பேச்சு:பொருண்மை
Mass, Weight என்பவை அறிவியலில் அடிப்படையான சொற்கள். இந்த சொற்களை இறுதி செய்வதில் நாம் தேங்கி நின்றால் த.வி ஒரு போதும் முன்னேறாது.
தமிழ்நாட்டில் mass = நிறை. weight = எடை
இலங்கையில் mass = திணிவு. weight = நிறை
உண்மையில் பெரும் சிக்கலையும், குழப்பத்தையும் தரும் வழக்காக இருக்கிறது. நிறை, எடை, திணிவு ஆகிய அனைத்துச் சொற்களுக்கும் இரு நாட்டாரும் பொருத்தமான விளக்கங்களைத் தர இயலும். ஒன்றைக் காட்டிலும் இன்னொன்று சரி என நிறுவ முடிந்தாலும், இலட்சக்கணக்கான மாணவர்கள் இரு நாட்டிலும் பயிலும் நிலையில் எந்த சொல்லை இறுதி செய்வது என்பது தர்மசங்கடமாக இருக்கிறது.
என்னளவில்,
எடை என்பது weight என்று பேச்சு வழக்கிலும் தமிழ்நாட்டிலும் (இலங்கையிலும்?) புரிந்து கொள்ளக்கூடியது என்ற நிலையில் weight = எடை என்று தமிழ் விக்கியில் பயன்படுத்தப் பரிந்துரைக்கிறேன்.
திணிவு , நிறை என்பதைக் காட்டிலும் massக்குப் பொருத்தம் என்றால் அதையே தமிழ் விக்கியில் பின்பற்றலாம். திணிவைக் காட்டிலும் நிறை நல்ல சொல் (weight என்பதைக் காட்டிலும் massக்கே பொருத்தமான சொல்) என்று நிறுவ முடிந்தால், நிறை என்பதைப் பயன்படுத்தலாம்.
இந்த இடத்தில் இரு நாட்டுக் குழப்பம் தீர்ப்பதற்காகவாவது சொல் ரீதியில் உரையாடி வரும் முடிவுகளை, கருத்தொருமிப்புகளை ஏற்க வேண்டியது அவசியம். இரு நாட்டு வழக்குகளுமே பிழை, சரி என்னும் போது பெரும்பான்மை, சிறுபான்மை வழக்குகளை கவனத்தில் கொள்ளலாம். ஆனால், இது போன்ற வழக்குகளில் எந்த சொல் நிரம்பப் பொருத்தம் என்று உரையாடுவது தான் சரி என்று தோன்றுகிறது. செல்வா, ஏற்கனவே நிறை என்ற சொல்லுக்கான விளக்கத்தைத் தந்திருக்கிறார். திணிவு என்ற சொல்லுக்கு இராம.கியை மேற்கோள் காட்டி நற்கீரன் சொல்லி உள்ளார். தமிழ் இணையப் பல்கலையில் திணிவு. நிறை இரண்டுமே massக்கு ஈடாக கொடுக்கப்பட்டுள்ளது. நிறை - mass, weight இரண்டு இடங்களிலும் கொடுக்கப்பட்டுள்ளது !!! :( --ரவி 07:38, 21 மார்ச் 2007 (UTC)
இயற்பியலில் Mass என்பதற்கான சொற்கள்
[தொகு]இயற்பியலில் mass என்பதற்குத் திணிவு, பொருண்மை என்னும் இரு சொற்களும் தருகின்றோம். திணிவு என்பது அடர்த்தி என்னும் சொல்/பொருளோடு குழப்பம் தர வாய்ப்புள்ளது. பொருண்மை என்பது மை என்று விகுதி கொண்டிருப்பது அவ்வளவு சரியாகத் தோன்றவில்லை (பண்பு என்று கொள்ளலாம்தான், எனினும் முழுதும் சரியாக படவில்லை). நிறை என்னும் சொல் சுருக்கமாகவும், மிகவும் பொருத்தமாகவும் உள்ளதால் எல்லா இடங்களிலும் நிறை என்பதை mass என்பதற்கு இணையாகப் பயன் படுத்தலாம். weight என்னும் சொல்லுக்கு நாம் எடை என்பதைப் பயன்படுத்தலாம் (பிற சொற்கள் பளு, பாரம் முதலியவும் உண்டு). நிறை என்பது ஒரு பொருள் நிறைந்திருக்கக் கரணியமான ஒன்று (பொருண்மை) என்னும் பொருள் கொள்ளலாம். நிறைந்திருப்பது நிறை. இது புது விளக்கம் (இயற்பியலுக்காக). உண்மையில், நிறை என்பது நிறுத்தல், தூக்கி நிறுத்தல் (நில் -> நிறு->நிறுத்தல்) என்பதில் இருந்து பெறப்படும் பொருள். ஆகவே அதுவும் எடை என்னும் பொருள்தான் (தொடக்கத்தில்). நிறுத்தல் -> நிறுத்தல் அளவை முதலியனவும் உண்டு. ஆனால் இங்கே இயற்பியலுக்கு நாம் வரையறை செய்து mass என்பதற்கு ஏற்றதாக கொள்ளத்தக்க சொல் நிறை. ஆங்கிலத்திலும், mass என்பது பெரிய என்பது போன்ற பிற பொருள்களில்தான் இருந்தது, அதனை இயற்பியலில், வரையறை செய்து ஆக்கிகொண்டனர். எனவே நிறை என்பதை mass எனப்தற்கு ஆளலாம் என்பது என் பரிந்துரை. பயனர்களின் கருத்தை அறிந்தபின் மாற்றம் செய்ய இருக்கின்றேன். இது அடிப்படையான ஒரு தேவை. அருள்கூர்ந்து உங்கள் கருத்துக்களைத் தெரிவியுங்கள்.--செல்வா 13:58, 20 மார்ச் 2007 (UTC)
ஈழத்தில் mass என்பது திணிவு என்றும் weight என்பது நிறை என்றும் ஆறாம் ஆண்டிலிருந்து உயர்தர வகுப்பு வரை கற்பிக்கப்படுகிறது. தமிழகத்தில் விஞ்ஞான (அறிவியல்) பாடங்கள் தமிழில் கற்பிக்கப்படுவதில்லையா? ஏற்கனவே நெடுங்காலம் பயன்படும் ஒரு கலைச்சொல்லை மாற்றுவது பொருத்தமல்ல. வாசகருக்கு மிகுந்த குழப்பம் ஏற்படும். 90இனைத் தொண்பது என்றும் 900 இனை தொண்ணூறு என்றுமே அழைக்க வேண்டுமென்று கூறப்படுகிறது. ஆனால் அத்தகைய மாற்றம் சாத்தியமல்ல. ஏனென்றால் அவ்வாறு மாற்றினால் இதுவரை 90 இனைத் தொண்ணூறு என்று எழுதி வந்தவற்றோடு குழப்பம் ஏற்படும். அத்தகைய நிலைதான் இங்கும். ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள சொற்களை மாற்ற முனைவது விக்கிபீடியாவின் நம்பகத்தன்மையையும் பாதிக்கும். நன்றி. கோபி 14:24, 20 மார்ச் 2007 (UTC)
- திணிவு என்ற சொல் mass என்பதற்கு எனக்கு நன்றாகப் படுகின்றது. அதைப் பரிசீலியுங்கள். திணிக்கலாம் என்பது பொருள் என்ற சொல்லோடு தொடர்பு பெறுகின்றது. அடர்த்தி என்ற சொல்லில் இருந்தும் வேறுபடுகின்றது. --Natkeeran 14:37, 20 மார்ச் 2007 (UTC)
(அத்தோடு கோபி, தொண்டு, தொண்பது, தொண்ணூறு என்ற மாற்றம் தேவை. ஒரு குறிப்பிட்ட ஆண்டுக்கு பின்னர் இப்படித்தான் எழுதவேண்டும், அச்சிட வேண்டும் என்று தமிழ்நாடு-இலங்கை-சிங்கப்பூர் அரசுகள் ஆணை செய்யவேண்டும். --Natkeeran 14:39, 20 மார்ச் 2007 (UTC))
நிறை என்பது பொருத்தம் இல்லை என்பது இராம.கி அவர்களின் கருத்து.
http://valavu.blogspot.com/2006_07_01_archive.html
“ | உண்மையில் mass என்பதைக் குறிக்கத் தமிழில் தனிச்சொல் இல்லாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறோம் என்று தான் நான் சொல்லுவேன். அடிப்படைச் சொற்களை அதன் ஆளுமை, அகலம் பார்க்காமல் மேலோட்டமாய்ப் புழங்கிக் கொண்டிருக்கிறோமோ என்ற எண்ணம் எனக்கு நெடுங்காலம் உண்டு. mass என்பதைப் பொருள் என்று சொன்னால் துல்லியம் வரவில்லை. ஏனெனில் பொருள் என்ற தமிழ்ச்சொல்லிற்கு இன்னும் பல பொருட்பாடுகள் உண்டு. பொருண்மை என்றால் அது density யைக் குறிக்கிறது. உண்மையில் An object has a mass வரியைத் தமிழில் எப்படிச் சொல்லுவோம்?
"அங்கே பார், மொது மொது என்று மொத்தையாய் இருக்கிறான்; அவள் மொது மொது (>மத மத) என்று வளர்ந்திருக்கிறாள்; மொதப்பான (>மதர்ப்பான) உடம்பு; " - என்ற இந்த ஆட்சிகளில் எல்லாம் mass என்ற பொருட்பாடு உள்ளே இருக்கிறது. இந்தச் சொல்லாட்சிகளுக்குத் தொடர்பாய், மொதுகை (அல்லது மதுகை) என்ற சொல்லை mass என்பதற்கு இணையாய்ப் பயன்படுத்தலாம் என்பது என் பரிந்துரை. massive என்பதை மொதப்பு (>மதர்ப்பு), மொதுகையாய் (அல்லது மதுகையாய்) என்று சொல்லலாம். density, volume போன்றவற்றைப் பின்னால் கீழே சொல்லுகிறேன். |
” |
- நிறை என்பது நிறுத்தல் என்ற சொல்லில் இருந்து பிறந்தது. கணிதவியலில் அல்லது இயற்பியலில் weightக்கு இணையாகப் பயன்படுத்துவதில் என்ன தப்பு? (எடையை விக்கியில் பாவிப்பதில் எனக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை). நிறை என்பதை நிறைந்த என்ற அர்த்தத்தில் அறிவியல் தவிர்ந்த வேறு துறைகளில் வேண்டுமானால் பாவிக்கலாம். mass என்பதற்குத் திணிவு என்பதை விட மிக அருமையான சொல் கிடைக்காது. இராமகி அவர்களின் பரிந்துரைகள் மிகையானவை.--Kanags 09:56, 21 மார்ச் 2007 (UTC)
- திணிவு என்பது அடர்த்தியைக் குறிக்கும். "இன்னும் வச்சுத் திணி" "இதுக்கு மேல் திணிக்க முடியாதுங்க" என்பன பொது வழக்கு. இச்சொல் தமிழ்நாட்டில் அறிவியல் வழக்கில் mass என்பதற்கு ஈடாக இல்லை. எடை என்பது weight என்பதில் குழப்பம் இல்லை என்றால் அதனையே weight என்பதற்கு வழங்கலாம். இப்பொழுது கேள்வியெல்லாம் தமிழ்நாட்டில் நிறை என்பதை mass என்பதற்குப் பயன்படுத்துகிறார்கள் (பாடநூல்களில் இருந்து பொது அறிவியல் நூல்கள் வரை), எனவே நிறை என்பதை mass என்பதற்குப் பயன்படுத்தலாமா என்பதுதான். நிறை என்பது நிறுத்தல் (நில் -> நிறு ->நிறுத்தல்) என்பதில் இருந்து வந்தது என்று நானும் முன்னமே சுட்டினேன், ஆனால் ஒரு காலத்தில் mass என்பதற்கும் weight என்பதற்கும் அதிக வேறுபாடு காட்டவில்லை. இன்றும்கூட atomic weight என்றுதான் கூறுகிறோம். நில் என்னும் சொல் நிலைத்து நிற்பது என்னும் கருத்திலும், mass என்பது எந்த பொருள் ஈர்ப்புப் புலத்தில் இருந்தாலும் மாறாது இருக்கும் பொருளின் நிலைத்த பொருண்மை என்னும் கருத்தும் பொருந்தி இருக்கின்றது. இந்த நிறை (mass) சில அணு இயற்பியல் வினைகளில் ஆற்றலாய் மாறலாம் எனினும், அப்பொருளே மாறிவிட்டது (குறைந்துவிட்டது) என்பதுதான் கருத்து. எனவே நிறை என்பதில் கருத்துப்பிழை இருக்காது. நிறை = mass, எடை = weight, என்பதே சரியான கலைச்சொற்களாக எனக்குப் படுகின்றது. திணிவு = density, பொருண்மை = 'mass'ness. --செல்வா 12:51, 21 மார்ச் 2007 (UTC)
இராம.கி யின் பரிந்துரை பொருந்தாது என்பது என் கருத்து. இங்கே விரிக்க விரும்ப வில்லை.--செல்வா 12:53, 21 மார்ச் 2007 (UTC)
- திணிப்பது என்பதும் அடைப்பது என்பது ஒத்த பொருள் கொண்டதே. எனவே அது density யைக் குறிக்கும். --செல்வா 14:28, 21 மார்ச் 2007 (UTC)
நிறை = weight
[தொகு]நிறுக்கப்படுவது நிறை. அது weight ஐயே குறிக்கும். நிறையை mass க்குச் சமப்படுத்துவது பிழையானது என்பதே என் கருத்து. கோபி 15:38, 21 மார்ச் 2007 (UTC)
நிறை என்பது weight என்றே ஈழத்தில் பயன்படுகிறது. ஆனால் எடை என்பதும் விளங்கிக் கொள்ளக் கூடியதொன்றே. தமிழகத்தில் நிறை திணிவையும் (mass) குறிக்கப் பயன்படுவதால் எடை என்பதைப் பயன்படுத்துவது நன்று. ஆனால் mass என்பதற்கு நிறை என்பது பிழையானது. திணிவு ஏற்றுக் கொள்ளக் கூடியது. கோபி 15:41, 21 மார்ச் 2007 (UTC)
நிறை = mass பொருத்தம்
[தொகு]- இன்றைய அறிவியல் கருத்தாகிய mass என்பதற்கு எந்த மொழியிலும் எப்பொழுதும் ஒரு சொல் இருந்ததாகத் தெரியவில்லை. நிறை என்பது தமிழ் நாட்டில் mass என்பதற்குப் பயன்படுத்த பட்டு வருவதால் அதனைப் பரிந்துரைக்க வில்லை. நிறை என்பது எவ்வாறு maas என்னும் பொருள் கொள்ளும் என்று விளக்கியுள்ளேன். திணிவு என்பது அடைப்பது என்னும் பொருள் கொண்டது, அதுவே பிழையானது என்பது என் கருத்து. mass என்பது திணிக்கப்படுவதல்ல. அடைக்கபடுவதல்ல. நிலத்திலும், நிலாவிலும், செவ்வாய்க் கோளிலும், வேறு எங்கிலும் ஈர்ப்புப் புலம் மாறினாலும், பொருண்மை மாறாமல் நிலையாய் நிற்பது நிறை. --செல்வா 16:32, 21 மார்ச் 2007 (UTC)
நிறுக்கப்படுவது நிறை என்பதேஎ எவரும் விளங்கிக் கொள்ளக் கூடியதாகும். --கோபி 16:36, 21 மார்ச் 2007 (UTC)
- கோபி, நிறுத்தல் பற்றி நான் ஏற்கனவே என் முதல் பதிவிலேயே தெளிவாகக் கூறியுள்ளேன். weight, volume, முதலான சொற்களில் இருந்துதான் எல்லா மொழிக்காரர்களும் ஒரு சொல்லை எடுத்துக் கொண்டுள்ளுனர். Mass என்பதற்கான துல்லிய அறிவியல் பொருள் தரும் சொல் எந்த மொழியிலும் இருப்பதாகத் தெரியவில்லை. நிறை என்பதற்கு இருவேறு வழிகளில் அறிவியல் பொருளாகிய mass என்னும் கருத்து, நான் கூறியவாறு, இருப்பதால் இதனை mass என்பதற்கு இங்கே த.வி -யில் வைத்துக்கொள்ளலாம் என பரிந்துரைக்கிறேன். தமிழ்நாட்டிலும் நிறை என்பது mass என்பதற்குப் பயன்படுத்துகிறார்கள். பல நூலகள் இப்படி ஆக்கியுள்ளனர். இலங்கை வழக்கு வேறுவிதமாக இருப்பதால் உங்கள் தயக்கம் தெளிவாகப் புரிகின்றது. இப்பொழுது என்ன செய்யலாம் என நினைக்கின்றீர்கள்? மயூரநாதன், மற்றும் பிற பயனர்களும் கருத்துத் தெரிவித்தால் நல்லது. ஆனால் ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டுவது இன்றியமையாதது. சில கலைச்சொல் மாற்றங்கள் தவிர்க்க இயலாதது. எல்லா மொழிகளிலும் இது இன்றும் நடந்து வருவதொன்று. திருந்தாத நிலையில் இருக்கும் தமிழில் இது நிகழும் என்பது எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும். ஆங்கிலத்திலே கலைசொல் மட்டுமில்லாமல், அன்றாடச்சொற்களாகிய car - automobile என்பதில் எத்தனை சொற்போர்கள் விக்கியில் நிகழ்ந்துள்ளன என்று பாருங்கள். இங்கே த.வி -யில் நிறை என்று ஆளவதைப் பற்றிதான் அலசுகிறோம். இது மிகவும் குழப்பமானது என்பதை அறிவேன். வெவ்வேறு சொற்களாக இருந்தாலாவது வேறு வழிகளைக் கையாளலாம். mass என்பதற்கு நிரை என்று இடையின ரகரம் இட்டும் சொல்லலாம் (இது நிறைவு தராத சொல் - நிறை போலும் பொருந்தாத சொல்). பிற பயனர்களும் கருத்துத் தெரிவிக்க வேண்டுகிறேன்.--செல்வா 21:01, 22 மார்ச் 2007 (UTC)
நிரை இன்னும் கூடுதல் குழப்பம் தரும். குறிப்பாக, பேச்சுத் தமிழில் றகர ரகர வேறுபாடுகளை பலரும் ஒழுங்காகச் சொல்வது இல்லை என்பதை கவனிக்கவேண்டும்--ரவி 21:07, 22 மார்ச் 2007 (UTC)
- ரவி, நிரை என்பது சரியான சொல் இல்லை என்பதை அறிவேன். பிற பயனர்களும், இந்த நிறை = mass என்பது பற்றி கருத்துத் தெரிவித்தார்கள் என்றால் நன்றாக இருக்கும். தமிழ் நாடு - இலங்கை இச்சொல்லை இரு வேறு பொருளில் ஆள்வதை எப்படிச் சரி செய்யலாம்? த.வி -யில் எப்படி ஆள்வது? எல்லாப் பயனர்களும் கருத்துத் தெரிவித்தால் நல்லது. குறிப்பாக மயூரநாதன் என்ன நினைக்கின்றார். இது மிகவும் குழப்பான நிலை என்பதை அறிவேன். இருந்தாலும், ஏதேனும் ஒரு முடிவு எடுக்க வேண்டும் அல்லவா?--செல்வா 21:24, 22 மார்ச் 2007 (UTC)
- திடீரென்று நிரை என்ற சொல் ஏன் இங்கு வந்தது என்பது எனக்குப் புரியவில்லை. நிறுத்தல் என்பது தமிழகத்தில் பாவிக்கிறார்களா இல்லையா? நிறுத்தல், நிறுவை, நிறை இவை எல்லாமே weight அல்லது அதனோடு ஒத்த கருத்துடைய சொற்களையே குறிக்கின்றன. எனவே முன்னரே நான் சொன்னது போல நிறை என்பது weightக்குத் தான் பொருந்தும். யாரோ ஒரு தமிழ் வித்துவான் நிறை என்பதை நிறைவான என்ற பொருள் கொண்டு அதனை massக்கு மொழிபெயர்த்துள்ளார் போலும். இது தவறானது. weightக்கு எடை என்பதைப் பாவிக்கலாம். ஆனால் massக்கு நிறை பாவிப்பதைக் (கடுமையாக) எதிர்க்கிறேன்.
- செல்வா, //திணிவு என்பது அடைப்பது என்னும் பொருள் கொண்டது, அதுவே பிழையானது என்பது என் கருத்து//. அப்படியானால் நிறை என்பதும் அடைப்பது என்று தானே பொருள். அது எப்படி massக்குப் பொருந்தும்?--Kanags 07:18, 23 மார்ச் 2007 (UTC)
- கனகு, யாரோ ஒரு தமிழ் வித்துவான் நிறை என்பதை mass என்பதற்கு இடவில்லை. தமிழ் பாடபுத்தகங்களிலும், பொது அறிவியல் நூல்களிலும், அகராதிகளிலும் (அ.கி. மூர்த்தியின் அறிவியல் அகராதி) பரவலாக 40 ஆண்டுகளுக்கும் மேலாக நிறை = mass என்று ஆளப்பட்டு வந்துள்ளது. இது புதிதாக நான் இட்டசொல் இல்லை. நான் தமிழில் தான் 10 ஆவது வரை படித்தேன், நான் படித்ததும் நிறை = mass என்பதுதான். இங்கு நான் அளிக்கும் விளக்கம் புதிதாக இருக்கலாம், ஆனால் சொல் தமிழில் அறிவியல் கற்கத்தொடங்கிய நாட்களில் இருந்தே வழங்கி வருகின்றது (தமிழ் நாட்டில்). நில் -> நிறு ->நிறுத்து -> நிலை நிறுத்துவது -> நிலையாக நிற்பது நிறை. இதனை முன்னரே மேலே விலக்கியுள்ளேன். நிறுத்தல் அளவையிலும், எடை என்னும் பொருளில் ஆளப்படும் பொழுதும், தூக்கி நிறுத்தல், ஈடாக ஒரு தட்டில் மாற்று எடை வைத்து சமம் செய்தல் நிறைவு செய்தல் (மாறா சம நிலை எய்துதல் - நிலைப்படுத்துதல்). சுருள்கம்பி நிறுத்தல் அளவுக் கருவுகளில் இப்படி இல்லையாயினும் நிறுத்தல் என்பது தூக்கி நிறுத்தல், நிலை நிறுத்தல் முதலிய அடிப்படையாக எழுந்து பொருள்படும் சொல். நான் ஏற்கனவே கூறியபடி எம்மொழியிலும், mass என்பதற்கு அறிவியல் விளக்கம் கொண்ட சொல் இருப்பதாகத் தெரியவில்லை. weight, volume முதலான ஒரு சொல்லையே mass என்பதற்கு ஆண்டுள்ளனர். தமிழ்நாட்டில் நிறை என்பது mass என்பதற்கு ஆளும் பொழுது இலங்கையில் அதே சொலை எடை என்னும் பொருளில் ஆள்வதாலேயே இக்குழப்பம் - இதனாலேயே இங்கே இது பற்றி கருத்துரையாடுகிறோம். நிரை என்பதை விட்டு விடுங்கள் அது தேவை இல்லை. த. வி -யில் எப்படி ஆள வேண்டும் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்? --செல்வா 12:47, 23 மார்ச் 2007 (UTC)
- நிறை, திணிவு ஆகிய சொற்களைப்போலப் பிரச்சினைக்குரிய சொற்கள் தமிழ்க் கலைச்சொற் பயன்பாட்டில் ஏராளமாக உள்ளன. இதனால் இவ்விரு சொற்களும் சம்பந்தப்பட்ட பிரச்சினையைத் தனியாகக் கையாள்வதில் அதிகம் பயன் கிடைக்காது. நிற்க, விக்கிபீடியாவில் மட்டும் முடிவெடுத்து ஏதாவதொரு சொல்லைப் பயன்படுத்துவதும் சரியானதாக எனக்குப் படவில்லை. தமிழ்ச் சொல்லைப் பயன்படுத்தினால் தவி இலங்கைத் தமிழ் மாணவர்களிடம் இருந்து விலகிப்போகும், இலங்கை வழக்கைக் கையாண்டால் தமிழ்நாட்டு மாணவர்களிடமிருந்து தூரச் செல்லவேண்டியிருக்கும். புதுச் சொல்லைக் கையாண்டால் இருபகுதியாரிடமிருந்தும் தனித்து நிற்கவேண்டியிருக்கும். எனவே தவி இந்தப் பிரச்சினையில் ஒரு அடிப்படையான நிலைப்பாட்டை எடுக்கவேண்டும். இதற்காக அனைத்துத் தமிழ் மக்களையும் அணைத்துச் செல்கின்ற ஒரு வழிமுறையை நாம் கைக்கொள்ள வேண்டும். அனைத்துத் தமிழ் மக்களுக்கும் கலைச்சொற்களில் ஒரே சீர்தரம் இருக்கவேண்டும் என்னும் செல்வாவின் கருத்தில் எனக்கு எவ்வித மாறுபட்ட கருத்தும் கிடையாது. ஆனால், இதை உடனடியாக நடைமுறைப்படுத்துவதில் நிறையச் சிக்கல்கள் உள்ளன. தவியில் மட்டும் இதனைச் செயற்படுத்துவது சாத்தியம் இல்லை. இது ஏற்கெனவே இருக்கின்ற சீர்தரங்களுக்குள் இன்னொரு தரத்தையும் புகுத்துவதாகவே முடியும்.
- இப்போதைக்கு தவியில் உள்ள கட்டுரைகள் எல்லாவற்றையும் தமிழ் நாட்டவர், இலங்கைத்தமிழர் என்ற பாகுபாடின்றி எவரும் படித்து இலகுவில் புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கவேண்டும். கட்டுரைகளில் வழக்கிலுள்ள ஏதாவது ஒரு சொல்லைப் பயன்படுத்தலாம் ஆனால், பிரச்சினைக்குரிய சொற்களுக்கான மாற்றுச் சொற்களும் அதற்குரிய விளக்கத்துடன் கட்டுரைப் பக்கத்தில் இடம்பெற வேண்டும். இது ஒரு தற்காலிக ஏற்பாடாக இருக்கலாம். இது ஒரு பகுதியாருடைய சொற்களை மற்றப் பகுதியினர் அறிந்து கொள்வதற்கான வாய்ப்பாகவும் அமையும். இன்றைக்கு இப்பிரச்சினை தவிக்கான பங்களிப்பாளர்கள் மத்தியில் தான் உணரப்படுகிறது. தமிழ் நாட்டு மாணவனுக்கோ, இலங்கைத் தமிழ் மாணவனுக்கோ இது ஒரு பிரச்சினையாக இன்னும் இல்லை. இவர்களும் இதை ஒரு பிரச்சினையாக உணர்வதற்காகவாவது இத் தற்காலிக ஏற்பாடு உதவும். தீர்வு ஏற்படுவதை விரைவு படுத்தும் என்பது எனது நம்பிக்கை. நான் என்னுடைய பேச்சுப் பக்கத்தில் கொடுத்துள்ள குறிப்புக்களையும் பார்க்கவும். Mayooranathan 13:08, 23 மார்ச் 2007 (UTC)
mass எனும் ஆங்கிலக் கலைச்சொல்லின் தமிழகப் பயன்பாடுகளில் காலந்தோறும் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்த சில குறிப்புகளைத் தர விழைகிறேன். 1960 களின் பள்ளிப்பாட நூல்களில் பொருள்திணிவு எனும் சொல் பயனில் இருந்தது. பின்னர், கல்லூரிப் பாட நூல்களைத் தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனத்துக்கு எழுதிய இயற்பியல் நூல்களில் நிறை என்ற சொல்லைப் பயன்படுத்தினர். ஆனால், பொறியியல் மாணவர்கள் தம் கட்டுறைகளில் இதற்கு பொருண்மை எனும் சொல்லை வழங்கலாயினர். பொறியியல் பாட நூல்களிலும் பொருண்மை எனும் சொல்லே பயன்படுத்தப்பட்டது. தஞ்சைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவியல் களஞ்சியத்தில் பொறியியல் பிரிவுக் கட்டுரைகளில் பொருண்மை எனும் சொல்லும் இயற்பியல் பிரிவுக் கட்டுரைகளில் நிறை, பொருண்மை ஆகிய இரண்டும் பயன்படுத்தப்பட்டன.
இங்கு நிறை எடையுடன் குழப்பும். திணிவு என்பது எது திணிந்துள்ளது என்பதத் தெளிவு படுத்தாது. ஆனால், பொருண்மை எனும் சொல் மிக நெருக்கமாக ஒரு பண்டத்தில் அடங்கிய பொருண்மத்தின் அளவை நேரடியாகக் குறிப்பிட வல்லதாக உள்ளது. எனவே, பொருண்மை எனும் சொல்லை விக்கியில் ஏற்கலாம் எனக் கருதுகிறேன்.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 08:48, 20 செப்டம்பர் 2017 (UTC)
- பொருண்மை என்பதை முன்னிலைப்படுத்தலாம். @செல்வா and Mayooranathan: --Kanags \உரையாடுக 10:16, 20 செப்டம்பர் 2017 (UTC)
- உலோ செந்தமிழ்க்கோதை சொல்லியதைப் போல பொருண்மை என்பதை முன்பு பயன்படுத்தியுள்ளோம். எல்லோருக்கும் ஏற்பு எனில் பொருண்மை என்பதை ஏற்றுப் பயன்படுத்தலாம். சுருக்கமாகவும் மிகச்சரியாகவும் இருக்கும் நிறை என்பதே சரி என நான் கருதினாலும், பொருண்மை என்பதை முன்னிலைப்படுத்தலாம். ஒரு கருத்துக்காக கீழ்க்கண்டவற்றைப் பதிவு செய்கின்றேன். நிறுத்தல் என்பதால் நிறை என்பதை எடை என்பதோடு குழப்பிக்கொள்வது பொருந்தாது. ஏனெனில் நிறுத்தல் என்பது ஒப்பிட்டுப் பார்க்கும் முறை. புவியீர்ப்பு அல்லது பொருளீர்பு விசை என்பது ஒப்பிடும் பொருளுக்கும், சீர்தரம் செய்யப்பட்ட எடைக்கல்லுக்கும் பொது. புவியீர்ப்பு அல்லது பொருளீர்ப்பு ஒன்றாக இருக்கும்பொழுது ஒப்பிடுவது நிறை அல்லது பொருண்மையே. mass என்பதைத்தான் அளக்கின்றோம். ஆனால் இக்கருத்துகளைப் பதிவுக்காகத்தான் குறிப்பிடுகின்றேன். பொருண்மை என்பதை ஏற்கலாம் என்பது என் கருத்து.--செல்வா (பேச்சு) 13:14, 20 செப்டம்பர் 2017 (UTC)
தலைப்பைப் பொருண்மை என ம்மாற்றி உதவுக.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 05:04, 6 சூலை 2023 (UTC)