உள்ளடக்கத்துக்குச் செல்

புறநானூறு காட்டும் திணைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாழ்க்கை நிகழ்வுகளைத் தமிழ் இலக்கண நூல்கள் அகம், புறம் என இரண்டு பொருள்களாகப் பகுத்துக்கொண்டுள்ளன. அவற்றில் புறப்பொருளைத் தொல்காப்பியம் ஏழு திணைகளாகப் பகுத்துக் காட்டுகிறது. இஃது இலக்கியத்தில் கண்ட பாகுபாடு. புறநானூற்றுப் பாடல்கள் அவற்றிற்கு இலக்கியங்களாகத் திகழ்கின்றன. புறநானூற்றுப் பாடல்களுக்குப் பின்னர்த் தோன்றிய இலக்கண நூல்கள் புறப்பொருளுக்கு இலக்கணம் வகுக்கும்போது தம் விருப்பப்படி திணைகளையும், துறைகளையும் வகுத்துக்காட்டித் தம் பாகுபாடுகளுக்கு இலக்கியச் சான்றுகள் இல்லாமையால் இலக்கியச் சான்றுகளாகச் சில பாடல்களைத் தாமே பாடி இணைத்துள்ளனர்.

புறநானூற்றுப் பாடல்களைத் தொகுத்தவர் ஒவ்வொரு பாடலையும் அது தோன்றிய சூழலை எண்ணிப் பார்த்து அஃது இன்ன திணையைச் சேர்ந்தது என்னும், இன்ன துறையைச் சேர்ந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார். தொல்காப்பியம் புறத்திணையை 7 திணைகளாகப் பகுத்துக்கொண்டுள்ளது. புறநானூற்றில் 11 (உழிஞைத்திணை நீங்களாக) திணைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. புறப்பொருள் வெண்பாமாலை புறத்திணையை 12 திணைகளாகப் பகுத்துக் காட்டுகிறது. கைக்கிளை, பெருந்திணைப் பாடல்களைத் தொல்காப்பியம் அகத்திணையில் கொண்டுள்ளது. புறநானூற்றில் அவை சேர்க்கப்பட்டுள்ளன. பொதுவியல் என்னும் திணை புறநானூற்றில் உள்ளது. இது தொல்காப்பியத்தில் இல்லை. புறப்பொருள் வெண்பாமாலையில் உள்ளது. எனினும் இயன்மொழி என்னும் துறைக்குப் புறப்பொருள் வெண்பாமாலை தரும் இலக்கணம் புறநானூற்றுப் பகுப்புக்கு முழுமையாகப் பொருந்திவரவில்லை. இவற்றையெல்லாம் எண்ணிப் பார்க்கையில் புறனூற்றுப் பாடல்களுக்குத் தரப்பட்டுள்ள திணை, துறை பாகுபாடுகள் தொல்காப்பியத்துக்கும், புறப்பொருள் வெண்பாமாலைக்கும் இடைப்பட்ட காலத்தில் தோன்றி வழக்கில் இருந்த பன்னிரு பாட்டியல் என்னும் இலக்கண நூலைப் பின்பற்றியிருப்பது தெளிவாகிறது. [1] இங்குப் புறநானூறு நூலில் காணப்படும் திணைகள் அனைத்தும் திரட்டப்பட்டு, அகரவரிசைப் படுத்தப்பட்டுத் தரப்படுள்ளன. அவற்றில் ஒவ்வொன்றையும் சொடுக்கி அவற்றின் விளக்கங்களைப் பெறலாம். புறம் பற்றிய நெறிகளைக் கூறுவது புறத்திணை. புறத்திணைகள், வெட்சி முதலாகப் பன்னிரண்டு வகைப்படும் .

திணைகள்

[தொகு]

புறப்பொருள் வெண்பா மாலை சுட்டும் திணைகள் :

  1. வெட்சி
  2. கரந்தை
  3. வஞ்சி
  4. காஞ்சி
  5. நொச்சி
  6. உழிஞை (புறநானூற்றில் இல்லை)
  7. தும்பை
  8. வாகை
  9. பாடாண் திணை
  10. பொதுவியல்
  11. கைக்கிளை
  12. பெருந்திணை

இவை தவிர திணை மறைந்துபோன பாடல்கள் சிலவும் புறநானூற்றில் உள்ளன.

தொகுப்பு முன்னோடி

[தொகு]
புறநானூறு, ஆசிரியக் குழுவினர் வெளியீடு, 1958, எஸ் ராஜம், மர்ரே அண்டு கம்பெனி, சென்னை.

இவற்றையும் பார்க்க

[தொகு]

அடிகுறிப்பு

[தொகு]
  1. திணையை விளக்கும் ஒரு பாடல்
    வெட்சி நிரை கவர்தல்; மீட்டல் கரந்தையாம்
    வட்கார் மேல் செல்வது வஞ்சி ; உட்காது
    எதிர்ஊன்றல் காஞ்சி ; எயில்காத்தல் நொச்சி
    அது வளைத்தல் ஆகும் உழிஞை - அதிரப்
    பொருவது தும்பையாம் ; போர்க்களத்து மிக்கோர்
    செரு வென்றது வாகையாம்-திவாகர நிகண்டு}}