மாமல்லபுரம் கோனேரி மண்டபம்
மாமல்லபுரம் கோனேரி மண்டபம் என்பது, மாமல்லபுரத்தில் அமைந்துள்ள மலையின் மேற்குப்புறப் பாறை முகப்பில் கோனேரி பள்ளம் என்னும் ஏரிக்கு எதிரில் அமைக்கப்பட்டுள்ள குடைவரையைக் குறிக்கும். இதற்கு ஐந்து கருவறைக் கோயில் என்ற பெயரும் உண்டு.[1]
சற்று உயர்வான இடத்தில் அமைந்துள்ள இக்குடைவரைக்குச் செல்ல நான்கு படிகள் அமைக்கப்படுள்ளன. இம்மண்டபத்தில் இரண்டு தூண் வரிசைகள் உள்ளன. ஒவ்வொரு வரிசையிலும் நான்கு முழுத்தூண்களும் பக்கச் சுவர்களோடு ஒட்டியபடி இரண்டு அரைத் தூண்களும் காணப்படுகின்றன. முகப்பை அண்டியுள்ள வரிசையில் உள்ள முழுத்தூண்கள் மேலும் கீழும் சதுர வெட்டுமுகத்தையும், நடுவில் எண்கோணப்பட்டை அமைப்பையும் கொண்டுள்ளன. இவற்றின் மேல் போதிகை, உத்தரம் போன்ற பகுதிகளும் நேர்த்தியுடன் காணப்படுகின்றன. உள்வரிசையில் உள்ள முழுத்தூண்கள் வட்டமான குறுக்குவெட்டுமுகம் கொண்டவை. இவை நடுவில் பட்டியையும், அதற்கு மேல் பத்மபந்தம், கும்பம் ஆகிய உறுப்புக்களையும் கொண்டனவாக அமைந்துள்ளன.
மண்டபத்தின் பின்பக்கச் சுவரில் ஐந்து கருவறைகள் குடையப்பட்டுள்ளன. நடுக் கருவறை வாயிலும், கரைகளில் அமைந்துள்ள வாயில்களும் ஒரே மட்டத்திலும், நடுக் கருவறைக்கு அருகில் இரண்டு பக்கங்களிலும் உள்ள கருவறை வாயில்கள் சற்று உள்வாங்கியும் காணப்படுகின்றன. எல்லாக் கருவறைகளினதும் வாயில்களின் இரண்டு பக்கங்களிலும் வாயிற் காவலர்களின் புடைப்புச் சிற்பங்கள் உள்ளன. கருவறைகளில் சிற்பங்களோ இறை உருவங்களோ காணப்படவில்லை. இந்த ஐந்தில் நடுவில் உள்ள மூன்றிலும் சிவனையும் ஏனைய இரண்டில் ஒன்றில் திருமாலையும், மற்றதில் நான்முகனையும் வைத்து வணங்கியிருக்கக்கூடும் என்ற கருத்து உண்டு. வேறொரு ஆய்வாளர் இவ்வைந்தும் சிவனின் ஐந்து மூர்த்தங்களுக்கு உரியவை ஆகலாம் என்கிறார். இவை தவிர இந்த ஐந்து கருவறைகளும், சிவன், திருமால், முருகன், கொற்றவை, இந்திரன் ஆகிய ஐவருக்கு உரியவை என கருத்தும் உள்ளது.[2]