உள்ளடக்கத்துக்குச் செல்

புகுபதிகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விக்கிப்பீடியாவில் புகுபதிகைப் பக்கம்

கணினியலில் புகுபதிகை (உள்நுழைதல், உட்புகுதல், Log in அல்லது Sign in) என்பது ஒரு பயனர் கணினி அமைப்பைத் தனது சொந்தப் பணிக்காகத் தனது சொந்த விவரங்களைக் கொடுத்து தன் பணிக்காக எடுத்துக் கொள்வதாகும். தனக்கு வேண்டிய தகவல்களைப் பெற்ற பின் (பார்த்த பின்/ அணுகிய பின்/ எடுத்த பின்/ பதிவிறக்கிய பின்/ பதிவேற்றிய பின்) அக்கணினி அமைப்பை விட்டு வெளியேற விடுபதிகை (வெளியேறல், Log out, Sign out) என்னும் செயல் உதவுகிறது. கணினி மேலும் நமக்குத் தேவையில்லாத போது நாம் விடுபதிகை செய்தால் நமது அமர்விலிருந்து (Session) கணினி விடுபடும்.[1][2][3]

புகுபதிகை செய்யும் வழிமுறை

[தொகு]

புகுபதிகை செய்ய நினைக்கும் இணைய தளத்திற்குச் சென்று அங்கு மேலே இருக்கும் Sign In அல்லது Log in என்ற இணைப்பையோ 'புகுபதிகை' என்ற இணைப்பையோ சொடுக்குவதன் மூலம் புகுபதிகை செய்யும் திரையினை அடையலாம். அங்கு பயனர் பெயர், கடவுச் சொல் முதலிய தகவல்கள் கேட்கப்பட்டிருக்கும். தேவையான தகவல்களைக் கொடுத்தபின் 'புகுபதிக' அல்லது 'உள் நுழைக' என்ப போன்ற பொத்தான்களைச் சொடுக்கினால் அவ்விணைய தளம் உங்களது அமர்வுக்கு வரும். அதன் பின் நீங்கள் உங்கள் கணக்கில் இருந்து கொண்டு தேவையான பணிகளைச் செய்யலாம். எடுத்துக்காட்டாக கூகுளில் புகுபதிகை செய்தால் உங்களது மின்னஞ்சல்களைப் படிக்கலாம், உங்களது தேடுதல் வரலாறைப் பார்க்கலாம், வலைப்பூவில் பதிவிடலாம். ஆனால் கணினியில் புகுபதிகை செய்வதன் மூலம் அக்கணினி இணைந்துள்ள வழங்கியிடமிருந்துத் தகவல் பெறலாம். பயன்பாட்டு மென்பொருட்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். உங்களது பணிகள் முடிந்த பின் விடுபதிகை என்பதையோ Log out அல்லது Sign out என்பதையோ சொடுக்கி உங்கள் அமர்விலிருந்து வெளியேறி பொது அமர்விற்கு வரலாம்.

பொதுவாக நேரும் தவறுகள்

[தொகு]

கணினியிலோ இணைய தளத்திலோ புகுபதிகை செய்யும்போது பொதுவாக நேரும் பிழை தட்டச்சு செய்வதால் ஏற்படும் 'தட்டச்சுப் பிழைகள்' (Typographical Errors) ஆகும். ஒரு சில வேளைகளில் வேகமாகத் தட்டச்சு செய்வதனால் இப்பிழை ஏற்படும். சில நேரங்களில் 'நெடுங்கணக்கு விசை' இயக்கத்தில் இருப்பின் இப்பிழை ஏற்படும். அப்போது சில இணைய தளங்கள் 'Caps lock is on!' என்ற எச்சரிக்கைச் செய்தியைக் காட்டும். மேலே எடுத்துக்காட்டில் இருந்த கூகுளில் இப்பிழைச் செய்தி காட்டப் படுவதில்லை. இவற்றைக் கவனமாக இருந்தால் தவிர்க்கலாம்.

சொற்பிறப்பியல்

[தொகு]

புகுபதிகை எனுஞ்சொல்லானது log in என்ற ஆங்கிலச் சொல்லின் நேரிய மொழியாக்கம் ஆகும். log எனும் சொல் 'பதிவு' எனும் பொருளைத் தரும். அதனை செயலோடு சேர்த்துக் கூறுகையில் 'பதிகை' என்றொரு சொல் தோன்றிற்று. in என்பதற்குத் தமிழில் 'புகு' என்றொரு பதமும் இருப்பது நினைவிருக்கலாம். இவ்வாறு இக்கலைச் சொல் பிறந்தது.

இதையும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Detail and definition of login and logging in". The Linux Information Project. Archived from the original on 25 December 2019. பார்க்கப்பட்ட நாள் 1 January 2014.
  2. "Definition of login". Oxford Dictionaries. Archived from the original on 7 February 2014. பார்க்கப்பட்ட நாள் 8 February 2014..
  3. "Apple Style Guide" (PDF). Apple. 30 April 2013. p. 96 & 97. Archived from the original (PDF) on 17 February 2015. பார்க்கப்பட்ட நாள் 17 May 2015.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=புகுபதிகை&oldid=4100898" இலிருந்து மீள்விக்கப்பட்டது