உள்ளடக்கத்துக்குச் செல்

பெரமோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெரமோன் (pheromone) என்பது பொதுவாக ஒரு உயிரினம் தன் இனத்தைச் சேர்ந்த மற்ற உயிரிகளுடன் தொடர்பு கொள்ளும் பொருட்டு சுற்றுப்புறத்தில் சுரக்கும் மணமுடைய வேதிப்பொருள் ஆகும். ஆனால் ஒரு உயிரினத்தின் ஃபெரமோன் மற்றொரு இன உயிரினத்தில் துலங்கல் உண்டாக்குவதும் அறியப்பட்டுள்ளது.[1][2][3]

பெரமோன்கள் உண்டாக்கும் விளைவு உள்ளுணர்வால் ஏற்படுவதாகும். இது உயிரினம் கற்றறிந்து உண்டாவதில்லை. மனிதன் உள்ளிட்ட அனைத்து விலங்கினங்களிலும் பெரமோன்கள் காணப்பட்டாலும் பூச்சியினங்களிலேயே இது மிகப்பரவலாய்க் காணப்படுகிறது. பெரமோன்களைப் பற்றிய அறிவு வாசனைத் திரவியங்கள் தயாரித்தல், பூச்சிகளைக் கட்டுப்படுத்தல் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகிறது.

பூச்சி பெரமோன்கள்

[தொகு]

எச்சரிக்கை பெரமோன்

[தொகு]

எறும்புக் கூட்டத்தில் ஓர் எறும்பு தொந்தரவு செய்யப்பட்டால் அது எச்சரிக்கை ஃபெரமோனை வெளியிடும். இதனால் ஈர்க்கப்படும் எறும்புகள் அவ்விடம் நோக்கி வந்து தொந்தரவைச் சரி செய்ய முயலும். இந்த ஃபெரமோன் மறைந்ததும் எறும்புகள் தங்கள் வேலைகளில் ஈடுபடத் துவங்கும்.

பாதை பெரமோன்

[தொகு]

சில எறும்புகள் உணவைக் கண்டுபிடித்து அதைக் கூட்டிற்கு எடுத்துவரும் போது வந்த பாதையில் பாதை ஃபெரமோன்களை சுரக்கும். இதனால் கவரப்பட்ட மற்ற எறும்புகள் அதே பாதையில் சென்று உணவைக் கண்டுபிடித்துக் கூட்டிற்குக் கொண்டு வரும். அவையும் அதேபோல் வரும் வழியில் ஃபெரமோன்களைச் சுரக்கும். உணவு தீர்ந்ததும் எறும்புகள் ஃபெரமோன்களைச் சுரப்பதை நிறுத்தி விடும். அத்தோடு இந்த ஃபெரமோன்கள் எளிதில் ஆவியாகியும் விடும். எனவே எறும்புகள் குழம்புவதில்லை.

அரசித் தேனீயின் கீழ்த்தாடை பெரமோன்

[தொகு]

உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் அரசித் தேனீ ஒரு முட்டை போடும் இயந்திரமே ஆகும். ஓர் உறைக்குள் இரு வாள்கள் இருக்க முடியாதது போல் ஒரு தேனீக் கூட்டில் இரு அரசிகள் இருக்க முடியாது. இதற்குக் காரணம் அரசித் தேனீ சுரக்கும் ஒரு வித ஃபெரமோன் ஆகும். இது அரசியின் கீழ்த்தாடையில் உள்ள சில சுரப்பிகளால் சுரக்கப்படுகின்றன. இதன் விளைவுகளாவன:

  • பணியாளர் தேனீக்களை தனக்கு உணவூட்ச் செய்தல்
  • இன்னொரு அரசி அறை கட்டப்படாமல் தடுத்தல்
  • பணியாளர்களில் அண்டகங்கள் உருவாகாமல் தடுத்தல்

பால் ஈர்ப்பு பெரமோன்

[தொகு]

பூச்சியினங்களில் பொதுவாக பெண் பூச்சிகளே பால் ஈர்ப்பு ஃபெரமோன்களை வெளிவிடுகின்றன. இவை வணிகரீதியாகத் தயாரிக்கப்பட்டு பூச்சிப் பொறிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.

தாவர பெரமோன்கள்

[தொகு]

தாவர பெரமோன்களும் அறியப்பட்டுள்ளன. பூச்சிகளால் மகரந்தச் சேர்க்கை நிகழ்த்தும் ஆர்க்கிடுகள் ஆண் பூச்சியைக் கவர பெண் பூச்சியின் மணத்தை வெளியிடுகின்றன.

பாலூட்டி பெரமோன்கள்

[தொகு]

எல்லை பெரமோன்கள்

[தொகு]

வயது வந்த ஆண் நாய்கள் காலைத் தூக்கிக் கம்பத்தில் சிறுநீர் கழிப்பதைப் பார்த்திருக்கலாம். இது மற்ற ஆண் நாய்களுக்குத் தனது எல்லையைத் தெரிவிப்பதற்கான ஃபெரமோன் வெளியீடு ஆகும்.

மனித பெரமோன்கள்

[தொகு]

மனிதர்களிலும் ஃபெரமோன்கள் சுரக்கப்படுகின்றன. விடுதியில் ஒன்றாகத் தங்கியிருக்கும் பெண்களுக்கு மாத விலக்கு ஒரே நேரத்தில் உண்டாவது அறியப்பட்டுள்ளது. இது ஃபெரமேனா் விளைவே என்றறியப்பட்டு உள்ளது. இந்த ஃபெரமோன்கள் அக்குளில் இருந்து சுரக்கப்படுகின்றன.

ஒரு ஆண் பெண்களைக் கவர்வதிலும் ஃபெரமோன்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்த அடிப்படையில் பல வாசனைத் திரவியங்கள் வெளியிடப்படுகின்றன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Definition of pheromone". Medicinenet (MedicineNet Inc.). 19 March 2012 இம் மூலத்தில் இருந்து 11 May 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110511134143/http://www.medterms.com/script/main/art.asp?articlekey=12896. 
  2. "Peptide pheromone-dependent regulation of antimicrobial peptide production in Gram-positive bacteria: a case of multicellular behavior". Peptides 22 (10): 1579–1596. October 2001. doi:10.1016/S0196-9781(01)00493-4. பப்மெட்:11587786. 
  3. Wood William F. (1983). "Chemical Ecology: Chemical Communication in Nature". Journal of Chemical Education 60 (7): 1531–539. doi:10.1021/ed060p531. Bibcode: 1983JChEd..60..531W. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரமோன்&oldid=4101026" இலிருந்து மீள்விக்கப்பட்டது