உள்ளடக்கத்துக்குச் செல்

ம. ப. பெரியசாமித்தூரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பெ. தூரன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ம. ப. பெரியசாமித்தூரன்
பிறப்புசெப்டம்பர் 26, 1908
ஈரோடு, தமிழ்நாடு,  இந்தியா
இறப்புசனவரி 20, 1987 (அகவை 79)
சென்னை, தமிழ்நாடு,  இந்தியா
கல்விபி.ஏ. (சென்னைப் பல்கலைக்கழகம் (தூய கணிதம் மற்றும் வானியல்)
பட்டம்பத்மபூஷன்
பெற்றோர்பழனிவேலப்ப கவுண்டர், பாவை (பாவாத்தாள்)
வாழ்க்கைத்
துணை
காளியம்மாள்
பிள்ளைகள்சாரதாமணி, வசந்தா, விஜயலட்சுமி, சுதந்திரக்குமார்

பெ. தூரன் என்கிற பத்மபூஷன் ம. ப. பெரியசாமித்தூரன் (செப்டம்பர் 26, 1908 - சனவரி 20, 1987) ஒரு சிறந்த எழுத்தாளரும் தமிழில் கலைக்களஞ்சியம் தொகுத்த அறிஞரும் ஆவார். [1]பெ. தூரன் ஒரு நாட்டுப்பற்றாளராகவும் தமிழ்ப் புலவராகவும் கருநாடக இசை வல்லுநராகவும் அறியப்படுகிறார்; நாடகங்களும் இசைப்பாடல்களும் சிறுகதைகளும் சிறுவர் இலக்கியங்களும் எழுதியுள்ளார்; மொழிபெயர்ப்புக்களை மேற்கொண்டுள்ளார்; பதிப்புப் பணிகளும் செய்துள்ளார். இவரின் நூல்கள் சில நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன.

வாழ்க்கைச் சுருக்கம்

[தொகு]

பழனிவேலப்பக் கவுண்டர்-பாவாத்தாள் ஆகியோருக்கு மகனாக 1908 ஆம் ஆண்டு தமிழ் நாடு, ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சிக்கு அருகிலுள்ள மஞ்சக்காட்டு வலசு என்ற ஊரில் பிறந்தார். கொங்கு நாட்டவரின் வரலாற்று நாயகர்களான அண்ணன்மார், பொன்னர் - சங்கர் இருவரும் பெரியசாமி, சின்னச்சாமி என்று அழைக்கப்பட்டனர். மேழிப்பள்ளி பொன்னர் நினைவால் இவருக்குப் பெரியசாமி என்று பெயர் வைத்தனர். இவர், கொங்கு வேளாளரில் "தூரன்" குலத்தைச் சார்ந்தவர் என்பதால் தன் பெயரோடு "தூரன்" என்று சேர்த்துக் கொண்டார். "மஞ்சக்காட்டு வலசு பழனிவேலப்ப கவுண்டர் மகன் பெரியசாமித்தூரன்" என்பதன் சுருக்கமே ம. ப. பெரியசாமித்தூரன் ஆகும். இவர் தனது பள்ளி, கல்லூரிப் படிப்பை முடித்து 1929இல் ஆசிரியப்பணி ஆற்றினார். மே 1, 1939இல் காளியம்மாளைத் திருமணம் செய்து கொண்ட தூரனுக்கு, சாரதாமணி, வசந்தா, விஜயலட்சுமி என்ற மகள்களும், சுதந்திரக்குமார் என்ற மகனும் உள்ளனர். மருமகள் செண்பகத்திலகம் ஆவார்.

கல்வி

[தொகு]

இளம் வயதிலேயே தாயை இழந்த தூரன் செம்மாண்டம்பாளையத்தில் உள்ள தனது பாட்டி வீட்டில் வளர்ந்தார். மொடக்குறிச்சியில் தொடக்கக்கல்வி முடித்து ஈரோடு மாகாசன உயர்நிலைப்பள்ளியில் பள்ளியிறுதி வகுப்பவரை படித்தார். அங்கு பணியாற்றிய தமிழாசிரியர் திருமலைசாமி ஐயங்கார் பாடம் கற்பிக்கும் நேரம் அல்லாமல் மற்ற நேரமும் மாணவர்களுக்குத் தமிழ் அறிவை ஊட்டுபவர். "அவரால் எனக்குத் தமிழில் பற்றும் கவிதை எழுத வேண்டும் என்ற ஆர்வமும் ஏற்பட்டது," என்று கூறியுள்ளார் தூரன்.

தான் படித்த பள்ளியில் விடுதி வசதி இல்லாததால் ஒரு கன்னடிய நாயக்கர் வீட்டில் தங்கி உணவுண்டு படித்தார். மாணவப் பருவத்தில் ஈரோடு கருங்கல்பாளையம் நூலகம் சென்று ஆரணி குப்புசாமி முதலியார், வடுவூர் துரைசாமி ஐயங்கார் முதலியோர் எழுதிய புதினங்களைப் படிப்பதை வழக்கமாகக் கொண்டார். 1926 - 27இல் சென்னை மாநிலக் கல்லூரியில், கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களை இடைநிலை (இன்டர்மீடியட்) வகுப்பில் பயின்றார். 1929 இல் இல் இளங்கலை (பி. ஏ) கணித பட்ட வகுப்பில் சேர்ந்தார். 1931 இல் பட்ட வகுப்புத் தேர்வு எழுதாத போதும் கோபி செட்டி பாளையம் வைரவிழாப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரியத் தொடங்கினார்.

பெரியசாமித்தூரனை தமது கல்லூரி மாணவப் பருவம் முதலான நண்பராகவும், பாரதி பாடல்களில் ஈடுபடுத்தியவராகவும், தமிழ்ப்பற்றை மேலும் தூண்டி வளர்த்தவராகவும் பத்மஸ்ரீ முனைவர் நெ. து. சுந்தரவடிவேலு குறிப்பிடுகின்றார்.[2]

நாட்டுப்பற்று

[தொகு]

தூரனின் பாட்டி அவரது மாணவப் பருவத்திலேயே இராட்டை ஒன்றை அளித்து அதில் நூல் நூற்கவும் கற்றுத் தந்தார். அந்த இராட்டையில் நூல் நூற்று, பெரியார் தம் வீட்டிலேயே நடத்திய கதர்க் கடையில் நூல் சிட்டங்களைக் கொடுத்து கதர் வாங்கி அணிவதை வழக்கமாக்கிக் கொண்டார். சென்னையில் கல்லூரிக் கல்வி கற்கும்போதே உடன் பயின்ற மாணவர்களுடன் இணைந்து "வனமலர்ச் சங்கம்" என்ற அமைப்பைத் தோற்றுவித்து பாரதி பாடல்களைப் பரவலாக்கி, தேசியப் போராட்டத்துக்கு வலு சேர்த்தார். "பித்தன்" என்ற மாத இதழை நடத்தவும் தூரன் காரணமாக இருந்தார்.

ஆசிரியப் பணி

[தொகு]

1929 முதல் நான்காண்டுகள் கோபிசெட்டிபாளையம் வைரவிழா உயர்நிலைப்பள்ளியில் பணியாற்றினார். பிறகு போத்தனூரிலும், அதன் பின்னர் பெரியநாயக்கன்பாளையத்தில் இயங்கிய இராமகிருஷ்ணா வித்யாலயத்தில் சேர்ந்து ஆசிரியராகவும், தலைமையாசிரியராகவும் 1948 வரை பணியாற்றினார். அப்போது சிலரிடம் நேரடியாக இசைப்பயிற்சி பெற்றார்.

கலைக்களஞ்சியம் வெளியிடல்

[தொகு]

அப்போதைய தமிழகக் கல்வியமைச்சர் தி. சு. அவிநாசலிங்கத்தின் முயற்சியால் தமிழ் வளர்ச்சிக்காக தமிழ் வளர்ச்சிக் கழகம் தொடங்கப்பட்டது. தன்னாட்சி உரிமை உடைய இக்கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட கலைக்களஞ்சியத்தின் ஆசிரியராக 1948 இல் பொறுப்பேற்று 1968 வரை 750க்கு மேற்பட்ட பக்கங்களையுடைய பத்து தொகுதிகளை வெளியிட்டார். பிறகு 100 பக்கங்களையுடைய குழந்தைகள் கலைக்களஞ்சியம் பத்து தொகுதிகளையும் 1976 வரை வெளியிட்டார்.

இசை ஆர்வம்

[தொகு]

இளம்வயதில் சிற்றப்பா அருணாசலக்கவுண்டர் கூறிய கதைகளும், மற்றொரு உறவினர் அருணாசலக்கவுண்டர் கற்றுக் கொடுத்த இசைப்பாடல்களும் தூரனுக்குக் கதையிலும் இசையிலும் ஆர்வம் ஏற்படக் காரணமாக இருந்தது. பிறவியிலேயே கவி உள்ளம் படைத்த தூரன் தமிழில் பாடல்கள் (கீர்த்தனைகள்) புனையத் தொடங்கினார். பிற்காலத்தில் இவரது கீர்த்தனைகள், சுர, தாள இசைக் குறிப்புகளுடன் தொகுதிகளாக வந்துள்ளன. தமிழகத்தின் மிகப்பெரிய இசைவாணர்கள் பலரும் தூரனின் பாடல்களை மேடையில் பாடியுள்ளனர். இசைக் கல்லூரிகளில் இவரது பாடல்கள் சிலவற்றைப் பாடமாக வைத்துள்ளனர்.

இயற்றிய பாடல்களின் பட்டியல்

[தொகு]
  • நான் ஒரு சிறு வீணை...[3]

இதழாசிரியர்

[தொகு]

பெ. தூரன் 1940களில் காலச்சக்கரம் என்ற வாரப் பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றினார்.[4]

விருது

[தொகு]
  • 1968 ஆம் ஆண்டு பத்மபூஷன் விருது பெற்றார்.[5]
  • இசைப்பேரறிஞர்[6]

வெளிவந்த நூல்கள்

[தொகு]

உயிரியல் (மரபியல்)

[தொகு]
  • பாரம்பரியம் (1949),
  • பெற்றோர் கொடுத்த பெருங்கொடை (1954),
  • கருவில் வளரும் குழந்தை 1956

உளவியல்

[தொகு]
  • குழந்தை உள்ளம் 1947,
  • குமரப்பருவம் 1954,
  • தாழ்வு மனப்பான்மை 1955,
  • அடிமனம் 1957,
  • மனமும் அதன் விளக்கமும் 1968
  • குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும் 1953 (குழந்தை உள்ளம் நூலின் விரிவாக்கம்)
  • மனம் என்னும் மாயக் குரங்கு 1956 (மனமும் அதன் விளக்கமும் நூலின் சுருங்கிய வடிவம்)

கதைத் தொகுதிகள்

[தொகு]
  • மாவிளக்கு
  • உரிமைப் பெண்
  • காலிங்கராயன் கொடை
  • தங்கச்சங்கிலி, பிள்ளைவரம்
  • தூரன் எழுத்தோவியங்கள்

கட்டுரைத் தொகுப்புகள்

[தொகு]
  • தேன்சிட்டு
  • பூவின் சிரிப்பு
  • காட்டுவழிதனிலே

மொழிபெயர்ப்பு நூல்கள்

[தொகு]
  • கானகத்தின் குரல்
  • கடல் கடந்த நட்பு
  • பறவைகளைப் பார்

நாடக நூல்கள்

[தொகு]
  • காதலும் கடமையும்
  • அழகு மயக்கம்
  • சூழ்ச்சி
  • மனக்குகை
  • ஆதிமந்தி
  • பொன்னியின் தியாகம்
  • இளந்துறவி

இசை நூல்கள்

[தொகு]

கவிதை நூல்கள்

[தொகு]
  • இளந்தமிழா
  • மின்னல்பூ
  • நிலாப்பிஞ்சு
  • தூரன் கவிதைகள்
  • பட்டிப்பறவை

பிற

[தொகு]

குழந்தைகளுக்கு கதையாக, பாடலாக, நெடுங்கதையாக, அறிவியல் முறையில் 14 நூல்களைத் தூரன் இயற்றியுள்ளார். சுப்பிரமணிய பாரதியின் படைப்புகள் பற்றிப் பதினொரு நூல்கள் எழுதியுள்ளார். உளவியல் தத்துவம் தொடர்பாக ஒன்பது நூல்கள் எழுதியுள்ளார்.

நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்

[தொகு]
  1. நவமணி இசைமாலை
  2. மின்னல் பூ
  3. இளந்தமிழா
  4. தூரன் கவிதைகள்
  5. நிலாப் பிஞ்சு
  6. ஆதி அத்தி
  7. அழகு மயக்கம்
  8. பொன்னியின் தியாகம்
  9. காதலும் கடமையும்
  10. மனக்குகை
  11. சூழ்ச்சி
  12. இளந்துறவி
  13. தூரன் எழுத்தோவியங்கள்
  14. பிள்ளைவரம்
  15. மா விளக்கு
  16. உரிமைப் பெண்
  17. காளிங்கராயன் கொடை & தங்கச் சங்கிலி (சிறுகதைத் தொகுதி)
  18. காலச் சக்கரம் (பத்திரிகை)
  19. தமிழிசைப் பாடல்கள் (15ஆம் தொகுப்பு)
  20. தமிழிசைப் பாடல்கள் (7ஆம் தொகுதி)
  21. இசைமணி மஞ்சரி
  22. முருகன் அருள்மணி மாலை
  23. கீர்த்தனை அமுதம்
  24. பட்டிப் பறவைகள்
  25. கானகத்தின் குரல்
  26. கடல் கடந்த நட்பு
  27. பறவைகளைப் பார்
  28. தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்
  29. மோகினி விலாசம்
  30. அருள் மலை நொண்டி
  31. காட்டு வழிதனிலே
  32. பூவின் சிரிப்பு
  33. தேன் சிட்டு
  34. காற்றில் வந்த கவிதை
  35. பாரதியும் பாரத தேசமும்
  36. பாரதியார் நூல்கள் ஒரு திறனாய்வு
  37. பாரதியும் பாப்பாவும்
  38. பாரதித் தமிழ்
  39. பாரதியும் கடவுளும்
  40. பாரதியும் சமூகமும்
  41. பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்
  42. பாரதியும் தமிழகமும்
  43. பாரதியும் உலகமும்
  44. பாரதியும் பாட்டும்
  45. மனமும் அதன் விளக்கமும்
  46. கருவில் வளரும் குழந்தை
  47. குமரப் பருவம்
  48. பாரம்பரியம்
  49. பெற்றோர் கொடுத்த பெருங்கொடை
  50. குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்
  51. அடி மனம்
  52. நல்ல நல்ல பாட்டு
  53. சங்ககிரிக் கோட்டையின் மர்மம்
  54. மழலை அமுதம்
  55. நிலாப்பாட்டி
  56. பறக்கும் மனிதன்
  57. ஆனையும் பூனையும்
  58. கடக்கிட்டி முடக்கிட்டி
  59. மஞ்சள் முட்டை
  60. சூரப்புலி
  61. கொல்லிமலைக் குள்ளன்
  62. ஓலைக்கிளி
  63. தரங்கம்பாடித் தங்கப் புதையல்
  64. நாட்டிய ராணி
  65. மாயக்கள்ளன்
  66. தம்பியின் திறமை

மறைவு

[தொகு]

1980ஆம் ஆண்டு கடுமையான வாத நோயால் வாடியவர் 1987 ம் ஆண்டு சனவரி 20ஆம் நாள் மறைந்தார்.

இவரைப்பற்றிய நூல்கள், ஆய்வுக் கட்டுரைகள்

[தொகு]

பெரியசாமித்தூரனின் பணிகள் தொடர்பாக கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகள் பலவும் சில ஆய்வேடுகளும் வெளியாகியுள்ளன.

சில ஆய்வேடுகள்

[தொகு]
  • பெ. தூரனின் இலக்கியப்பணி (எம்.பில் ஆய்வேடு) மா. இராமச்சந்திரன், 1987
  • Periyaswamy Thooran - A Study (எம்.பில் ஆய்வேடு) 1989
  • பெ. தூரன் கவிதைத்திறன் (எம்.பில் ஆய்வேடு) 1990

நூல்கள்

[தொகு]

சாகித்திய அக்கதமி வெளியிடும் இந்திய இலக்கியச் சிற்பிகள் என்ற நூல் வரிசையில் ஒன்றாக ம. ப. பெரியசாமித் தூரன் எனும் நூல் சிற்பி பாலசுப்பிரமணியத்தால் எழுதப்பட்டு 2000 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதன் நான்காவது பதிப்பு (2010) பத்து அத்தியாயங்களையும் மூன்று பின்னிணைப்புக்களையும் 123 பக்கங்களில் கொண்டிருக்கிறது.

தொண்டில் கனிந்த தூரன் எனும் நூல் சிற்பி பாலசுப்பிரமணியம் என்பவரால் தொகுக்கப்பட்டு பாரதீய வித்யா பவன் கேந்திரா வெளியீடாக வெளிவந்துள்ளது.

விருதுகளும் சிறப்புகளும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "கலைக்களஞ்சியம் உருவாக்கிய பெ.தூரன்". தினமணி. https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2010/Jun/06/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-192092.html. பார்த்த நாள்: 2 July 2024. 
  2. நினைவு அலைகள்; சாந்தா பதிப்பகம்; பக்கம் 618
  3. தினமணி நாளிதழில் எழுதப்பட்ட ஒரு இசை விமர்சனக் கட்டுரை
  4. "காலச்சக்கரம் விளம்பரம்". ஈழகேசரி. 29-08-1948. 
  5. நினைவு அலைகள்; சாந்தா பதிப்பகம்; பக்கம் 620
  6. "இசைப்பேரறிஞர் பட்டம் வழங்கப் பெற்றவர்கள்". தமிழ் இசைச் சங்கம். https://web.archive.org/web/20120212161602/http://www.tamilisaisangam.in/virudhukal.html. பார்த்த நாள்: 15 June 2024. 
  7. "இசைப்பேரறிஞர் பட்டம் வழங்கப் பெற்றவர்கள்". தமிழ் இசைச் சங்கம். 22 டிசம்பர் 2018. Archived from the original on 2012-02-12. பார்க்கப்பட்ட நாள் 22 டிசம்பர் 2018. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)

உசாத்துணைகள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ம._ப._பெரியசாமித்தூரன்&oldid=4037146" இலிருந்து மீள்விக்கப்பட்டது