உள்ளடக்கத்துக்குச் செல்

புரூணை கிளர்ச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புரூணை கிளர்ச்சி
Brunei Revolt
Pemberontakan Brunei
இந்தோனேசியா - மலேசியா மோதல்
மலேசியா உருவாக்கம் பகுதி

செரியா எண்ணெய்க் கிணறுகளில்
பிரித்தானிய படை வீரர்கள்
நாள் 8–17 டிசம்பர் 1962
இடம் புரூணை
பொதுநலவாய நாடுகள் வெற்றி
விளைவு
பிரிவினர்
  • புரூணை மக்கள் கட்சி
தளபதிகள், தலைவர்கள்
  • ஏ. எம். அசகாரி
  • சைனி அகமட்
  • யாசின் அபான்டி
படைப் பிரிவுகள்
அரச வான்படை
அரச கடற்படை
அரச தரைப்படை
புரூணை மக்கள் கட்சி
பலம்
2,000–6,000 4,000
இழப்புகள்
6 இறப்புகள் 40 இறப்புகள்
(3,400 பேர் கைது)

புரூணை கிளர்ச்சி (ஆங்கிலம்: Brunei Revolt அல்லது Brunei rebellion of 1962 (MA63); மலாய்: Pemberontakan Brunei; சீனம்: 文莱叛乱) என்பது 1962--ஆம் ஆண்டு டிசம்பர் 8-ஆம் திகதியில் இருந்து டிசம்பர் 17-ஆம் தேதி வரையில் 10 நாட்களுக்கு, புரூணையில் நடைபெற்ற ஒரு கிளர்ச்சி ஆகும்.

பிரித்தானிய பாதுகாப்பின் கீழ் இருந்த புரூணை; மலேசியா எனும் கூட்டமைப்பில் இணைவதைத் தடுப்பதற்ம்; புரூணையை ஒரு குடியரசு நாடாக மாற்றி அமைப்பதற்கும்; புரூணை முடியாட்சியை அகற்றுவதற்கும்; புரூணை முடியாட்சி எதிர்ப்பாளர்களால் மேற்கொள்ளப்பட்ட கிளர்ச்சியே புரூணை கிளர்ச்சி ஆகும்.

பொது

[தொகு]

கிளர்ச்சியாளர்களில் பெரும்பாலோர் வடக்கு கலிமந்தான் தேசிய இராணுவத்தின் (North Kalimantan National Army) (TNKU) உறுப்பினர்கள் ஆவார்கள். வடக்கு கலிமந்தான் தேசிய இராணுவம் என்பது அப்போதைய இந்தோனேசியா அரசாங்கத்தால் ஆதரிக்கப்பட்ட ஒரு போராளிக்குழு ஆகும். இந்தப் போராளிக்குழு, வடக்கு போர்னியோ கூட்டமைப்பு (North Borneo Federation) எனும் அமைப்பிற்கு ஆதரவான புரூணை நாட்டு இடதுசாரி கட்சியான புரூணை மக்கள் கட்சியுடன் (Brunei People's Party) இணைந்து செயல்பட்டது.

வடக்கு கலிமந்தான் தேசிய இராணுவம், புரூணை நாட்டின் செரியாவின் எண்ணெய் நகரத்தின் மீது; குறிப்பாக ராயல் டச்சு செல் எண்ணெய் நிறுவனத்தின் (Royal Dutch Shell) மீது குறிவைத்து தாக்குதல்களை நடத்தின. அத்துடன், அரசு காவல் நிலையங்கள் மற்றும் அரசாங்கக் கட்டமைப்புகள் மீதும் ஒருங்கிணைந்த தாக்குதல்களை நடத்தின.

இந்தோனேசியா - மலேசியா மோதல்

[தொகு]

புரூணை நகரத்தைக் கைப்பற்றுதல்; மற்றும் சுல்தான் உமர் அலி சைபுடியன் III (Omar Ali Saifuddien III) அவர்களைச் சரண் அடையச் செய்தல் ஆகியவையே கிளர்ச்சியாளர்களின் முக்கிய நோக்கங்களாக இருந்தன. இருப்பினும் அவர்களால் அந்த நோக்கங்கங்களை அடைய இயலவில்லை. அதனால் கிளர்ச்சி தொடங்கிய சில மணிநேரங்களிலேயே தோல்வி கண்டது.[1]

1963-ஆம் ஆண்டு மலேசியாவுடன் இணைவதில்லை எனும் புரூணை சுல்தானின் முடிவிற்கு இந்தக் கிளர்ச்சி ஒரு தூண்டுகோலாக அமைந்தது. அத்துடன் இதுவே இந்தோனேசியா-மலேசியா மோதலின் (Indonesia–Malaysia confrontation) முதல் கட்டங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது.

சரவாக் கம்யூனிச கிளர்ச்சி

[தொகு]

1962-ஆம் ஆண்டு புரூணை கிளர்ச்சியின் (1962 Brunei Revolt) மூலமாக சரவாக் கம்யூனிச கிளர்ச்சியும் தூண்டப்பட்டது. மலேசியா உருவாக்கத்திற்கு முன்மொழியப்பட்ட (Proposed Formation of Malaysia) பரிந்துரைகளைப் புரூணையின் இடதுசாரி புரூணை மக்கள் கட்சி (Brunei People's Party) எதிர்த்தது. அந்த எதிர்ப்பின் மூலமாக சரவாக் கம்யூனிச கிளர்ச்சி உருவகம் பெற்றது.

1965-ஆம் ஆண்டு வரை இந்தோனேசியா அரசாங்கமும், சரவாக் கம்யூனிச கிளர்ச்சியாளர்களை ஆதரித்து வந்தது. இருப்பினும், மேற்கத்திய சார்பு கொண்ட அதிபர் சுகார்த்தோ (Pro-Western President), இந்தோனேசியாவின் அதிபர் அதிகாரத்தை ஏற்றுக் கொண்ட பின்னர் ‎மலேசியாவுடனான மோதலை (Indonesia–Malaysia Confrontation) ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தார்.

வடக்கு கலிமந்தான் கம்யூனிச கட்சி

[தொகு]

சரவாக் கம்யூனிச கிளர்ச்சியின் போது, வடக்கு கலிமந்தான் கம்யூனிச கட்சியில் இரண்டு முக்கிய இராணுவப் படைகள் உருவாக்கப்பட்டன:[2]

‎இந்தோனேசியாவின் மலேசியா மீதான மோதலின் முடிவைத் தொடர்ந்து, இந்தோனேசிய இராணுவப் படைகள் மலேசிய இராணுவப் படைகளுடன் ஒத்துழைக்கத் தொடங்கின. அத்துடன் வடக்கு கலிமந்தான் கம்யூனிச கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளிலும் (Counter-Insurgency Operations) ஒத்துழைப்பை வழங்கின.[4][5]

பின்னணி

[தொகு]

போர்னியோ தீவின் வடக்குப் பகுதி மூன்று பிரித்தானியப் பிரதேசங்களைக் கொண்டது. அவை: சரவாக்; வடக்கு போர்னியோ எனும் சபா; மற்றும் புரூணை சுல்தானகம் எனும் பிரித்தானியாவின் பாதுகாப்பில் உள்ள பிரதேசம். புரூணை 1888-இல் பிரித்தானியாவின் பாதுகாப்பிற்கு உட்பட்டது; ஏறக்குறைய 2,226 சதுர மைல்கள் (5,800 கிமீ2) மற்றும் ஏறக்குறைய 85,000 மக்களைக் கொண்டிருந்தது.

மக்களில் பாதிக்கும் மேலானவர்கள் மலாய்க்காரர்கள், கால் பகுதியினர் சீனர்கள், மீதமுள்ளவர்கள் போர்னியோவின் பழங்குடியினரான தயாக்கு மக்கள். 1929-இல் செரியாவுக்கு அருகில் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது; மற்றும் புரூணை செல் பெட்ரோலியம் நிறுவனத்தின் நிதிச் சலுகைகள் புரூணை சுல்தானகத்திற்கு பெரும் வருமானத்தையும் வழங்கி வந்தது.

புரூணை மக்கள் கட்சி

[தொகு]

புரூணையின் தலைநகர், அப்போது புரூணை டவுன் என்று அழைக்கப்பட்டது. கடற்கரையில் இருந்து சுமார் 10 மைல் (20 கிமீ) தொலைவில் ஓர் ஆற்று ஓரத்தில் இருந்தது. 1959-ஆம் ஆண்டில், சுல்தான், சர் ஒமர் அலி சைபுதீன் III, ஒரு சட்டமன்றத்தை நிறுவினார்; அதில் பாதி உறுப்பினர்கள் பரிந்துரைக்கப்பட்டவர்கள்; பாதி பேர் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். செப்டம்பர் 1962-இல் தேர்தல்கள் நடத்தப்பட்டன. அந்தத் தேர்தலில் புரூணை மக்கள் கட்சி போட்டியிட்ட அனைத்து இடங்களையும் வென்றது.

1959 மற்றும் 1962-ஆம் ஆண்டுகளுக்கு இடையில், ஐக்கிய இராச்சியம், மலாயா, சிங்கப்பூர், வடக்கு போர்னியோ (சபா) மற்றும் சரவாக் ஆகியவை புதிய மலேசிய கூட்டமைப்பை உருவாக்குவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டன. இருப்பினும், பிலிப்பீன்சு மற்றும் இந்தோனேசியா ஆகிய இரு நாடுகளும், புதிய கூட்டமைப்பில் வடக்கு போர்னியோ மற்றும் சரவாக்கை இணைக்கும் நடவடிக்கைகளை எதிர்த்தன.

எதிர்ப்புகள்

[தொகு]

அதே வேளையில், சரவாக் மற்றும் புரூணையில் மலேசியா கூட்டமைப்பிற்குப் பரவலான எதிர்ப்பு உணர்வுகளும் இருந்தன. அந்த உணர்வுகள் மலேசியா கூட்டமைப்பிற்கான எதிர்ப்புகளை வலுப்பெற்றச் செய்தன.

வடக்கு போர்னியோவின் மூன்று முடியாட்சி காலனிகளான சபா, சரவாக், புரூணை பிரதேசங்களில் வாழ்ந்த ஏறக்குறைய 1.5 மில்லியன் மக்களில் பாதி பேர் தயாக்கு மக்கள் ஆகும். அவர்கள் அனைவரையும் தங்களின் புரூணை சுல்தான் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தால் மலேசிய கூட்டமைப்பில் இணைவதற்கு ஆதரவு தருவதாக புரூணை மக்கள் கட்சி அறிவித்தது.

சரவாக் மக்களின் எதிர்ப்பார்ப்பு

[தொகு]

மலாயா அரசு, சிங்கப்பூர் அரசு, மலாயா அரசு நிர்வாகிகள், சீன வணிகர்கள்; இவர்களின் ஆதிக்கத்தை எதிர்க்கும் அளவிற்கு புரூணை சுல்தானகம் வலுவாக இருக்கும் என்று தொடக்கத்தில் எதிர்ப்பார்க்கப்பட்டது.[6] அத்துடன், 1941-இல் சரவாக்கின் கடைசி வெள்ளை ராஜா சார்லஸ் வைனர் புரூக் (Charles Vyner Brooke) என்பவரால் வாக்குறுதி அளிக்கப்பட்ட சரவாக் தேசிய விடுதலையை (பின்னர் கைவிடப்பட்டது), சரவாக் மக்கள் நீண்ட காலமாகப் பெரிதும் எதிர்பார்த்தனர்.

இவற்றைத் தவிர போர்னியோ மாநிலங்களுக்கும் மலாயா தீபகற்பத்திற்கும் இடையிலான பொருளாதார, அரசியல், வரலாற்றுக் கலாசார வேறுபாடுகளும் முதனமையாக இருந்தன. அதே வேளையில், மலாயா தீபகற்ப அரசியல் ஆதிக்கத்திற்குள் தங்களை ஈடுபடுத்த விரும்பாததன் அடிப்படையிலும் உள்ளூர் எதிர்ப்புகள் வலுவாக இருந்தன.

புரூணை மக்கள் கட்சி (Brunei People's Party) புரூணை பொதுத் தேர்தலில் களம் இறங்குவதற்கு முன்னர், வடக்கு கலிமந்தான் தேசிய இராணுவம் (North Kalimantan National Army) தன்னை காலனித்துவ எதிர்ப்பு விடுதலைக் கட்சியாக அறிவித்துக் கொண்டது. பின்னர் காலத்தில் இந்த வடக்கு கலிமந்தான் தேசிய இராணுவம்தான் புரூணை மக்கள் கட்சி என பெயரைப் பெற்றது.

வடக்கு கலிமந்தான் தேசிய இராணுவம்

[தொகு]

மலாயா சிங்கப்பூரைக் காட்டிலும் இந்தோனேசியா சிறந்த 'விடுதலை' உணர்வுகளைக் கொண்ட நாடாக போர்னியோ மக்கள் கருதினார்கள். அந்தக் கட்டத்தில், வடக்கு கலிமந்தான் தேசிய இராணுவத்தின் 34 வயதான தலைவர் ஏ. எம். அசகாரி (A.M. Azahari) இந்தோனேசியாவில் வசித்து வந்தார். மேலும் இந்தோனேசிய உளவுத்துறை அதிகாரிகளுடன் தொடர்பிலும் இருந்தார். இந்தோனேசியாவில் இரகசியப் போரில் பயிற்சி பெற்ற பல அதிகாரிகளை அவர் பணியில் அமர்த்தினார்.

1962-ஆம் ஆண்டின் பிற்பகுதியில், 4000 ஆட்கள், சில நவீன ஆயுதங்கள் மற்றும் சுமார் 1000 துப்பாக்கிகளை அவரால் திரட்ட முடிந்தது.[6][7]

கிளர்ச்சி

[தொகு]

டிசம்பர் 8-ஆம் தேதி அதிகாலை 2:00 மணிக்கு கிளர்ச்சி வெடித்தது. காவல் நிலையங்கள், சுல்தானின் அரண்மனை (இசுதானா தாருல் அனா) (Istana Darul Hana), முதலமைச்சரின் மாளிகை மற்றும் மின் நிலையம் ஆகியவற்றின் மீது கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியதாக அறிவிக்கப்பட்டது. மின்சாரம் துண்டிக்கப்பட்ட போதிலும் புரூணை நகரில் பெரும்பாலான தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டன.

சரவாக்கின் மிரி நகரம் அரசாங்கத்தின் பிடியில் இருந்தது. ஆனாலும் சரவாக் லிம்பாங் நகரம் கிளர்ச்சியாளர்களால் கைப்பற்றப்பட்டது. செரியாவில் நிலைமை மிகவும் தீவிரமானது. கிளர்ச்சியாளர்கள் காவல் நிலையத்தைக் கைப்பற்றி எண்ணெய் வயல்களிலும் ஆதிக்கம் செலுத்தினர்.[8] இருப்பினும் பல தாக்குதல்களை நடத்தியும் கிளர்ச்சியாளர்களால் வெற்றி பெற இயலவில்லை.

டிசம்பர் 17-இல், கிளர்ச்சி முடக்கப்பட்டது. சுமார் 40 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர்; மற்றும் 3,400 பேர் பிடிபட்டனர். எஞ்சியவர்கள் தப்பி ஓடி இந்தோனேசியாவை அடைந்ததாக அறியப்படுகிறது. கிளர்ச்சியாளர்களின் தலைவர் அசாகரி பிலிப்பீன்சில் அடைக்கலம் அடைந்தார். மற்றொரு தலைவரான யாசின் அபாண்டி இந்தோனேசியாவிற்குத் தப்பிச் சென்றார்.

முடிவு

[தொகு]

புரூணை சுல்தான், மலேசியா கூட்டமைப்பில் சேராததற்கு இந்தப் புருணை கிளர்ச்சியும் ஒரு முக்கியமான பங்கை வகிக்கிறது.[9]

காட்சியகம்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Jackson, ப. 122.
  2. Fowler, Will (2006). Britain's Secret War: The Indonesian Confrontation 1962–66. London: Osprey Publishing. pp. 11, 41. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-84603-048-2.
  3. Hara, Fujiol (December 2005). "The North Kalimantan Communist Party and the People's Republic of China". The Developing Economies XLIII (1): 489–513. doi:10.1111/j.1746-1049.2005.tb00956.x. 
  4. Francis Chan; Phyllis Wong (16 September 2011). "Saga of communist insurgency in Sarawak". The Borneo Post. http://www.theborneopost.com/2011/09/16/saga-of-communist-insurgency-in-sarawak/. 
  5. Cheah Boon Kheng pp. 132–52
  6. 6.0 6.1 Pocock, ப. 129.
  7. Pocock, ப. 129–130.
  8. Pocock, ப. 131.
  9. Leifer, Michael (1978). "Decolonisation and International Status: The Experience of Brunei". International Affairs 54 (2): 243. doi:10.2307/2615649. https://archive.org/details/sim_international-affairs_1978-04_54_2/page/243. 

நூல்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=புரூணை_கிளர்ச்சி&oldid=4076418" இலிருந்து மீள்விக்கப்பட்டது