மிச்சேல் விபரப்பட்டியல்
மிச்சேல் விபரப்பட்டியல் (MICHEL-Briefmarken-Katalog) ஜேர்மன் மொழி வழங்கும் நாடுகளில் பயன்பாட்டிலுள்ள பெரியதும், பரவலாக அறியப்பட்டதுமான தபால்தலை விபரப்பட்டியல் ஆகும். 1910 ஆம் ஆண்டில் முதன் முதலாக வெளியிடப்பட்ட இது, தபால்தலை சேகரிப்பாளர் விற்பனையாளர் மத்தியில் முக்கியமான உசாத்துணை நூலாக ஆகியது. இது ஆங்கில மொழி மூலமான ஸ்கொட் விபரப்பட்டியலிலும் அதிகமான தகவல்களைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகின்றது.
ஹியூகோ மிச்சேல் என்னும் ஒரு தபால்தலை விற்பனையாளரின் விலைப்பட்டியலாக ஆரம்பமானது இது. 1920 ஆம் ஆண்டளவில் இது, ஐரோப்பா, கடல்கடந்த நாடுகள் என இரண்டு பாகங்களாகப் பிரித்து வெளியிடப்பட்டது. படிப்படியாக வளர்ந்து இன்று உலக நாடுகள் அனைத்தையும் உள்ளடக்கிய 12 பாகங்களாக ஆகியுள்ளது. இத்துடன் மேலும் பல சிறப்புப் பாகங்களையும் சேர்த்து இந் நிறுவனம் வெளியிடும் பாகங்கள் இன்று நாற்பது அளவில் உள்ளது. ஸ்கொட் விபரப்பட்டியலைப் போல் மிச்சேல் ஒவ்வொரு ஆண்டும் இற்றைப்படுத்தப்பட்ட பட்டியல்களை முழுமையாக வெளியிடுவது இல்லை. பதிலாக சில பாகங்களை மட்டுமே இற்றைப்படுத்துகின்றது. மிச்சேல் வெளியிடப்பட்ட தபால்தலைகளின் எண்ணிக்கை, தாள்களின் வடிவம் முதலிய கூடுதலான தகவல்களைத் தரும் ஒரு விபரப்பட்டியல் ஆகும். அத்துடன் அரசியல் மற்றும் பிற காரணங்களுக்காக ஸ்கொட் விபரப்பட்டியலில் இடம்பெறாத பல நாடுகள் மிச்சேல் பட்டியலில் இடம்பெறுவது சில சேகரிப்பாளர்களைப் பொறுத்தவரை முக்கியத்துவம் வாய்ந்ததாகும். எடுத்துக்காட்டாக, கியூபா, வட கொரியா போன்ற ஸ்கொட் விபரப்பட்டியலில் இடம்பெறாத நாடுகள் மிச்சேலில் இடம்பெற்றுள்ளன.
1960 களிலும் 70 களிலும், அரேபியத் தீபகற்பத்திலுள்ள பல அமீரகங்கள் தபால் சேவைப் பயன்பாட்டுக்குத் தேவையானவற்றிலும் மேலதிகமாக ஏராளமான தபால்தலைகளை வெளியிட்டன. பல தபால்தலை விபரப்பட்டியல்கள் இவற்றைப் பெறுமதியற்ற தபால்தலைகளாகக் கருதிப் பட்டியலிடுவதில்லை. ஆனால் மிச்சேலில் இவையும்கூட உள்ளடக்கப்பட்டுள்ளன.
வெளியிணைப்புக்கள்
[தொகு]- மிச்சேல் இணையத் தளம் – ஜேர்மன்