உள்ளடக்கத்துக்குச் செல்

பரேட்டோ கொள்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வில்பிரெடோ பரேட்டோ - 80/20 விதியை கண்டுபிடித்தவர்

பரேட்டோ கொள்கை (Pareto principle) அல்லது 80-20 விதி (80–20 rule) என்பது சரியையும், தவறையும் கண்டுபிடித்து எதிர்காலத்தை ஆராயவும், ஆராய்ந்தறிந்த உண்மைகளைப் பயன்படுத்திக் கொள்ளும் ஒரு முறையே. இந்த விதியை முதலில் இத்தாலிய பொருளாதார நிபுணர் வில்பிரெடோ பரேட்டோ (Vilfredo Pareto) என்பவர் தன் நாட்டின் பொருளாதாரத்தை ஆராய்ந்த போது கண்டுபிடித்தார். தன் நாட்டின் 80% சொத்துக்கள் 20% மக்களிடம் இருப்பதாக 1906 இல் கணக்கிட்டார். இதே போல அவருடைய தோட்டத்தில் விளைந்த கடலையில் 80% கடலை 20% செடிகளில் விளைந்திருந்ததாக அறிந்தார்[1]. 1930-40களில் அமெரிக்க மேலாண்மை நிபுணர் முனைவர் இயோசப்பு இயூரான் (Joseph Juran) அதே விதி அனைத்து விடயங்களுக்கும் பொருந்தும் என்று கூறினார். இதற்கு பரேட்டோ கொள்கை என்னும் பெயரை அவரே சூட்டினார்.[1]. மேலும் எல்லாவற்றிலும் பெரும்பாலான விளைவுகளை சிறுபாலான காரணங்களே ஏற்படுத்துகின்றன என்று கூறிய அந்த விதி பின்னர் பலராலும் பரேட்டோ விதி அல்லது 80/20 விதி என்றழைக்கப்பட்டது.

இதில் எண்பது அதிகத்தையும், இருபது குறைவையும் குறிக்கும் குறியீடுகளே தவிர, துல்லியமான சதவீதத்தைக் குறிப்பதன்று. எடுத்துக்காட்டாக, ஒரு வணிகர் தனக்கு பெரும்பாலான (80%) வியாபாரத்தை அளிப்பது குறைவான எண்ணிக்கையுடைய (20%) பெரிய வாடிக்கையாளர்களே என்பதை எளிதாகக் கூற முடியும். ஒரு மனிதன் தனக்கு அதிகமான (80%) மனநிறைவை தரும் செயல்கள் ஒரு சில (20%) தான் என்பதைக் காண முடியும். தனக்கு 80% வருவாயைத் தருவது 20% முக்கிய செயல்பாடுகளே என்பதைக் கணக்கிட முடியும். இப்படி எல்லா விடயங்களிலும் இந்த விதி பெரும்பாலும் பொருந்துகிறது[2].

இக்கொள்கை பொருளியலில் பரவலாக அறியப்படும் ஒரு கொள்கை. 1992 ஆம் ஆண்டு ஐ.நா வளர்ச்சித்திட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தவாறு உலகின் மொத்தபண வருவாயில் 82.7% விழுக்காட்டை 20% மக்களே பெற்றிருந்தனர்[3]. கீழ்க்காணும் அட்டவணையில் உலக மக்கள் தொகையின் ஐம்பாக பகுப்பின்படி (quintile) பண வருவாய் காட்டப்பட்டுள்ளது.

உலக மொத்த உற்பத்தி அளவு
(Distribution of world GDP), 1989
மக்கள் தொகையின் ஐம்பகுப்பு வருவாய்
யாவரினும் பணம் மிக்கவர்கள் 20% 82.70%
அடுத்த பணக்காரர்கள் 20% 11.75%
மூன்றாம் மட்ட பணக்காரர்கள் 20% 2.30%
நான்காம் மட்ட பணக்காரர்கள் 20% 1.85%
கடைநிலை ஏழையர் 20% 1.40%

இக்கொள்கை பொருளாதாரத்துக்கு மட்டுமன்றி, மற்ற எல்லாத் துறைகளுக்கும் பொருந்தும் என்றும் பரேட்டோ கண்டறிந்தார்.

ஒரு தொழிற்சாலையில், 20% பொருள்கள் 80% மதிப்பையும், மீதி 80% பொருள்கள் 20% மதிப்பையும் பெற்றிருக்கும். ஒரு சமுதாயத்தில், 80% சிக்கல்களுக்கு 20% பேர்களே காரணமாக இருப்பார்கள். ஒரு சிக்கலுக்கான காரணங்களில், 20% ஆணிவேர் காரணங்கள். அந்தக் காரணங்களை நீக்கிவிட்டாலே 80% சிக்கல் தீர்ந்துவிடும். எனவே, 20% ஆணிவேர் காரணங்களைக் கண்டறிந்து ஒரு சிக்கலை எளிதில் தீர்த்து விடலாம். எனவே, சிக்கலைத் தீர்க்கும் வழிமுறைகளில் இக்கொள்கை பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

எடுத்துக்காட்டு

[தொகு]

எடுத்துக்காட்டாக, ஒரு தொழிற்சாலையில் உற்பத்தியாகும் பொருள்களில் பல தரமில்லை என்று ஒதுக்கப்படுவதாக வைத்துக்கொள்வோம். இந்த சிக்கலைத் தீர்ப்பது எப்படி?

முதலில் என்ன காரணங்களால் ஒதுக்கப்படுகிறது என்பதைக் கண்டறிய வேண்டும். அளவுகள் சரியாக இல்லை, பொருள்களின் மேல் கீறல், வடிவம் சரியாக இல்லை, பரப்பு சுரசுரப்பாக இருக்கிறது என்பவை காரணங்களாக இருக்கலாம். இந்தக் காரணங்களில் ஒவ்வொன்றிலும் எத்தனை பொருள்கள் ஒதுக்கப்படுகின்றன என்று கணக்கிட வேண்டும்.

அளவுகள் சரியாக இல்லை என்பதே பொதுவாக 80% பொருள்கள் ஒதுக்கப்படுவதற்கு காரணமாக இருக்கும். இந்தக் காரணத்தை நீக்கிவிட்டால் பொருள்கள் ஒதுக்கப்படுவது 80% குறைந்து விடும்.

காரணங்களை x-அச்சிலும், எண்ணிக்கையை y-அச்சிலும் இறங்குமுகமாக படமாக வரையலாம். இதனை பரேட்டோ வரைபடம் என்பர். ஒரு சிக்கலைத் தீர்ப்பதற்கு முன்னும், சிக்கலைத் தீர்த்த பின்னும் வரையப்பட்ட படங்களைக் கீழே காணலாம்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 What is 80/20 Rule, Pareto’s Law, Pareto Principle, archived from the original on 2013-01-28, பார்க்கப்பட்ட நாள் 2010-04-19.
  2. http://youthful.vikatan.com/youth/ganesanarticle09062009.asp[தொடர்பிழந்த இணைப்பு]
  3. United Nations Development Program (1992), 1992 Human Development Report, New York: Oxford University Press.
  • முழுத்தரமேலாண்மை-முனைவர் ப.அர.நக்கீரன்,பாவை வெளியீடு

மேலும் படிக்க

[தொகு]
  • Joseph Juran ; 1954 ; « Les Universaux en Management, Organisation et Contrôle » (Universals in Management, Planning and Controlling », The Management Control 1954.)
  • Joseph Juran ; 1960 ; « Pareto, Lorenz, Cournot, Bernouli, Juran and others », Industrial Quality-Control, vol 17, n°4, Oct.
  • Joseph Juran ; 1964 ; "Managerial Breakthrough : a new concept of the Manager’s Job"
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரேட்டோ_கொள்கை&oldid=3528971" இலிருந்து மீள்விக்கப்பட்டது