மலின் படைகளை மேற்கு நோக்கி விரட்டின. 1942ல் மீண்டும் கிழக்கு நோக்கிப் படையெடுத்த ரோம்மல் டோப்ருக்கைக் கைப்பற்றினார். இம்முறை எகிப்துள் எல் அலாமெய்ன் வரை முன்னேறிய அவரது படைகள் இரண்டாம் எல் அலாமெய்ன் சண்டையில் இறுதியாகத் தோற்கடிப்பட்டன. அத்துடன் மூன்று ஆண்டுகள் தொடர்ந்து நடந்த மேற்குப் பாலைவனப் போர்தொடர் முடிவுக்கு வந்தது. ரோம்மலின் படைகள் துனிசியாவுக்குப் பின்வாங்கியதால் துனிசியப் போர்த்தொடர் தொடங்கியது.

மேற்குப் பாலைவனப் போர்த்தொடரில் இரு தரப்பினரும் கிழக்கு மேற்காகப் பலமுறை முன்னேறிப்-பின்வாங்கினர். ஒவ்வொரு மோதலுக்கும் பல நூறு கிலோமீட்டர்கள் தூரம் படைகளை நடத்த வேண்டியிருந்ததால், ஐரோப்பாவிலிருந்து அனுப்பப்படும் எரிபொருள் மற்றும் உதிரி பாகங்கள் இப்போர்த்தொடரின் வெற்றிக்கு இன்றியமையாது போயின. நடுநிலக்கடலில் சரக்குக் கப்பல் போக்குவரத்தை நேச நாட்டு வான்படைகளும் கடற்படைகளும் கட்டுப்படுத்தத் தொடங்கியதால், மூன்றாண்டுகளுக்குப் பின் நேச நாட்டு எண்ணிக்கை மற்றும் ஆயுத பலம் ரோம்மலின் படைகளைக் காட்டிலும் பன்மடங்காக அதிகரித்ததால் அச்சுப்படைகள் தோல்வியடைந்தன.

பின்புலம்

[தொகு]
போர் துவங்கும் முன் வடக்கு ஆப்பிரிக்காவில் அரசியல் நிலவரம்

ஆப்பிரிக்கா ஆசிய கண்டங்களுக்கிடையே அமைந்திருந்த சூயசு கால்வாய் பிரித்தானியப் பேரரசின் நிருவாகத்துக்கும் வர்த்தகத்துக்கும் மிக இன்றியமையாத ஒன்றாக இருந்தது. இதன் மூலமாகத் தான் பிரித்தானிய இந்தியாவும் பிற கிழக்காசிய காலனிகளும் பிரிட்டன் தீவுகளுடன் தொடர்பிலிருந்தன. இதைப் பாதுகாப்பதற்காக எகிப்தில் 1882 முதல் பிரிட்டானியப் படைகள் நிறுத்தப்பட்டிருந்தன. எகிப்தின் அண்டை நாடான லிபியா 1912 முதல் இத்தாலியின் காலனியாக இருந்து வந்தது. பாசிச சர்வாதிகாரி முசோலினியின் ஆட்சியின் கீழ் இத்தாலி இடலரின் நாசி ஜெர்மனி தலைமையிலான அச்சுக் கூட்டணியில் இடம் பெற்றிருந்தது. 1939 செப்டம்பரில் ஐரோப்பாவில் அச்சு-நேச நாடுகளுக்கிடையே போர் மூண்டது. 1940ல் மேற்கு ஐரோப்பாவில் நடந்த சண்டைகளில் பிரான்சு, நெதர்லாந்து, பெல்ஜியம் போன்ற நாடுகளை ஜெர்மானியப் படைகள் எளிதில் கைப்பற்றின. மீதமிருந்த பிரிட்டனும் முற்றுகையிடப்பட்டது.

மேற்குப் பாலைவனம் 1940–1942

ஐரோப்பிய களத்தில் நேச நாடுகளுக்கு ஏற்பட்ட தோல்விகளைப் பயன்படுத்திக் கொண்டு வடக்கு ஆப்பிரிக்காவில் தனது காலனிகளை விரிவாக்க முசோலினி திட்டமிட்டார். எனவே எகிப்து மீது படையெடுக்கத் திட்டம் தீட்டினார். மேலும் எகிப்தைக் கைப்பற்றினால் சூயசு கால்வாயினைக் கட்டுப்படுத்தலாம், பிரிட்டன் தீவுகளை அதன் கிழக்காசிய காலனிகளிடமிருந்து துண்டித்து விடலாம் என்பது அச்சு நாடுகளின் மேல்நிலை உத்தி. ஜூன் 10, 1940ல் இத்தாலி பிரான்சு மற்றும் பிரிட்டன் மீது போர் சாற்றியது. உடனடியாக எகிப்திலிருந்த பிரித்தானியப் படைகள் லிபியாவினுள் திடீர்த்தாக்குதல்கள் தொடுக்கத் தொடங்கின. ஆனால் ஜூலை மாதம் பிரான்சு சரண்டைந்தபின் எகிப்து-லிபிய எல்லையில் இத்தாலியப் படைகளின் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால் பிரித்தானிய திடீர்த்தாக்குதல்கள் நிறுத்திக் கொள்ளப்பட்டன. எகிப்து மீது படையெடுக்கத் தயாராகுமாறு லிபியாவிலிருந்த இத்தாலியப் படைகளுக்கு முசோலினி உத்தரவிட்டார்.

முதல் சுற்று

[தொகு]

முதல் இத்தாலியப் படையெடுப்பு

[தொகு]
முதல் இத்தாலியப் படையெடுப்பு

செப்டம்பர் 9, 1940ல் லிபியாவிலிருந்த இத்தாலியப் படைகள் எகிப்து மீது படையெடுத்தன. இத்தாலியப் படைகள் எண்ணிக்கையில் அதிகமாக இருந்தாலும் பயிற்சி, போர்த்திறன், ஆயுத பலம், தளவாட வழங்கல் ஆகியவற்றில் பிரிட்டானியப் படையினை விட மிகவும் பின்தங்கி இருந்தது. இத்தாலியப் படைப்பிரிவுகள் மெல்ல எகிப்துள் முன்னேறின. எண்ணிக்கையில் குறைவாக இருந்த பிரிட்டானியப் படைகள் உடனடியாக எதிர்த்தாக்குதல் நடத்தவில்லை. சூயசு கால்வாயின் பாதுகாவலுக்கு இன்றியமையாத இடங்களை இத்தாலியர்கள் நெருங்கினால் மட்டும் திருப்பித் தாக்கத் திட்டமிட்டிருந்தனர். 7 நாட்களில் எதிர்ப்பின்றி 65 மைல்கள் முன்னேறிய இத்தாலியப் படைப்பிரிவுகள் தளவாடப் பற்றாக்குறையால் முன்னேற்றத்தை நிறுத்திக் கொண்டன. இவ்வாறு இந்தப் படையெடுப்பில் பெரிய அளவு மோதல்கள் நிகழவில்லை. எகிப்தில் அடுத்த கட்ட முன்னேற்றத்துக்குத் இத்தாலியப் படைகள் தயாராகிக் கொண்டிருந்த போதே முசோலினி கிரீசு மீது படையெடுத்தார். இதனால் எகிப்து படையெடுப்புக்கு முக்கியத்துவம் குறைந்து போனது. அடுத்த கட்ட முன்னேற்றத்தை மேற்கொள்ளாமல் எகிப்திலிருந்த இத்தாலியப் படைகள் காலம் தாழ்த்தி வந்தன.

இத்தாலியின் தோல்வி

[தொகு]
காம்ப்பசு நடவடிக்கையில் கைபற்றப்பட்ட இத்தாலியப் போர்க்கைதிகள்

இந்த இடைவெளியினையும் மெத்தனத்தையும் பயன்படுத்திக் கொண்ட பிரிட்டானியப் படைகள் டிசம்பர் 1940ல் காம்ப்பசு நடவடிக்கை என்று பெயரிடப்பட்ட எதிர்த்தாக்குதலைத் தொடங்கின. இந்த முயற்சி ஆரம்பத்தில் ஒரு சிறு ஐந்து நாள் திடீர்த்தாக்குதலாக மட்டுமே திட்டமிடப்பட்டது. எகிப்திலிருந்து இத்தாலியப் படைகளை விரட்ட வேண்டுமென்பது மட்டும் இதன் குறிக்கோளாக இருந்தது. டிசம்பர் 8ம் சிடி பர்ரானி என்ற இடத்தில் அமைக்கப்பட்டிருந்த இத்தாலியப் பாசறைகளின் மீது பிரிட்டானியப் படைகள் தங்கள் தாக்குதலைத் தொடங்கின. பிரிட்டானிய வான்படை இத்தாலிய வான்படைத் தளங்களின் மீது குண்டுவீசி அங்கு நிறுத்தப்பட்டிருந்த பல வானூர்திகளை அழித்தது. நிலை குலைந்து போன இத்தாலியப் படைப்பிரிவுகள் வேகமாக லிபியாவை நோக்கிப் பின்வாங்கத் தொடங்கின. எகிப்திலிருந்து அவற்றை விரட்டியதோடு நிற்காத பிரிட்டானியப் படைகள் லிபிய எல்லையைத் தாண்டித் தங்கள் விரட்டலைத் தொடர்ந்தன. ஏராளமான இத்தாலிய வீரர்களும் அவர்கள் போட்டுவிட்டு ஓடிய தளவாடங்களும் பிரிட்டானியப் படைகளிடம் சிக்கிக் கொண்டன. சாதாரண திடீர்த்தாக்குதலாகத் தொடங்கிய காம்ப்பசு நடவடிக்கை பிரிட்டானியர்களுக்கு ஒரு வெற்றிகரமான படையெடுப்பாக அமைந்தது. அடுத்த இரண்டு மாதங்களில் பார்டியா, டோப்ருக், குஃப்ரா ஆகிய இடங்களும் அவைகளால் கைப்பற்றப்பட்டன. லிபியாவினுள் 800 கிமீ வரை அவை ஊடுருவி விட்டன. பெப்ரவரி மாதம் அச்சு நாடுளால் தாக்கப்பட்டிருந்த கிரீசு நாட்டுக்கு உதவி செய்ய வேண்டிப் பிரிட்டானியப் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் லிபியாவில் படை முன்னேற்றத்தை நிறுத்த உத்தரவிட்டார்.

இச்சண்டையில் எகிப்து மீது படையெடுத்திருந்த இத்தாலிய 10வது ஆர்மி அழிக்கப்பட்டுவிட்டது. 22 தளபதிகள் உட்பட 1,30,000 இத்தாலிய வீரரகள் போர்க்கைதிகளாயினர். காம்ப்பசில் பங்கு கொண்ட பிரிட்டானியப் படையில் பிரிட்டானிய இந்தியப் படைப்பிரிவுகள் இடம் பெற்றிருந்தன.

இரண்டாம் சுற்று

[தொகு]

ரோம்மலின் வருகை

[தொகு]
”பாலைவன நரி” ரோம்மல்

முதல் முயற்சியில் இத்தாலியின் படுதோல்வி அதன் வடக்கு ஆப்பிரிக்க காலனிகளின் நிலையைக் கேள்விக் குறியாக்கியது. லிபியாவின் கிழக்குப் பகுதியாகிய சிரெனைக்காவின் பெரும்பகுதி பிரிட்டானிய கட்டுப்பாட்டில் வந்தது. முசோலினி தனக்கு உதவுமாறு இட்லரிடம் முறையிட்டார். இட்லரும் வடக்கு ஆப்பிரிக்கப் போர்முனையில் இத்தாலிக்கு உதவ ஜெர்மானியப் படைப்பிரிவுகளை அனுப்பினார். பெப்ரவரி 6, 1941ல் இத்தாலியின் நேப்பிள்ஸ் துறைமுகத்திலிருந்து கிளம்பிய ஜெர்மானியப் படைகள் பெப்ரவரி 11ம் தேதி லிபியாவை அடைந்தன. இந்தப் படை நகர்த்தல் நிகழ்வுக்குச் சோனென்புளூம் நடவடிக்கை என்று குறிப்பெயர் இடப்பட்டிருந்தது. இந்நடவடிக்கை மேலும் சில மாதங்கள் நீடித்துக் கூடுதல் படைப்பிரிவுகள் லிபியாவுக்கு அனுப்பப்ட்டன. ஆப்பிரிக்கா கோர் என்று பெயரிடப்பட்ட இப்படைப்பிரிவுக்குத் தலைமை தாங்கப் புகழ்பெற்ற ஜெர்மானியத் தரைப்படைத் தளபதி ரோம்மல் வடக்கு ஆப்பிரிக்காவுக்கு அனுப்பப்பட்டார்.

மீண்டும் கிழக்கு நோக்கி

[தொகு]

வந்திறங்கிய ஒரு மாதத்துள் நிலைமையை ஓரளவு சீர் செய்த ரோம்மல் இத்தாலி இழந்த பகுதிகளை மீண்டும் கைப்பற்றும் முயற்சியில் இறங்கினார். மார்ச் 25ம் தேதி மேற்கு நோக்கி ரோம்மலின் முன்னேற்றம் தொடங்கியது. அவரது முதன்மை இலக்குகளில் ஒன்று லிபியக் கடற்கரையோரச் சாலையின் மேல் அமைந்திருந்த டோபுருக் துறைமுகத்தைக் கைப்பற்றுவது. டோபுருக்கை ஜனவரி மாதம் இத்தாலியிடமிருந்து நேச நாட்டுப் படைகள் கைப்பற்றிய பின்னர் அதனைப் பாதுக்காக்கும் பொறுப்பு ஆஸ்திரேலியப் படைகளிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அவை தவிர வேறு சில பிரிட்டானிய இந்தியப் படைப்பிரிவுகளும் டோபுருக்கில் இருந்தன. ஆக மொத்தம் 36,000 நேச நாட்டுப் படை வீரர்கள் டோபுருக்கில் இருந்தனர். ஏப்ரல் 10ம் தேதி டோபுருக்கை அடைந்த ரோம்மலின் படைகள் அதனை முப்புறமும் முற்றுகையிட்டன. (கடல்புறம மட்டும் சூழப்படவில்லை). ஆப்பிரிக்கா கோரைத் தவிர சில இத்தாலிய டிவிசன்களும் இம்முற்றுகையில் பங்கேற்றன.

முற்றுகை தொடங்கிய சில நாட்களுக்குள்ளாகவே டோபுருக்கைக் கைப்பற்ற முதல் பெரும் தாக்குதலை நடத்தினார் ரோம்மல். ஏப்ரல் 11ம் தேதி எல் ஆடெம் சாலை வழியாக நடைபெற்ற இத்தாக்குதலை நேச நாட்டுப்படைகள் முறியடித்துவிட்டன. முதல் தாக்குதல் தோற்றபின்னரும் அடுத்த சில வாரங்களில் வேறு திசைகளில் இருந்து டோபுருக்கைத் தாக்கிய ரோம்மல் அவற்றிலும் தோல்வியைச் சந்தித்தார். ஆரம்ப கட்ட தாக்குதல்களுக்குக்குப் பின்னர் இரு தரப்பினரும் ஒரு நீண்ட முற்றுகைக்குத் தயாராகினர். பல மாத காலம் நீடித்த இந்த முற்றுகையின் போது பிரிட்டானியப் படைகள் மேற்கொண்ட பிரீவிட்டி நடவடிக்கையும் (மே 1941) பேட்டில்ஆக்சு நடவடிக்கையும் (ஜூன் 1941) தோல்வியடைந்தன. இந்த நடவடிக்கைகள் டோப்ருக்கில் ரோம்மலின் படைகள் ஈடுபட்டிருப்பதை பயன்படுத்தி லிபிய-எகிப்து எல்லையிலிருந்த ஆலஃபாயா கணவாய், கப்பூசோ கோட்டை போன்ற முக்கிய அரண்நிலைகளைக் கைப்பற்ற மேற்கொள்ளப்பட்டன. ஆனால் ரோம்மலின் படைகள் இவற்றை முறியடித்து விட்டன.

குரூசேடர் நடவடிக்கை

[தொகு]
ஆச்சின்லெக்கின் குரூசேடர் தாக்குதல்: நவம்பர் 18, 1941 – டிசம்பர் 31, 1941

நவம்பர் 1941ல் தேதி ரோம்மலை லிபியாவிலிருந்து விரட்டப் பிரிட்டானியப் படைகள் மூன்றாவதாகத் தொடங்கிய நடவடிக்கை குரூசேடர் நடவடிக்கை என்று குறிப்பெயரிடப்பட்டிருந்தது. நவம்பர் 18ம் தேதி பிரிட்டானிய 8வது ஆர்மி லிபியப் போர் முனையில் தன் தாக்குதலைத் தொடங்கியது. இந்த மோதல் நிகழ்ந்து கொண்டிருக்கும் போதே பிரிட்டானிய 18வது கோர் அச்சு நாட்டு நிலைகளைச் சுற்றி வளைத்து டோப்ருக் நகரை நோக்கி விரைந்தது. டோப்ருக் நகரை அடைந்து அதனை முற்றுகை இட்டிருந்த அச்சுப் படைகளைப் பின்புறமிருந்து தாக்கியது, டோப்ருக்கின் பாதுகாவல் படைகளும் தங்கள் அரண்நிலைகளுக்குப் பின்னிருந்து வெளிவந்து அசுசு முற்றுகைப்படைகளைத் தாக்கின. 8வது ஆர்மியின் முதல் கட்ட தாக்குதலை முறியடித்திருந்த ரோம்மல், டோப்ருக்கில் இக்கட்டான சூழ்நிலையிலிருந்த தனது படைப்பிரிவுகளின் துணைக்கு லிபியப் போர்முனையிலிருந்த அச்சுப் படைப்பிரிவுகளை அனுப்பினார். ஆனால் டோப்ருக்கிலும் லிபிய எல்லையிலும் நான்கு வாரங்கள் நடந்த கடுமையான மோதல்களால் அச்சுத் தரப்பு டாங்குகளில் பெரும்பாலானவை சேதமடைந்திருந்தன. எஞ்சியிருந்த கவசப் படைப்பிரிவுகளைப் பாதுகாப்பதற்காக ரோம்மல் டோப்ருக் முற்றுகையைக் கைவிட்டு பின்வாங்க நேர்ந்தது. டோபுருக்கிலிருந்து பின்வாங்கி முதலில் கசாலா என்ற இடத்தில் பாதுகாவல் அரண்நிலைகளை அமைக்க முயன்றார். ஆனால் நேச நாட்டுப் படைகள் அங்கும் பின் தொடர்ந்து வந்து தாக்கியதால், கசாலாவிலிருந்து எல் அகீலா நிலைக்குப் பின்வாங்கினார். இந்தப் பின்வாங்கலால் பார்டியா, ஆலஃபாயா கணவாய் போன்ற பல அச்சு நாட்டு கோட்டைகளும், அரண்நிலைகளும் நேச நாட்டுப் படைகளால் சுற்றிவளைக்கப்பட்டு பின் சரணடைந்தன. வடக்கு ஆப்பிரிக்கப் போர் முனையில் ரோம்மலின் படைகளுடன் சண்டையிட்ட நேச நாட்டுப் படைகளுக்குக் கிடைத்த முதல் பெரும் வெற்றி இது.

மூன்றாம் சுற்று

[தொகு]

கசாலாவும் டோப்ருக்கும்

[தொகு]
ரோம்மலின் இரண்டாவது தாக்குதல் :ஜனவரி 21, 1942 – ஜூலை 7, 1942

ரோம்மலின் படைகள் லிபியாவின் கிழக்குப் பகுதியிலிருந்து பின்வாங்கி எல் அகீலா என்ற இடத்திலிருந்த அரண்நிலைகளுக்குச் சென்றன. அங்கு தன் படைகளுக்கு ஓய்வு அளித்து அடுத்த கட்ட தாக்குதல்களுக்குத் தயாரானார். குரூசேடர் நடவடிக்கையில் பெரும் சேதமடைந்திருந்த பிரிட்டானியப் படைகளும் அதற்கு மேல் முன்னேற முடியாமல் தேங்கி நின்றுவிட்டன. கசாலா அரண்கோட்டினை (Gazala line) பலப்படுத்தத் தொடங்கின. ஐரோப்பாவிலிருந்து வந்திறங்கிய புதிய படைப்பிரிவுகளுடன் மீண்டும் ஜனவரி 1942ல் கிழக்கு நோக்கிப் படையெடுத்தார் ரோம்மல். பெங்காசி, டிமிமி ஆகிய நகரங்களை எளிதில் அச்சுப் படைகள் கைப்பற்றின.

ஜெர்மானிய கவசப் படைகள்

இப்புதிய தாக்குதலை எதிர்கொள்ளக் கசாலா முதல் பீர் ஹக்கீம் வரையிலான 50 கிமீ நீளமுள்ள பகுதியில் பிரிட்டானியப் படைகள் குவிக்கப்பட்டன. பெப்ரவரி-மே காலகட்டத்தில் இரு தரப்பினரும் அடுத்து நிகழவிருக்கும் மோதலுக்காகத் தயாராகினர். மே 26, 1942ல் ரோம்மல் கசாலா அரண்கோட்டின் மீதான தாக்குதலைத் தொடங்கினார். வடக்கு தெற்காக அமைந்திருந்த கசாலா அரண்கோட்டினை நேரடியாகத் தாக்காமல், பீர் ஹக்கீமுக்கு தெற்கே சென்று அதனைச் சுற்றி வளைத்துப் பின்புறமாகத் தாக்குவது அவரது திட்டம். சில நாட்கள் கடும் சண்டைக்குப்பின்னர் கசாலா கோட்டினை கிழக்கு திசையிலிருந்து தகர்த்து வெற்றி பெற்றன. பின்னர் ஜூன் முதல் வாரம் மீண்டும் கிழக்கு நோக்கி முன்னேறத் தொடங்கின. அடுத்த ஏழு நாட்கள் கசாலா அரண்நிலைக்குப் பின்னிருந்த கொப்பறைப் பகுதியில் (the cauldron) இரு தரப்பினரும் மீண்டும் மீண்டும் மோதினர். இம்மோதல்களில் ரோம்மலின் படைகள் வெற்றி பெற்றன. பிரிட்டானியத் தளபதி கிளாட் ஆச்சின்லெக், கசாலா அரண்நிலைகளை கைவிட்டு விட்டு எகிப்து-லிபிய எல்லைக்குப் பின்வாங்கத் தன் படைகளுக்கு உத்தரவிட்டார். பின்வாங்கும் படைகளைத் தப்பவிட்ட ரோம்மலின் படைகள் அடுத்து டோப்ருக் கோட்டையைத் தாக்கின. 1941ல் பல மாதகால முற்றுகையை சமாளித்திருந்த டோப்ருக் நகரம் இம்முறை அச்சுத் தாக்குதல்களைச் சமாளிக்க இயலாமல் ஜூன் 21ல் சரணடைந்தது.

முடிவின் ஆரம்பம்

[தொகு]
ஜூலை 1942ல் மேற்குப் பாலைவனப் போர்க்கள நிலவரம்

இச்சண்டையில் கிடைத்த வெற்றிக்காக ரோம்மலுக்குப் ஃபீல்டு மார்ஷலாகப் பதவி உயர்வு தரப்பட்டது. டோப்ருக்கில் கிடைத்த பெரும் வெற்றியைத் தக்கவைத்துக் கொள்ள எகிப்தினுள் முன்னேறின ரோம்மலின் படைகள். நிலைகுலைந்த நேச நாட்டுப் படைகள் கசாலா அரண்நிலைகளில் இருந்து மெர்சா மாத்ரூ அரண்நிலைகளுக்குப் பின்வாங்கின. லிபிய-எகிப்து எல்லையிலிருந்து எகிப்து நாட்டுப்பகுதிக்குள் 100 கிமீ தொலைவில் இந்த அரண்கோடு அமைந்திருந்தது. முதலில் இந்த அரண்நிலையில் ரோம்மலின் படைகளை எதிர்கொள்ள நேச நாட்டுப் படைகள் திட்டமிட்டிருந்தனர். மெர்சா மாத்ரூவில் தாக்கும் படைகள் எளிதாகச் சுற்றி வளைத்துப் பாதுகாவல் படைகளைப் பக்கவாட்டில் இருந்து தாக்குவதற்கு வசதியாகப் புவியியல் அமைப்பு அமைந்திருந்தது. ரோம்மல் இத்தகைய சுற்றி வளைத்துத் தாக்கும் போர் உத்திகளை விரும்பிக் கையாள்பவராகையால், அவரது தாக்குதலில் இருந்து மெர்சா மாத்ரூவைப் பாதுகாக்க முடியாது என்று நேச நாட்டுத் தளபதிகள் உணர்ந்தனர். எனவே இந்த அரண்நிலையிலிருந்தும் பின்வாங்கிக் கிழக்கே 100 கிமீ தொலைவிலுள்ள எல் அலாமெய்ன் என்ற இடத்தில் புதிய அரண்நிலைகளை அமைத்தனர். அலாமெய்னின் தெற்கே கட்டாரா என்ற பள்ளப்பகுதி (Quattara depression) அமைந்திருந்தால், ரோம்மலால் இந்த அரண்நிலையை எளிதில் சுற்றி வளைக்க முடியாது என்று அவர்கள் கருதினர்.

எல் அலாமெய்னில் நேச நாட்டுப் பாதுகாவல் படைகள்

ஜூன் 30ம் தேதி தான் ரோம்மலின் படைகள் எல் அலாமெய்ன் அரண்நிலைகளை அடைந்தன. அதற்கு மறுநாள் (ஜூலை 1) அலாமெய்ன் மீதான அச்சுத் தாக்குதல் தொடங்கியது. அலாமெய்னின் புவியியல் அமைப்பால் சுற்றி வளைத்துத் தாக்கும் உத்தியை ரோம்மலால் பயன்படுத்த இயலவில்லை. நேரடியாகப் பலமான நேச நாட்டு அரண்நிலைகளின் மீது தாக்கவேண்டியதாயிற்று. ஐந்து நாட்கள் இடைவிடாது தாக்குதல் நடத்தியும் ரோம்மலின் படைகளால் அலாமெய்ன் அரண்நிலையை ஊடுருவ முடியவில்லை. பெரும் இழப்புகளுடன் தன் தாக்குதலைத் தற்காலிகமாக நிறுத்திய ரோம்மல், அலாமெய்ன் அரண்நிலைக்கு எதிராகத் தானும் ஒரு அரண்நிலையை உருவாக்கத் தொடங்கினார். அச்சுப் படைகளின் தாக்குதல் திறன் பெரும்பாலும் அழிந்துபோனதை உணர்ந்த ஆச்சின்லெக், அச்சு நிலைகளின் மீது எதிர்த்தாக்குதலைத் தொடங்கினார்.

அடுத்த இருபது நாட்கள் இரு தரப்பினரும் அலாமெய்னில் அமைந்துள்ள பல மணல் முகடுகளைக் கைப்பற்ற கடுமையாக மோதிக் கொண்டனர். டெல் எல் ஐசா, ருவைசாத், மித்தெயிர்யா ஆகிய முகடுகளைக் கைப்பற்ற மீண்டும் மீண்டும் பல சண்டைகள் நிகழ்ந்தன. இத்தொடர் மோதல்களால் ஜூலை இறுதியில் இரு தரப்பு படைப்பிரிவுகளும் பலத்த சேதங்களுக்கு ஆளாகி இருந்தன. பிரிட்டானிய 8வது ஆர்மியும், ரோம்மலின் ஆப்பிரிக்கா கோரும் தொடர்ந்து சண்டையிட இயலாத அளவுக்குப் பலவீனமடைந்திருந்தன. யாருக்கும் வெற்றி தோல்வியின்றி இச்சண்டை முடிவடைந்தாலும், அலெக்சாந்திரியா நோக்கியான ரோம்மலின் முன்னேற்றம் தடைபட்டுப் போனது. பிரிட்டானியத் தளபதி ஆச்சின்லெக்கின் மீது நம்பிக்கை இழந்த பிரிட்டானிய பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் அவருக்கு பதிலாகப் பதிலாக பெர்னார்ட் மோண்ட்கோமரியை புதிய பிரிட்டானியத் தளபதியாக நியமித்தார். நின்று போன தனது கிழக்கு நோக்கிய முன்னேற்றத்தை மீண்டும் தொடங்க ரோம்மல் ஆகஸ்ட்-செப்டம்பர் 1942ல் இறுதியாக ஒரு முயற்சி மேற்கொண்டார். ஆனால் அலாம் எல் அல்ஃபாவில் நிகழ்ந்த இச்சண்டையில் ரோம்மலின் படைகள் தோற்றன.

இரண்டாம் எல் அலாமெய்ன்

[தொகு]
மோண்ட்கோமரியின் எதிர்த்தாக்குதல்: நவம்பர் 1942 – பெப்ரவரி 1943

அச்சுப்படைகளின் கிழக்கு நோக்கிய முன்னேற்றம் எல் அலாமெய்ன் அரண்கோட்டில் தடைபட்ட இந்நேரத்தில் வடக்கு ஆப்பிரிக்காவின் மேல்நிலை உத்தி நிலை நேச நாட்டுப் படைகளுக்குச் சாதமாக மாறியிருந்தது. நேச நாடுகளின் தளவாட உற்பத்தி பலம் மற்றும் எண்ணிக்கை பலம் ஆகியவை ரோம்மலின் படைகளை இக்கட்டான நிலைக்குக் கொண்டு சென்றிருந்தன. நாளுக்கு நாள் நேசநாட்டுப் படைபலம் கூடிக் கொண்டே போனது. ஈராண்டுகள் சண்டைகளில் பல பிரிட்டானியத் தளபதிகள் மாற்றப்பட்டு இறுதியில் ரோம்மலின் போர்த்திறனிற்கு ஏற்றத் திறனுடைய பெர்னார்ட் மோண்ட்கோமரி பிரிட்டானிய 8வது ஆர்மியின் தளபதியாகப் பொறுப்பேற்றிருந்தார். இக்காரணங்களால் முதலாம் எல் அலாமெய்னில் பிரிட்டானியப் படைகள் வெற்றி பெற்றால் வடக்கு ஆப்பிரிக்காவில் ரோம்மலின் தோல்வி உறுதி என்ற நிலை உருவானது. அலாம் எல் அல்ஃபா சண்டைக்குப் பின் கிடைத்த இரு மாத இடைவெளியை இரு தரப்பினரும் தங்கள் படைகளை பலப்படுத்தப் பயன்படுத்தியிருந்தனர். இதுவரை பின்வாங்கி வந்த பிரிட்டானியப் படைகள் மேற்கு நோக்கித் தங்கள் தாக்குதலை ஆரம்பித்தன. அக்டோபர் 23, 1942ல் இரண்டாம் எல் அலாமெய்ன் சண்டை தொடங்கியது. அக்டோபர் 23 முதல் நவம்பர் 7 வரை ஐந்து கட்டங்களாக நடந்த இச்சண்டையில் நேச நாட்டுப் படைகளின் எண்ணிக்கை பலமும், ஆயுத பலமும் ரோம்மலின் படைகளை வீழ்த்தின. எரிபொருள் பற்றாக்குறையினாலும், தனது படைகளுக்கு ஏற்பட்ட பெரும் சேதத்தினாலும் தனது படையெடுப்பைக் கைவிட்டு பின்வாங்கினார் ரோம்மல்.

இரண்டாம் எல் அலாமெய்னில் படைகளை நோட்டமிடும் மோண்ட்கோமரி

பின் வாங்கிய ரோம்மலை விடாது விரட்டிச் சென்ற நேச நாட்டுப் படைகள் விரைவில் லிபியா முழுவதையும் கைப்பற்றின. நவம்பர் 7ம் தேதி மெர்சா மாத்ரூ, 9ம் தேதி சிடி பர்ரானி, 11ம் தேதி ஆலஃபாயா கணவாய் ஆகிய அரண்நிலைகளை அச்சுப் படைகள் காலி செய்தன. நவம்பர் 13ம் தேதி டோப்ருக் நகரம் நேச நாட்டுப் படைகளிடம் வீழ்ந்தது. இதே போல டெர்னா நவம்பர் 15ம் தேதியும் பெங்காசி அதற்கு ஐந்து நாட்கள் கழித்தும் நேச நாட்டுப் படைகளால் கைப்பற்றப்பட்டன. டிசம்பர் 11/12ல் எல் அகீலாவும் வீழ்ந்தது. ஜனவரி 1943ல் அச்சுப் படைகள் லிபியாவை விட்டு முழுவதுமாக வெளியேறித் துனிசியாவுக்கு பின்வாங்கி விட்டன. திரிப்பொலி நகரம் நேச நாட்டுப் படைகள் வசமானது. இரண்டாம் எல் அலாமெய்ன் சண்டை நடந்து கொண்டிருக்கும் போதே டார்ச் நடவடிக்கையின் மூலம் இன்னொரு புறம் அமெரிக்கப் படைகள் வடக்கு ஆப்பிரிக்காவில் தரையிறங்கின. இதனால் வடக்கு ஆப்பிரிக்காவில் அச்சுபடைகள் இருமுனைப் போர் புரியும் நிலைக்குத் தள்ளப்பட்டன.

விளைவுகள்

[தொகு]

இப்போர்த்தொடரில் ஏற்பட்ட தோல்வியால், சூயசு கால்வாயைக் கைப்பற்றி பிரித்தானியப் பேரரசை இரண்டாகப் பிளக்கும் அச்சு நாட்டு மேல் நிலை உத்தி நிறைவேறாது போனது. துனிசியாவிற்கு ரோம்மலின் படைகள் பின்வாங்கியதால் அடுத்து துனிசியப் போர்த்தொடர் தொடங்கியது. இதன் இறுதியில் வடக்கு ஆப்பிரிக்காவில் அச்சுப் படைகள் முற்றிலுமாகத் தோற்கடிக்கப்பட்டு நேசப் படைகளிடம் சரணடைந்தன.

இரண்டாம் உலகப் போரின் மற்ற களங்களைக் காட்டிலும் வடக்கு ஆப்பிரிக்கக் களம் சிறியது, முக்கியத்துவம் குறைந்தது என்றாலும், மேற்குப் பாலைவனப் போர்த்தொடரின் திடீர் மாற்றங்களும், நிலையற்ற தன்மையும் பொது மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தன. பிற களங்களில் இல்லாத அளவுக்கு இதில் ஈடுபட்ட தளபதிகளுக்குப் பேரும் புகழும் கிடைத்தது. ரோம்மலின் போர்த் திறனும், பாலைவனத்தில் எதிர்பாராத இடத்தில் தாக்கும் அவரது உத்திகளும் அவருக்கு “பாலைவன நரி” (Desert Fox) என்ற புனைபெயர் ஏற்படக் காரணமாயின. அவரது புகழ் ஜெர்மானிய பொதுமக்களிடையே மட்டுமல்லாது நேச நாட்டுப் படைகள் மற்றும் பொது மக்களிடையேயும் பரவியது. அவரைத் தோற்கடித்ததால் மோண்ட்கோமரியும் புகழ் பெற்றார்.

போர்க்களத்தில் நவீன கவசப் படைகளின் வெற்றிக்குத் தளவாடம் மற்றும் எரிபொருள் வழங்கல் இன்றியமையாதவை என்பதை இப்போர்த் தொடர் தெளிவாக உணர்த்தியது. நடுநிலக் கடலில் சரக்குக் கப்பல் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தியவரே இப்போர்த்தொடரில் வெற்றி தோல்வியை நிர்ணயித்ததால், தளவாடப் போக்குவரத்தின் முக்கியத்துவத்தை இப்போர்த்தொடர் உலகுக்கு உணர்த்தியது.

மேற்கோள்கள்

[தொகு]