பகுதாது முற்றுகை (1258)
பகுதாது முற்றுகை (1258) | |||||||
---|---|---|---|---|---|---|---|
மங்கோலியப் படையெடுப்புகளின் ஒரு பகுதி | |||||||
பகுதாதுவின் மதில் சுவர்களைக் குலாகுவின் இராணுவம் முற்றுகையிடுதல் |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
ஈல்கானரசு (மங்கோலியப் பேரரசு)
| பகுதாதுவின் அப்பாசியக் கலீபகம் | ||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
|
|
||||||
படைப் பிரிவுகள் | |||||||
|
|
||||||
இழப்புகள் | |||||||
தெரியவில்லை. ஆனால் குறைவாகவே இருந்ததென நம்பப்படுகிறது. |
பகுதாது முற்றுகை என்பது 1258ஆம் ஆண்டில் சனவரி 29 முதல் பெப்ரவரி 10 வரை நடைபெற்ற முற்றுகைப் போர் ஆகும். இக்குறிப்பிட்ட காலத்திற்குள் மங்கோலியப் பேரரசின் ஈல்கானரசுப் படைகள் மற்றும் கூட்டாளித் துருப்புகள் அப்பாசியக் கலீபகத்தின் தலைநகரான பகுதாதுவைச் சுற்றிவளைத்து, கைப்பற்றிச் சூறையாடின. மங்கோலியக் ககான் மோங்கேயின் தம்பியான குலாகுவின் தலைமையில் இந்த முற்றுகையை மங்கோலியர்கள் நடத்தினர். மோங்கே தனது ஆட்சியை மெசொப்பொத்தேமியா வரை விரிவுபடுத்த எண்ணினார். ஆனால் நேரடியாகக் கலீபா அல் முஸ்டசீமைப் பதவியிலிருந்து தூக்கி எறிய அவர் விரும்பவில்லை. ஈரானிலிருக்கும் மங்கோலியப் படைகளுக்கு இராணுவ உதவி வழங்குதல் மற்றும் ககானுக்குத் தொடர்ந்து அடிபணிதல் ஆகிய மங்கோலியக் கோரிக்கைகளுக்குக் கலீபா அல் முஸ்டசீம் மறுத்ததால் பகுதாதுவைத் தாக்குமாறு குலாகுவிற்கு மோங்கே அறிவுறுத்தினார்.
நிசாரி இசுமாயிலிகளின் பகுதிகளுக்கு எதிரான தாக்குதல் மூலம் குலாகு தனது போர்ப்பயணத்தைப் பாரசீகத்தில் தொடங்கினார். இசுமாயிலிகள் தங்களது வலிமையான அலமுத் கோட்டையை இழந்தனர். பிறகு பகுதாதுவை நோக்கி குலாகு அணிவகுப்பைத் தொடங்கினார். அப்பாசியர்களிடம் மோங்கே வைத்த கோரிக்கைகளுக்கு ஒப்புக் கொள்ளுமாறு அல் முஸ்டசீமிடம் குலாகு கோரினார். மங்கோலியப் படையெடுப்புக்கு எதிராக அப்பாசியர்கள் தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறிய போதும், பகுதாது படையெடுத்து வருபவர்களிடம் விழாது என அல் முஸ்டசீம் நம்பினார். சரணடைய மறுத்தார். இறுதியில் குலாகு நகரத்தை முற்றுகையிட்டார். நகரமானது 12 நாட்களுக்குப் பிறகு சரணடைந்தது.[8]
அடுத்த வாரத்தில் மங்கோலியர்கள் பகுதாதுவைச் சூறையாடினர். பல்வேறு அட்டூழியங்களைச் செய்தனர். நூலகப் புத்தகங்களின் அழிப்பு மற்றும் அப்பாசியர்களின் பெரிய நூலகங்களின் மீது ஏற்பட்ட அழிவு ஆகியவை எந்த அளவுக்கு ஏற்பட்டது என்பதில் வரலாற்றாளர்கள் இடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன. மங்கோலியர்கள் அல் முஸ்டசீமைக் கொன்றனர். நகரத்தின் குடிமக்கள் பலரைக் கொன்றனர். இதன் காரணமாக அங்கு மக்கள் தொகைக் குறைவு ஏற்பட்டது. இசுலாமியப் பொற்காலத்தின் முடிவைக் குறிப்பதாக இந்த முற்றுகை அமைந்தது எனக் கருதப்படுகிறது. அக்காலத்தில் கலீபாக்கள் தங்களது ஆட்சியைச் சிந்து மாகாணம் முதல் ஐபீரிய மூவலந்தீவு வரை விரிவுபடுத்தி இருந்தனர். அவர்களது ஆட்சிக்காலத்தில் பல்வேறு துறைகளில் கலாச்சாரச் சாதனைகள் செய்யப்பட்டிருந்தன.[9]
பின்புலம்
[தொகு]பகுதாதுவானது நூற்றாண்டுகளாக அப்பாசியக் கலீபகத்தின் தலைநகராக இருந்தது. அப்பாசியக் கலீபகமானது மூன்றாவது கலீபகமாகும். 751ஆம் ஆண்டு அப்பாசியர்கள் உமயதுகளை தூக்கி எறிந்து ஆட்சிக்கு வந்தனர். கலீபகத்தின் தலைமையகத்தைத் திமிஷ்குவிலிருந்து பகுதாதுவிற்கு மாற்றினர். இந்நகரமானது அதன் உச்சத்தின் போது சுமார் 10 இலட்சம் மக்களைக் கொண்டதாக இருந்தது. இந்நகரைக் காக்க 60,000 வீரர்களைக் கொண்ட இராணுவம் இருந்தது. 13ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியின் போது அப்பாசியர்களின் அதிகாரமானது குறைந்தது. துருக்கிய மற்றும் எகிப்திய அடிமை அரசமரபின் போர்ப்பிரபுக்களே பெரும்பாலும் கலீபாக்கள் மீது அதிகாரம் செலுத்தினர்.[10]
எனினும் பகுதாது பெரும்பாலான பெயரளவு முக்கியத்துவத்தைத் தக்கவைத்துக் கொண்டது. ஒரு செல்வச் செழிப்புள்ள மற்றும் கலாச்சார வளமிக்க நகராகத் தொடர்ந்தது. 12 மற்றும் 13ஆம் நூற்றாண்டுகளின் கலீபாக்கள் கிழக்கில் இருந்த, விரிவடைந்து கொண்டிருந்த மங்கோலியப் பேரரசுடன் தொடர்புகளை வளர்க்க ஆரம்பித்தனர். அப்பாசியர்கள் மீது இரண்டாம் அலாவுதீன் முகம்மது தாக்குதல் நடத்தப்போவதாக எச்சரித்த போது கலீபா அன்-நசீர் லி-தினில்லா (ஆட்சி 1180–1225) செங்கிஸ் கான் உடன் கூட்டணி ஏற்படுத்த முயற்சித்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது.[11] மங்கோலியக் ககானுக்குக் காணிக்கையாகச் சிலுவைப் போரில் பிடிக்கப்பட்ட சிலர் அனுப்பப்பட்டதாகவும் கூறப்பட்டது.[12]
மங்கோலியர்களின் இரகசிய வரலாற்றின் படி செங்கிஸ் கான் மற்றும் அவரது பின்வந்த ஒக்தாயி கான் ஆகியோர் தங்களது தளபதி சோர்மகனுக்குப் பகுதாதுவைத் தாக்குமாறு ஆணையிட்டனர்.[13] 1236ஆம் ஆண்டு சோர்மகன் மங்கோலிய இராணுவத்தின் ஒரு பிரிவுக்குத் தலைமை தாங்கி அர்பில் நோக்கிச் சென்றார்.[14] அந்நேரத்தில் அந்த இடம் அப்பாசிய ஆட்சியின் கீழ் இருந்தது. அர்பில் மற்றும் கலீபகத்தின் மற்ற பகுதிகள் மீதான மேற்கொண்ட சோதனை ஓட்டங்கள் ஆண்டுதோறும் நடக்கும் நிகழ்வுகளாகிப் போயின.[15] சில சோதனை ஓட்டங்கள் பகுதாதுவை அடைந்ததாகவும் கூறப்பட்டது.[16] ஆனால் இந்த ஊடுருவல்கள் எப்பொழுதுமே வெற்றிகரமாக முடியவில்லை. 1238[17] மற்றும் 1245[18]ஆம் ஆண்டுகளில் அப்பாசியப் படைகள் படையெடுப்பாளர்களைத் தோற்கடித்தன.
வெற்றிகள் பெற்ற பொழுதும், அப்பாசியர்கள், மங்கோலியர்களுடன் நல்லுறவை வளர்க்கவே விரும்பினர். 1241ஆம் ஆண்டு முதல் ககானின் அவைக்கு ஆண்டுதோறும் காணிக்கை செலுத்துவதை அப்பாசியர்கள் வாடிக்கையாகப் பின்பற்றினர்.[16] 1246ஆம் ஆண்டு குயுக் கான் பதவியேற்றபோது கலீபாவின் தூதர்கள் பங்கேற்றனர்.[19] மேலும் 1251ஆம் ஆண்டு மோங்கே கான் பதவியேற்ற போதும் தூதர்கள் பங்கேற்றனர்.[20] தனது குறுகிய கால ஆட்சியின் போது குயுக், அல் முஸ்டசீமிடம் முழுவதுமாக மங்கோலிய ஆட்சிக்கு அடிபணியுமாறும், கரகோரத்திற்கு அவரை வருமாறும் அறிவுறுத்தினார். கலீபாவின் மறுப்பு மற்றும் மங்கோலியர்களின் ஆட்சியை விரிவுபடுத்துவதற்கு அப்பாசியர்கள் தெரிவித்த எதிர்ப்பு ஆகியவற்றின் காரணமாகக் ககான்கள் சோர்மகனின் உதவியாளர் மற்றும் பின்வந்தவரான பைஜூவிடம் தங்களது பேரரசின் பகுதிகளை விரிவுபடுத்தும் பொறுப்பைக் கொடுத்தனர்.
குலாகுவின் பயணம்
[தொகு]திட்டமிடல்
[தொகு]மோங்கே 1257ஆம் ஆண்டு மெசொப்பொத்தேமியா, சிரியா மற்றும் பாரசீகத்தின் மீது கட்டுக்கோப்பான அதிகாரத்தை நிறுவத் தீர்மானித்தார். ககான் தனது தம்பி குலாகு கானிடம் ஈல்கானரசு எனும் ஒரு துணைக் கானரசு மற்றும் இராணுவத்தை நிர்வகிக்கும் பொறுப்பைக் கொடுத்தார். கலீபகம் உள்ளிட்ட பல முஸ்லிம் அரசுகளைக் கட்டாயப்படுத்தி அடிபணிய வைக்கும் அறிவுரைகளையும் அவருக்குக் கொடுத்தார். மோங்கே அல் முஸ்டசீமைப் பதவியிலிருந்து தூக்கி எறியுமாறு அறிவுறுத்தாவிட்டாலும், குலாகுவிடம் நேரடியாக மற்றும் தனிநபராக அல் முஸ்டசீம் அடிபணியவோ அல்லது பாரசீக இஸ்மாயிலி அரசுகளுக்கு எதிரான குலாகுவின் படையெடுப்புக்கு இராணுவ ரீதியிலான காணிக்கைகளை வழங்கவோ மறுத்தால் பகுதாதுவை அழிக்குமாறு ஆணையிட்டார்.
தனது படையெடுப்புக்குத் தயாராவதற்கு ஒரு பெரிய பயணம் செய்யக்கூடிய படையைக் குலாகு உருவாக்கினார். மங்கோலியப் பேரரசில் இருந்த, இராணுவத்தில் பணியாற்றக்கூடிய வயதுடைய ஆண்களில் 10இல் ஒருவரைத் தனது படையில் இணைத்தார். இப்படையானது உருவாக்கப்பட்ட மங்கோலிய இராணுவங்களிலேயே எண்ணிக்கை அளவில் மிகப் பெரியது எனக் கருதப்படுகிறது. ஒரு மதிப்பீட்டின்படி இப்படையில் 1,50,000 வீரர்கள் இருந்தனர்.[21] ஒயிரட் நிர்வாகி அர்குன் அகா, பைஜூ, புகா தெமூர், குவோ கான், கித்புகா, குலாகுவின் சகோதரர் சுனிதை மற்றும் பல பிற போர்ப்பிரபுக்களும் இந்த இராணுவத்தில் தளபதிகளாகப் பணியாற்றினர்.[22] இப்படைக்குத் துணையாகக் கிறித்தவப் படைகளும் இணைந்தன. ஆர்மீனிய அரசர் மற்றும் அவரது இராணுவம், ஆன்டியோக் சமஸ்தானத்தில் இருந்து வந்த ஒரு பிராங்கியப் பிரிவு,[23] பல தசாப்தங்களுக்கு முன்னர் குவாரசாமிய அரசமரபினர் தங்களது தலைநகரான திபிலீசியைச் சூறையாடியதற்குப் பழிவாங்க சார்சியா இராச்சியத்தின் படைகள் முஸ்லிம் அப்பாசியர்களுக்கு எதிராகக் குலாகுவின் படையில் இணைந்தனர்.[24] இந்த இராணுவத்துடன் 1,000 சீனப் பீரங்கி வல்லுனர்களும் இணைந்தனர்.[25] அந்த நேரத்தில் வாழ்ந்த பாரசீக எழுத்தாளரான ஜுவய்னியின் கூற்றுப்படி ஈரானிய மற்றும் துருக்கிய மக்கள் குழுக்களின் துணைப் படைகளும் இந்த இராணுவத்தில் இணைந்தனர்.
ஆரம்பப் படையெடுப்புகள்
[தொகு]குலாகு தனது இராணுவத்தை முதலில் பாரசீகத்திற்குத் தலைமை தாங்கிச் சென்றார். அங்கு லுர்கள், புகாரா மற்றும் குவாரசமிய அரசமரபினரில் எஞ்சியவர்கள் ஆகியோருக்கு எதிராக வெற்றிகரமாகத் தாக்குதல்கள் தொடுத்தார். அவர்களை அடிபணிய வைத்த பிறகு தனது கவனத்தை நிசாரி இஸ்மாயிலிகள் மற்றும் அவர்களது தலைவர் இமாம் அலா அல்-தின் முகம்மது மீது திருப்பினார். மோங்கே, மற்றும் குலாகுவின் நண்பர் மற்றும் உதவியாளரான கித்புகா ஆகிய இருவரையும் கொல்வதற்கு அலா அல்-தின் முகம்மது முயற்சி செய்திருந்தார். அந்த இரு முயற்சிகளிலுமே அசாசின்கள் தோற்றபோதும், குலாகு இஸ்மாயிலிகளின் வலிமையான பகுதியான அலமுத்தை நோக்கி நேரடியாக தனது இராணுவத்தை அணிவகுக்கக் செய்தார். பிறகு 1255–56 ஆகிய காலகட்டத்தில் அலா அல்-தின் முகம்மதுக்குப் பிறகு அசாசின்களின் தலைவராகக் குறுகிய காலம் பதவி வகித்த இமாம் ருகின் அல்-துன் குர்ஷாவை மங்கோலியர்கள் கொன்றனர்.
பகுதாதுவைக் கைப்பற்றல்
[தொகு]மடல் பரிமாற்றம்
[தொகு]செப்டம்பரில் அல்-முசுதசீம் பில்லாவுடன் குலாகு கான் மடல் பரிமாற்றத்தைத் தொடங்கினார். இப்பரிமாற்றம் பிரெஞ்சு வரலாற்றாளார் இரீன் குரௌசத்தால் "வரலாற்றின் மிக பிரமிப்பையூட்டக்கூடிய வசனங்களில் ஒன்று" என்று குறிப்பிடப்படுகிறது.[26]
“ | இஸ்மாயிலிகளின் கோட்டைகள் வெல்லப்பட்டபோது உன்னுடைய உதவியை வேண்டுவதற்காக நாங்கள் தூதர்களை அனுப்பினோம். பதிலுக்கு நீ எங்களுக்கு அடிபணிந்து இருப்பதாகக் கூறினாய். ஆனால் நீ துருப்புகளை அனுப்பவில்லை. அடிபணிந்து இருப்பதற்கும், கூட்டணிக்குமான ஒரு அறிகுறி யாதெனில் நாம் எதிரிகளுக்கு எதிராக படையெடுப்பு மேற்கொள்ளும் போது எங்களுக்கு நீ துருப்புகளை வழங்கி உதவுவதாகும். நீ ஆனால் அதை செய்யவில்லை. நீ மன்னிக்க வேண்டும் என்று மட்டுமே கேட்கிறாய். உன்னுடைய குடும்பமானது எவ்வளவு பழமையானதும், எவ்வளவு பெருமை உடையதுமானதாக இருந்தாலும் சரி, உன்னுடைய அரசமரபானது எவ்வளவு அதிர்ஷ்டத்தை பெற்று இருந்தாலும் சரி, "என்றாவது நிலவின் வெளிச்சமானது சூரியனை மறையச் செய்ய இயலுமா?" செங்கிஸ் கானின் காலத்தில் இருந்து தற்போதைய நாள் வரை உலகம் மற்றும் அதன் மக்கள் மீது மங்கோலிய இராணுவங்கள் எந்தத் தண்டனைகளைக் கொடுத்துள்ளன என்பதை உயர் நிலை மற்றும் தாழ் நிலை ஆட்களிடமிருந்து நீ சந்தேகமின்றி அறிந்திருப்பாய். தங்களது மேதகைமை மற்றும் சக்திக்காகப் புகழ் பெற்றிருந்த குவாரசம் ஷாக்கள், செல்யூக்குகள், தைழத்தின் இறையாண்மையுள்ள ஆட்சியாளர்கள், அடாபெக்குகள் மற்றும் பிற இளவரசர்களின் அரசமரபுகள் அடைந்த வெட்கங்களை நீ அறிந்திருப்பாய். இதற்கு ஆதி அந்தமற்ற கடவுளுக்குத்தான் நாங்கள் நன்றி சொல்ல வேண்டும். இதில் ஒவ்வொரு அரசமரபும் அதன் ஆதிக்கத்தை நிறுவியிருக்கையில், இதில் எந்த ஒரு இனங்களுக்கும் பகுதாதுவின் வாயிற் கதவுகள் மூடப்படவில்லை. இவர்கள் ஒவ்வொருவரும் பகுதாதுவில் அரியணை அமைத்து ஆட்சி செய்துள்ளனர். எவ்வாறு இந்த நகரத்திற்கான வழியானது ஏராளமான படைகளையும், பெரும் சக்தியையும் கொண்டுள்ள எங்களுக்கு மறுக்கப்பட முடியும்? நாங்கள் உனக்கு ஏற்கனவே எச்சரித்துள்ளோம். மீண்டும் இன்று உனக்குக் கூறுகிறோம்: வெறுப்பு மற்றும் எதிர்ப்பு எண்ணங்களை உன் மனதில் இருந்து நீக்கி விடு. எங்களது தரத்திற்கு எதிராகப் போராடாதே. ஏனெனில், நீ உனது நேரத்தைத் தான் வீணடிப்பாய். எனவே கடந்த காலத்தைப் பற்றி எண்ணாமல் நகரத்தின் பாதுகாப்பு அரண்களைக் கலீபா நீக்குவதற்கு ஒப்புக் கொள்ள வேண்டும். அகழிகளை நிரப்ப வேண்டும். தனது நிர்வாகத்தைத் தன் மகனின் கையில் கொடுக்க வேண்டும். நல்ல நேரத்தில் தானே எங்களிடம் வர வேண்டும். எனினும் அவர் எங்களிடம் வர மறுத்தால், அவர் தன்னுடைய உயர் அதிகாரி, சுலைமான் ஷா மற்றும் தேவத்தார் [துணை-வேந்தர்] ஆகியோரை அனுப்ப வேண்டும். இவ்வாறாக அவர்கள் அனைவரும் எங்களது கருத்துகளை வார்த்தை வார்த்தையாக அவரிடம் தெரிவிக்கலாம். அவர் எங்களது ஆணைகளின் படி நடந்தால், அவர் குறித்த எந்த ஒரு வெறுப்பையும் வெளிக்காட்டுவது என்பது எங்களுக்குத் தேவையற்றதாக இருக்கும். அவரது அரசுகள், அவரது உடைமைகள், அவரது துருப்புகள் மற்றும் அவரது குடிமக்களை அவர் தொடர்ந்து கொண்டிருப்பார். ஆனால், எங்களது அறிவுரையைக் கேட்க அவர் மறுத்தால், எதிர்ப்பு மற்றும் போர் வழியைப் பின்பற்ற விரும்பினால், அவரது படைகளை நிறுத்தி யுத்த களத்தைப் பெயரிட்டால், நாங்களும் அவருடன் போர் புரிவதற்குத் தயாராக உள்ளோம். நியாயமான கோபத்துடன் ஒரு முறை நான் எனது படைகளைப் பகுதாதுவை நோக்கி அழைத்து வந்தால் நீ உயர்ந்த சொர்க்கம் முதல் ஆழமான பூமி வரை எங்கு மறைந்திருந்தாலும்,
வானத்தின் கிரகங்களில் இருந்து உன்னைக் கீழே இழுத்து வருவேன், ஒரு சிங்கம் தன் இரையை காற்றில் தூக்கி வீசுவதைப் போல உன்னைத் தூக்கி எறிவேன், உன்னுடைய நாட்டில் ஒரே ஒரு மனிதனைக் கூட உயிருடன் விடமாட்டேன், உன் நகரம், நிலங்கள் மற்றும் பேரரசை தீ சுவாலையாக மாற்றுவேன். உன்னுடைய தலை மற்றும் உன்னுடைய பண்டைய குடும்பத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்கு உனக்கு எண்ணம் இருந்தால், எனது அறிவுரையைக் கவனமாகக் கேள். இதை ஏற்பதற்கு மறுத்தால் கடவுளின் எண்ணத்தின் பொருள் என்ன என்பதை நான் உனக்குக் காட்டுவேன். |
” |
— கலீபா அல்-முஸ்டசீம் பில்லாவுக்குக் குலாகு அனுப்பிய மடல், செப்டம்பர் 1257 (இரசீத்தல்தீனின் சமி அல் தவரிக் நூல்) |
“ | ஓ, இளைஞனே நீ உன்னுடைய இராணுவ வாழ்க்கையைத் தற்போது தொடங்கியுள்ளாய். வாழ்வதற்கு மிகச் சிறிய விருப்பத்தைத் தான் நீ காட்டுகிறாய். 10 நாட்களின் மகிழ்ச்சி போதை மற்றும் செழிப்பில் ஒட்டு மொத்த உலகத்தை விட நீ பெரியவன் என்று நம்புகிறாய். உனது ஆணைகள் தடுக்க இயலாத வலிமையுடன் இயங்குகிற விதி என்று நீ நினைக்கிறாய். நீ பெறுவதற்குச் சிறிது கூட வாய்ப்பு இல்லாதவற்றை ஏன் என்னிடமிருந்து கேட்கிறாய்?
உத்தி, துருப்புகள் மற்றும் சுருக்குக் கயிறுகளுடன் நீ வருகிறாய். ஆனால் எவ்வாறு ஒரு நட்சத்திரத்தை பிடித்து இழுக்கப் போகிறாய்? கிழக்கு முதல் மேற்கு வரை மன்னர்களோ அல்லது யாசகர்களோ, இளைஞர்களோ அல்லது முதியவர்களோ ஆகிய அனைவரும் இந்த அரசவையில் அடிமைகள் என்பதை நீ மறந்து விட்டாய். அவர்கள் எனது இராணுவத்தில் பங்காற்றுவார்கள். என்னுடைய இராச்சியத்தின் இந்தத் தற்காப்பாளர்களை ஒன்றிணையுமாறு நான் அவர்களிடம் ஆணையிடும் அந்தத் தருணத்தில், ஈரான் வேலையை முடிப்பதை நான் தொடங்குவேன். அதற்குப் பிறகு துரானுக்கு எனது அணிவகுப்பை நான் தொடர்வேன். ஒவ்வொருவரையும் அவர்களை வைக்க வேண்டிய இடத்தில் வைப்பேன். ஐயத்துக்கிடமின்றி இந்தப் பூமியின் முகமானது பிரச்சனைகள் மற்றும் ஒழுங்கற்ற தன்மையால் பரவியிருக்கும். பழி வாங்கும் ஆர்வமோ அல்லது வீரர்களின் கருத்துக்களை நிறைவேற்ற வேண்டும் என்ற வேட்கையோ எனக்கு இல்லை. நானும், குலாகு கானும் ஒரே மனம், ஒரே மொழியைக் கொண்டிருக்கும் போது எனது குடிமக்கள் கடந்து போகும் இராணுவங்களுக்குப் பலியாவதை நான் விரும்பவில்லை. என்னைப் போல் நீயும் நட்புக்கான விதையை ஊன்ற நினைத்தால் பாதுகாப்பு அரண்களைப் பிரிக்க வேண்டும் என ஏன் நீ பேசுகிறாய்? நல் வழியைப் பின்பற்று. குராசானுக்குத் திரும்பிச் செல். எனினும் நீ போரை விரும்பினால், தயங்காதே, எந்த ஒரு சாக்குப் போக்கையும் கூறாதே, நீ போர் செய்ய முடிவெடுத்தால் என்னிடம் தசம இலட்சங்களில் குதிரைப்படையும், காலாட்படையும் உள்ளன, அவர்கள் அனைவரும் போருக்குத் தயாராக உள்ளனர். பழி வாங்கும் தருணம் வரும் போது யாராலுமாவது கடலின் நீரைக் கரையச் செய்ய இயலுமா? |
” |
— கலீபா அல்-முஸ்டசீம் பில்லா குலாகுவுக்கு அனுப்பிய பதில் மடல், (இரசீத்தல்தீனின் சமி அல் தவரிக் நூல்) |
“ | ஆதி அந்தமற்ற கடவுள் செங்கிஸ் கான் மற்றும் அவரது குடும்பத்தை உயர்ந்த நல்லொழுக்கம் மற்றும் நன்னடத்தை காரணமாகப் பிறரிடம் இருந்து மதிப்பைப் பெறும் நிலைக்கு உயர்த்தினார். கிழக்கில் இருந்து மேற்கு வரை ஒட்டு மொத்த உலகத்தின் பேரரசை எங்களுக்குக் கொடுத்தார். எங்களிடம் உண்மையில் பாதுகாப்புப் பெறும் ஒவ்வொரு மனிதனும் அவனது உடமைகள், மனைவி, குழந்தைகள் மற்றும் உயிரை வைத்துக் கொள்வதை உறுதி செய்து கொள்ளலாம். எதிர்ப்புக் காட்டும் எந்த ஒரு ஆணும் இதில் எதையும் பெற மாட்டான். ஆடம்பரப் பொருட்கள், செல்வச் செழிப்பு, அகந்தை, மிதக்கும் மகிழ்ச்சி குறித்த மாயைகள் ஆகியவை உன்னை முழுவதுமாக மயக்கிவிட்டன. நல்ல எண்ணம் கொண்ட மனிதர்களின் வார்த்தைகள் உன் மீது எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை எனும் அளவுக்கு இது இருக்கிறது. உனக்கு நெருங்கியவர்களின் அறிவுரை மற்றும் எச்சரிக்கைகளைக் கேட்காத அளவுக்கு உனது காதுகள் மூடியுள்ளன. உனது தந்தை மற்றும் மூதாதையர்கள் பின்பற்றிய பாதையை நீ முழுவதுமாகக் கை விட்டு விட்டாய். தற்போது உன்னால் செய்ய முடிவது என்பது போருக்குத் தயாராவது மட்டுமே. ஏனெனில், எறும்புகள் மற்றும் வெட்டுக்கிளிகளைப் போல ஏராளமான எண்ணிக்கை கொண்ட இராணுவத்திற்குத் தலைமை தாங்கி பகுதாதுவுக்கு எதிராக நான் அணி வகுக்கப் போகிறேன். | ” |
— கலீபா அல்-முஸ்டசீம் பில்லாவுக்குக் குலாகு அனுப்பிய இரண்டாவது மடல் (இரசீத்தல்தீனின் சமி அல் தவரிக் நூல்) |
“ | பாட்ஷா குலாகு இதை அறியாமல் இருந்திருந்தாலும், அவர் வரலாறு அறிந்தவர்களிடம் இதைக் கேட்டு அறிந்துகொள்ளலாம். இதுநாள் வரையிலும் அப்பாசிய அரசமரபு மற்றும் பகுதாதுவைத் தாக்கிய ஒவ்வொரு அரசனும் சோகமான அழிவை சந்தித்துள்ளான். அனைத்து வலிமை பொருந்திய மற்றும் சக்திவாய்ந்த அரசர்கள் மற்றும் இளவரசர்கள் தாக்கிய போதும் இந்த அரண்மனையின் அடித்தளமானது மிகவும் வலிமையானதாகும். உலகம் அழியும் நாள் வரை அது நிலைத்திருக்கும். முகம்மது குவாரசாமிய ஷா ஒரு பெரும் ராணுவத்துடன் இந்த அரச மரபை அழிக்க வந்தார். ஆனால் பனிப் புயலில் சிக்கி திரும்பிச் சென்றார். உன்னுடைய தாத்தா செங்கிஸ் கானால் அவர் தன்னுடைய முயற்சிக்காக தண்டனை பெற்று, காசுப்பியன் கடலில் ஒரு தீவில் இறந்தார். | ” |
— கலீபா அல்-முஸ்டசீம் பில்லாவின் மற்றொரு மடல் (இரசீத்தல்தீனின் சமி அல் தவரிக் நூல்) |
“ | இரும்பைக்கொண்டு ஒரு நகரத்தையும் மதில் சுவர்களையும் உருவாக்கு. எஃகைக் கொண்டு காவல் கோபுரங்களையும், சுவர்களையும் எழுப்பு. பேய்களையும், தேவதைகளையும் கொண்டு ஒரு ராணுவத்தை உருவாக்கு. பிறகு என்னுடன் போரிட வா! நீ வானத்திலுள்ள கிரகங்களுக்கு மேல் இருந்தாலும் ஒரு சிங்கத்தின் தாடைகளுக்குள் உன்னை அனுப்பி வைப்பேன். | ” |
— குலாகு அனுப்பிய மற்றொரு மடல் (இரசீத்தல்தீனின் சமி அல் தவரிக் நூல்) |
“ | நான் படைத்தவனைச் சார்ந்துள்ளேன். திர்காம்களையும், தினார்களையும் சார்ந்தல்ல. அழிவற்ற கடவுள் எனக்கு உதவினால் கலீபா மற்றும் அவரது துருப்புகளிடமிருந்து நான் ஏன் பயப்பட வேண்டும்? | ” |
— குலாகு (இரசீத்தல்தீனின் சமி அல் தவரிக் நூல்) |
பகுதாது நோக்கிய குலாகுவின் அணிவகுப்பு
[தொகு]குலாகு அசாசின்களைத் தோற்கடித்த பிறகு அல் முஸ்டசீமிற்குத் தகவல் அனுப்பினார். மோங்கே கான் விதித்த நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொள்ளுமாறு கூறினார். தனது அறிவுரையாளர் மற்றும் முக்கிய மந்திரி இபின் அல்-அல்கமியின் அறிவுரையின் அதிகப்படியான தாக்கம் காரணமாக முஸ்டசீம் மறுத்தார். அடிபணிவதற்கு அல்கமி எதிர்ப்பு தெரிவித்ததற்கு வரலாற்றாளர்கள் பல்வேறு வகையான காரணங்களைக் கூறுகின்றனர். அவற்றுள் இராஜ துரோகம்[30] மற்றும் இயலாமை[31] ஆகியவற்றையும் கூறுகின்றனர். அல்கமி படையெடுப்பின் தீவிரத் தன்மையைப் பற்றி கலீபாவிடம் பொய் கூறியதாகவும் தெரிகிறது. கலீபகத்தின் தலைநகரானது ஒரு மங்கோலிய இராணுவத்தால் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டால் முழு இஸ்லாமிய உலகமும் நமக்கு உதவி செய்ய வரும் என்று அல் முஸ்டசீமிடம் உறுதியளித்தார்.[31]
குலாகு கான் திரும்பிச் சென்றால் ஆண்டு தோறும் கருவூலத்திலிருந்து திறை செலுத்துவதாக கலீபா கூறினார். ஆனால் குலாகு
“ | இவ்வளவு தூரம் வந்த பிறகு கலீபா அவர்களை காணாமல் நாங்கள் எவ்வாறு திரும்பிச் செல்வது? அவரைக் கண்டு சந்தித்ததற்குப் பிறகு அவருடைய அனுமதியைப் பெற்று நாங்கள் திரும்பிச் செல்வோம். | ” |
[32] என்றார்.
குலாகுவின் நிபந்தனைகளுக்கு முஸ்டசீம் பதிலளித்த விதமானது மேற்கொண்டு பேச்சுவார்த்தை நடத்தாமல் இருக்கும் அளவிற்கு மங்கோலியத் தளபதியை அச்சுறுத்தும் மற்றும் எதிர்க்கும் விதமாக இருந்தபோதிலும்,[33] அல் முஸ்டசீம் பகுதாதுவில் தனது கட்டுப்பாட்டின் கீழ் இருந்த துருப்புக்களை அழைக்கவில்லை. அவர் நகரின் மதில்களையும் உறுதிப்படுத்தவில்லை. சனவரி 11ஆம் தேதி மங்கோலியர்கள் நகரத்தை நெருங்கினார்கள்.[31] நகரத்தை சுற்றி இடுக்கி போன்ற அமைப்பை ஏற்படுத்துவதற்காக டைகிரிசு ஆற்றின் இரு கரைகளிலும் படைகளை நிறுத்தினர். அல் முஸ்டசீம் கடைசியில் அவர்களுடன் போர் புரிய முடிவுசெய்தார். 20,000 குதிரைப் படைவீரர்களை மங்கோலியர்களைத் தாக்குவதற்காக அனுப்பினார். ஆனால் அது ஒரு பயனற்ற சைகை. அக்குதிரைப் படையானது மங்கோலியர்களால் தீர்க்கமாகத் தோற்கடிக்கப்பட்டது. அப்பாசியப் படைகள் இருந்த இடத்திற்கு பின்புறம் இருந்த டைகிரிசு ஆற்றின் வெள்ளத்தைக் கட்டுப்படுத்தும் மதில்களை மங்கோலியர்கள் உடைத்தனர். இதனால் அப்பாசியப் படைகளின் முகாமானது வெள்ளத்தில் மூழ்கியது. இரு படைகளும் போருக்காகச் சந்தித்தபொழுது பெரும்பாலான அப்பாசியப் படைகள் மூழ்கி இறந்தன அல்லது போர்க்களத்தை விட்டுச் சென்றுவிட்டன. சிலரே பகுதாதவிற்குத் திரும்பினர். 18ஆம் தேதி மங்கோலியர்கள் நகரத்தின் முன் நின்றனர்.[31]
நகர முற்றுகை
[தொகு]அல் முஸ்டசீமின் கீழ் இருந்த 20,000 குதிரைப்படை வீரர்கள் உட்பட 50,000 வீரர்கள் தங்களது தலைநகரைத் தற்காத்துக்கொள்வதற்காக அப்பாசியக் கலீபகத்தால் அழைக்கப்பட்டனர். எனினும் இந்தத் துருப்புகள் அவசரமாக ஒருங்கிணைக்கப்பட்டன. இதன் காரணமாக அவர்களிடம் சரியான ஆயுதங்கள் இல்லாமல் இருந்தன. படைகளும் ஒழுங்கற்று இருந்தன. தனது நாட்டைக் காப்பாற்ற மற்ற முஸ்லிம் பேரரசுகளிலிருந்து படைவீரர்களை அழைக்கும் அதிகாரம் கலீபாவிற்குப் பெயரளவில் இருந்தபோதிலும், அவர் அதனைச் செய்யாமல் விட்டுவிட்டார் அல்லது அழைக்கும் திறைமையற்று இருந்தார். கலீபாவின் எதிர்ப்புக் குணம் காரணமாக எகிப்திய அடிமை அரசமரபினர் மற்றும் சிரிய அமீர்களின் விசுவாசத்தை இழந்திருந்தார். அதே நேரத்தில் எகிப்திய அடிமை அரசமரபினர் மற்றும் சிரிய அமீர்கள் தங்களது தற்காப்புக்காகத் தயாராகிக் கொண்டிருந்தனர்.[34]
சனவரி 29ஆம் தேதி மங்கோலிய இராணுவம் தனது பகுதாது முற்றுகையைத் தொடங்கியது. நகரத்தைச் சுற்றி ஒரு அகழி மற்றும் வலிமையான கூர்மையான கட்டைகள் கொண்ட வேலியை அமைத்தது. முற்றுகை எந்திரங்கள் மற்றும் பெரிய கவண்களைக் கொண்டு மங்கோலியர்கள் நகரத்தின் மதில் மதில்களை உடைக்க முயன்றனர். பெப்ரவரி 5ஆம் தேதி தற்காப்புப் பகுதிகளில் பெரும்பாலானவற்றைக் கைப்பற்றினர். மதில்களை மீட்டெடுக்கத் தனது படைகளுக்குக் குறைவான வாய்ப்புகளே உள்ளன என்பதை உணர்ந்த அல் முஸ்டசீம் வெளிப்படையாகக் குலாகுவுடன் பேச்சுவார்த்தை நடத்த முயற்சி செய்தார். ஆனால் குலாகு மறுத்தார். பகுதாதுவின் 3,000 முக்கியமான நபர்கள் குலாகுவுடன் பேச்சுவார்த்தை நடத்த முயற்சித்தனர். ஆனால் கொல்லப்பட்டனர்.[35] 5 நாட்களுக்குப் பிறகு பெப்ரவரி 10ஆம் தேதி நகரமானது சரணடைந்தது. ஆனால் 13ஆம் தேதி வரை மங்கோலியர்கள் நகரத்திற்குள் நுழையவில்லை. அதற்குப் பிறகு ஒரு வாரத்திற்குப் படுகொலைகள் மற்றும் அழிவுகள் ஏற்பட்டன.
அழிவு
[தொகு]பல வரலாற்றுப் பதிவுகள் மங்கோலிய வெற்றியாளர்களின் கொடுமைகளை விளக்கியுள்ளன. பகுதாதுவானது பல தசாப்தங்களுக்கு மக்கள்தொகையற்றச் சிதைந்த நகரம் ஆனது.[36][37] அதனால் படிப்படியாகத் தான் தனது முன்னாள் பெருமைகளில் சிறிதளவைப் பெறமுடிந்தது.[38]
அக்காலத்தில் வாழ்ந்தவர்களின் பதிவுகளின் படி, மங்கோலிய வீரர்கள் சூறையாடினர். பின்னர் அரண்மனைகள், நூலகங்கள் மற்றும் மருத்துவமனைகளை அழித்தனர். பகுதாதுவின் 36 பொது நூலகங்களில் இருந்த விலை மதிப்பற்ற புத்தகங்கள் கிழித்தெறியப்பட்டன. சூறையாடியவர்கள் அப்புத்தகங்களின் தோல் உறைகளைத் தங்களது காலணிகளாகப் பயன்படுத்தினர்.[39] பல தலைமுறைகளாகக் கட்டப்பட்ட பெரிய கட்டடங்கள் எரித்துத் தரைமட்டமாக்கப்பட்டன. நூல்களை நோக்கிய வன்முறை குறித்த பதிவுகள் 14ஆம் நூற்றாண்டில் தோன்றின. ஆற்றில் தூக்கி எறியப்பட்ட புத்தகங்களின் மை காரணமாக ஆறானது கருப்பு நிறத்திற்கு மாறியது போன்ற அழிவுக் கதைகள் 16ஆம் நூற்றாண்டில் தான் தோன்றின எனக் கருதப்படுகிறது.[40][41] மிக்கல் பிரான் என்பவரின் கூற்றுப்படி, மங்கோலியக் காட்டுமிராண்டித்தனத்தை விளக்கிக் கூறப் பயன்படுத்தப்பட்ட இலக்கியப் புனைவு இதுவாகும்.
குடிமக்கள் தப்பியோட முயற்சித்தனர். ஆனால் மங்கோலிய வீரர்களால் இடைமறிக்கப்பட்டனர். அவர்களைப் பெண்கள் அல்லது குழந்தைகள் எனப் பார்க்காமல் மங்கோலிய வீரர்கள் கொன்றனர். மார்ட்டின் சிக்கர் எழுதியதன்படி கிட்டத்தட்ட 90,000 மக்கள் இறந்திருக்கலாம்.[42][43] மற்ற மதிப்பீடுகள் இன்னும் அதிகமான எண்ணிக்கையை கூறுகின்றன. ஆனால் அவற்றைப் பெரும்பாலும் உறுதியாக மிகைப்படுத்தப்பட்டவை எனக் கூறலாம்.[44]
கலீபா அல் முஸ்டசீம் பிடிக்கப்பட்டார். அவரது குடிமக்கள் கொல்லப்படுவதையும், அவரது கருவூலம் சூறையாடப்படுவதையும் கட்டாயப்படுத்திப் பார்க்க வைக்கப்பட்டார். பெரும்பாலான பதிவுகளின் படி, கலீபா குதிரைகளின் மூலம் மிதிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். அரச குலத்தைச் சேர்ந்தவர்களின் இரத்தம் பூமியில் சிந்தினால் பூமியின் கோபத்திற்கு ஆளாக வேண்டிவரும் என்கிற மங்கோலியர்களின் நம்பிக்கை காரணமாகக் கலீபாவை ஒரு தோல் போர்வையில் சுற்றி அவர் மீது குதிரைகளை ஓடவிட்டு மங்கோலியர்கள் கொன்றனர். அல் முஸ்டசீமின் ஒரு மகனைத் தவிர மற்ற அனைத்து மகன்களும் கொல்லப்பட்டனர். அம்மகன் மங்கோலியாவிற்கு அனுப்பப்பட்டார். அங்கு அவர் திருமணம் செய்து குழந்தைகள் பெற்றுக் கொண்டதாகவும், இஸ்லாமில் அதற்கு பிறகு அவர் எந்தப் பங்கையும் ஆற்றவில்லை எனவும் மங்கோலிய வரலாற்றாளர்கள் எழுதியுள்ளனர்.
சிதைந்த நகரத்தில் இருந்து வரும் அழுகிய துர்நாற்றத்தில் இருந்து விலகி இருக்க நகரத்தின் மீது காற்றடிக்கும் பக்கம் குலாகு தனது முகாமை மாற்றினார்.[45]
வரலாற்றாளர் டேவிட் மார்கன் ஈல்கானரசின் 14ஆம் நூற்றாண்டு வரலாற்றாளர் வசாப் அழிவைப் பற்றி விளக்கியதைப் பின்வருமாறு கூறுகிறார்: "பசியுடைய வல்லூறுகள் புறாக்களின் கூட்டத்தைத் தாக்குவதைப் போல, அவர்கள் நகரத்தை தாக்கினர், அல்லது ஓநாய்கள் வேகத்துடன் செம்மறி ஆடுகளை தாக்குவதைப் போல, கட்டவிழ்த்து விடப்பட்டு வெட்கமற்ற முகங்களுடன் கொல்வதையும், பயங்கரவாதத்தைப் பரப்புவதையும் செய்தனர்...தங்கத்தால் செய்யப்பட்டு ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட படுக்கைகள் மற்றும் மெத்தைகள் கத்திகளால் வெட்டப்பட்டன மற்றும் சிறு துண்டுகளாகக் கிழித்தெறியப்பட்டன."[27]
கடுமையான மங்கோலிய எதிர்ப்பு நடுக்கால ஆதாரங்களின் மீது சில நவீன வரலாற்றாளர்கள் சந்தேகங்களைத் தெரிவிக்கின்றனர்.[46] உதாரணமாக ஜார்ஜ் லேன், பெரிய நூலகம் அழிக்கப்பட்டது என்பதில் சந்தேகம் கொள்கிறார். ஏனெனில் மங்கோலியப் படையில் இருந்த நசீருத்தீன் அத்-தூசீ போன்ற படித்த உறுப்பினர்கள் அத்தகைய செயலுக்கு அனுமதி அளித்து இருக்கமாட்டார்கள். மேலும் நோய்களே இறப்புகளுக்கு முக்கியமான காரணம் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.[47] முதன்மை ஆதாரங்கள், தூசீ ஆயிரக்கணக்கான தொகுதிப் புத்தகங்களை எடுத்து மரகே என்ற இடத்தில் உள்ள ஒரு கட்டடத்தில் வைத்ததாகக் குறிப்பிடுகின்றன.[48][49][50]
விவசாய வீழ்ச்சிக்கான காரணங்கள்
[தொகு]மெசொப்பொத்தேமியாவைப் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகக் காப்பாற்றிய நீர்ப்பாசன உள்கட்டமைப்புகளின் பெரும்பகுதியை மங்கோலியப் படையெடுப்பானது அழித்ததாகச் சில வரலாற்றாளர்கள் நம்புகின்றனர். இராணுவ உத்தியாக வாய்க்கால்கள் துண்டிக்கப்பட்டன. ஆனால் அவை புனரமைக்கப்படவில்லை. கால்வாய் அமைப்பைப் பராமரிக்கப் போதிய வேலையாட்களோ அல்லது அமைப்போ இல்லாத காரணத்தால் மக்களில் பல பேர் இறந்தனர் அல்லது வேறு இடங்களுக்குத் தப்பித்து ஓடினார். நீர்ப்பாசன அமைப்பானது உடைக்கப்பட்டது அல்லது மண்மூடிப் போனது. இந்தக் கோட்பாடானது வரலாற்றாளர் சுவடோபிலக் சவுசெக்கின் 2000ஆம் ஆண்டு புத்தகமான எ ஹிஸ்டரி ஆப் இன்னர் ஆசியாவில் முன்னேற்றப்பட்டுக் (இது முதல்முறை அல்ல) கூறப்பட்டுள்ளது.
விவசாய வீழ்ச்சிக்கு முதன்மையான காரணமாக மற்ற வரலாற்றாளர்கள் மண் உப்புத்தன்மையுடையதாக மாறுவதைக் கூறுகின்றனர்.[51]
போருக்குப் பிறகு
[தொகு]அந்நேரத்தில் நசீருத்தீன் அத்-தூசீயும் பகுதாதுவில் இருந்திருப்பார் என்று கருதப்படுகிறது. அவர் பின் வரும் உரையாடலைப் பதிவு செய்துள்ளார்:[52]
[குலேகு] ஒரு தங்கத் தட்டை கலீபாவின் முன் வைத்து "சாப்பிடு!" என்றார்.
"இது சப்பிட இயலாதது," என்றார் கலீபா.
"பிறகு இதை ஏன் வைத்திருந்தாய்?" என்று கான் கேட்டார். "உன் படை வீரர்களிடம் இதை ஏன் கொடுக்கவில்லை? உன் இரும்புக் கதவுகளை அம்பு நுனிகளாக ஏன் மாற்றவில்லை? ஆற்றங்கரைக்கு வந்து என்னை ஆற்றைக் கடக்க இயலாமல் செய்திருக்கலாம் அல்லவா?" என்றார்.
"அது கடவுளின் எண்ணம்", என்று கலீபா பதில் அளித்தார்.
"உனக்கு நிகழப் போவதும் கடவுளின் எண்ணமே," என்றார் கான்.
பகுதாதுவைப் புனரமைக்க 3,000 மங்கோலிய வீரர்களை குலாகு விட்டுச் சென்றார். சாங் அரசமரபைக் கைப்பற்ற குப்லாய் கானுக்கு உதவ யுவான் அரசமரபுக்கு குவோ கான் சென்றபிறகு, பகுதாது, கீழ் மெசொப்பொத்தேமியா மற்றும் கூசித்தான் மாகாணம் ஆகியவற்றின் ஆளுநராக அடா-மாலிக் ஜுவய்னி நியமிக்கப்பட்டார். மங்கோலியக் குலாகுவின் நெஸ்டோரியக் கொள்கையைப் பின்பற்றிய மனைவியான தோகுஸ் கதுன் வெற்றிகரமாகக் குறுக்கிட்டுப் பகுதாதுவின் கிறித்தவக் குடிமக்களின் உயிரைக் காப்பாற்றினார்.[53][54] நெஸ்டோரியக் கத்தோலிக்கக் கிறித்தவரான மர் மகிகாவிற்குத் தனது தேசிய மதிப்பு வாய்ந்த அரண்மனையில் தங்குவதற்குக் குலாகு இடமளித்தார். அவருக்காக ஒரு தேவாலயத்தைக் கட்டிக்கொடுக்க ஆணையிட்டார்.[55]
ஆரம்பத்தில் பகுதாதுவின் வீழ்ச்சியானது மொத்த முஸ்லிம் உலகத்திற்கும் அதிர்ச்சியளித்தது. பல ஆண்டு முற்றிலுமான அழிவிற்குப் பிறகு, நகரமானது மீண்டும் பொருளாதார மையமானது. இங்கு ஈல்கான்களின் ஆட்சியின் கீழ் நாணயம் அச்சிடுதல் மற்றும் மத விவகாரங்கள் செழிப்பான முறையில் நடைபெற்றன.[56] தலைமை மங்கோலியத் தருகச்சி (வரி வசூலிப்பவர்) இந்த நகரத்தில் தங்க வைக்கப்பட்டார்.[57]
1252ஆம் ஆண்டு இஸ்லாமுக்கு மதம் மாறிய பெர்கே, பகுதாதுவைக் குலாகு அழித்ததால் சீற்றம் கொண்டார். இஸ்லாமிய வரலாற்றாளர் ரசீத்தல்தீனின் கூற்றுப்படி, மோங்கே கானுக்குக் கீழ்க்கண்ட செய்தியைப் பாகுதாது மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக அனுப்பினார் (மோங்கே சீனாவில் இறந்ததை அவர் அறிந்திருக்கவில்லை): "அவன் (குலாகு) முஸ்லிம்களின் அனைத்து நகரங்களையும் சூறையாடிவிட்டான். கடவுளின் துணையோடு ஏராளமான அப்பாவி மக்களின் இரத்தத்திற்கு அவனைப் பொறுப்பேற்கச் செய்வேன்."
மங்கோலியச் சகோதரத்துவம் காரணமாகக் குலாகுவுடன் ஆரம்பத்தில் போர்புரியத் தயக்கம் இருந்தபோதிலும், தங்க நாடோடிக் கூட்டத்தின் பொருளாதாரச் சூழ்நிலையானது ஈல்கானரசுக்கு எதிராகப் போரை அறிவிக்க பெர்கேவிற்கு வழிவகுத்தது. இந்தப் போர் பெர்கே-குலாகு போர் என்று அறியப்படுகிறது.[58]
மேலும் காண்க
[தொகு]- அப்பாசியக் கலீபகம்
- இசுலாமியப் பொற்காலம்
- மண் உப்புத்தன்மை
- மோங்கே கான்
- மங்கோலியப் பேரரசு
- எகிப்தின் மம்லுக் சுல்தானகம்
உசாத்துணை
[தொகு]குறிப்புகள்
[தொகு]- ↑ Khanbaghi, 60
- ↑ Demurger, 80–81; Demurger 284
- ↑ Demurger, 80–81; Demurger 284
- ↑ John Masson Smith, Jr. Mongol Manpower and Persian Population, pp. 276
- ↑ John Masson Smith, Jr. Mongol Manpower and Persian Population. pp. 271–299
- ↑ Andre Wink, Al-Hind: The Making of the Indo-Islamic World, Vol.2, (Brill, 2002), 13. (subscription required)
- ↑ The different aspects of Islamic culture: Science and technology in Islam, Vol. 4, Ed. A. Y. Al-Hassan, (Dergham sarl, 2001), 655.
- ↑ Matthew E. Falagas, Effie A. Zarkadoulia, George Samonis (2006). "Arab science in the golden age (750–1258 C.E.) and today", The FASEB Journal 20, pp. 1581–1586.
- ↑ Matthew E. Falagas, Effie A. Zarkadoulia, George Samonis (2006). "Arab science in the golden age (750–1258 C.E.) and today", The FASEB Journal 20, pp. 1581–1586.
- ↑ Jack Weatherford Genghis Khan and the making of the modern world, p.135
- ↑ Jack Weatherford Genghis Khan and the making of the modern world, p.135
- ↑ Jack Weatherford Genghis Khan and the making of the modern world, p.136
- ↑ Sh.Gaadamba Mongoliin nuuts tovchoo (1990), p.233
- ↑ Timothy May Chormaqan Noyan, p.62
- ↑ Al-Sa'idi,., op. cit., pp. 83, 84, from Ibn al-Fuwati
- ↑ 16.0 16.1 C. P. Atwood Encyclopedia of Mongolia and the Mongol Empire, p.2
- ↑ Spuler, op. cit., from Ibn al-'Athir, vol. 12, p. 272.
- ↑ "Mongol Plans for Expansion and Sack of Baghdad". alhassanain.com. Archived from the original on 2012-04-26.
- ↑ Giovanni, da Pian del Carpine (translated by Erik Hildinger) The story of the Mongols whom we call the Tartars (1996), p. 108
- ↑ "Wednesday University Lecture 3". depts.washington.edu. பார்க்கப்பட்ட நாள் 1 May 2018.
- ↑ "European & Asian History". telusplanet.net. Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2020-05-23.
- ↑ Rashiddudin, Histoire des Mongols de la Perse, E. Quatrieme ed. and trans. (Paris, 1836), p. 352.
- ↑ Demurger, 80-81; Demurger 284
- ↑ Khanbaghi, 60
- ↑ L. Carrington Goodrich (2002). A Short History of the Chinese People (illustrated ed.). Courier Dover Publications. p. 173. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-486-42488-X. பார்க்கப்பட்ட நாள் 2011-11-28.
In the campaigns waged in western Asia (1253–1258) by Jenghis' grandson Hulagu, "a thousand engineers from China had to get themselves ready to serve the catapults, and to be able to cast inflammable substances." One of Hulagu's principal generals in his successful attack against the caliphate of Baghdad was Chinese.
{{cite book}}
: Cite has empty unknown parameter:|month=
(help) - ↑ Lane 2003, p. 143; Boyle 2007, pp. 345–346.
- ↑ 27.0 27.1 27.2 27.3 Marozzi, Justin (29 May 2014). Baghdad: City of Peace, City of Blood. Penguin Books. p. 173. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-14-194804-1. பிழை காட்டு: Invalid
<ref>
tag; name "Marozzi2014" defined multiple times with different content - ↑ 28.0 28.1 அமாதனி வீலர் மெக்கின்டோஷ் தக்ஸ்டன், ப. 491.
- ↑ அமாதனி வீலர் மெக்கின்டோஷ் தக்ஸ்டன், ப. 495.
- ↑ Zaydān, Jirjī (1907). History of Islamic Civilization, Vol. 4. Hertford: Stephen Austin and Sons, Ltd. p. 292. பார்க்கப்பட்ட நாள் 16 September 2012.
- ↑ 31.0 31.1 31.2 31.3 Davis, Paul K. (2001). Besieged: 100 Great Sieges from Jericho to Sarajevo. New York: Oxford University Press. p. 67.
- ↑ அமாதனி வீலர் மெக்கின்டோஷ் தக்ஸ்டன், ப. 493.
- ↑ Nicolle
- ↑ James Chambers, "The Devil's Horsemen," p. 144.
- ↑ Fattah, Hala. A Brief History of Iraq. Checkmark Books. p. 101.
- ↑ James Chambers, The Devil’s Horsemen, Weidenfeld and Nicolson, London, ç1979, p.145
- ↑ Guy Le Strange, Baghdad During the Abbasid Caliphate, Clarendon Press, Oxford, ç1901, p.344
- ↑ Timothy Ward, The Mongol Conquests in World History, Reakton Books, London, ç2012, p.126
- ↑ Murray, S.A.P. (2012). The library: An illustrated history. New York: Skyhorse Publishing, pp. 54.
- ↑ James Raven, Introduction: The Resonances of Loss, in Lost Libraries: The Destruction of Great Book Collections since Antiquity, ed. James Raven (New York: Palgrave Macmillan, 2004), p. 11.
- ↑ Ibn Khaldūn, Tārīkh Ibn Khaldūn, ed. Khalīl Shaḥḥadāh (Beirut: Dār al-Fikr, 2000), p. 5:613.
- ↑ (Sicker 2000, p. 111)
- ↑ Rene Grousset, The Empire of the Steppes, Rutgers University Press, New Brunswick, ç1970 p.356
- ↑ Peter Jackson, The Mongols and the Islamic World-from Conquest to Conversion, Yale University Press, New Haven, ç2017, p.171-172
- ↑ Henry Howorth, History of the Mongols from the 9th to the 19th Century, Part I, Burt Franklin, New York, ç1876, p.127
- ↑ Michal Biran, The Mongols’ Middle East, ed. De Nicola & Melville, Brill, Boston, ç2016 p.140-141
- ↑ George Lane (Society of Ancient Sources), Iran After the Mongols: The Idea of Iran, Vol.8, ed. S. Babaie, I.B. Tauris, London, ç2019, p.17-18
- ↑ Ibn Taymiyyah, Majmū’ al-Fatāwa (Dār al-Wafā’, 2005), p. 13:111.
- ↑ Khạlīl b. Aybak al-̣Safadī, Kitāb al-Wāfī bi’l-Wafayāt (Beirut: Dār Ihyā’ al-Turāth al-Islāmī, 2000), p. 1:147, #114.
- ↑ Abdulhadi Hairi, "Nasir al-Din Tusi-His Supposed Political Role in the Mongol Invasion of Baghdad", Islamic Studies-Univ. of Montreal, ç1968
- ↑ "Saudi Aramco World : The Greening of the Arab East: The Planters". saudiaramcoworld.com. Archived from the original on 2006-01-25. பார்க்கப்பட்ட நாள் 2006-02-03.
- ↑ Boyle 2007, pp. 348–349; Chambers 1979, p. 145; Atwood 2004, p. 226; Hodous 2020, p. 35.
- ↑ Maalouf, 243
- ↑ Runciman, 306
- ↑ Foltz, 123
- ↑ Coke, Richard (1927). Baghdad, the City of Peace. London: T. Butterworth. p. 169.
- ↑ Kolbas, Judith G. (2006). The Mongols in Iran: Chingiz Khan to Uljaytu, 1220–1309. London: Routledge. p. 156. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7007-0667-4.
- ↑ Johan Elverskog (6 June 2011). Buddhism and Islam on the Silk Road. University of Pennsylvania Press. pp. 186–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8122-0531-2.
ஆதாரங்கள்
[தொகு]- Amitai-Preiss, Reuven. 1998. Mongols and Mamluks: The Mamluk-Ilkhanid War, 1260–1281 (first edition). Cambridge: Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-46226-6.
- Demurger, Alain. 2005. Les Templiers. Une chevalerie chrétienne au Moyen Âge. Éditions du Seuil.
- ibid. 2006. Croisades et Croisés au Moyen-Age. Paris: Groupe Flammarion.
- Khanbaghi, Aptin. 2006. The fire, the star, and the cross: minority religions in medieval and early modern Iran. London: I. B. Tauris.
- Morgan, David. 1990. The Mongols. Boston: Blackwell. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-631-17563-6.
- Nicolle, David, and Richard Hook (illustrator). 1998. The Mongol Warlords: Genghis Khan, Kublai Khan, Hulegu, Tamerlane. London: Brockhampton Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-86019-407-9.
- Runciman, Steven. A history of the Crusades.
- Saunders, J.J. 2001. The History of the Mongol Conquests. Philadelphia: University of Pennsylvania Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8122-1766-7.
- Sicker, Martin. 2000. The Islamic World in Ascendancy: From the Arab Conquests to the Siege of Vienna. Westport, Connecticut: Praeger. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-275-96892-8.
- Souček, Svat. 2000. A History of Inner Asia. Cambridge: Cambridge University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-65704-0.
வெளி இணைப்புகள்
[தொகு]- article describing Hulagu's conquest of Baghdad, written by Ian Frazier, appeared in the April 25, 2005 issue of The New Yorker.