பிலாத்து கல்வெட்டு
பொருள் | விவரிப்பு |
---|---|
மொழி: | இலத்தீன் |
ஊடகம்: | சுண்ணாம்புக் கல் |
அளவு: | 82 செ.மீ உயரம், 65 செ.மீ. அகலம் |
நீளம்: | 4 வரிகளடங்கிய எழுத்து |
வகை: | கட்டடம் அர்ப்பணிப்பு |
அர்ப்பணித்தவர்: | பொந்தியு பிலாத்து |
பதவிப் பெயர்: | யூதேயாவின் ஆளுநர் |
தோராயமான காலம்: | கி.பி. 26-37 |
கண்டெடுத்த இடம்: | செசரியா, இசுரயேல் |
கண்டெடுத்த ஆண்டு: | 1961 |
இன்றைய இருப்பிடம்: | இசுரயேல் காட்சியகம் |
பொருள்பட்டியலில் எண்: | AE 1963 no. 104 |
கண்டுபிடித்தவர்: | அந்தோனியோ ஃப்ரொவா |
முக்கியத்துவம்: | பொந்தியு பிலாத்து வரலாற்றில் வாழ்ந்த மனிதர் என்று உறுதிப்படுத்துகிறது. மேலும், கிளாவுடியசு பேரரசனின் ஆட்சிக்கு முற்பட்ட காலத்தில் யூதேயாவை ஆட்சி செய்தவர்கள் எந்தப் பதவிப் பெயர் கொண்டிருந்தார்கள் என்பதைத் தெரியப்படுத்துகிறது. |
பிலாத்து கல்வெட்டு (Pilate Stone) என்பது கி.பி. 26-36 ஆண்டுக் காலத்தில் உரோமைப் பேரரசின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த யூதேயா பிரதேசத்தின் ஆளுநராக இருந்த பொந்தியு பிலாத்துவின் ஆட்சியின்போது அவருடைய பெயர் செதுக்கப்பட்டு உருவாக்கப்பட்டதும், 82 செ.மீ. உயரமும் 65 செ.மீ. அகலமும் கொண்டதுமாய் அமைந்த ஒரு சுண்ணாம்புக் கல் படிமம் ஆகும்.
இக்கல்வெட்டு சிறிது சிதைந்திருந்தாலும் அதில் பொறிக்கப்பட்ட வாசகம் படிக்கக் கூடிய நிலையில் உள்ளது. இது இன்றைய இசுரயேலில் உள்ள அகழ்விடமான “கடலோர செசரியா” (Caesarea Maritima) என்னும் இடத்தில் 1961ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
இக்கண்டுபிடிப்பின் முக்கியத்துவம்
[தொகு]இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட சுண்ணாம்புக் கல்லில் பதித்த கல்வெட்டு தனிப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனென்றால், “பொந்தியு பிலாத்து” என்னும் பெயரைத் தாங்கிய, முதல் நூற்றாண்டு உரோமைக் கல்வெட்டாகிய இதுவே இன்றுவரை கிடைத்துள்ள அகழ்வாய்வு ஆதாரங்களில் மிகப் பெரும்பான்மையோரால் முதன்மையான அசல் மூலம் என்று ஏற்கப்பட்டதாகும். இக்கல்வெட்டு பொந்தியு பிலாத்துவின் ஆட்சிக் காலத்தில் பொறிக்கப்பட்டது. மேலும் பிலாத்து எந்த பதவியை வகித்தார் என்றும் இக்கல்வெட்டு கூறுகிறது.[2][3]
பொந்தியு பிலாத்து என்றொருவர் வரலாற்றில் வாழ்ந்தவரே என்று நிரூபிப்பதற்கு இக்கல்வெட்டு மிக முக்கியமான ஆதாரமாக உள்ளது. பிலாத்து தொடர்பாக இதுவரை கிடைத்துள்ள ஆதாரங்களுள் இதுவே மிகப் பழமையானது; இதுவே பிலாத்துவின் சமகாலத்தைச் சார்ந்தது. இவ்வகை ஆதாரமாக இது மட்டுமே உள்ளது. இந்தக் கல்வெட்டு ஆதாரத்தைத் தவிர, பிலாத்து என்று ஒரு மனிதர் வரலாற்றில் வாழ்ந்தவரே என்று அறிய புதிய ஏற்பாட்டு நற்செய்தி நூல்கள் மட்டுமே ஆதாரமாக உள்ளன. பிற்காலத்தில் எழுதப்பட்ட உரோமை வரலாறு பற்றிய நூல்களின் பிரதிகளில் சிலவற்றில் பிலாத்து பற்றிய சிறு குறிப்புகள் உள்ளன. ஆனால் அவை பிலாத்து வாழ்ந்த காலத்தில் எழுதப்பட்டவை அல்ல.
இயேசுவின் வரலாற்றைப் பொறுத்த மட்டில் இந்தக் கல்வெட்டு ஒரு வரலாற்று ஆதாரமாக உள்ளது. இயேசுவை விசாரித்துத் தீர்ப்பிட்ட உரோமை ஆளுநர் பொந்தியு பிலாத்து என்பவரே. அவரைப் பற்றிய நற்செய்திக் குறிப்புகள் மத்தேயு 27, மாற்கு 15, லூக்கா 23, யோவான் 18 ஆகிய பகுதிகளில் உள்ளன. ஆனால் நற்செய்தி ஆதாரங்களுக்கு வெளியே, பொந்தியு பிலாத்துவின் பெயரைக் கொண்டுள்ள மிகப்பழமையான, சமகாலத்து ஆதாரம் இக்கல்வெட்டு மட்டுமே. இவ்வாறு, இக்கல்வெட்டிலிருந்து பிலாத்து என்பவர் வரலாற்று மனிதர் என்று அறியப்படும் தகவல் தவிர, அவர் தீர்ப்பிட்ட இயேசுவின் வரலாற்று மனிதரே என்று நற்செய்தி தரும் ஆதாரமும் ஒன்றையொன்று ஒத்துப் போவது தெரிகிறது.
பிலாத்துவின் வரலாற்றுப் பின்னணி
[தொகு]கி.பி. 6ஆம் ஆண்டிலிருந்து பொந்தியு பிலாத்து கடலோர செசரியாவில் தனது அரசு மற்றும் இராணுவத் தலைமை இடத்தை நிறுவியிருக்க வேண்டும் என்று தெரிகிறது.[4]) அந்த நகரிலிருந்து தேவைக்கு ஏற்ப பிலாத்து எருசலேமுக்குச் சென்றிருக்க வேண்டும் என்றும் தெரிய வருகிறது. கடலோர செசரியாவில் தான் பிலாத்துவின் பெயர் தாங்கிய சுண்ணாம்புக் கல்லில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. [5]
பிலாத்து கல்வெட்டின் இன்றைய இருப்பிடம்
[தொகு]பிலாத்து கல்வெட்டின் மூலப் படிவம் எருசலேம் நகரில் உள்ள இசுரயேல் காட்சியகம் என்னும் காட்சிக் கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது.[6][7]. இந்தக் கல்வெட்டின் மூலப் படிவத்திலிருந்து பல பிரதிகளும் பொறிக்கப்பட்டுள்ளன. அவை இத்தாலியின் மிலான் நகரம், கடலோர செசரியா அகழ்வாய்வுத் தளம் ஆகிய இடங்களிலும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இக்கல்வெட்டு பற்றிய விளக்கம்
[தொகு]”பிலாத்து கல்வெட்டு” ஓரளவு சேதமடைந்த நிலையில் இருந்தாலும் அதில் உள்ள வாசகத்தைப் படிக்க முடிகிறது. அதில் உரோமைப் பேரரசனான திபேரியு சீசர் அகுஸ்துஸ் என்பவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கட்டடத்தின் பெயர் “Tiberieum” என்று உள்ளது. “தெய்வமான அகுஸ்துஸ்” என்றும் உள்ளது.
பண்டைக்காலத்தில் புகழ்பெற்றிருந்த கடலோர செசரியா நகரில் இக்கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டதால் இது அசல் என்று கருதப்படுகிறது. செசரியா நகரம் யூதேயா பிரதேசத்தின் தலைநகராக இருந்தது. உரோமைப் பேரரசின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. அப்போது உரோமைப் பேரரசின் பெயரால் யூதேயாவை ஆட்சி செய்தவர் தான் பொந்தியு பிலாத்து என்னும் ஆளுநர்.[8]
சிறிது சேதமுற்ற நிலையில் உள்ள “பிலாத்து கல்வெட்டின்” வாசகம் கீழ் வருமாறு. ஊகத்துக்கு உட்பட்ட எழுத்துகள் அடைப்புக் குறிகளுக்குள் உள்ளன:[3]
- [DIS AUGUSTI]S TIBERIÉUM
- [...PO]NTIUS PILATUS
- [...PRAEF]ECTUS IUDA[EA]E
- [...FECIT D]E[DICAVIT]
மேலுள்ள கல்வெட்டு வாசகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு இது:
- To the Divine Augusti [this] Tiberieum
- ...Pontius Pilate
- ...prefect of Judea
- ...has dedicated [this]
இதைத் தமிழ்ப்படுத்தினால் கீழ்வருமாறு அமையும்:
- தெய்வீக அகுஸ்து வீட்டினருக்கு (இந்த) திபேரிய நினைவுக் கட்டடத்தை
- ...பொந்தியு பிலாத்து
- ...யூதேயாவின் ஆளுநர்
- ...உருவாக்கி அர்ப்பணித்தார்
கல்வெட்டைக் கண்டெடுத்த வரலாறு
[தொகு]இக்கல்வெட்டை 1961 சூன் மாதம் கண்டெடுத்தவர் இத்தாலிய அகழ்வாளரான அந்தோனியோ ஃப்ரோவா என்பவரும் அவருடைய குழுவும் ஆகும். அவர்கள், கி.மு. 30ஆம் ஆண்டளவில் பெரிய ஏரோது அரசன் கட்டிய உரோமைப் பாணியிலான விளையாட்டு அரங்கத்தை அகழ்ந்து ஆய்ந்து கொண்டிருந்தனர். பிலாத்து பற்றிய வாசகத்தைக் கொண்ட அச்சுண்ணாம்புக் கல் ஊடகம் அந்த விளையாட்டு அரங்கத்திற்கு இட்டுச்சென்ற படிக்கட்டு வரிசையில் ஒரு படியாக அமைக்கப்பட்டிருந்தது. எனவே அது ஒரு பயன்பாட்டிலிருந்து மற்றொரு பயன்பாட்டுக்கென அமைந்தது என்று தெரிந்தது. ஆனால் அது அகழ்விடத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டது. அந்த விளையாட்டு அரங்கம் கி.பி. நான்காம் நூற்றாண்டைச் சார்ந்தது.[9]அந்த விளையாட்டு அரங்கத்தின் அமைவிடம் தான் இன்றைய கடலோர செசரியா நகரம்.[10]
ஆதாரங்கள்
[தொகு]- ↑ The Pilate Inscription
- ↑ Archaeology and the Galilean Jesus: a re-examination of the evidence by Jonathan L. Reed 2002 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1563383942 page 18
- ↑ 3.0 3.1 Studying the historical Jesus: evaluations of the state of current research by Bruce Chilton, Craig A. Evans 1998 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9004111425 page 465
- ↑ A History of the Jewish People, H.H. Ben-Sasson editor, 1976, page 247: "When Judea was converted into a Roman province [in 6 CE, page 246], the Romans moved the governmental residence and military headquarters from Jerusalem to Caesarea.
- ↑ Historical Dictionary of Jesus by Daniel J. Harrington 2010 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0810876671 page 32
- ↑ Jerry Vardaman, A New Inscription Which Mentions Pilate as 'Prefect' , Journal of Biblical Literature Vol. 81, 1962. pp 70–71.
- ↑ Craig A. Evans, Jesus and the ossuaries, Volume 44, Baylor University Press, 2003. pp 45–47
- ↑ A History of the Jewish People, H.H. Ben-Sasson editor, 1976, page 247: "When Judea was converted into a Roman province [in 6 CE, page 246], Jerusalem ceased to be the administrative capital of the country. The Romans moved the governmental residence and military headquarters to Caesarea. The centre of government was thus removed from Jerusalem, and the administration became increasingly based on inhabitants of the Hellenistic cities (Sebaste, Caesarea and others)."
- ↑ A.N. Sherwin-White, review of "A. Frova, L'iscrizione di Ponzio Pilato a Cesarea" in The Journal of Roman Studies, 54 (1964), p.258.
- ↑ R. Russell, Fallen Empires, BibleHistory, 2010. pp 1–2