மல்லசமுத்திரம் பாறை ஓவியங்கள்
மல்லசமுத்திரம் பாறை ஓவியங்கள் என்பன, கிருட்டிணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மல்லசமுத்திரம் அல்லது மல்லசந்திரம் என அழைக்கப்படும் ஊருக்கு அண்மையில் காணப்படும் பெருங்கற்காலக் கல்திட்டைகளில் வரையப்பட்டுள்ள ஓவியங்கள் ஆகும். இவ்வூர் கிருட்டிணகிரி பெங்களூரு நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பீர்பள்ளி என்னும் இடத்திலிருந்து வடக்கே செல்லும் சாலையில் அமைந்துள்ளது.[1]
இங்குள்ள ஓவியங்களில் விலங்கு, மனிதர், சூரியன் போன்ற உருவங்கள் காணப்படுகின்றன. மனிதன் ஒருவன் குதிரைமீது அமர்ந்திருக்கும் காட்சி ஒரு ஓவியத்தில் உள்ளது.[2] புலிமீது நின்றபடி கையில் வில்லேந்திய மனிதனின் ஓவியம், புலியைக் கொன்ற ஒருவனைப் பாராட்டும் வகையில் நடத்தப்படும் புலிமங்கலக் காட்சியைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது.[3] பாயும் நிலையில் உள்ள வேட்டை நாயின் உருவம் இன்னொரு ஓவியத்தில் காணப்படுகிறது.[4] சுற்றிலும் தடுப்பு வேலியோடு கூடிய மரம் ஒன்றின் ஓவியமும் இங்கு உள்ளது.[5]
கோட்டுருவங்களாக அமைந்துள்ள இவ்வோவியங்களில் ஒன்று தவிர ஏனையவை வெள்ளை நிறத்தில் வரையப்பட்டுள்ளன.[6]
மேற்கோள்கள்
[தொகு]உசாத்துணைகள்
[தொகு]- பவுன்துரை, இராசு., தமிழகப் பாறை ஓவியங்கள், மெய்யப்பன் தமிழாய்வகம், சிதம்பரம், 2001.
- துரைசாமி, ப., மதிவாணன், இரா., தருமபுரி பாறை ஓவியங்களில் சிந்துவெளி எழுத்துக்கள், சேகர் பதிப்பகம், சென்னை, 2010.
- Dayalan, D., Rock Art in Tamilnadu and its Archaeological Perspective.