மதுரைக் கண்ணத்தனார்
மதுரைக் கண்ணத்தனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல்கள் இரண்டு உள்ளன. அவை அகநானூறு 360, நற்றிணை 351 ஆகியவை.

அகம் 360 சொல்லும் செய்தி
[தொகு]பகலில் வந்த தலைவனை இரவில் வருமாறு தோழி சொல்லி அனுப்புகிறாள்.
இரவில் வரவேண்டிய இடத்துக்கு அடையாளம் சொல்கிறாள். எங்கள் முற்றத்துப் பனைமரத்தில் நாரையும் அன்றிலும் இருக்கும். முற்றத்தில் புன்னைப் பூக்கள் பொன்னைப் போலக் கொட்டிக்கிடக்கும். இதுதான் அடையாளம் என்கிறாள்.
அந்தி வானம்
[தொகு]பகலின் ஒளி ஒருபுறமும், இரவின் இருள் மற்றொருபுறமும் மயங்கி நிற்பது அந்தி வானம். இது சிவனும் திருமாலும் ஓருருவம் பெற்றிருக்கும் தோற்றம் போல உள்ளதாம். இந்த அந்தியில் தலைவன் வந்துசெல்ல வேண்டாம் என்கிறாள் தோழி.

நற்றிணை 351 சொல்லும் செய்தி
[தொகு]தலைவியிடம் மாற்றம் கண்ட தாய் அவளை வீட்டுக் காவலின் வைத்துப் பார்த்துக்கொள்கிறாள். அத்துடன் கடவுளைப் பேணி முருகு அயர்கிறாள். இந்த நிலையில் தோழி தாய்க்கு எடுத்துரைக்கிறாள். கடவுளைப் பேணுவதால் பயனில்லை. தினைப்புனம் காக்க அனுப்பிவை. இழந்த அழகைத் தலைவி மீண்டும் பெறுவாள் - என்கிறாள்.
இதணம்
[தொகு]வேங்கைமரக் கிளைகளுக்கு இடையே களிற்றியானை குத்திக் கொன்ற புலித்தோலை இருக்கையாகக் கிளைகளில் இழுத்துக் கட்டி அமைக்கப்படுவது இதணம் என்னும் பரண்.
இதனைச் 'சாத்தில்' என்று கூறுவர். சாத்தப்பட்ட இல்லம் என்பது இதன் பொருள்.