உள்ளடக்கத்துக்குச் செல்

மகிபாலன்பட்டி குடைவரை கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மகிபாலன்பட்டி குடைவரை கோயில், சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தாலுகாவில் உள்ள மகிபாலன்பட்டியில் அமைந்துள்ள ஒரு குடைவரை கோயில். கிபி 9 ஆம் நூற்றாண்டில் தொடக்ககாலப் பாண்டியர்களால் அமைக்கப்பட்டது. இது கருவறையை மட்டுமே கொண்ட சிறிய குடைவரை கோயில். பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமான இக்கோயில் தற்போது வருவாய்த்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.[1]

அமைப்பு

[தொகு]

ஊருக்குப் புறத்தேயுள்ள குன்று ஒன்றின் மேற்கு நோக்கிய சரிவில் இக்குடைவரை கோயில் அமைந்துள்ளது. மிகவும் எளிமையான அமைப்புக்கொண்ட இச்சிறிய கோயிலின் வாயிலின் இரண்டு பக்கங்களிலும் அரைத் தூண்கள் காணப்படுகின்றன. இது ஒரு குடிசைக்கோயில் போன்ற தோற்றம் தரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.[2]

சிற்பங்கள்

[தொகு]

கருவறைக்குள் சதுரவடிவ யோனியோடு கூடிய சிவலிங்கம் உள்ளது. இதைத் தாய்ப் பாறையிலேயே செதுக்கியுள்ளனர். வெளியே இதே பாறையின் இன்னொரு பக்கத்தில் ஒரு கோட்டமும் அதில் ஒரு பிள்ளையார் சிற்பமும் செதுக்கப்பட்டுள்ளன.

கல்வெட்டுக்கள்

[தொகு]

குடைவரையின் முகப்புச் சுவரில், பிற்காலப் பாண்டியர் காலத்துக்குரிய கல்வெட்டு ஒன்று பொறிக்கப்பட்டுள்ளது. சுந்தர பாண்டியனின் பத்தாம் ஆண்டுக்குரிய இக்கல்வெட்டு, இக்கோவிலுக்குக் கொடை அளித்தது பற்றிக் கூறுகின்றது. இக்கல்வெட்டில் பூங்குன்ற நாட்டைச் சேர்ந்த பூங்குன்றம் என்னும் ஊரில் உள்ள கோயில் எனக் குறிக்கப்பட்டுள்ளது. இதனால் பழங் காலத்தில் இப்பகுதி பூங்குன்றம் எனப் பெயர் பெற்றிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. சங்ககாலப் புலவரான கணியன் பூங்குன்றனார் இவ்வூரவராக இருக்கலாம் என்ற கருத்தும் உண்டு.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Jeyaraj, V., Directory of Monuments in Tamilnadu, Director of Museum, Government of Tamilnadu, Chennai, 2005, p.173
  2. இராசவேல், சு., சேஷாத்திரி, அ. கி., தமிழ்நாட்டுக் குடைவரைக் கோயில்கள், பண்பாட்டு வெளியீட்டகம், சென்னை, 2000, பக். 165.
  3. இராசவேல், சு., சேஷாத்திரி, அ. கி., தமிழ்நாட்டுக் குடைவரைக் கோயில்கள், பண்பாட்டு வெளியீட்டகம், சென்னை, 2000, பக். 165.