பால் குழாய் அடைப்பு
பால் குழாய் அடைப்பு (Blocked milk duct) என்பது குழந்தைகளுக்குப் பாலூட்டும் தாய்மார்களின் மார்பகங்களில் உண்டாகும் ஒருவகை நோயாகும். பால் குழல் அடைப்பு, பால் அடைப்பு அல்லது பால் கட்டுதல் என்ற பெயர்களாலும் இதை அழைக்கலாம். குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கும் நோக்கத்திற்காக முலைக்காம்புக்குப் பால் கொண்டு செல்லும் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட குழாய்களில் இத்தகைய அடைப்பு ஏற்படுவதுண்டு. மார்பகங்களில் மென்மையான வலி, மார்பகத்தில் பால் கட்டியாதல், கட்டியின் மேல் தோல் சிவந்து இருத்தல் போன்றவை இந்த நோயின் சில அறிகுறிகளாகும். தொடர்ச்சியாக சில தினங்களுக்குக் குழந்தைக்குப் பால் கொடுக்காமல் இருத்தல், தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்ற ஆர்வமின்மை, இறுக்கமான உள்ளாடைகள், மார்பக புற அழற்சி போன்ற காரணங்களால் பால் வெளியேற்றப்படாமல் மார்பின் உள்ளேயே தேங்குவதால் இப்பிரச்சினை உண்டாகிறது. எந்தக் காரணத்துக்காகவும் பால் சுரப்பை நிறுத்திவிடாமல் பால் புகட்டுவதை மேம்படுத்துவதன் மூலமாகவும், அடிப்படைப் பிரச்சினைகளைச் சரிசெய்வதன் மூலமாகவும் பால் குழாய் அடைப்பு சிக்கலை நிர்வகிக்க முடியும்.[1]
காரணங்கள்
[தொகு]குழந்தைப் பிறந்து முதல் சில நாள்களுக்கு, தாய்மார்களுக்குப் பால் குழாய் அடைப்பு பாதிப்புகள் ஏற்படுவது இயல்புதான் என்றாலும் இதற்கான காரணங்களைப் பட்டியலிடலாம்:[2][3]
- முலைக்காம்பில் குழந்தை பாலை உறிஞ்சி குடிக்காமலிருந்தால் பால் கட்டலாம்.
- பாலூட்டும் தாய் இறுக்கமான மேலாடை மற்றும் உள்ளாடைகளை அணிவதும் ஒரு காரணமாகும். இறுக்கமான ஆடைகளை அணிவது மார்பகங்களைக் கட்டுப்படுத்தி, அவற்றின் மீது கூடுதலாக அழுத்தம் கொடுப்பதால் பால் குழாய்கள் அடைப்பிற்கு வழிவகுக்கும்.
- தொடர்ச்சியாக சில தினங்களுக்குக் குழந்தைக்குப் பால் கொடுக்காமலிருந்தாலும் பால் கட்டிப்போகலாம்.
- பால் புகட்டும் போது குழந்தையைச் சரியான நிலையில் படுக்கவைத்துப் புகட்டாவிட்டால் குழந்தை பால் குடிப்பதை நிறுத்தி விடக்கூடும். இவ்வாறு பாதி உறிஞ்சப்படாத பாலும் தேங்கிநின்று கட்டுவதற்கு வாய்ப்பு உண்டு.
- தாயின் முலைக்காம்பில் உள்ள குழாய்களில் அடைப்புகள் இருந்தால் பால் கட்டிவிட வாய்ப்பாகும்
- தாயின் மார்பில் மிகுதியாகப் பால் உற்பத்தி இருக்கும்போதும் இந்நிலை தோன்றும்.
- சோர்வு, அதிக உடற்பயிற்சி, நீரிழிவு நோய், அதிக மன அழுத்தம் போன்ற காரணிகளும் இதற்கான காரணங்களில் அடங்கும்
அறிகுறிகள்
[தொகு]பின் வரும் அறிகுறிகள் தோன்றினால் அது பால் குழாய் அடைப்பு நோயாக இருக்கலாம்.[2][4]
- மிதமான காய்ச்சல் மற்றும் மார்பக தொற்று
- மார்பகத்தின் ஒரு குறிப்பிட்ட பக்கத்தில் வலி
- மார்பகத்தில் வீக்கம் அல்லது மென்மையான கட்டி
- தேவையான அளவுக்குப் பால் வராமலிருப்பது
- முலைக்காம்பில் ஏற்படும் சிறிய வெள்ளை கொப்புளம்.
- மார்பகம் சிவந்து காணப்படுவது.

சிகிச்சைமுறைகள்
[தொகு]பாதிக்கப்பட்ட மார்பகத்திலிருந்து குழந்தைக்கு அடிக்கடி தாய்ப்பாலூட்டுதல் அல்லது மார்பகத்தில் தேங்கியிருக்கும் பாலை பீய்ச்சி வெளியேற்றுதல் போன்றவை பால் குழாய் அடைப்புக்குப் பயனுள்ள சிகிச்சைகளாகும். [5]
- பால் கட்டாமல் பார்த்துக் கொள்வது மிக முக்கியமான ஒரு முன்னெச்சரிக்கை செயலாகும்.
- பாதிக்கப்பட்ட மார்பகத்தின் மேல் மென்மையாக வருடியும்[6] கட்டியின் மீது மென்மையாக அழுத்தியும்[1] கட்டிப்போன பாலை முலைக்காம்பின் வழியாக வெளியேற்றி பால் அடைப்பைச் சரிசெய்யலாம்.
- குழந்தையைச் சரியான நிலையில் அமர்த்திப் பாலூட்டுதல்[6]
- மார்பகங்களுக்கு அழுத்தம் தராத தளர்வான ஆடைகளை அணிவதும் கூட இதற்கான சிகிச்சை முறையேயாகும்.[7]
- மார்பகங்களின் மீது சூடான பொருட்களால் ஒத்தடம் அளிப்பதும், சிறந்த மூலிகை தேநீர் அருந்துதலும் கூட ஆதரவளிக்கும் சிகிச்சையேயாகும் [7].
- பால் குழாய் அடைப்பைக் கவனிக்காமல் அசாக்கிரதையாக இருப்பதும் தவறான செயலாகும்.
பல்வேறு சிகிச்சை அணுகுமுறைகள் பரிந்துரைக்கப்பட்டாலும், செயல்திறனைத் தீர்மானிக்க போதுமான மருத்துவ ஆராய்ச்சியும் வலுவான ஆதாரங்களும் கிடைக்கவில்லை.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Management of breast conditions and other breastfeeding difficulties". National Center for Biotechnology Information US National Library of Medicine. Retrieved 4 August 2017.
இந்தக் கட்டுரை பொது உரிமையில் உள்ள மூலத்திலிருந்து உரையைக் கொண்டுள்ளது.
- ↑ 2.0 2.1 "Clogged Milk Ducts: Symptoms, Causes and Treatments". www.thebump.com (in ஆங்கிலம்). Retrieved 2019-09-21.
- ↑ "Clogged milk duct: Symptoms, home remedies, and prevention". Medical News Today (in ஆங்கிலம்). Retrieved 2019-09-21.
- ↑ "Reasons for blocked ducts". Medela (in Indian English). Retrieved 2019-09-21.
- ↑ Roberts, Kathryn L.; Reiter, Maureen; Schuster, Diane (September 1998). "Effects of Cabbage Leaf Extract on Breast Engorgement". Journal of Human Lactation 14 (3): 231–236. doi:10.1177/089033449801400312. பன்னாட்டுத் தர தொடர் எண்:0890-3344. பப்மெட்:10205435.
- ↑ 6.0 6.1 Zakarija-Grkovic, Irena; Stewart, Fiona (18 September 2020). "Treatments for breast engorgement during lactation". The Cochrane Database of Systematic Reviews 9: CD006946. doi:10.1002/14651858.CD006946.pub4. பன்னாட்டுத் தர தொடர் எண்:1469-493X. பப்மெட்:32944940. https://pubmed.ncbi.nlm.nih.gov/32944940.
- ↑ 7.0 7.1 "Tackling engorgement and mastitis: an all-in-one guide". www.meandqi.com. Retrieved 2019-03-26.