பி. விருத்தாசலம்
பி. விருத்தாசலம் என்பவர் ஒரு தமிழ்ப் பேராசிரியர். (மே 22, 1940- நவம்பர் 17, 2010) தஞ்சை, மேலத்திருப்பூந்துருத்தியில் பிறந்தார். தமிழ் மொழிக்காகப் பாடுபட்டார். தஞ்சை ’ந. மு வே. நாட்டார் திருவருள் கல்லூரி’யைத் தோற்றுவித்துத் தனித்தமிழ்ப் புலவர் கல்வியை 19 ஆண்டுகளாகக் கற்பித்து வந்தார். தமிழ்வழிக் கல்வி இயக்கத்தின் தலைவராக இருந்து பல மாநாடுகளை நடத்தினார். தமிழியக்கம் என்னும் அமைப்பின் தலைவராக இருந்து மொழித் தொண்டு ஆற்றினார். "எல்லார்க்கும் கல்வி கொடு; எல்லாக் கல்வியும் தமிழில் கொடு" என்று முழங்கினார். தமிழீழத் தோழர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்த சில முன்னெடுப்பு முயற்சிகளை மேற்கொண்டார்.
பிறப்பு, கல்வி, பணி
[தொகு]பொ. பிச்சையா நாட்டார், தென்காவேரி இணையருக்கு மகனாகப் பிறந்தார். மிக எளிய விவசாயக் குடும்பம். பூண்டிப் புஷ்பம் கல்லூரியில் புகுமுக வகுப்பு, பின்னர் திருவையாற்று அரசர் கல்லூரியில் புலவர் பட்டம், தமிழாசிரியர் பயிற்சி, முதுகலையிலும் பட்டம் என தகுதிகளைப் பெற்று வளர்ந்தார்.
சென்னையில் மேனிலைப் பள்ளிகளில் தமிழாசிரியராகப் பணி புரிந்தார். கரந்தைத் தமிழ்ச்சங்கப் புலவர் கல்லூரியில் பேராசிரியராகவும் துணை முதல்வராகவும், பொறுப்பு முதல்வராகவும் பணியாற்றினார்.
இயக்கத் தொடர்புகள்
[தொகு]- இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டார்.
- திராவிட முன்னேற்றக் கழக இலக்கிய அணித் தலைவராக இருந்து பல இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்தி தி.மு.க.தலைவர் களின் அன்பையும் நம்பிக்கையையும் பெற்றார்.
- 70 நாடுகளை உள்ளடக்கிய உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கத்தலைவராகப் பொறுப்பேற்றார்.
- பணி கிடைக்காமல் வாடிய தமிழாசிரியர்களுக்காக இயக்கம் நடத்தி அவர்களுக்கு உதவினார்..
- 1980 ஆம் ஆண்டில் ந. மு. வே நாட்டார் நூற்றாண்டு விழாவை முன்னின்று நடத்தினார்.
- 2007 ஆம் ஆண்டில் சில தமிழ் அமைப்புகளை இணைத்து பேரணி நடத்தி பன்னிரு திருமுறைகள் பாதுகாப்பு மாநாட்டை கரந்தைத் தமிழ்ச் சங்க வளாகத்தில் நடத்தினார்.
- தம் 28 ஆண்டு ஓய்வூதிய நிதியை க்கொண்டு தஞ்சை வெண்ணாற்றங்கரையில் 7.5 ஏக்கர்நிலம் வாங்கிக் கட்டடம் கட்டி அங்கு தனித்தமிழ் புலவர் படிப்பும் தமிழாசிரியர் பயிற்சி வகுப்பும் நடத்தினார்.
நூல்கள்
[தொகு]- கண்ணகி சிலம்பீந்த காரணம் (1986)
- என்று தணியும் எங்கள் அடிமையின் மோகம் (1989)
- மரூஉ மொழிகளும் வழூஉ மொழிகளும் (1989)
- சிந்தனைச்சுடர் (1993)
- தமிழ்க்குன்றம் (2007)
- சான்றோர் சிந்தனைகள் (2008)
- காவிரிக்கரை வேங்கடம் (2008)
- தமிழவேள் உமாமகேசுவரனாரும் நாவலர் நாட்டரைய்யாவும் (2008) *கனவும் கற்பனையும் (2008)
பதிப்புப் பணி
[தொகு]- தமிழ்ப்பொழில் ஆசிரியர் குழுவில் உறுப்பினர்
- கரந்தைத் தமிழ்ச்சங்க மணிவிழா மலர்
- தமிழவேள் நூற்றாண்டு விழா மலர்
- கல்லூரி உயராய்வு மைய ஆய்வுக் கட்டுரைகள் தொகுதி (மருதம்)
- ந. மு. வே நாட்டாரின் கட்டுரைகளை நூல்களாகப் பதிப்பித்தார்.
- ந. மு. வே நாட்டார் எழுத்துக்கள் அனைத்தையும் தமிழ்மண் பதிப்பகம் சார்பில் 24 நூல்களில் வெளியிட பதிப்புக்குழுத் தலைவராக இருந்து உதவினார்.
இலக்கியப் பொழிவுகள்
[தொகு]- திருச்சி வானொலியில் 1982 முதல் 2010 வரை பலமுறை பல்வேறு பொருண்மைகளில் பேசியுள்ளார்.
- மதுரையில் ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டிலும் கோவையில் உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டிலும் ஆய்வுரைகள் நிகழ்த்தினார்.
- தமிழகத்தின் பல இடங்களில் நடந்த தமிழ்வழிக் கல்வி மாநாடுகளில் உரையாற்றினார்.
சிறப்புகள், விருதுகள்
[தொகு]- தமிழக அரசின் உலகத் தமிழ்ச் செம்மொழித் தொல்காப்பியர் பேரவையில் இந்தியத் தமிழ்ச் சங்கங்களின் சார்பில் அமர்த்தம்.
- தலைவர் கலைஞர் அறக்கட்டளை நாட்டார் கல்லூரியில் நிறுவப்பட்டது. இவ்வறக்கட்டளையின் தலைவர்.
- நாமக்கல் தமிழகப் பெருவிழாவில் 'தமிழ்ச் சான்றோர்' விருது. (2001) *'தமிழவேள்' உமாமகேசுவரனார் விருது (2002)
- 'குறள் நெறிக் காவலர்' திருக்குறள் கழகப் பொன்விழா, புதுகை (2004). *தமிழ்ப் பேரவைச்செம்மல்' மதுரை காமராசர் பல்கலைக் கழகம் (2009)
- மாமன்னன் இராசராசன் விருது, இராசராசசோழன் சதய விழா (2009)
- 'உலகப்பெருந்தமிழர்' ,உலகத்தமிழர் பேரமைப்பு (2009)
மேற்கோள்கள்
[தொகு]- நூல்: உலகப் பெருந்தமிழர் பி.விருத்தாசலனார் (தொகுப்பு:முனைவர் மு.இளமுருகன்)
- தமிழறிஞர் பி.விருத்தாசலம் காலமானார்