பாலம்பூர்
பாலம்பூர் என்பது இந்தியாவின் இமாச்சல பிரதேசத்தில் காங்க்ரா பள்ளத்தாக்கில் உள்ள ஒரு மலைவாசஸ்தலம் மற்றும் நகராட்சி மன்றமாகும். இது தேவதாரு மரங்களாலும், தவ்லதர் மலைத் தொடர்களாலும் சூழப்பட்டுள்ளது. இந்த நகரம் அதன் பெயரை உள்ளூர் வார்த்தையான பாலம் என்பதிலிருந்து பெற்றது. பாலபூர் என்றால் நிறைய நீர் பொருள்படும். பாலம்பூரில் மலைகளிலிருந்து சமவெளிகளுக்கு ஏராளமான நீரோடைகள் பாய்கின்றன. பசுமை மற்றும் நீர்வளம் என்பன பாலம்பூருக்கு ஒரு தனித்துவமான தோற்றத்தை அளிக்கிறது.
புவியியல்
[தொகு]பாலம்பூர் 32.12 ° வடக்கு 76.53 ° கிழக்கு என்ற புவியியல் இருப்பிடத்தில் அமைந்துள்ளது.[1] இந்த நகரம் கடல் மட்டத்திலிருந்து 1472 மீட்டர் உயரத்தைக் கொண்டுள்ளது. இது வட இந்தியாவில் இமாச்சல பிரதேசத்தின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள இப்பகுதியானது தர்மசாலாவின் பிரபலமான மலைவாசஸ்தலத்திலிருந்து 30 கி.மீ தூரத்தில் உள்ளது. சண்டிகரில் இருந்து 250 கி.மீ தூரத்திலும், ஜோகிந்தர் நகரிலிருந்து 37 கி.மீ தொலைவிலும், சிம்லாவிலிருந்து 213 கி.மீ தொலைவிலும், மண்டியிலிருந்து 92 கி.மீ தூரத்திலும், தர்மஷாலாவிலிருந்து 36 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.
புள்ளிவிபரங்கள்
[தொகு]பாலம்பூரில் 3,543 மக்கள் வசிக்கின்றனர். இமாச்சல பிரதேசத்தில் காங்க்ரா மாவட்டத்தின் 10 பெரிய நகரங்களில் இதுவும் ஒன்றாகும். இமாச்சலப் பிரதேச மாநில சராசரி 909 உடன் ஒப்பிடும்போது பாலம்பூரில் குழந்தை பாலின விகிதம் 854 ஆகும். பாலம்பூர் மக்களின் கல்வியறிவு விகிதம் 91.33% ஆகும். இது தேசிய சராசரியான 82.80% ஐ விட அதிகமாகும். பாலம்பூரில், ஆண்களின் கல்வியறிவு 92.96% வீதம் ஆகவும், பெண் கல்வியறிவு விகிதம் 89.64% வீதமாகவும் உள்ளது.[2]
காலநிலை
[தொகு]பாலம்பூர் கோப்பனின் காலநிலை வகைப்பாட்டின் கீழ் ஈரப்பதமான வெப்பமண்டல காலநிலையைக் கொண்டுள்ளது. வெப்பமான கோடை மற்றும் குளிர்ந்த குளிர்காலம் என்பவற்றை கொண்டது. கோடைகாலத்தின் பிற்பகுதியிலும், வசந்த காலத்தின் துவக்கத்திலும் பெருமளவில் பருவமழை பெய்யும்.[3]
சந்தைகள்
[தொகு]பாலாம்பூரில் உள்ள சந்தைகள் இமாச்சல பிரதேசத்தின் காங்க்ரா மாவட்டத்தில் மிக உயர்ந்த சந்தைகளில் ஒன்றாகும். கடந்த தசாப்தத்தில் ஏராளமான வணிக வளாகங்கள் மற்றும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற வணிகச் சின்னங்களை கொண்ட காட்சியறைக் கூடங்கள் காணப்படுகின்றன. இது தவிர தரமான கம்பளிகளுக்கு அடையாளமாக இருக்கும் பூட்டிகோ போன்ற பழைய கூட்டுறவு நிறுவனங்களும் வர்த்தக நிலையங்களை அமைத்துள்ளன.
சந்தைகளில் பலவிதமான வர்த்தக நிலையங்கள் உள்ளன. மளிகை, புதிய பழங்கள் மற்றும் காய்கறிகள், எழுதுபொருட்கள், மின் சாதனங்கள் என தேவையான எதையும் வாங்கலாம். ஏராளமான உணவகங்களும் உள்ளன. உள்ளூர் உணவையும் ருசிக்க சில இடங்கள் உள்ளன. புகழ் பெற்ற துரித உணவகங்களும் நகரத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து தங்கள் விற்பனை நிலையங்களை இயக்குகின்றன.
போக்குவரத்து
[தொகு]விமான நிலையம்
[தொகு]ஸ்பைஸ் ஜெட் மற்றும் ஏர் இந்தியா ஆகியவை புதுதில்லியில் இருந்து பாலம்பூரிலிருந்து 40 கி.மீ தூரத்தில் உள்ள காங்க்ரா விமான நிலையத்திற்கு (காகல் விமான நிலையம்) தினசரி விமானங்களை இயக்குகின்றன.
தொடருந்தின் மூலம்
[தொகு]பாலம்பூர் பதான்கோட்டின் குறுகிய பாதை காங்க்ரா பள்ளத்தாக்கு தொடருந்து சாலை வழியாக ஜோகிந்தர் நகருடன் இணைக்கப்பட்டுள்ளது. பாலம்பூர் தொடருந்து நிலையம் பாலம்பூர் என்ற பெயரைக் கொண்டது. இது பேருந்து நிலையத்தில் இருந்து 4 கி.மீ தூரத்தில் மராண்டாவில் அமைந்துள்ளது. [சான்று தேவை]
சாலை மூலம்
[தொகு]பாலம்பூர் மாநிலம் மற்றும் சுற்றியுள்ள அனைத்து முக்கிய நகரங்களுக்கும் நகரங்களுக்கும் சாலை வழியாக நன்கு இணைக்கப்பட்டுள்ளது. பதன்கோட் - மண்டி தேசிய நெடுஞ்சாலை 154 (இந்தியா) (பழைய என்.எச் 20) பாலம்பூர் வழியாக செல்லும் முக்கிய நெடுஞ்சாலை ஆகும். டெல்லி மற்றும் சண்டிகர் போன்ற முக்கிய நகரங்களிலிருந்து சொகுசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
சான்றுகள்
[தொகு]- ↑ "Maps, Weather, and Airports for Palampur, India". www.fallingrain.com. பார்க்கப்பட்ட நாள் 2019-11-26.
- ↑ "Palampur Municipal Council City Population Census 2011-2019 | Himachal Pradesh". www.census2011.co.in. பார்க்கப்பட்ட நாள் 2019-11-26.
- ↑ "Palampur climate: Average Temperature, weather by month, Palampur weather averages - Climate-Data.org". en.climate-data.org. பார்க்கப்பட்ட நாள் 2019-11-26.