உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Thirunavaloor

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருநாவலூர் ஸ்ரீமகாமாரி அம்மன் ஆலயம்

ஆலய வரலாறு

இந்தியாவிலே தென் தமிழ்நாட்டின் காண்ணே, முகலாய மன்னன் ஆட்சி செய்த காலத்திலே, அவ்வாட்சியாளர்கள், தமிழ் நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் பலாத்கார வன்முறை கொடுமைகளைப் புரிந்தனர். அதன் காரணமாக அக் கொடுமைகளின்றும் தப்பித்துக் கொள்ளுமாறு, திருமறைக் காட்டைஸ் சேர்ந்த தோப்புத்துறை எனும் இடத்திலிருந்து, ஸ்ரீயௌவன பிரகாச மகரிசி மரபினரான வேதாரணியக்குருக்களும், அன்னாரின் பாரியாரும், வாழை மரத்தினால் செய்யப்பெற்ற தெப்பத்தில் ஏறிக் கடல் மார்க்கமாக வரும் போது, மூன்று அம்பிகையின் திருவுருவும், இரண்டு விநாயகர் திருவுருவும், தாமிரத்தினாலான ஒரு முருகன் திருவுருவும் கொண்டு புறப்பட்டு வந்தனர். இவர்கள் ஏறி வந்த தெப்பம், ஈழநாட்டின் வடகரையிலுள்ள பருத்தித்துறைக்கு சிறிது மேற்கே, மருதந்தெணி என்னும் நிலத்திற்கு வடக்கே, கந்தநயினார் காட்டின் கரையில் ஒதுங்கியது.

               இங்கனம் கரையொதுங்கிய குருக்கள் அருகேயுள்ள கந்தநயினார் காட்டிற்கும் மருதந்தெணிக்கும் எல்லையாகிய இடத்தில் வானளாவிய புன்னை மரத்தின் நிழலிலே சிறுகுடிசைக் கோவிலை அமைத்து அப்புன்னை மரத்தின் இலைகளால் வேய்ந்து அதனுள்ளே ஒரு பீடம் அமைத்து தாம் கொண்டு வந்த அம்பிகையின் திருவுருவங்கள் மூன்றினுள்ளே சிற்ப்புடைத்தான ஒரு திருவுருவத்தை அப்பீடத்தின் மீது தாபனஞ் செய்து பூசை புரிந்து வந்தனர்.

இப்படி நிகழுங்கால், அடுத்த கிராமத்தைச் சேர்ந்த தூர்த்தன் ஒருவன் வடதேசத்தவன் ஒருவன் இங்கு வந்து கோயில் அமைத்துப் பூசை புரிகின்றான் இவன் துணிவு என்னே என்று எண்ணிப் பொறாமை கொண்டு, இலைகளினால் வேயப் பெற்ற கூரையினால் ஆன கோயிலுக்கு தீயூட்டினான். திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் பாண்டி நாட்டிலுள்ள மதுரை மடத்திலே தங்கியபோது சமணர்கள் இட்டதீ பாண்டிய மன்னனுக்கு வெப்புநோயாக வருத்தியது போல, அம்பிகையின் ஆலயத்துக்கு இட்டதீ, வைசூரி, கொப்பளிப்பான் முதலிய நோய்களாகி தீயிட்டவனுடைய சுற்றம் சூழல் எல்லாம் அழிந்து வந்தது. இதைக் கண்ட மக்கள் அம்பிகையினால் ஏற்பட்ட இடையூறு என்று உணர்ந்து தங்கள் முயற்சியால் மடாலயம் ஒன்றை அமைத்து அவ்வாலயத்தில் அம்பிகையத் தாபனஞ் செய்து பூசை செய்யுமாறு குருக்களை வேண்டினர். குருக்களும் அவர்கள் வேண்டுகோளுக்கிணங்கி அம்மடாலயத்தில் பூசை புரிந்து வந்தனர். மேற்கூறியவாறு அம்பிகை எழுந்தருளியிருந்த முதல் ஆலயம் தீயினால் எரிந்தமையினால், "எரிந்த அம்பிகை" என்னும் காரண சிறப்புப் பெயரை அம்பிகை பெற்றுக் கொண்டுள்ளாள்.

                  பின்னர் காலந்தோறும் வளர்ச்சிபெற்று அம்பிகையினுடைய ஆலயம் வைரக்கற் திருப்பணியாக மூலஸ்தானமும், அர்த்த மண்டபமும் அமைக்கப் பெற்று ஸ்தூபி ஆலயமாகத் தோற்றமளிக்கின்றது. மேலும் மகாமண்டபம், தரிசன மண்டபம், தம்ப மண்டபம், வசந்த மண்டபம் ஆகிய மண்டபங்களும், பரிவாரத்தில் விநாயகர், சுப்பிரமணியர், வைரவர், நாகதம்பிரான், நவக்கிரகம் முதலிய ஆலயங்கள் அமைக்கப்பெற்று சிறப்புடன் காட்சி தருகின்றது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Thirunavaloor&oldid=1072736" இலிருந்து மீள்விக்கப்பட்டது