உள்ளடக்கத்துக்குச் செல்

பனிமனிதன் (புதினம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பனிமனிதன் என்பது ஜெயமோகன் எழுதிய சிறுவர் புதினம். இது தினமணி நாளிதழின் இலவச இணைபபான் சிறுவர் மணியில் தொடர்கதையாக 2001 ல் வெளிவந்தது. கவிதாபதிப்பகம் இந்த நாவலை நூலாக வெளியிட்டிருக்கிறது.[1][2][3]

ஜெயமோகனின் "பனி மனிதன்" தமிழ் சிறுவர் இலக்கியங்களில் முக்கியமான முயற்சியும் முன்னகர்வும் ஆகும். சாகசக்கதை, அறிவியல், அதீத கற்பனை, மர்மம், மதிப்பீடுகள் ஆகிய அனைத்தையும் இணைத்து படைக்கப்பட்ட ஒரு சிறுவர் இலக்கியமாக பனிமனிதன் விளங்குகிறது.

யதி எனப்படும் பனிமனிதன் இமயமலை சார்ந்த பகுதிகளில் வழங்கப்படும் ஒரு புராண மனிதன். உண்மைக்கும் கற்பனைக்கும் இடைப்பட்டதோர் வெளியில் இருக்கும் அவிழ்க்கப்படாத புதிர் என்றே பலர் கருதும் ஓர் மர்ம புதிர்.

மலைப்பனியில் தெரியும் சில விநோத இராட்சத காலடித்தடங்களை குறித்து அறிந்து வர பணிக்கப்படுகிறான் பாண்டியன் எனும் இராணுவ வீரன். கிராமவாசிகளால் மிகைப்படுத்தப்பட்ட சாதாரண இயற்கை விளைவாக இருக்கும் என நினைத்து புறப்படும் பாண்டியன் விரைவில் விநோத நிகழ்வுகளையும், பனிமனிதன் குறித்த உள்ளூர் வழக்குகளையும் அதன் பின் இருக்கும் அதிசய உண்மைகளையும் சந்திக்கிறான்.

ஆனால் இப்பயணம் வெறும் சாகசப்பயணம் மாத்திரமல்லாது ஒரு புனிதப்பயணத்தின் தன்மையும் கூடவே எடுத்து வளர்கிறது. கதை படிக்கும் குழந்தைகள் வளருகையில் கூடவே வளர முடிந்த நூல் இது.

பாண்டியனால் காப்பாற்றப்படும் கிம் எனும் இச்சிறுவனுடன் இந்த சாகஸ குழுவில் ஒரு டாக்டரும் கலந்து கொள்கிறார். இராணுவத்தினனான பாண்டியன், பெளத்த மலைவாசி கிராம சிறுவனான கிம், மேற்கத்திய அறிவியல் பார்வை கொண்ட டாக்டர் ஆகியோர் பனிமனிதனை தேடி புறப்படுகிறார்கள். பனிமனிதனை ? டாக்டர் வெளிப்படையாகவே அறிவிக்கிறார், ‘நான் பனிமனிதனைப்பற்றி ஆராய்ச்சி செய்கிறேன். ஆனால் அது உண்மையில் மனிதனைப் பற்றிய ஆராய்ச்சிதான். ‘ (பக். 40)

பாதையில் டாக்டர் பாண்டியனுக்கு இயற்கை உலகின் செயல்பாடுகளையும், பரிணாம அறிவியலையும் விளக்குகிறார். தகவமைவுதான் பரிணாமத்தின் முக்கிய இயக்கு சக்தியாக டார்வின் கண்டறிந்ததாக டாக்டர் குறிப்பிடுகிறார். விடுபட்ட கண்ணியாக பனிமனிதனை ஊகிக்கிறார் டாக்டர். ஆனால் பனி மனிதனை கண்டவனான கிம் டாக்டர் காட்டும் எந்த பேரினக் குரங்கை போலவும் பனிமனிதன் இருப்பதாக கூறவில்லை. பின்னர் ஹோமோ எரெக்டஸை போல இருப்பதாக கூறுகிறான்.

பாண்டியன் சிறுவன் கிம் யோகசுவாசம் எனும் யோகப்பயிற்சி செய்வதை பார்க்கிறான். ‘பாண்டியனுக்கு வியப்பாக இருந்தது. பனிமலையில் வாழும் பழங்குடி மக்கள் அத்தனை சிறப்பாக யோகப்பயிற்சி பெற்றிருப்பார்கள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. ‘ (பக். 59)

இயற்கை, மானுடம் ஆகியவை குறித்த பல பார்வைகள் கதையினூடே குழந்தைகள் முன்வைக்கப்படுகின்றன. இரு உதாரணங்கள். ஒன்று இயற்கை விளைவு பற்றியது. ‘பனிச்சமவெளி ஒரு பிரம்மாண்டமான கண்ணாடி போன்றது. சூரிய ஒளியை அது பிரதிபலிக்கிறது. ‘ என்றார் டாக்டர்…… ‘…பனிமலை புத்தரின் மனம் அல்லவா ? இங்கு வருவது பெரிய பாக்கியம் என்று என் அப்பா சொல்வார் என்றான் கிம். ‘ஏன் இதை புத்தரின் மனம் என்கிறார்கள் ? ‘ என்றான் பாண்டியன். ‘ஏனென்றால் இங்கு எல்லாமே தூய்மையாக உள்ளன. தூய்மையாக இருக்கும்போது பூமியும் வானம் போல ஆகிவிடும். இங்கு எந்த ஒலியும் இல்லை. தியானம் செய்யும் புத்தரின் மனம் போல இந்த இடம் அமைதியாக இருக்கிறது ‘ என்றான் கிம் ‘ (பக் 64௬5)

பரிணாமத்தில் மனிதனின் இடம் குறித்தது. மனிதனிலிருந்து குரங்கின் பரிணாமத்தை விளக்குகிறார் டாக்டர் ஏங்கல்ஸின் தத்துவத்தை விளக்குகிறார். அச்சமயம் கிம் அவர்கள் ஊர் பிட்சுவின் கோட்பாட்டினை கூறுகிறான். ‘திருஷ்ணை ‘ எனும் உள்ளார்ந்த ஓர் அதிருப்தியே மானுட நாகரிகத்தினை முன்னகர்த்தும் சக்தி என்றும் அதுவே அவனை திருப்தியற்று மேலும் மேலும் செயல்பட வைப்பதாகவும் கூறுகிறான்.(பக் 89)

திருஷ்ணையை வெல்ல வேண்டும் என்கிறான் கிம். திருஷ்ணையே மானுடத்தின் முன்னேற்றத்துக்கு அடிப்படை எனவே அதை இழக்கலாகாது என்கிறார் டாக்டர். பனிமனிதனை தேட காரணமே அந்த திருஷ்ணைதானே என சுட்டிக்காட்டுகிறார் டாக்டர். கிம்மின் எதிர்வினை சொல்லப்படவில்லை. அது மெளனமாகத்தான் இருந்திருக்க வேண்டும்

அடுத்த பக்கங்களில் திருஷ்ணையின் செயல்பாட்டினை ஆசிரியர் காட்டுகிறார். கதையின் ஒரு முக்கிய உச்சம் இங்கு தொடப்படுகிறது. முக்கியமான மதிப்பீட்டு நிகழ்வாக அடுத்த நிகழ்ச்சிகள் அமைகின்றன. பின்னர் வழியில் அவர்கள் தங்கள் லாமாவை தேடும் ஒரு பிட்சு கூட்டத்தை சந்திக்கின்றனர். மீண்டும் வேறுபட்ட உலகங்கள் மோதுகின்றன. இப்போது அந்த பிட்சுக்கள் பனிமனிதனை குறித்து மேலும் கூறுகின்றனர். அவன் விடுபட்ட கண்ணி அல்ல. மாறாக அவன் மற்றொரு பரிணாம சாத்தியகூறு. திருஷ்ணை அற்ற பரிணாமத்தின் பூரணத்துவம் என அவர்கள் கூறுகின்றனர்.

இறுதியில் நம் சாகஸக்குழு பனிமனித சமுதாயத்தை சந்திக்கிறது. ஒருவிதத்தில் விவிலியத்தின் ஆதிதோட்டத்தை நினைவு படுத்தும் அனைத்து உயிர்களும் இசைந்து வாழும் உலகினை நாம் நம் சாகஸக்குழுவுடன் சந்திக்கிறோம். இந்நிலையில் மீண்டும் டாக்டரும் பாண்டியனுக்குமான பேச்சுக்கள் மூலம் மனம், பரிணாமம் ஆகியவை குறித்த பலவித கருத்துக்கள் முன்வைக்கப் படுகின்றன.

இதற்கிடையில் கிம்மின் மூலம் மற்றொரு உண்மை தெரிய வருகிறது. அவர்கள் அனைவருமே பனிமனிதர்களான யதிகளால் அங்கு வரவழைக்கப்பட்டவர்கள். தற்செயலான நிகழ்ச்சிகள் அனைத்துமே ஓர் பெரும் தூய கூட்டுமனத்தின் பெரும் இயக்க பகுதிகள் என அவர்கள் அறிகின்றனர்.கிம் மட்டுமே இப்பெரும் மனத்தின் செயலியக்கம் குறித்த பிரக்ஞயுடன் இருந்தவன். அனைவரும் அந்த பூமியை விட்டு மீண்டும் செல்கின்றனர். திரும்புகையில் தற்செயலாக ஒரு மலரை பாண்டியன் கிம் கையில் கொடுக்கிறான்.

அவர்கள் மீண்டும் தம் தலைமை லாமாவைத் தேடும் பிட்சுக்களை காண்கின்றனர். கிம்மின் கையில் இருக்கும் மலர்தான் அவர்கள் தேடும் லாமாவுக்கான அடையாளம். கிம் லாமா ஆகிறான். டாக்டர் அவனை காலில் விழுந்து வணங்குகிறார். பாண்டியனும் அவனை கை கூப்பி வணங்குகிறான்

அவர்கள் இறுதியாக மற்றொரு ஆச்சரியத்தையும் அடைகின்றனர். பனிமனிதனே இனி வரும் மைத்ரேய புத்தர் என்பதே அது. டாக்டர் கூறியதற்கும் அப்பால் பனிமனிதனை தேடல் அக்குழுவில் ஒவ்வொருவருக்கும் அகத்தேடலாகவே மாறியிருப்பதை நம்மால் உணர முடிகிறது. இறுதியாக பனிமனிதன் குறித்த இரகசியம் இரகசியமாகவே காக்கப்படுகிறது. இயற்கையினை அறிய அறிவியல் மாத்திரமே ஒரே வழியல்ல என்கிற உண்மையையும் அதேசமயம் அறிவியலின் அழகினையும், புராண மொழியின் அழகினையும் அவை இயங்கும் தளங்களின் இயற்கையையும் ஒரு சேர குழந்தைகளுக்கு தரும் முயற்சி பனிமனிதன்.

சிறுவர்களுக்கு புரியக்கூடிய எளிய மொழியில் அமைந்திருக்கிறது இந்நாவல். ஆறு சொற்களுக்கு மிகாத சொற்றொடர்களால் ஆனது இது. மூன்றாயிரம் சொற்களுக்குள்தான் இந்நாவலில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Neelakandan, Aravindan (17 July 2014). "Pani Manidhan - a Review". panimanidhan.blogspot.com. பார்க்கப்பட்ட நாள் 11 June 2016.
  2. Jeyamohan (September 2021). "Foreword to Pani Manidhan, 2nd ed".
  3. Haran Prasanna (17 July 2014). "Childrens Literature in Tamil". panimanidhan.blogspot.com. பார்க்கப்பட்ட நாள் 11 June 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பனிமனிதன்_(புதினம்)&oldid=4100635" இலிருந்து மீள்விக்கப்பட்டது