உள்ளடக்கத்துக்குச் செல்

மாமல்லபுரம் பரமேஸ்வர மகாவராக விஷ்ணுகிருகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாமல்லபுரம் பரமேஸ்வர மகாவராக விஷ்ணுகிருகம் அல்லது ஆதிவராகக் கோயில் என்பது, தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னைக்குத் தெற்கே கிழக்குக் கடற்கரையோரமாக உள்ள பழங்காலத் துறைமுக நகரமான மாமல்லபுரத்தில் அமைந்துள்ள பல குடைவரைகளுள் ஒன்று. இப்பகுதியில் அமைந்துள்ள பிற குடைவரைகளைப் போலன்றி இக்குடைவரைக் கோயிலில் பூசைகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.[1]

அமைப்பு

[தொகு]

இக்குடைவரை மண்டபத்தில் இரண்டு தூண் வரிசைகள் இருந்தாலும், உட்புறத் தூண் வரிசையில் இரண்டு வட்டத்தூண்களும் அவற்றுக்கு நேரே சுவர்களோடு ஒட்டியபடி இரண்டு அரைத்தூண்களும் மட்டுமே உள்ளன. முகப்பை அண்டிய தூண் வரிசையில் நான்கு முழுத்தூண்களும் இரண்டு அரைத்தூண்களும் உள்ளன. பின்புறச் சுவரில் ஒரு கருவறை குடையப்பட்டுள்ளது. கருவறைக்குள் வராக மூர்த்தியின் சுதையால் செய்யப்பட்ட சிற்பம் காணப்படுகின்றது. கருவறை வாயிலின் இரு பக்கங்களிலும் வாயிற்காவலர் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மண்டபச் சுவர்களிலும் கருவறைக்கு இரண்டு பக்கங்களிலும் உள்ள சுவர்ப் பகுதிகளிலும், மண்டபத்தின் பக்கச் சுவர்களிலும் பல சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இவற்றுள் திருமால், சிவன், வராகமூர்த்தி, இலக்குமி, துர்க்கை போன்ற கடவுளர்களின் சிற்பங்கள் அடங்கும். மண்டபத்தில் முடி அணிந்த இரு பெண்கள் புடைசூழ முடி அணிந்தபடி அமர்ந்திருக்கும் ஒருவனின் சிற்பம் உள்ளது. இது ஒரு அரசைனையும் அவனது அரசியரையும் குறிக்கிறது. இன்னோரிடத்தில், நிற்கும் நிலையில் கருவறையை நோக்கிக் கைகாட்டியபடி இரண்டு அரசியருடன் காணப்படும் இன்னொரு அரசனின் சிற்பமும் உள்ளன. இச்சிற்பங்கள் பல்லவ மன்னன் சிம்மவிட்டுணுவையும், அவனது மகன் மகேந்திரவர்மனையும் குறிப்பதாகக் கருதப்படுகிறது.[2][3]

கல்வெட்டுக்கள்

[தொகு]

இங்கே பல கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. பல்லவ மன்னர்களான சிம்மவிட்டுணு, மகேந்திரவர்மன் ஆகியோரின் பெயர்களோடு கூடிய கிரந்தக் கல்வெட்டுக்களும், தெலுங்குக் கல்வெட்டொன்றும், முதலாம் இராசராசன் காலத்துக் கல்வெட்டொன்றும் இங்கே உள்ளன. அரசர்களின் சிற்பங்களுக்கு மேலேயுள்ள கல்வெட்டுக்களில் ஒன்றில் "சிறீ சிம்ம விஷ்ணு போதாதி ராஜன்" என்னும் பெயரும், மற்றதில், "சிறீ மகேந்திர போதாதி ராஜன்" என்ற பெயரும் இருப்பதாலேயே அவற்றின் கீழுள்ள சிற்பங்கள் குறித்த பெயர்களைக் கொண்ட அரசர்களுடையவை எனக் கண்டறியப்பட்டன.[4]

காலம்

[தொகு]

இக்கோயிலில் சிம்மவிஸ்ணுவின் சிலை இருத்தலால் அது அவனாலேயே கட்டப்பட்டிருக்கக்கூடும் என்பது சில ஆய்வாளர்கள் முன்மொழிந்துள்ளனர். மகேந்திரவர்மனின் சிற்பமும் இருந்தாலும், அவன் பட்டத்துக்கு வந்த பின்னர் வைணவனாக இருந்ததில்லை ஆதலால் அவன் அதைக் கட்டியிருக்க முடியாது என்பது அவர்களது கருத்து. எனவே, மகேந்திரவர்மன் இளவரசனாக இருந்தபோது இக்கோயிலை வைணவனான சிம்மவிட்டுணு கட்டியிருப்பது சாத்தியம் என்கின்றனர்.[5] இவர்கள் இருவருக்கும் பின்வந்த மாமல்லன் எனப்படும் நரசிம்மவர்மனால் இக்குடைவரைப் பணி தொடங்கப்பட்டது என்றும், அவனுக்குப் பின்வந்த பரமேசுவரவர்மன் காலத்திலேயே இக்கோயிலில் பூசைகள் தொடங்கப்பட்டிருப்பதால் அவன் காலத்திலேயே இக்கட்டிடப் பணி நிறைவேறியிருக்கக்கூடும் என்பதும் பிற்கால ஆய்வாளர் சிலருடைய கருத்து.[6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. இராசவேல், சு., சேஷாத்திரி, அ. கி., தமிழ்நாட்டுக் குடைவரைக் கோயில்கள், பண்பாட்டு வெளியீட்டகம், சென்னை, 2000. பக். 85
  2. இராசமாணிக்கம் பிள்ளை, மா., பல்லவர் வரலாறு, செல்லப்பா பதிப்பகம், மதுரை, 2009. பக். 98, 99.
  3. இராசவேல், சு., சேஷாத்திரி, அ. கி., 2000. பக். 86, 87.
  4. இராசமாணிக்கம் பிள்ளை, 2009. பக். 98, 99.
  5. இராசமாணிக்கம் பிள்ளை, 2009. பக். 99.
  6. இராசவேல், சு., சேஷாத்திரி, அ. கி., 2000. பக். 88.