உள்ளடக்கத்துக்குச் செல்

பெ. சுந்தரம் பிள்ளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பேராசிரியர் மனோன்மணீயம் பெ.சுந்தரனார் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மனோன்மணீயம் பெ. சுந்தரனார்
பிறப்புமனோன்மணீயம் பெருமாள் சுந்தரனார்
4 ஏப்ரல் 1855
ஆலப்புழா, கேரளா, இந்தியா
இறப்பு26 ஏப்ரல் 1897(1897-04-26) (அகவை 42)
தேசியம்இந்தியர்
பணிஎழுத்தாளர்
பெற்றோர்பெருமாள்
மாடத்தி அம்மாள்
வாழ்க்கைத்
துணை
சிவகாமி அம்மாள்

மனோன்மணீயம் பெ. சுந்தரனார் (Manonmaniyam P. Sundaranar, ஏப்ரல் 4, 1855 - ஏப்ரல் 26, 1897) என்பவர் மனோன்மணீயம் என்ற புகழ்பெற்ற நாடக நூலைப் படைத்தவரும் பேராசிரியரும் ஆவார். தமிழ்நாடு அரசின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை இயற்றியமைக்காக அறியப்படுகிறார்.[1]

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

சுந்தரனார், 1855-ஆம் ஆண்டு, கேரளாவின் ஆலப்புழா நகரில் பெருமாள், மாடத்தி அம்மாளுக்கு இணையருக்கு மகனாகப் பிறந்தார்.[2] இளமையிலேயே தேவார திருவாசகங்களையும் சமய வழிபாட்டு நூல்களையும் கற்றார். இவருக்குத் தமிழாசிரியராக விளங்கியவர் நாகப்பட்டினம் நாராயணசாமி. இவரிடமே மறைமலை அடிகள் தமிழ் படித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 1876-ஆம் ஆண்டு இளங்கலை பட்டம் பெற்றார். அடுத்த ஆண்டில் சிவகாமி அம்மாள் என்பவரைத் திருமணம் புரிந்தார்.

ஆசிரியப் பணி

[தொகு]

சுந்தரனார், 1877-ஆம் ஆண்டு, தனது ஆசிரியப் பணியைத் தொடங்கினார். திருநெல்வேலி ஆங்கிலத் தமிழ்க் கல்விச்சாலையின் தலைவராக இரண்டாண்டுகள் பணியாற்றி, அக்கல்விச்சாலையே பின்னர் இந்துக் கல்லூரியாக உயர்வதற்கு உறுதுணையாக இருந்தார்.[3] பின்னர், திருவனந்தபுரம் அரசர் கல்லூரியில் தத்துவத்துறை ஆசிரியராகச் சேர்ந்தார். 1880-இல் முதுகலை பட்டம் பெற்றார். அக்கல்லூரியில் தத்துவத்துறைப் பேராசிரியராக இருந்த முனைவர் ஹார்வித்தி தொடர்பு இவருக்குக் கிடைத்தது.

மூன்றாண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றிய பின்பு திருவனந்தபுரம் அரசர் அரண்மனை வருவாய்த் துறையின் தனி அலுவலராக (Commissioner of Separate Revenue) நியமிக்கப்பட்டார். 1885-இல் டாக்டர் ஹார்வித் பேராசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்றபோது சுந்தரனாரைத் தம் பதவிக்குப் பரிந்துரைத்தார். இதனை ஏற்று மீண்டும் திருவனந்தபுரம் அரசர் கல்லூரியில் தத்துவத்துறையின் தலைமைப் பேராசிரியரானார். அப்பணியை இறுதிவரையில் திறம்படத் தாங்கினார். 1878-இல் தாயாரையும், 1886-இல் தந்தையையும் இழந்தார். இவருடைய மகன் நடராசன் பின்னாளில் கேரள அரசில் அமைச்சராகவும் இருந்தார்.

சமயப்பணி

[தொகு]

சுந்தரனார், திருவனந்தபுரத்தில் சைவப்பிரகாச சபையினைத் தோற்றுவித்து சமயத் தொண்டாற்றி வந்தார். இவருக்கு F.M.U., F.R.H, S.M.R.A.S, ராவ்பகதூர் போன்ற பல பட்டங்கள் கிடைத்தன.

தமிழ்ப்பணி

[தொகு]

சுந்தரனார், 1891-ஆம் ஆண்டு, மனோன்மணீயம் என்னும் ஒப்பற்ற நாடக நூலை எழுதி வெளியிட்டார்.[4] சுந்தரனாரின் ஞான ஆசிரியராக இருந்தவர் கோடக நல்லூர் சுந்தர சுவாமிகள் ஆவார். இத்தொடர்பே மனோன்மணீயத்தில் சுந்தர முனிவர் என்னும் பாத்திரப் படைப்பிற்குக் காரணமாக இருந்தது.

சுந்தரனார், கல்வெட்டு ஆராய்ச்சியிலும் ஈடுபட்டு திருஞானசம்பந்தரின் காலத்தை ஆய்வு செய்து அவ்வாராய்ச்சியினை 1894-ஆம் ஆண்டில் வெளியிட்டார். பத்துப்பாட்டு பற்றிய திறனாய்வினை ஆங்கிலத்தில் எழுதிச் சென்னைக் கிறித்துவக் கல்லூரி இதழில் வெளியிட்டார்.

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்

[தொகு]

மனோன்மணீயத்தில் இடம்பெற்ற தமிழ்த் தாய் வணக்கப் பாடலான நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் என்ற பாடல் தமிழ் நாடு அரசினரால் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக சூன் 1970-இல் அறிவிக்கப்பட்டது.

முழுமையான தமிழ் தாய் வாழ்த்து

இறுதி நாட்கள்

[தொகு]

பேராசிரியர் சுந்தரனார் தாம் வாழ்ந்த மனைத் தோட்டத்திற்குத் தம் ஆசிரியர் ஹார்வி அவர்கள் பெயரையே இட்டமையும் தம் மனோன்மணீய நூலினை அவருக்கே உரிமையாக்கியதும் குறிப்பிடத்தக்கது. பேராசிரியர் சுந்தரனார் தமது 42வது வயதில் 1897, 26 ஏப்ரல் அன்று மறைந்தார்.

வெளியிட்ட நூற்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Randor Guy (19 December 2010). "Manonmani 1942". தி இந்து இம் மூலத்தில் இருந்து 22 October 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121022161520/http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/article961803.ece. 
  2. "மனோன்மணீயம் பெ.சுந்தரம் பிள்ளை பிறந்த நாள்: ஏப்.4- 1855". Maalaimalar. 2021-04-04. Archived from the original on 2021-11-01. Retrieved 2021-11-01.
  3. "Madurai Diraviyam Thayumanavar Hindu College, Tirunelveli". Mdthinducollegetirunelveli.org. Archived from the original on 10 May 2013. Retrieved 2015-07-22.
  4. "தமிழ்த் தாய் வாழ்த்து: தமிழக அரசாணை சொல்வது என்ன? - தினசரி". dhinasari.com (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2021-11-01.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெ._சுந்தரம்_பிள்ளை&oldid=4245593" இலிருந்து மீள்விக்கப்பட்டது