பெண்ணியம்
பெண்ணியம் தொடரின் பகுதி |
---|
பெண்ணியம் வலைவாசல் |
பெண்ணிய மெய்யியல் தொடரின் பகுதி |
---|
முதன்மை ஆக்கங்கள் |
முதன்மை கோட்பாட்டாளர்கள் |
முக்கிய கோட்பாடுகள் |
பெண்ணியம் (feminism) என்பது பெண்களை தாழ்வுபடுத்தும் சமூக, அரசியல், பொருளாதார நடைமுறைகள், கட்டமைப்புக்கள் மற்றும் சமத்துவமின்மையை எதிர்க்கும் கவனப்படுத்தும் சமூக, கலாசார, அரசியல் இயக்கங்கள், செயற்பாடுகள், கோட்பாடுகளின் தொகுப்பாகும். ஆண் பெண் சமத்துவத்தில் கவனம் செலுத்தும் கோட்பாடாகவும் இது வரையறுக்கப்படுவதுண்டு. பெண்ணியத்தை வரையறுப்பதென்பதே கூட சிக்கலானதாக இருப்பதுண்டு.
சமத்துவமின்மையின் மூலங்கள், சமத்துவத்தை அடைவதற்கான வழிமுறைகள், பால் மற்றும் பால்நிலை அடையாளங்களை விமர்சிப்பது, கேள்விக்குட்படுத்துவதற்கான எல்லைகள் போன்றன தொடர்பில் பெண்ணியவாதிகளிடையே கருத்து வேறுபாடுகள் உண்டு. பால் அடையாளங்களான ஆண் - பெண் போன்றவை வெறுமனே சமூகத்தால் கட்டமைக்கப்பட்டவையே என்ற வாதங்களும் உள்ளன.
தற்காலப் பெண்ணியவாதிகள் பெண்ணியத்தை இன, சமூக, கலாசார, மத எல்லைகளைக் கடக்கும் அடிப்படை இயக்கமாகக் கருதுகின்றனர். ஒரு வினைத்திறன்மிக்க பெண்ணிய இயக்கமானது வன்புணர்ச்சி, தகாப்புணர்ச்சி, பாலியற் தொழில் போன்ற பொதுப்பிரச்சினைகளையும் குறித்த சமூகங்களுக்குரிய சிறப்புப் பிரச்சினைகளையும் கவனத்திலெடுக்க வேண்டும் என்றும் இவர்கள் வாதிடுகின்றனர்.
பெண்ணியம்-சொல் விளக்கம்
[தொகு]Feminism என்னும் ஆங்கிலச் சொல் Femina எனும் இலத்தீன் மொழியிலிருந்து உருவானது. இதன் பொருள் பெண்மைக்குரிய இயல்புகளை உடையவள் என்பதாகும். இச்சொல் தமிழில் பெண்ணியம், பெண்ணிலைவாதம், பெண் நிலை ஏற்பு, மகளிரியல், பெண் நலக்கொள்கை ஆகிய சொற்களால் அழைக்கப்பட்டு வருகிறது.
பெண்ணியம் என்ற சொல் நடப்பில் நிலைபெற்று விட்டது என்பதாலும், கருத்துக் குழப்பத்திற்கு இடம் தராமல் தெளிவாக உள்ளதாலும் பெமினிசம் என்கிற ஆங்கிலச் சொல்லின் தமிழ் இணைச் சொல்லாக இது வழங்கப்பட்டு வருகிறது. பெமினிசம் என்பதற்கு பெண்ணியம் என்பதே பொருத்தமான கலைச் சொல்லாகும்.[1]
பெண்ணியம்-கருத்து விளக்கம்
[தொகு]பெண்ணியம் என்பது பெண்களின் எல்லாச் சிக்கல்களையும் புரிந்துகொண்டு அவற்றைக் களைய முற்படும் இயக்கமாகும்.அதன்மூலம் உலகளவில் அரசியல், பண்பாடு,பொருளாதாரம், ஆன்மீகம் ஆகியவற்றில் நல்ல மாற்றத்தை உருவாக்கிட முடியும். சார்லட் பன்ச் என்பவர், "பெண்ணியம் என்பது பெண்களுக்கான உரிமைகளைப் பெற்றுத் தருவது மட்டுமல்ல, சமூகத்தையே மாற்றியமைக்க முயல்வதாகும்" என்று எடுத்துரைப்பார்.[சான்று தேவை]
தெற்காசிய நாடுகள், பெண்கள் சமூகம், அலுவலகம், குடும்பம் போன்றவற்றில் ஒடுக்கப்படுவது பற்றிய விழிப்புணர்ச்சியையும் அத்தகைய இழிவுபடுத்தும் போக்கினை மாற்றியமைக்க ஆண்களும் பெண்களும் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு செயல்படும் தன்மையைப் பெண்ணியம் கொண்டுள்ளது.[2]
பெண்ணியமும் அதன் நோக்குகளும்
[தொகு]பெண்ணியமானது பல்வேறு குறிக்கோள்களை உள்ளடக்கியதாக உள்ளது. அவையாவன:[சான்று தேவை]
- பெண்ணியம் என்பது அனைத்து வகைப் பெண்களுக்கும் சம உரிமை கிடைக்க போராடுதல்.
- ஆண், பெண் இருபாலரும் சமத்துவ உரிமைகளை ஒருங்கிணைந்து நிலைநாட்டுதல்.
- பெண்கள் தாம் மேற்கொள்ளும் அனைத்துவகை வாழ்க்கை முறைகளுக்கும்,பணிகளுக்கும் உரிமையுடைவர்களாக இருத்தல்.
- பெண்களின் உரிமைகளைப் பறித்து அவர்களைக் கட்டுப்படுத்துவனவற்றையும் அவர்களின் முன்னேற்றத்திற்கு கேடுவிளைவிப்பனவற்றையும் நீக்குதல்.
- பெண்களுக்குப் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்களை ஒருங்கிணைத்து, இயக்கமாக்கி உரிமைகளுக்காகப் போராடச் செய்தல்.
- பெண்களுக்குப் பொருளாதாரச் சுதந்திரத்தை நிலைநாட்டுதல்.
- ஆணாதிக்கத்தை அடையாளம்கண்டு அதனை அறவே களைதல்.
- பெண்களின் மீதான அனைத்துவகை ஒடுக்குமுறைகளையும் ஆராய்ந்து அவற்றைப் போக்குவதற்கான தீர்வுகள் மற்றும் விடுதலைப் பெறுவதற்கான வழிமுறைகளைப் பின்பற்றுதல்.
- பெண்களின் நலனைப் போற்றுதலும் அதனை அடைதலும் அடைந்தவற்றைக் காத்தலும்.[3]
பெண்ணியத்தின் தோற்ற வளர்ச்சி
[தொகு]தொடக்கக் காலத்தில் மனித குலம் தாய்வழிச் சமூகமாக இருந்துள்ளது. பெண்ணே குடும்பத்தை வழி நடத்தித் தலைமைப் பொறுப்பில் இருந்திருக்கின்றாள். இவை மானுடவியல் ஆய்வாளர்களின் கருத்துக்களாக உள்ளன. பின்னர், பல்வேறு சமூக மாற்றத்தால் தாய்வழிச் சமூகம் வீழ்ச்சி கண்டது. நாடெங்கிலும் பெண் கொடுமைகளுக்கு ஆட்பட்டாள். சீனாவில் பெண்கள் வீட்டைவிட்டு ஓடிவிடாமலிருக்க இளம் வயதிலேயே காலை மடக்கி முடமாக்கிவிடுவதாகக் கூறப்படுகிறது. அந்தந்த நாட்டின் சூழலுக்கேற்ப பெண் சமுதாயம் பல கொடுமைகளை அனுபவித்தது. இவ்வகையான பெண்ணின கொடுமைகளுக்கு எதிராக, பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் உலகெங்கிலும் எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன. 1885 ஆம் ஆண்டு காசிம் அமீன் என்பவர் புதுமைப்பெண் (THE NEW WOMAN) என்றொரு நூலை எழுதினார். இந்நூல் மனித சமுதாயத்தில் ஒருவித விழிப்புணர்வைத் தோற்றுவித்தது.[4]
பிரான்சு நாட்டைச் சேர்ந்த சிமோன் டி பேவர் இரண்டாவது பாலினம் (The Second Sex:1949) என்ற நூலை எழுதினார். இந்த நூலை முன்னோடியாகக் கொண்டு, பெண்ணியம் ஓர் அறிவார்ந்த கொள்கையாகவும் போராட்டக் கருவியாகவும் முன்வைக்கப்பட்டது.[5]
1871இல் பிரான்சில் பெமினிசம் என்ற சொல் அறிமுகப்படுத்தப்படுகிறது. 1872இல் அலெக்சாண்டர் டூமஸ் பில்ஸ் என்ற பிரெஞ்சு எழுத்தாளர், பெண்கள் ஆண்களால் வழிநடத்தப்படுகிறார்கள் என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.[சான்று தேவை] 1840இல் பெண்களின் உரிமைக்கான இயக்கம் தொடங்கப்பட்டது. எனினும், பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில்தான் பெண்ணின் இருப்பு நிலை குறித்த அடைமொழி, பண்பு சார்ந்து தங்களைத் தாங்களே பேசிக்கொள்வதும், சமூக பொருளாதார நிலைகுறித்த கேள்விகள் தொடர்ந்து தீவிரமாகச் சிந்திக்கப்பட்டன.[சான்று தேவை] இந்தியாவில் “பெண்ணியம்” என்ற சொல் 1960க்குப் பிறகே அதிகமாகப் பேசப்பட்டது.[6]
பெண்ணியக் கருத்தாக்க நிலைகள்
[தொகு]பெண்ணியம் ஆணுக்கு எதிரானது அன்று. ஆணாதிக்கத்தை எதிர்ப்பதாகும். பெண்ணியத்தின் தளம் விரிந்து பரந்தது. பெண்ணியவாதிகளால் குறிப்பிடப்பெறும் கருத்தாக்கங்கள் பலவுண்டு. இவர்கள் உடல், உள ரீதியில் அடக்கப்பட்ட பெண்ணின் சமூகப் பொருளாதார நிலையை அறிந்து கொள்ளப் பயன்படும் பெண்ணியக் கருத்தாக்கங்களைப் பின்வருமாறு வகைப்படுத்துகின்றனர்.[7]
- பண்பாட்டுக் கட்டமைப்பு
- தாய்வழிச் சமூகம்
- தந்தைவழிச் சமூகம்
- பாலியல் பணிவேறுபாடு
- பாலியல் அரசியல்
- அதிகாரம்
- விடுதலை
இந்தியாவில் பெண்ணிய வளர்ச்சி
[தொகு]பக்தி இயக்க காலத்தில் தோன்றிய பெண் கவிஞர்கள்
[தொகு]- சக்குபாய், ஜானாபாய் (மகாராட்டிரா)
- ஆண்டாள், காரைக்கால் அம்மையார் (தமிழ்நாடு),
- மீராபாய் (இராசத்தான்),
- அக்கா மகாதேவி (கர்நாடகம்),
- மகாதேவி வர்மா
- லலிதாம்பிகா அந்தரஜ்னம் (கேரளம்),
- ஆஷாபூர்ணதேவி (வங்காளம்)
இத்தகையோர் இறைவனை நோக்கி காதல் பக்தியுடன் பாடியப் பாடல்கள் குறிப்பிடத்தக்கவையாகும். இவற்றின் பாடுபொருளாவது பரமாத்மாவை அடையப்பெறுவதாகும். "இயற்கை என் கருப்பை அதில் சிந்தும் வித்துகளின் தந்தையும் நானே' என்று பகவத் கீதையின் கிருஷ்ணன் உரைக்கும் தத்துவமானது ஆண், பெண் உறவையும் ஆணின் சமூக மேலாண்மையையும் காட்டுவதாக உள்ளது.[8]
இந்தியத் தேசியமும் இந்தியப் பெண்ணியமும் ஒரே காலகட்டத்தில் கட்டமைக்கப்பட்டது. மேலைநாட்டுப் பெண்ணியத்திற்கு எதிராக இந்தியப் பெண்ணியம் உருவாக்கப்பட்டது. பெண்மையின் வலிமையைச் சக்தியை அடிப்படையாகக் கொண்டே இந்திய நாகரிகம் என்னும் மாளிகை எழுப்பப்பட்டிருக்கிறது என்று சரோஜினிதேவி போன்றவர்கள் குரல் கொடுத்தனர்.[சான்று தேவை]
இந்தப் பின்னணியில்தான், பெண் தெய்வமாக்கப்பட்டாள்; சக்தியின் வடிவமாக கொண்டாடப்பட்டாள். இக்கருத்துருவாக்கங்கள் இந்தியப் பெண்ணியத்தின் அடையாளமாக முதன்மைப்படுத்தப்பட்டன. இந்தியப் பெண்ணியமானது இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றுடன் இணைந்தே வளர்த்தெடுக்கப்பட்டது.[சான்று தேவை]
ஆணுக்கு ஒரு நீதி, பெண்ணுக்கு ஒரு நீதி என்று வகுத்து பெண்ணடிமைத்தனத்தைச் சட்டமாக்கியிருந்த மனுநீதியை எதிர்த்துக் குரல் கொடுக்கும் போக்குகள் ஆங்கில ஆட்சிக்குப் பின்னரே பெண்களிடையே ஏற்பட்டது. பெண்களுக்கு சுதந்திரம், சம உரிமை, விதவை மறுமணம், உடன்கட்டை எதிர்ப்பு, பெண்கல்வி முதலானவற்றில் பெண்ணியம் விழிப்புணர்வு பெற்றது. சுவர்ணகுமாரிதேவி தலைமையில் 1886-இல் பெண்கள் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. அதன்பின், 1917 மே 8ஆம் நாள் சென்னையில் அன்னி பெசன்ட் தலைமையில் இந்தியப் பெண்கள் கூட்டமைப்பு என்கிற அமைப்பு உருவானது. ஜாலியன் வாலாபாக் படுகொலைக்குப் பின்னர் ஏற்பட்ட இந்திய தேசிய எழுச்சியில் தான் முதன் முதலில் இந்தியப் பெண்கள் போராட்டக் களத்தில் முழுவதுமாகப் பங்கேற்றனர். ஆங்கிலேயர் கொண்டுவந்த நிறுவனக் கல்வி முறையும் பெண்களின் விழிப்புணர்வுக்கு தூண்டுகோலாக அமைந்தது.[9]
தமிழ்ச் சூழலில் பெண்ணியம்
[தொகு]பெண்ணியமானது தமிழ்ச்சூழலில் இலக்கியம், அரசியல் ஆகிய இரு தளங்களில் பரவலாகச் செயற்பாட்டில் இருக்கிறது. பெண் நிலைப் பார்வை குறித்த பிரக்ஞையும் தேவையும் அதிகரித்துவரும் வளர் நிலையில் ஏராளமான பெண்கள் பங்குபெற்றும் இலக்கிய இயக்கங்களும் அரசியல் இயக்கங்களும் தமிழ்ச்சூழலில் உருவாகி வருகின்றன.
சமூக தாக்கம்
[தொகு]பெண்ணிய இயக்கங்களால் மேற்கத்திய நாடுகளில் பெண்களுக்கு ஓட்டுரிமை, தேர்தலில் போட்டியிடும் அனுமதி, குழந்தை பெற்றுக்கொள்வதில் தன்னுரிமை, சொத்துரிமை, சம்பளத்தில் பாலியல் பாகுபாடின்மை போன்றவற்றை பெறமுடிந்தது. இந்தியச்சூழலில் ஓட்டுரிமையும், தேர்தலில் போட்டியிடும் உரிமையும் பெண்ணிய பார்வை கொண்ட நேரு, அம்பேத்கர் போன்றோர் இருந்ததால் எளிதாக பெண்களுக்கு கிடைக்கப்பெற்றன. சொத்துரிமை பெயரளவில் சட்டத்தில் உள்ளன. எல்லாப் பெண்களுக்கும் சொத்துரிமை சட்டத்தில் உள்ளது போல் கிடைப்பதில்லை.
பெண்ணியத்தின் வகைப்பாடுகள்
[தொகு]பெண்ணியம் சார்ந்து இயங்கும் சக்திகளின் சமூக, அரசியல், கோட்பாட்டுச் சார்பு நிலைகளைக்கொண்டு பெண்ணியம் பல வகைப்பாடுகளுள் அடக்கப்படுகிறது. விமர்சனம், ஆய்வு முயற்சிகளை இலகுபடுத்தவும், வேறு பல தேவைகளுக்குமாகச் செய்ய்ப்படும் இத்தகைய வகைப்படுத்தல் முழுமையானதாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
உலக அளவில் பெண்ணிய வகைப்பாடுகள்
[தொகு]தமிழ்ச் சூழலில் பெண்ணிய வகைபாடுகள்
[தொகு]- மார்க்சியப் பெண்ணியம்
- தலித் பெண்ணியம்
- தேசியப் பெண்ணியம்
- இந்து மதப் பெண்ணியம்
- இசுலாமியப் பெண்ணியம்
- நாத்திகப் பெண்ணியம்
- மரபுசார் பெண்ணியம்
- தீவிரப் பெண்ணியம்
- பின்னைப் பெண்ணியம்
- பின்னைத் தலித்தியப் பெண்ணியம்
- தேவமகள்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ முனைவர் இரா.ரெங்கம்மாள் ,முனைவர் சி.வாசுகி (2005). பெண்ணியம் அணுகுமுறைகளும் இலக்கியப் பயன்பாடும். அறிவுப் பதிப்பகம்,சென்னை-14. pp. ப.7. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-88048-28-3.
- ↑ இரா. ரெங்கம்மாள், சி.வாசுகி (2005) பக்.9-10
- ↑ இரா. ரெங்கம்மாள், சி.வாசுகி (2005) பக். 10-11
- ↑ முனைவர் ச.சுபாஷ்சந்திரபோஸ் (2012). தமிழ் இலக்கிய வரலாறு. பாவைப் பதிப்பகம்,சென்னை-14. pp. ப.352. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7735-067-6.
- ↑ தி.சு.நடராசன் (2008). திறனாய்வுக்கலை. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பி லிட்,சென்னை-98. pp. ப.219. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-234-0485-9.
- ↑ "சங்க இலக்கியமும் பெண்ணியக் கோட்பாடும்". பார்க்கப்பட்ட நாள் சூன் 2, 2017.
- ↑ இரா. ரெங்கம்மாள், சி.வாசுகி (2005) பக்.13
- ↑ "இந்தியப் பெண்ணியம்". பார்க்கப்பட்ட நாள் சூன் 2, 2017.
- ↑ "இந்தியப் பெண்ணியம்". பார்க்கப்பட்ட நாள் சூன் 2, 2017.