உள்ளடக்கத்துக்குச் செல்

பெருங்குடி அகத்தீசுவரம் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெருங்குடி அகத்தீசுவரம் கோயில் என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின், மல்லியம்பத்து ஊராட்சியில் பெருங்குடி என்னும் சிற்றூரில் உள்ள பழமையான சிவன் கோயிலாகும். இக்கோயிலுக்கு சோழர், போசளர், பாண்டியர் ஆட்சிக் காலங்களில் திருப்பணிகள் நடந்துளன.

அமைவிடம்

[தொகு]

திருச்சிராப்பள்ளியிலிருந்து, வயலூர் செல்லும் வழியில் சோமரசம் பேட்டைக்கு அருகில் பெருங்குடி உள்ளது.

கோயில் அமைப்பு

[தொகு]

இது கி. பி. 969 இல் சுந்தர சோழன் காலத்தில் கட்டப்பட்ட ஒரு கற்றளி ஆகும்.[1] இந்தக் கோயிலானது கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோயிலானது அர்த்த மண்டபம், முக மண்டபம், மகா மண்டபம், அம்மன் சந்நிதி, நந்தி மண்டபம், பலிபீடம் கொடிமர பீடம் ஆகியக் கூறுகளைக் கொண்டுள்ளது. கருவறையில் அகத்தீசுவரர் சுயம்புலிங்கமாக உள்ளார். அகத்தீசுவர் சற்று சய்ந்த திருமேனியாக உள்ளார். கருவறைக்கு மேலே வேசர வடிவில் விமானம் அமைந்துள்ளது. கருவறைக் கோட்டத்தின் தெற்கே தென்முகக் கடவுள், ஆலமர்ச் செல்வன், மேற்கே மாதொருபாகன், வடக்கே நான்முகன், சண்டிகேசுவர் ஆகியோர் உள்ளனர். கோயில் வளாகத்தில் இடப்புறமாக மகாகணபதி, வேங்கடவன், இலட்சுமி நாராயணன் ஆகியோர் உள்ளனர். கோயில் வளாகத்தின் வலப்புறமாக முருகன் தெய்வானையுடன் உள்ளார். அருணகிரிநாதரால் இந்த முருகன் பாடப்படவராவார். முருகனுக்கு அருகில் சப்தகன்னியரில் வராகி, வைஷ்ணவி, பிராமி ஆகியோர் உள்ளனர். முருகனுக்கு எதிரே ஈசானிய மூலையில் சனிபகவான் தனியாக அமைந்துள்ளார். இக்கோயிலில் அம்மன் சிவகாமசுந்தரி என்று அழைக்கப்படுகிறார். அம்மன் சந்நிதி பாண்டியர் காலத்தில் அமைக்கபட்டுள்ளது.

கல்வெட்டுகள்

[தொகு]

கல்வெட்டுகளில் இந் ஊரானது பெருமுடி, திருப்பெருமுடி என்று அழைக்கப்படுகிறது. இப்போது அவை மருவி பெருங்குடி என்று அழைக்கப்படுகிறது. கல்வெட்டுகளில் இத்தல இறைவன் பெருமுடி பரமேசுவரனார் என்று அழைக்கப்படுகிறார்.[2]

13 ஆம் நூற்றாண்டில் போசள மன்னன் வீர இராமநாதன் ஆட்சிக் காலத்தில் பெருங்குடியானது ஜகதேகவீரச் சதுர்வேதி மங்கலம் என்று அழைக்கப்பட்டது. அப்போது இக்கோயிலில் திருப்பணி நடந்தது. கோயில் பணியில் ஈடுபட்ட சிற்பிகளுக்கு ஊதியம் கொடுக்க கோயில் நிர்வாகத்திடம் போதிய நிதி இருக்கவில்லை. இதை அறிந்த இந்த ஊரைச் சேர்ந்த தட்டாரான மருதாண்டவர் என்பவர் தன்னிடமிருந்த முன்று கழஞ்சு பொன்னைக் கொடுத்து உதவினார். மருதாண்டவருக்கு நல்லமங்கை என்ற பெண் இருந்தாள். அவளுக்கு திடீரென்று கண் பார்வை இல்லாமல் போனது. இதனால் மனம் வருந்திய மருதாண்டவர் இத்தல இறைவனிடம் முறையிட, அவரின் மகளுக்கு பார்வை மிண்டும் கிடைத்தது. அந்த மகிழ்ச்சியானால் ஒரு கழஞ்சு பொன்னைக் கொண்டு தங்கப் பட்டம் செய்து இத்தல இறைவனுக்கு வழங்கியதாக கல்வெட்டு கூறுகிறது.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. வைத்திலிங்கம், கு (2021-10-28). "செவ்வாய், சனி தோஷம் போக்கும் பெருங்குடி அகஸ்தீசுவரர் திருக்கோயில்". {{cite magazine}}: Cite magazine requires |magazine= (help)
  2. சி.வெற்றிவேல் (2020-04-01). "பிணி போக்கும் பெருங்குடி அகத்தீஸ்வரர்... இல்லம் தேடிவரும் இறை தரிசனம்! #worshipathome". {{cite magazine}}: Cite magazine requires |magazine= (help)
  3. "பார்வையிழப்பின் மூவருலா". 2024-05-05. {{cite magazine}}: Cite magazine requires |magazine= (help)