உள்ளடக்கத்துக்குச் செல்

மங்கரசுவளையபாளையம் தூக்கிவச்சான்பாறை பெருங்கற்காலச்சின்னம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மங்கரசுவளையபாளையம் தூக்கிவச்சான்பாறை பெருங்கற்காலச்சின்னம் என்பது தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டம், நம்பியூர் வட்டம், வேமாண்டபாளையம் கிராமத்தின் அருகே, மங்கரசுவளையபாளையம் கிராமத்தில் அமைந்துள்ளது. [1] வரலாற்று ஆய்வாளர்களான முடியரசு, வெள்ளியங்கிரி, மற்றும் ஆனந்தன் ஆகியோரை உள்ளடக்கிய குழுவினர், இங்குள்ள சூரப்பநாயக்கன் குட்டை என்னும் பாறைக்குழியில் ஆய்வு மேற்கொண்டபோது இந்தப் பெருங்கற்கால ஈமச்சின்னத்தைக் கண்டறிந்தனர். இந்தப் பெருங்கற்கால ஈமச்சின்னம் சுமார் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. [2][3]

அமைவிடம்

[தொகு]

இவ்வூர் நம்பியூரிலிருந்து 9.3 கி.மீ. தொலைவிலும், புளியம்பட்டியிலிருந்து 12.6 கி.மீ. தொலைவிலும், சேவூரிலிருந்து 12.7 கி.மீ. தொலைவிலும், கொளப்பலூரிலிருந்து 22.9 கி.மீ. தொலைவிலும், குன்னத்தூரிலிருந்து 27.2 கி.மீ. தொலைவிலும், கோபிச்செட்டிபாளையத்திலிருந்து 30.1 கி.மீ. தொலைவிலும், மாவட்டத் தலைநகரான ஈரோட்டிலிருந்து 61 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. வேமாண்டபாளையத்தின் அஞ்சல் குறியீட்டு எண் 641603 ஆகும்.[1]இவ்வூரின் புவியமைவிடம் 77°12'06.8"N அட்சரேகை 11°18'01.9"E தீர்க்க ரேகை ஆகும்.

சூரப்பநாயக்கன் குட்டை என்னும் பாறைக்குழி பெருங்கற்காலச் சின்னம்

[தொகு]

சூரப்பநாயக்கன் குட்டை என்னும் பாறைக்குழியில் கண்டறியப்பட்ட பெருங்கற்காலச் சின்னம் நான்கு பாறைக்கற்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.[2][3] இப்பகுதியில் மிகுதியாகக் கல் குவாரிகள் இருக்கின்றன. மேலே குறிப்பிட்டது போல பெருங்கற்காலச் சின்னங்கள் இப்பகுதியில் இருந்திருக்கலாம். கல்குவாரியினரால் இவை உடைத்து அழிக்கப்பட்டிருக்கலாம் என்ற கருத்து பரவலாகக் காணப்படுகிறது.[4]

இரண்டடி உயரம் கொண்ட கரடுமுரடான மூன்று பாறைக்கற்களை, கல் அடுப்பு போல ஒன்றிணைத்து வைத்து அடித்தளம் அமைத்துள்ளனர். இந்த அடித்தளத்தின் மீது கூம்பு வடிவிலான பெருங்கல் ஒன்று நிறுத்தப்பட்டுள்ளது. பெருங்கல்லின் குறுகிய பகுதி அடித்தளத்தின் மீது பொருத்தி நிறுத்தப்பட்டுள்ளது. கூம்புக்கல்லின் மேற்பகுதி 11 அடி விட்டமும் கீழ்ப்பகுதி 5.5 அடி விட்டமும் கொண்டது. இந்தப் பெருங்கல்லின் எடை சுமார் இரண்டு டன் என்று செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. [3] கரடுமுரடான ஒரு சங்கை (conch) ஓர் அடித்தளத்தில் பொருத்தி நிறுத்தி வைத்தது போல இது தோற்றம் தருகிறது.[2][4]

மிகுந்த எடைகொண்ட கரடுமுரடான பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மிகுதியாகக் கண்டறியப்பட்டுள்ளன. எனினும், கொங்குநாட்டில் கண்டறியப்பட்ட இந்தப் பெருங்கற்கால ஈமச்சின்னம் வரலாற்று ஆய்வாளர்களை வியப்படையச் செய்துள்ளது. இது தொடக்ககாலத்து கல்திட்டை (Dolmen) வகையைச் சேர்ந்ததாகலாம் என்று தொல்லியலாளரான தி.சுப்பிரமணியம் கருதுகிறார். தொல்லியலாளரான பூங்குன்றன், கொங்குநாட்டில் காணப்படும் அரிய பெருங்கற்கால ஈமச்சின்னமாக இதனைக் கருதுகிறார். மாவட்டத் தொல்லியல் அதிகாரி நந்தகுமாருக்கு இது குறித்துத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.[2][3][4]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]