உள்ளடக்கத்துக்குச் செல்

பண்டாரிக்குளம் முத்துமாரி அம்மன் கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


வைரவபுளியங்குளம் பண்டாரிகுளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருக்கோவில் இலங்கையின் வவுனியாவிலிருந்து 0.5 கி.மீ (0.31 மீ) தொலைவில் அமைந்துள்ளது. பொ.ஊ. 16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட நான்கு திசைக்கோயில்களில் இதுவே முதன்மையானது. இந்த கோயில் மக்களால் கட்டப்பட்டது மற்றும் ஆரம்ப நாட்களில் இந்த கோவிலின் வழிபாடு பூசாரிகளால் செய்யப்பட்டது. திரு வேலுப்பிள்ளை வழித்தோன்றல்களினாலும் அவரது சகோதரர்களினாலும், பின் அவரது புதல்வர்களான செல்வநாயகம், கதிரவேல், சங்கரப் பிள்ளை, நவரத்தினம் ஆகியோரால் பூஜை செய்யப்பட்டது. 2010 கும்பாபிஷேகத்தில் இருந்து பிராமணர்கள் பூஜை செய்து வருகின்றனர். 1977 வரை ஓலைக்கொட்டிலாக இருந்த ஆலயம், 1977ல் கட்டட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டது. இந்தக் கோயில் வன்னி மன்னர் பண்டாரவன்னியன் காலத்திலிருந்தே வணங்கப்படுகிறது.இந்த தெய்வம் மிகவும் சக்திவாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த கோயில் வவுனியாவின் மிகப்பெரிய அம்மன் கோயிலாகும். வவுனியாவின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் மகோற்சவத்தின் போது வருவார்கள். வவுனியாவில் மிக நீண்ட நாள் நடைபெறும் மகோற்சவம் இக்கோயிலுக்குரிய சிறப்பம்சமாகும். இவ்வம்மனை வழிபட்டால் கண் பார்வை சரியாகும், நினைத்தது கிட்டும், அம்மை நோய் விலகும்.

அன்று முதல் இன்று வரை இவ்வாலயத்தில் நவராத்திரி மானம்பூத்திருவிழா சிறப்பான நிகழ்வாகக் கருதப்படுகிறது.

வவுனியா-பண்டாரிகுளம்
அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருக்கோவில்
மகாகும்பாபிஷேகத்தின் பின்னரான தோற்றம்
பண்டாரிகுளம் அம்மன் கோவில் is located in Northern Province
பண்டாரிகுளம் அம்மன் கோவில்
பண்டாரிகுளம்
அம்மன்
கோவில்
ஆலய அமைவிடம்
ஆள்கூறுகள்:8°45′31″N 80°29′10″E / 8.7586067°N 80.4861745°E / 8.7586067; 80.4861745
அமைவிடம்
நாடு:இலங்கை
மாகாணம்:வட மாகணம்
மாவட்டம்:வவுனியா
அமைவு:பண்டாரிகுளம்
கோயில் தகவல்கள்
தாயார்:முத்துமாரியம்மன்
தீர்த்தம்:அமிர்தவர்ஷினி
சிறப்பு திருவிழாக்கள்:மகோற்சவம்
நவராத்திரி
ஆடிப் பூரம்
உற்சவர்:விநாயகர்
முத்துமாரியம்மன்
முருகன்
சிவன்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிட பாணி
நிறுவிய நாள்:பொ.ஊ. 16ம் நூற்றாண்டு

அமைவிடம்[தொகு]

வவுனியாவின் வைரவர்புளியங்குளம் கிராமமும் பண்டாரிகுளம் கிராமமும் சங்கமிக்கும் எல்லையில் அன்னையின் ஆலயம் அமையப்பெற்றுள்ளது. வயல்வெளிகளை நோக்கியவாறு இக்கோவில் அமையப்பெற்றுள்ளது. இக்கோவிலை சுற்றிவர மக்களின் குடியிருப்பு அமையப்பெற்றதால் எப்பொழுதும் இப்பகுதி மக்கள் நடமாட்டம் உள்ளபகுதியாகும். இக்கிராமதிற்கு பேருந்து வசதி இல்லை என்றாலும் நகருக்கு மிக அண்மையில் உள்ளதால் முச்சக்கரவண்டியூடக இக்கோவிலுக்கு வருகை தரலாம்.

கோவிலுக்கு முன்னால் உள்ள வயல்வெளி

வரலாறு[தொகு]

பண்டாரவன்னியன் காலத்திலிருந்தே வணங்கப்பட்ட இக்கோவில், ஆரம்ப காலங்களில் பூசாரிமாரால் திரு வேலுப்பிள்ளை மற்றும் அவரது வழித்தோன்றல்கள், சகோதரர்களாலும் அவரது புதல்வர்களான செல்வநாயகம், கதிரவேல், சங்கரப் பிள்ளை, நவரத்தினம் போன்றவர்களால் பரம்பரையாக பூசை செய்யப்பட்டு வந்தது.பின்னர் ஆகம விதிக்கமைய 2010களின் பின்னர் பிராமணர்களால் பூஜை மேற்க்கொள்ளபடுகிறது. இதன்காரணமாக ஆரம்ப காலங்களில் ஒரு சிறு கொட்டிலில் காணப்பட்ட ஆலயம் பின்னர் பெரிய கோவிலாக கட்டப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. 2010இல் மீள கோவில் புதிதாக கட்டப்பட்டு முதலாவது கும்பாபிஷேகம் செய்யப்பட்டது, இதன் மூலம் வவுனியா நகரில் உள்ள மிகப்பெரிய அம்மன் கோவிலாக மாற்றம் பெற்றது.[1] மீள 2024 பங்குனி 12 ஆம் நாள் இராச கோபுரம் கட்டப்பட்டு, அதிசுந்தர பஞ்சதள பஞ்சகலச நூதன கம்பீர ராஜகோபுர சகித புனராவர்த்தன அஷ்டபந்தன நவ(9)குண்டபக்ஷ மகாகும்பாபிஷேகம், இடம்பெற்றது.

புனர்திருத்தம்[தொகு]

2020 ஆம் ஆண்டு இறுதியில் பாலஸ்தானம் செய்யப்பட்ட திருக்கோவில், தொடர்ந்து 4 வருடங்கள், கொரோனா பெரும் தொற்றுக் காரணமாக ஆலய புனர்திருத்தம் மந்தகதியில் இடம்பெற்று 2023 காலப்பகுதியின் பின்னர் துரித கதியில் இடம்பெற்று 2024 மார்ச் மாதம் 25 ஆம் திகதி (பங்குனி 12 ஆம் நாள் உத்தர நன்னாளில்) மகா கும்பாபிஷேகம் இடம்பெற்றது. இதன்போதே இராச கோபுரம் அமைத்து குடமுழுக்கு செய்யப்பட்டது.

கும்பாபிஷேகமன்று

இதிகாசம்[தொகு]

ஆரம்ப காலங்களில் வவுனியாவில் இருந்த கந்தசுவாமி கோவில், குடியிருப்பு பிள்ளையார் கோவில் என்ற இரு கோவில்களுடன் இந்த அம்மன் கோவிலே ஆதி காலம் தொட்டே அமையப்பெற்றதாக நம்பப்படுகிறது. இதற்கு சான்றாக கந்தசுவாமி கோவில் முன்றலில் முத்துமாரி அம்மன் சிலையும், குடியிருப்பு பிள்ளையார் கோவில் செல்லும் வழியில் முத்துமாரி அம்மனுக்கு தனி கோவிலும் வாசலில் அமைக்கப்பட்டுள்ளது இதுவும் ஒரு சான்று.

பொ.ஊ. 16 ஆம் நூற்றாண்டில் தோன்றியதாக நம்பப்படும் இந்த ஆலயம், ஆரம்பத்தில் ஒரு வேப்பமர அடியில் சிறு கோவில் அமைத்து அக்காலங்களில் வாழ்ந்த வண்ணார், பண்டாரிமாரால் பெரிதும் ஆதரிக்கப்பட்ட கோவிலாகக் காணப்பட்டது. பின்நாட்களில் வன்னிமை ஆட்சியில் பண்டாரவன்னியன் இக்கோவிலுக்கு வருகை தந்ததாகவும், அப்போது அங்கு அன்னையின் அருளினை பெற்றதாகவும், வருகை தந்த அரசன் அன்னையின் ஆனந்த சிரிப்பிலும், அன்னைக்கு சூடிய மாலையின் நறுமனத்திலும், அழகிலும் சொக்கிநின்ற அரசன், அந்த ஊரையே தன் பெயர் கொண்டு அழைக்கும்படி பெயரினை மாற்றியமைத்தான். இந்தக் கோவிலை சூழ கருங்காலி மரங்கள் நிறையக் காணப்பட்டமையால் இந்தக்கோவில் ஆரம்பத்தில் கருங்காலியடித்தோட்ட அம்மன் கோவில் என்று ஆதி காலத்தில் அறியப்பத்தாக நம்பப்படுகிறது.

கோவில் திருத்தவேலைகளின் போது

அமைப்பு[தொகு]

இலக்கம் விபரம்
1 கருவறை
2 அர்த்த மண்டபம்
3 சிம்மம்
4 பலிபீடம்
5 கொடித்தம்பம்-நூதன கணபதி
6 லிங்க மூர்த்தி
7 கணபதி
8 ஆதி அம்மன்
9 கோபாலகிருஷ்ணர்
10 வள்ளி தெய்வானை சமேத முருகன்
11 துளசி மாடம்
12 வேப்பமரம்
13 புராதன கோவில் நிலையம்
14 தாரிகா சண்டேஸ்வரி
15 தீர்த்தத் தடாகம்
16 நவக்கிரகம்
17 வசந்த மண்டபம்
18 நாகதம்பிரான்
19 வைரவர்
20 புது மணிமண்டபம்
21 சந்திரன்
22 சூரியன்
23 இராஜ கோபுரம்
24 பழைய மணிமண்டபம்
25 காத்தவராயன், பேச்சி, ஹனுமார்

திருவிழாக்கள்[தொகு]

இவ்வாலய மகோற்சவம் ஆனது ஆடி அமாவாசையில் கோடி ஏற்றத்துடன் ஆரம்பித்து அடுத்து வரும் 15 நாட்கள் தொடர்ந்து திருவிழா இடம்பெறும். இத்திருவிழா தான் வவுனியா நகரில் அதிக நாள் இடம்பெறும் திருவிழா ஆகும். திருவிழா காண வவுனியாவின் பலபாகங்களில் இருந்தும் அடியார்கள் வருகை தருவார்கள். மேலும் இவ்வாலயத்தில் நவராத்திரி 10 நாள் திருவிழா போல் இடம்பெறும். பத்தாவது நாள் மானம்பூத்திருவிழா இடம்பெறும். இதற்காக அம்பாள் குடியிருப்பு விநாயகர் ஆலயத்திற்கு சென்று வாழைவெட்டு இடம்பெறும். சப்பரோற்சவம்,[2] இரதோற்சவம் ஆகிய நாள்களில் பல அடியார்கள் கலந்து கொண்டு நேர்த்தி கடன் செலுத்துவர். பூங்காவன உற்சவத்தின் போது பல்வேறுபட்ட கலை, கலாசார நிகழ்வுகள் இடம்பெற்று அம்பாள் ஆலயத்தை சுற்றியுள்ள கிராமத்தின் பிரதான வீதி வழியே வலம் வருவார். சகோதர இனமக்களும் அந்நேரத்தில் வருகை தருவர்.

மகோற்சவ திருவிழாவில் ஒருநாள்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Amman Kovil Road Pandarikulam". Mapio.net (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-06-09.
  2. "வவுனியா பண்டாரிக்குளம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய சப்பர உற்சவம்![?"]. வவுனியா நெட். https://www.vavuniyanet.com/news/236137/%e0%ae%b5%e0%ae%b5%e0%af%81%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-%e0%ae%aa%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85/. பார்த்த நாள்: 17 June 2024.