பொதுமங்களின் அவலம்
பொதுமங்களின் அவலம் (Tragedy of the commons) என்பது ஒரு பொருளியல் கோட்பாடு. இதன்படி தனியாட்கள் தங்கள் தன்னலத்திற்காக செயல்படுவது அவர்கள் சார்ந்திருக்கும் குழுவின் நலத்திற்கு பாதகமாக அமையும். 1968 இல் கேரட் ஹார்டின் என்னும் பொருளியலாளர் இந்தக் கோட்பாட்டை அறிமுகப்படுத்தினார். இது சிறிய முடிவுகளின் கொடுமைக் கோட்பாட்டிற்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளப்படுகிறது.
இக்கோட்பாட்டுக்கு எடுத்துக்காட்டாகத் தரப்படும் சூழல் பின்வருமாறு: ஒரு பொது மேய்ச்சல் வெளியில் தங்கள் பசுக்களை மேய்க்கும் மேய்ப்பர்கள் தனித்தனியாக தங்களுக்கு எது சிறந்ததோ அந்த முடிவினையே எடுக்கிறார்கள். தங்கள் பசுக்களை இஷ்டப்படி பொதுவெளியில் மேய விடுகிறார்கள். தங்கள் பசுக்களுக்கு அதிக அளவில் புல் கிடைத்தால் போதுமெனக் கருதுகிறார்கள். ஆனால் குறைந்த பொது வளத்தைப் பங்கு போடுகிறோம் என்பதைக் கருத்தில் கொள்வதில்லை. மேய்ப்பர்கள் அனைவரும் இது போலவே முடிவு செய்து செயல்பட்டால் மேய்ச்சல் வெளி விரைவில் தீர்ந்து போய் அனைத்துப் பசுக்களும் பட்டினி கிடக்கும் நிலை உருவாகுகின்றது. இப்படித் தனியாகப் பார்க்கும் போது சாதகமாகத் தெரியும் சிறு முடிவுகள் ஒட்டு மொத்தமாகப் பார்க்கும் போது பாதகமாகிவிடுகின்றன.
இக்கோட்பாட்டுக்கு எடுத்துக்காட்டாகத் தரப்படும் இன்னொரு சூழல் பின்வருமாறு: மீனவர்கள் மீன்களின் இனப்பெருக்க காலத்தில் அல்லது இனப்பெருக்கத்திற்கு முன்பு அதிக அளவில் மீன் பிடித்தால், மீன்களின் எண்ணிக்கை வேகமாகக் குறையும். ஆகையால் இந்த பொதுமங்களின் அவலம் என்ற கோட்பாடு மீனவர்களின் அவலம் என்றும் அழைக்கப்படுகிறது .
நிலத்தடி நீரை ஆழ்துளை கிணறுகள் மூலம் நெறிமுறைகள் ஏதும் இல்லாமல் உறிஞ்சுவதால் அனைவருக்கும் பிற்காலத்தில் ஏற்படும் இழப்பையும் இந்தக் கோட்பாட்டின் எடுத்துக்காட்டாக சொல்லலாம்.[1][2]
விவசாயிகள் தங்கள் பயிர்களைப் பூச்சித்தாக்குதலில் இருந்து பாதுகாக்க பூச்சி மருந்து பயன்படுத்துவது உடனடி பயிர் பாதுகாப்பைத் தந்தாலும் அதனால் நீராதாரங்கள் பாதிக்கப்படுதலும் குறிப்பிடப்படுகின்றது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Baylis J, Wirtz JJ, Cohen EA and Gray CS (2007) Strategy in the contemporary world: an introduction to strategic studies Page 368. Oxford University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-928978-3
- ↑ Garrett Hardin, "The Tragedy of the Commons", Science, Vol. 162, No. 3859 (December 13, 1968), pp. 1243-1248. Also available here and here.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-02-08. பார்க்கப்பட்ட நாள் 2014-10-13.