உள்ளடக்கத்துக்குச் செல்

ன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ன்
ன்
தமிழ் எழுத்துக்கள்
க் ங் ச் ஞ் ட்
ண் த் ந் ப் ம்
ய் ர் ல் வ் ழ்
ள் ற் ன்

ன் (ன்) தமிழ் மொழியின் எழுத்துகளில் ஒன்று. இது தமிழ் நெடுங்கணக்கில் முப்பத்தோராவது எழுத்து. இது மொழியின் ஓர் ஒலியையும், அவ்வொலியைக் குறிக்கும் வரிவடிவத்தையும் குறிக்கும். இவ்வெழுத்தை "னகர மெய்" அல்லது "னகர ஒற்று" என்பர். எனினும் பொதுப் பேச்சு வழக்கிலும், பிள்ளைகளுக்கு எழுத்து கற்பிக்கும்போதும் இவ்வெழுத்தை "இன்னன்னா" என வழங்குவர். தனி மெய்களாக நிற்கும்போது ந், ன் என்பவற்றிடையே ஒலிப்பு வேறுபாடு தெளிவாக உள்ளது. எனினும் இவ்விரண்டு எழுத்துகளுடனும் உயிர்கள் சேர்ந்து உருவாகும் இவ்வெழுத்துகளின் ஒத்த உயிர்மெய்களிடையே ஒலிப்பு வேறுபாடு இல்லை. இதனால் இவ்விரு எழுத்துகளையும் முறையே நகரம், என்றும் னகரம் என்றும் எழுத்தில் வேறுபாடு காட்ட முடிந்தாலும், சொல்லும்போது ஒலிப்பு வேறுபாடு இருக்காது. இதனால் இவற்றை வேறுபடுத்திக் குறிப்பிட வேண்டியபோது அவற்றுக்கு முன்வரும் எழுத்துகளைக் குறித்து ன்றன்னகரம் என்றும் ந் ஐத் தன்னகரம் என்றும் குறிப்பிடப்படுவது வழக்கம். ண், ன் ஆகிய எழுத்துகளிடையே ஒலிப்பு வேறுபாடுகள் உள்ளனவாயினும் பலர் இவற்றை வேறுபடுத்தி ஒலிப்பதில்லை. எழுதுவதிலும் சில சமயங்களில் சில மாணவர்கள் குழப்பம் அடைவது உண்டு. இதனால் இவற்றை வேறுபடுத்திச் சொல்வதற்காக இரண்டு சுழி நானா, மூன்றுசுழி ணானா, றன்னகரம்(றகரத்தை அடுத்து அமையும் னகரம்) என்று கூடுதல் விளக்கத்துடன் சொல்லும் வழக்கமும் உண்டு.

"ன்" இன் வகைப்பாடு

[தொகு]
'ன்' எழுதும் முறை

தமிழ் எழுத்துகளில் உள்ள உயிரெழுத்து, மெய்யெழுத்து என்னும் இரண்டு வகைகளில் ன் மெய்யெழுத்து வகையைச் சேர்ந்தது. மெய்யெழுத்துகள் அரை மாத்திரை அளவே ஒலிக்கும் தன்மை வாய்ந்தன. இதனால் இவ்வெழுத்தும் அரை மாத்திரை அளவுடனேயே ஒலிக்கும்[1]

தமிழ் எழுத்துகளில் மெய்யெழுத்துகள் வல்லினம், மெல்லினம், இடையினம் என மூன்று இனங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் ன் மெல்லின மெய் வகையைச் சேர்ந்தது. இவ்வெழுத்து, மென்மையான ஓசை உடையது ஆதலால் மெல்லின வகையுள் சேர்க்கப்பட்டுள்ளது.

இனவெழுத்துகள்

[தொகு]

எழுத்து ஒலியின் பிறப்பிடம் (இடம்), முயற்சி என்பவற்றின் அடிப்படையில் எழுத்துகளை இனங்களாகப் பிரிப்பதுண்டு. அது போலவே பொருள், வடிவு என்பவற்றாலும் இனங்கள் பிரிக்கப்படுகின்றன. ஒலியின் பிறப்பிடம், முயற்சி என்பவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது ற், ன் என்னும் இரண்டும் மேல்வாயை நாவின் நுனி நன்றாகப் பொருந்த உருவாவதால் ற், ன் இரண்டும் ஒன்றுக்கு ஒன்று இன எழுத்தாக அமைகின்றன.[2].

குறிப்புகள்

[தொகு]
  1. தொல்காப்பியம் எழுத்ததிகாரம் - இளம்பூரணர் உரை, 2006 பக். 11
  2. இளவரசு, சோம., 2009. பக். 44, 47

உசாத்துணைகள்

[தொகு]
  • இளவரசு, சோம., நன்னூல் எழுத்திகாரம், மணிவாசகர் பதிப்பகம், சென்னை. 2009 (நான்காம் பதிப்பு).
  • சுப்பிரமணியன், சி., பேச்சொலியியல், நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம், பாளையங்கோட்டை, 1998.
  • தொல்காப்பியம் எழுத்ததிகாரம் - இளம்பூரணர் உரை, சாரதா பதிப்பகம், சென்னை. 2006 (இரண்டாம் பதிப்பு)
  • பவணந்தி முனிவர், நன்னூல் விருத்தியுரை, கமல குகன் பதிப்பகம், சென்னை. 2004.
  • வேலுப்பிள்ளை, ஆ., தமிழ் வரலாற்றிலக்கணம், குமரன் புத்தக இல்லம், கொழும்பு. 2002.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ன்&oldid=3206736" இலிருந்து மீள்விக்கப்பட்டது