பிளாட்டீயா
பிளாட்டீயா (Plataea அல்லது Plataia, பண்டைய பண்டைக் கிரேக்கம்: Πλάταια ), மேலும் Plataeae அல்லது Plataiai ( பண்டைக் கிரேக்கம்: Πλαταιαί ), என்பது கிரேக்கத்தில் அமைந்துள்ள ஒரு பண்டைய நகரமாகும். கிரேக்கத்தில் இது தீப்சின் தெற்கே தென்கிழக்கு போயோட்டியாவில் அமைந்துள்ளது.[1] இது கிமு 479 இல் நடத்த பிளாட்டீயா போரின் களமாகும். இப்போரில் கிரேக்க நகர அரசுகளின் கூட்டணி பாரசீகர்களை தோற்கடித்தது.
கிமு 427 இல் தீப்ஸ் மற்றும் எசுபார்த்தாவால் பெலோபொன்னேசியப் போரில் பிளாட்டீயா அழிக்கப்பட்டது. மீண்டும் 386 இல் கட்டப்பட்டது. நவீன கிரேக்க நகரமான பிளாட்டீஸ் இதன் இடிபாடுகளுக்கு அருகில் கட்டப்பட்டுள்ளது.
ஏதென்சுடனான கூட்டணி
[தொகு]கிரேக்க நகர அரசான தீப்சின் மேலாதிக்கத்தின் கீழ் வருவதைத் தவிர்ப்பதற்காக, பிளாட்டியா "எசுபார்த்தன் கைகளில் தன்னை ஒப்படைத்துக் கொள்ள" முன்வந்ததாக எரோடோட்டசு எழுதியுள்ளார். இருப்பினும், எசுபார்த்தன்கள் இந்த வாய்ப்பை மறுத்து, போயோட்டியர்களுக்கும் ஏதென்சுக்கும் இடையில் குழப்பத்தை ஏற்படுத்த விரும்பினர். அதனால் பிளாட்டியர்கள் தங்களுடன் இணைவதற்கு பதிலாக ஏதென்சுடன் இணைந்துக் கொள்ளுமாறு பரிந்துரைத்தனர். இந்த ஆலோசனை பிளாட்டியர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதற்காக ஏதென்சுக்கு ஒரு தூதுக்குழு அனுப்பப்பட்டது. அங்கு ஏதெனியர்கள் அந்த கோரிக்கையை ஒப்புக்கொண்டனர். ஏதென்சுடனான கூட்டணி அமைந்ததை அறிந்த தீப்ஸ்கள் பிளாட்டியாவுக்கு எதிராக ஒரு படையை அனுப்பினர். ஆனால் இதற்கு தீர்வுகாண ஒரு ஏதெனியன் சந்தித்து கொரிந்து சர்ச்சைக்கு மத்தியஸ்தம் செய்ய முயன்றார். மேலும் தீப்ஸ் மற்றும் பிளாட்டியா இடையே எல்லைச் சிக்கல் குறித்து ஒரு உடன்படிக்கை ஏற்பட்டது. கூடுதலாக, தீப்ஸ் போயோசியன் அரசின் ஒரு பகுதியாக இருக்க விரும்பாத நகரங்களின் விசயத்தில் தலையிடுவதில்லை என்று உறுதியளித்தது. இருப்பினும் ஏதெனியர்கள் தங்கள் போர்ப் பயணத்தைத் தொடங்கிய பிறகு, அவர்கள் போயோட்டியர்களால் தாக்கப்பட்டனர். அடுத்தடுத்த போரில், ஏதெனியர்கள் வெற்றிபெற்று அசோபஸ் ஆற்றை தீப்ஸ் மற்றும் பிளாட்டியா இடையேயான எல்லையாக வரையறுத்தனர்.
ஏதென்சை தங்கள் கூட்டாளியாகக் கொண்டதால், பிளாட்டியர்கள் தங்கள் அண்டை நாடுகளுக்கு அடிபணியாமல், தங்கள் சுதந்திரத்தை பராமரிக்கவும் முடிந்தது. இந்த நன்றிக் கடனுக்காக மராத்தான் போரில், ஏதெனியர்களின் பக்கத்தில் நின்று பிளாட்டியா மட்டும் போராடியது.
பிளாட்டியா சமர்
[தொகு]கிமு 479 இல், கிரேக்கத்தின் மீதான இரண்டாவது பாரசீக படையெடுப்பை முறியடித்த இறுதிப் போர்க்களம் பிளாட்டியா ஆகும். எரோடோட்டசின் கூற்றுப்படி, எசுபார்த்தன் தளபதி பௌசானியாஸ் மார்டோனியஸின் பாரசீகப் படைகளுக்கு எதிராக கிரேக்க நேசநாடுகளின் படைகளுக்கு தலைமை தாங்கினார். எதிரிகள் அதிக எண்ணிக்கையில் இருந்தபோதிலும், கிரேக்கர்கள் மார்டோனியசைக் கொன்றனர். தரவுகள் வேறுபடுகின்றன, என்றாலும் போரில் கணிசமான எண்ணிக்கையிலான பாரசீகர்கள் இறந்தனர், மேலும் பலர் பின்வாங்கி ஓடினர் என்று பொதுவான கருத்து ஒற்றுமை உள்ளது. பிளாட்டியாவில் கிரேக்க வெற்றியின் நினைவாக தெல்பி நகரில் பாம்புத் தூண் அமைக்கபட்டது. தற்போது அது இசுதான்புல்லில் உள்ளது.
பெலோபொன்னேசியன் போரும், பிளாட்டியாவும்
[தொகு]பெலோபொன்னேசியப் போரின் முதல் நடவடிக்கையாக முந்நூறு தீபன்கள் கொண்ட ஒரு படை இரவு நேரத்தில் பிளாட்டியா நகரத்தைக் கைப்பற்றும் முயற்சியைத் தொடங்கியது என்று துசிடிடீஸ் விவரிக்கிறார். அந்த முந்நூறு தீபன்களும் பிளாட்டியாவுக்குள் இரகசியமாக நுழைந்து நகரித்தின் மைய்யத்தில் உள்ள சதுக்கத்தை ஆக்கிரமித்துக் கொண்டனர். இந்த சிறுபடையை அடுத்து ஒரு பெரும்படை தீப்சிலிருந்து வருவதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதலில் பிளாட்டியர்கள் நகரத்தில் தீபன்கள் திடீர் ஆக்கிரமிப்பு செய்ததால் மிகவும் அதிர்ச்சியடைந்தனர். இவர்கள் இணக்கத்திற்கு வரத் தயாராக இருந்தனர். இருப்பினும், இவர்கள் எண்ணிக்கையில் தீபன்களை விட அதிகமாக இருப்பதை உணர்ந்தபோது விடியற்காலையில் திரண்டு, தாக்கினர். ஆக்கிரமித்திருந்த முந்நூறு பேரில் கொல்லப்படவர்கள் போக நூற்றென்பதுபேர் சிறைபடுத்தப்பட்டனர். பின்னர் அந்த நூற்றென்பதுபேரும் பிளாட்டியர்களால் கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து, தீபன்கள் மறுபடியும் தாக்கினால் என்ன செய்வது என்று ஏதெனியர்கள் தீப்சில் ஒரு துணைப்படையை நிறுவினர். பின்னர் போர் செய்ய தகுதியில்லாத பிளாட்டியன் குடிமக்களை ஏதென்சுக்கு அனுப்பிவைத்தனர். போர் ஏற்பட்டால் தேவையில்லாத உரிரிழப்பை தடுக்க இந்த ஏற்பாடு. கிமு 429 இல், எசுபார்த்தன் அரசர் இரண்டாம் ஆர்க்கிடாமஸ் தலைமையிலான படைகள் பிளாட்டியா நகரத்தை முற்றுகை இட்டன. இந்த முற்றுகை கிமு 427 வரை நீடித்தது. ஆர்க்கிடாமஸ் பிளாட்டியாவைசு சுற்றி இரட்டைச் சுவர்களை எழுப்பி எந்தவித போக்குவரத்தும் இல்லாமல் செய்துவிட்டார். உணவுப் பொருட்கள் தீர்ந்த நிலையில் இறுதியில் பிளாட்டியர்கள் சரணடைந்தனர். இதனையடுத்து எசுபார்த்தன் அதிகாரிகள் பிளாட்டியன் மற்றும் ஏதெனியன் கைதிகளைக் கொன்று, தீப்ஸ் நகரத்தை இடித்து தரைமட்டமாக்கினர்.
குறிப்புகள்
[தொகு]- ↑ Mish, Frederick C., Editor in Chief. “Plataea.” Webster’s Ninth New Collegiate Dictionary. 9th ed. Springfield, MA: Merriam-Webster Inc., 1985. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-87779-508-8, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-87779-509-6 (indexed), and பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-87779-510-X (deluxe).
வெளி இணைப்புகள்
[தொகு]- "Plataea". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 21. (1911).
- The battle of Plataea
- Plataea and the Fifth-Century Boeotian Confederacy by I. A. F. Bruce