பெருமூளை
மூளையம் | |
---|---|
மூளைய மேற்பட்டையில், முன்மடல் (நீலம்), பொட்டுமடல் (பச்சை), பிடரிமடல் (சிவப்பு), சுவரிமடல் (மஞ்சள்) ஆகியவை அடங்கும். (இங்கு மூளி குறிப்பிடப்படவில்லை) | |
முளைய முள்ளந்தண்டு விலங்குகளின் சிறுபாகங்களைக் குறிக்கும் பட ம். | |
விளக்கங்கள் | |
தமனி | முற்பக்க மூளைய நாடி, நடு மூளைய நாடி, பிற்பக்க மூளைய நாடி. |
சிரை | மூளைய நாளம் |
அடையாளங்காட்டிகள் | |
இலத்தீன் | Cerebrum |
MeSH | D054022 |
NeuroLex ID | birnlex_1042 |
TA98 | A14.1.03.008 A14.1.09.001 |
TA2 | 5416 |
TH | TH {{{2}}}.html HH3.11.03.6.00001 .{{{2}}}.{{{3}}} |
TE | E5.14.1.0.2.0.12 |
FMA | 62000 |
உடற்கூற்றியல் |
மூளையம் அல்லது பெருமூளை (cerebrum, telencephalon அல்லது endbrain) என்பது மனித மூளையின் மிகப்பெரிய பாகம் ஆகும். இது மூளைய இரு அரைக்கோளங்களைப் (cerebral hemispheres) பிரதான பாகமாகக் கொண்டது. மனித மூளையில், மூளையமானது, மைய நரம்புத்தொகுதியின் அதிவெளிப்புறமான பாகத்தை ஆக்குகின்றது. இம்மூளையம், தாயின் வயிற்றில் அணியமிதடு (prosencephalon) எனும் முளையப் பாகத்திலிருந்து விருத்தி அடைகின்றது. மூளையத்தில் அடங்குகின்ற இரு அரைக்கோளங்களும் ஓரளவு சமச்சீரானவை ஆகும். உடலில் நிகழும் சகல தன்னார்வ / தன்னிச்சைச் செயற்பாடுகளும் மூளையத்தால், சிறுமூளையின் அல்லது மூளியின் (cerebellum) உதவியுடன் நிகழ்த்தப்படுகிறன.
கட்டமைப்பு
[தொகு]மூளையம், மனித மூளையின் மிகப்பெரிய பாகமாகும். உயிரியின் உடல் அமைப்பைப் பொறுத்து அது முள்ளந்தண்டின் முன்புறமாக அல்லது மேற்புறமாகக் காணப்படும். மனிதமூளையைப் பொறுத்தவரை, அதிலுள்ள ஐந்து பெரும் பாகங்களிலும், மூளையமே அதிக விருத்தி அடைந்த ஒன்றாகக் காணப்படுகிறது. இதில் சுமார் 15 பில்லியன் நரம்பு செல்கள் காணப்படுகின்றன.[1]
மூளையம், இரு மூளைய அரைக்கோளங்கள், அவற்றின் மேற்பட்டைகள்(சாம்பல் நிறப்பொருளின் வெளிப்படலம்), வெண்ணிறப்பொருளின் அடிப்படலம் என்பவற்றைக் கொண்டிருக்கிறது.[2] மூளைப்பின்மேடு (hippocampus), அடிமூளைத்திரள் (basal ganglia), மோப்பக்குமிழ் (olfactory bulb) முதலானவை மூளையத்தை அமைக்கின்ற துணைமேற்பட்டை உறுப்புகள் (subcortical structures). மூளையத்தின் இரு அரைக்கோளங்களும் நெட்டாங்குப்பிளவு (longitudinal fissure) மூலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன.
மூளைய மேற்பட்டை
[தொகு]சாம்பல் நிறப்பொருளின் வெளிப்படலத்தால் ஆக்கப்படுகின்ற மூளைய மேற்பட்டையானது, முலையூட்டிகளில் மட்டும் காணப்படும் ஒரு அம்சம் ஆகும். மனிதன் உள்ளிட்ட பெரிய முலையூட்டிகளில் இது மடிப்படைந்து மடிசுருள்கள் (gyri) எனப்படும் மடிப்புகளையும், சால்கள் (sulcus) எனப்படுகின்ற வரிப்பள்ளங்களையும் கொண்டிருக்கும். இதனால் மூளையின் பரப்பளவானது அதிகரிக்கப்பட்டிருக்கிறது.[3]
மூளைய மேற்பட்டை, நான்கு மடல்களாக வகைப்படுத்தப்படும். முன்மடல் (frontal lobe),சுவரிமடல் (parietal lobe), பொட்டுமடல் (temporal lobe), பிடரிமடல் (occipital lobe) என்பன அவையாகும். இப்பெயர்கள், அம்மடல்கள் மீது மேற்பொருந்துகின்ற நரம்புவெண்டலை என்புகளின் (neurocranial bones) அடிப்படையிலேயே சூட்டப்பட்டுள்ளன.[4]
மூளைய அரைக்கோளங்கள்
[தொகு]நடு நெட்டாங்குப்பிளவு மூலம், மூளையம் இரு அரைக்கோளங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இது இடது - வலது எதிர்ப்பக்கப்புடை மூளை (contralateral brain) என்று அழைக்கப்படும். அதாவது, வலது அரைக்கோளம், இடது உடலையும், இடது அரைக்கோளம் வலது உடலையும் கட்டுப்படுத்துகின்றது.[4] இவை இரண்டிற்குமிடையே ஓரளவு சமச்சீர் காணப்படுகின்றது. முலையூட்டிகளில் முதுகுப்புற தொலைமிதடு (dorsal telencephalon) அல்லது பழையம் (pallium), மூளைய மேற்பட்டையாக அல்லது பெருமூளைப் புறணியாக மாறும்.வயிற்றுப்புற தொலைமிதடு (ventral telencephalon) அல்லது துணைப்பழையம் (subpallium) அடிமூளைத்திரளாக மாறுகின்றது.
விருத்தி
[தொகு]முள்ளந்தண்டுளிகளில் முளையம் விருத்தியாகும் போது, நரம்புக்குழாய் (neural tube) நான்கு பாகங்களாகப் பிரிக்கப்பட்டு, பின்பு நான்கு தனித்துவமான மைய மூளை மண்டலமாக வளர்ச்சி காணுகிறது. இவை நான்கும் முன்மூளை/அணியமிதடு (prosencephalon/forebrain), ந்டுமூளை/ சுற்றுமிதடு (mesencephalon/midbrain), பின்மூளை/கடைமிதடு (rhombencephalon/hindbrain), முள்ளந்தண்டு வடம் என்பன ஆகும்.[5] அணியமிதடு, பின்பு தொலைமிதடாகவும் (telencephalon) ஈர்மிதடாகவும் (diencephalon) விருத்தியடைய, முதுகுப்புற தொலைமிதடு, பழையத்தை (pallium) உருவாக்கும். பழையமே பின்பு முலையூட்டிகளிலும் ஊர்வனவற்றிலும் மூளைய மேற்பட்டையாக மாறுகின்றது. வயிற்றுப்புற தொலைமிதடு, அடிமூளைத்திரளை (basal ganglia) தோற்றுவிக்கும். ஈர்மிதடு, பரிவகம் அல்லது தலைமத்தையும் (thalamus), பரிவகக்கீழ் அல்லது கீழ்த்தலைமத்தையும் உருவாக்குகின்றது. பின்பு விழித்திரையாக வளர்ச்சியடைகின்ற பார்வைப் புடகங்களும் (optic vesicles) ஈர்மிதட்டிலிருந்து உருவாகுபவை தான்.[6] முதுகுப்புற தொலைமிதடு நடுக்கோட்டால் பிரிக்கப்பட்ட இரு தொலைமிதட்டுப்புடகங்களை உருவாக்கும். இவையே பின்பு இரு அரைக்கோளங்களாகின்றன. பறவைகள், மீன்கள் என்பவற்றிலும் முதுகுப்புற தொலைமிதடு காணப்படும் போதும், அது படலங்களாக இருப்பதில்லை என்பதால், அவற்றை மேற்பட்டை என்று சொல்வதில்லை.
தொழில்கள்
[தொகு]பெருமூளை உணர்வு உறுப்புகளிலிருந்து தகவலைப் பெறுகிறது.இது நினைவு மற்றும் செயல்களை (தன்னார்வ தசை செயல்பாடுகள்) கட்டுப்படுத்துகிறது. பெருமூளை திட்டமிடல்,யோசித்தல்,பேசுதல் மற்றும் தகவல்களை ஒருங்கிணைத்தல் ஆகிய பணிகளை செய்கின்றது.
- புலனுணர்வுகள் (பார்வை, கேட்டல், சுவை, மோப்பம், தொடுகை)
- சிந்தனை, ஏரணம், ஆளுமை.
- மனித உடலின் இயக்கம்
- மொழியும் தொடர்பாடலும்
- கற்றல், நினைவுகூரல்
-
முளையம், நீள்வெட்டுமுகத்தோற்றம்
-
மூளையம், குறுக்குவெட்டுமுகத்தோற்றம்
உசாத்துணைகள்
[தொகு]- ↑ ரீபார் ஏ.எஸ். & ரீபர் எ.எஸ். உளவியல் பற்றிய பென்குயின் அகராதி. லண்டன்: 3 வது பதிப்பு. p. 113.
- ↑ Arnould-Taylor, William (1998). A Textbook of Anatomy and Physiology. Nelson Thornes. p. 52. பார்க்கப்பட்ட நாள் 27 January 2015.
- ↑ Angevine, J.; Cotman, C. (1981). Principles of Neuroanatomy. NY: Oxford University Press. பார்க்கப்பட்ட நாள் 25 January 2015.
- ↑ 4.0 4.1 Rosdahl, Caroline; Kowalski, Mary (2008). Textbook of Basic Nursing (9th ed.). Lippincott Williams & Wilkins. p. 189. பார்க்கப்பட்ட நாள் 28 January 2015.
- ↑ Gilbert, Scott F. (2014). Developmental biology (10th ed.). Sunderland, Mass.: Sinauer. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-87893-978-7.
- ↑ Kandel, Eric R., ed. (2006). Principles of neural science (5th ed.). Appleton and Lange: McGraw-Hill. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-07-139011-8.
வெளியிணைப்புகள்
[தொகு]- மூளையம், மருத்துவக்குறிப்புகள் பரணிடப்பட்டது 2008-11-19 at the வந்தவழி இயந்திரம்
- NIF Search - மூளையம்