உள்ளடக்கத்துக்குச் செல்

பழவேற்காடு சின்ன பள்ளிவாசல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பழவேற்காடு சின்ன பள்ளிவாசல் என்னும் அல்மஜிதுல் முஷர்ரஃப் பள்ளிவாசல் திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், பழவேற்காடு கிராமத்தில் அமைந்துள்ளது. [1] பழவேற்காடு பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 350 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. அருகிலுள்ள இரயில் நிலையம் பொன்னேரி இரயில் நிலையம் ஆகும். பொன்னேரி மற்றும் செங்குன்றத்திலிருந்து நகரப்பேருந்துகள் இங்கு சென்று வருகின்றன. இதன் அஞ்சல் குறியீட்டு எண் 601205 ஆகும். [2] இவ்வூரின் புவியிடக் குறியீடு : 13.416667°N அட்சரேகை 80.316667°E தீர்க்க ரேகை ஆகும்.

வரலாறு[தொகு]

இந்த சின்ன பள்ளிவாசல் என்ற மசூதி அல்மஜிதுல் முஷர்ரஃப் என்ற இஸ்லாமிய பெரியவரின் பெயரில் கட்டப்பட்டுள்ளது. முகம்மது பீர் சாகிப், முகம்மது அலி நயினா சாகிப் மற்றும் முகம்மது பீர் பக்கர் சாகிப் ஆகிய மூவர் இணைந்து கி.பி. 1708 ஆம் ஆண்டு (அதாவது ஹிஜரி 1121 ஆம் ஆண்டு) கட்டியதாக இங்குள்ள அறிவிப்புப் பலகை குறிப்பிடுகிறது. [1][3][4]

சூரிய நிழல் கடிகாரம்[தொகு]

இந்தப் பள்ளிவாசலில் ஒரு சூரிய நிழல் கடிகாரம் அமைக்கப்பட்டுள்ளது. இதனைக் காண்பதற்காக பல சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். அல்ஹாஜ் மௌலானா முகம்மது சாகிப், முகம்மது அப்துல்லா ஆகியோர் இந்த சூரிய நிழல் கடிகாரத்தை கி.பி.1915-ஆம் ஆண்டு (ஹிஜ்ரி 1334 ஆம் ஆண்டு) இந்தச் சின்னப் பள்ளிவாசல் வளாகத்தில் நிறுவிய செய்தியினை மற்றொரு அறிவிப்புப் பலகை குறிப்பிடுகிறது. இது போல மற்றொரு சூரிய நிழல் கடிகாரம் இலண்டன் மாநகரில் உள்ள மசூதி ஒன்றில் இடம்பெற்றுள்ளது. ஆக மொத்தம் இரண்டு சூரிய நிழல் கடிகாரங்கள் மட்டுமே உள்ளதாக தெரிகிறது. [1][3][4]

மசூதி அமைப்பு[தொகு]

இப்பள்ளி செவ்வக வடிவ நிலத்தில் சுற்று மதில்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. மசூதியின் நுழைவாயிலில் இரண்டு மினாராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மசூதியின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள பிரார்த்தனை கூடத்தை ஒட்டி திண்ணை அமைக்கப்பட்டுள்ளது. மரம் செங்கற்கள் மற்றும் சுண்ணாம்புக்காரை கொண்டு அமைக்கப்பட்ட மெட்ராஸ் பாணி பிரார்த்தனைக் கூடத்தின் கூரையை மையத்தில் அமைக்கப்பட்ட சதுர வடிவக் கருங்கற்தூண்களும், ஓரத்தில் செங்கற்களால் அமைக்கப்பட்ட உருளை வடிவத் தூண்களும் தாங்குகின்றன. மசூதியின் முகப்பில் பச்சை வண்ண அலங்கார திண்காரை ஜல்லியும் அதற்குமேல் டெரகோட்டா மினாராக்களும் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு குவிமாடம் அமைக்கப்படவில்லை. பிரார்த்தனை கூட்டத்தைச் சுற்றி வடக்கு, தெற்கு மற்றும் கிழக்கு பக்கங்களில் தாழ்வாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தென்புறத் தாழ்வாரத்தை ஒட்டி கைகால் கழுவும் நீர்த்தொட்டி அமைந்துள்ளது. மசூதியின் கிழக்குப் பகுதியில் இடுகாடு காணப்படுகிறது. இங்கு சித்திர எழுத்துக்களால் அலங்கரிக்கப்பட்ட பலகைகள் நடப்பட்டுள்ளன.

வழிபாடு[தொகு]

இப்பள்ளியில் நாள்தோறும் ஐந்து முறை தொழுகை நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை வழிபாடுகளும் சிறப்பாக நடைபெறுகின்றன. இந்த மசூதியில் ஏழு படிக்கட்டுகளுடன் அமைக்கப்பட்ட உயரமான மேடை உள்ளது. இதற்கு ஆதான் என்று பெயர். இந்த வளாகத்தில் ஒலிபெருக்கி அமைக்கப்படுவதற்கு முன்பு இந்த மசூதியின் தொழுகை அழைப்பாளர் (Muezzin) இந்த மேடைமீது நின்று இசுலாமியர்களைத் தொழுகைக்கு அழைப்பதுண்டாம். [5][1][3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 பழவேற்காடு சின்ன பள்ளிவாசல் தகவலாற்றுப்படை: தமிழிணையம்.
  2. Pulicat Onefivenine
  3. 3.0 3.1 3.2 Pulicat’s overlooked monuments are a testament to its archaeological beauty Shonali Muthalaly The Hindu February 18, 2020
  4. 4.0 4.1 4.2 A sunday at Pazhaverkadu The New Indian Express February 18, 2020
  5. Pulicat and Sadras Xavier Benedict pp. 66 - 71