பவாரியா நடவடிக்கை
நாள் | 9, சனவரி 2005 |
---|---|
அமைவிடம் | தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், தில்லி, கருநாடகம், பஞ்சாப், அரியானா |
இறப்புகள் | 18 (கும்மிடிப்பூண்டு அதிமுக சட்ட மன்ற உறுப்பினர் சுதர்சனம், காங்கிரசு அரசியல்வாதி தாளமுத்து நடராசன், திமுக அரசியல்வாதி கசேந்திரன்) |
காயமுற்றோர் | 64 |
தண்டனை பெற்றோர் | ஓமா பவாரியா (மரண தண்டனை) கே. இலட்சுமணன் என்னும் அசோக் பவாரியா (மரண தண்டனை) புசுரா பவாரியா (சுட்டுக் கொல்லப்பட்டார்) விஜய் பவாரியா (சுட்டுக் கொல்லப்பட்டா்)[1] |
தீர்ப்பு | குற்றம் உறுதியானது |
குற்றத்தீர்ப்புகள் | கொலை, சூறையாடல், கொள்ளை, தாக்குதல் |
பவாரியா நடவடிக்கை என்பது 1995-2006 காலகட்டத்தில், தென்னிந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளுக்கு அருகே உள்ள குடியிருப்புப் பகுதிகளில் ஆயுதம் தாங்கிய கொள்ளையர்கள் திட்டமிட்டு நிகழ்த்திய கொள்ளை, கொலைச் செயல்களுக்கு எதிரான நடவடிக்கை ஆகும். பவாரியா கொள்ளைக் கூட்டத்தினர் பல்வேறு மாநிலங்களில் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் லாரி கும்பல் என்றும் அழைக்கப்பட்டனர். இவர்கள் தாங்கள் உருவாக்கிய ஆயுதங்களைக் கொண்டு மக்களை மிகவும் கொடூரமாக கொல்பவர்கள் என்பது கொள்ளையடித்த விதத்தில் இருந்து அறிய முடிந்தது. தென்னிந்தியர்கள் தங்க நகைகள் அணியும் வழக்கம் மிகுந்து இருப்பதால் அவர்கள் தென்னிந்தியாவைக் குறிவைத்துத் தாக்கினார்கள். ஊரில் இருந்து ஒதுக்குப்புறமாக உள்ள வீடுகளைக் குறிவைத்துக் கொள்ளையடித்தார்கள்.
வரலாறு
[தொகு]பவாரியா கொள்ளையர்கள் தமிழ்நாடு, கருநாடகம், ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளுக்கு அருகே உள்ள பணக்கார வீடுகளைக் குறி வைத்துத் தாக்கினார்கள்.
இக்கொள்ளையர்களின் தாக்குதலில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம், சேலம் மாவட்ட காங்கிரசு செயற்குழுத் தலைவர் தாளமுத்து நடராசன், திமுக அரசியல்வாதி கசேந்திரன் போன்று நன்கு அறியப்பட்டவர்களும் மாண்டனர். இவர்கள் வட இந்தியாவில் இருந்து தென்னிந்தியாவுக்கு லாரி மூலம் சரக்குகளைக் கொண்டு வரும் போக்குவரத்துத் தொழிலில் ஈடுபட்டிருந்தார்கள். சரக்குகளை உரிய இடங்களில் இறக்கிய பிறகு, அருகில் உள்ள பணக்கார வீடுகளைக் குறி வைத்துத் தாக்குவார்கள். தேவையற்ற வன்முறையின் மூலம் உயிரிழப்புகளை ஏற்படுத்துவார்கள். இதுவே இவர்கள் செயற்படும் முறை. திருப்பெரும்புதூரில் கொள்ளையடிக்கும் போது, ஒரு பள்ளி மாணவியைக் கொன்றதுடன் அவளது பெற்றோர்களைக் கடுமையாகத் தாக்கி காயமாக்கினார்கள். ஒன்பது மாவட்டங்களில் 200க்கும் மேற்பட்ட வழக்குகளில் பவாரியா கொள்ளையர்கள் தேடப்பட்டு வந்தனர்.[2]
விசாரணை
[தொகு]ஆயுதம் தாங்கிய கொள்ளையர்கள் கும்மிடிப்பூண்டி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனத்தைக் கொன்றதை அடுத்து, இந்த நடவடிக்கை 2005 இல் தொடங்கியது. அன்றைய தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில், காவல் ஆய்வாளர்கள் இயக்குநர் எஸ். ஆர். ஜாங்கிட் மற்றும் துணை காவல்துறையின் துணை தலைமை இயக்குநர் சஞ்சய் அரோரா ஆகியோர் தலைமையிலான குழு தீவிர விசாரணையைத் தொடங்கியது. இந்த விசாரணையின் மூலம், இந்தியா எங்கும் இதே போன்று நடந்த குற்றங்களில், குற்றவாளிகளின் கைவிரற் கோடுகளும் கொலை செய்யும் முறையும் ஒத்துப் போனது தெரிய வந்தது. ஒரே குழு தான் இக்குற்றங்களைச் செய்திருக்க முடியும் என்று சந்தேகித்தார்கள். உத்தர பிரதேச காவல் துறை, மத்திய புலனாய்வுத் துறையினருடன் இணைந்து விசாரணையை மேற்கொண்டனர். [2]
கைது
[தொகு]பவாரியா நடவடிக்கைக் குழுவிற்கு ஒரு சிறப்புத் துப்பு கிடைத்ததன் அடிப்படையில், அவர்கள் கன்னோசியில் உள்ள ஒரு வீட்டை விடிகாலையில் முற்றுகையிட்டனர். அங்கு பவாரியாவும் அவர் மனைவி பீனா தேவியும் அருகில் இருந்த ஒரு பகுதியில் பெரும் கொள்ளைக்குத் திட்டமிட்டுக் கொண்டிருந்தனர். உத்தர பிரதேச சிறப்பு அதிரடிப் படையின் உதவியோடு அவர்களை மடக்கிப் பிடித்தனர். [3] குற்றம் சாட்டப்பட்டவர்கள் திமிறிய போதும், அவர்களைத் தங்கள் காவலில் கொண்டு வந்தனர். பிறகு, பெயர் குறிப்பிடப்படாத ஓர் இடத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்ததாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. சனவரி 2005 முதல், பவாரியா கும்பல் உறுப்பினர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பிடிக்கப்பட்டனர். அவர்கள் பயன்படுத்திய நான்கு லாரிகளையும் கைப்பற்றினர். இவர்களின் கைதுக்குப் பிறகு வட மாவட்டங்களில் இதே போன்ற கொள்ளைச் சம்பவம் ஏதும் நடைபெறவில்லை. அடுத்த எட்டு ஆண்டுகள் தொடர் தேடுதலுக்குப் பிறகு, இக்கும்பலின் எஞ்சிய உறுப்பினர்களை ராஜஸ்தான் மாநிலத்தில் கைது செய்தனர்[2].
திரைப்படம்
[தொகு]2017 ஆம் ஆண்டு, பவாரியா நடவடிக்கையை அடிப்படையாகக் கொண்டு தீரன் அதிகாரம் ஒன்று என்ற திரைப்படம் வெளிவந்தது. அதன் பிறகே, பொது மக்கள் இடையே இந்த வழக்கு பற்றிய விழிப்புணர்வு கூடியது[4].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "‘Operation Bawaria’ that inspired Karthi's Theeran Adhigaaram Ondru". The Hindu. 17 November 2017. http://www.thehindu.com/news/national/tamil-nadu/operation-bawariaon-silver-screen-now/article20493784.ece. பார்த்த நாள்: 18 November 2017.
- ↑ 2.0 2.1 2.2 "Dacoit, associate killed in encounter near Meerut". The Hindu. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/Dacoit-associate-killed-in-encounter-near-Meerut/article15735905.ece.
- ↑ "Tamil Nadu police arrest Oma Bawaria in U.P.". The Hindu. 5 September 2005. http://www.thehindu.com/2005/09/10/stories/2005091004870400.htm. பார்த்த நாள்: 16 December 2017.
- ↑ "Theeran Adhigaram Ondru: Director Vinoth talks about his fascination for real-life stories".