நீரில் பாய்தல்
நீரில் பாய்தல் என்னும் விளையாட்டு ஓர் உயரமான மேடை அல்லது தாவுப்பலகையிலிருந்து கலிநடம் புரிந்தவாறோ அல்லாதோ நீரில் குதிப்பதாகும். இது உலகளவில் அங்கீகரிக்கப்பட்டதும் ஒலிம்பிக் விளையாட்டுக்களில் இடம் பெறுவதுமான ஒரு விளையாட்டாகும். தவிர, வரையறுக்கப்படாத போட்டியில்லாத நீரில் பாய்தல் மன மகிழ்விற்காகவும் விளையாடப்படுகிறது.ஒலிம்பிக் போட்டிகளில் பார்வையாளர்களின் மிக விருப்பமான விளையாட்டாக இது விளங்குகிறது. போட்டியாளர்கள் சீருடற் பயிற்சியாளர்கள் மற்றும் தேர்ந்த நடனமணிகள் போன்றே உடற்திறன், உடல் வளைதல், நீர் மற்றும் காற்றில் தடையின்றி செல்லும் திறமை கொண்டு விளங்குகிறார்கள்.
சீனா, அமெரிக்கா, இத்தாலி,ஆஸ்திரேலியா மற்றும் கனடா இந்த விளையாட்டில் சாதனைகள் புரிந்து வருகின்றன. சீனாவின் பயிற்சியாளர் லியாங் பாக்சி இந்த விளையாட்டினை பெரிதும் மாற்றியுள்ளார்.
நீரில் பாய்தல் போட்டி
[தொகு]பெரும்பான்மையான போட்டிகள் மூன்று வகையில் நடத்துகின்றன:1 மீ மற்றும் 3 மீ தாவுப்பலகை மற்றும் உயரமேடை. போட்டியாளர்கள் ஆண்/பெண் எனவும் வயதுவாரியாகவும் பிரிக்கப்படுகின்றனர். உயரமேடை நிகழ்வுகளில் போட்டியாளர்கள் ஐந்து,ஏழரை (ஏழு என்றே குறிப்பிடப்படுகிறது),பத்து மீட்டர் உயரத்திலிருந்து குதிக்க அனுமதிக்கப்படுகின்றனர். ஒலிம்பிக் மற்றும் உலக சாதனையாளர் போட்டிகளில் பத்து மீட்டர் மேடையே பயன்படுத்தப்படுகிறது.
பாய்பவர்கள் குதிக்கும்போது குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பாய்தல்களை நிறுவப்பட்ட விதங்களில், குட்டிக்கரணமடித்தல் மற்றும் உடலை சுழற்றுதல் உட்பட, நிகழ்த்த வேண்டும். அவர்கள் பாய்தலின் பல அம்சங்களை எவ்வாறு நிகழ்த்தினார்கள், பாய்தலுக்கு ஏற்றவாறு எவ்வாறு உடல் ஒத்துழைத்தது, நீரில் நுழையும்போது எந்தளவு தண்ணீர் தெளித்தது என்பன நடுவர்களால் எடை போடப்படுகின்றன. மொத்த மதிப்பெண்ணான பத்தில் மூன்று புறப்பட்டதிற்கும் மூன்று பயணப்பட்டதிற்கும் மூன்று நீரில் நுழைவிற்கும் மீதமொன்று நீதிபதிகளின் வசதிக்காகவும் வழங்கப்படுகின்றன. இதனை கடினத்திற்கான மதிப்பீட்டுடன் பெருக்கி ஒரு போட்டியாளர் பெற்ற கூடுதல் மதிப்பெண்கள் ஒப்பிடப்படுகின்றன. பாய்தல் தொடரின் முடிவில் எவர் மிக கூடுதலாக மதிப்பெண்கள் பெற்றிருக்கிறாரோ அவரே வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுகிறார்.
ஒருங்கிசைந்த பாய்தல்
[தொகு]ஒருங்கிசைந்த பாய்தல் 2000 ஆம் ஆண்டிலிருந்து ஒலிம்பிக் போட்டிகளில் இடம் பெறுகிறது. ஓர் அணியில் இரு போட்டியாளர்கள் ஒரே நேரத்தில் பாய்கின்றனர். இருவரும் ஒரே விதமான அல்லது எதிரெதிரான பாய்தல்களை மேற்கொள்வர். இந்த நிகழ்வில் பாய்தலின் தரம் மற்றும் ஒருங்கிசைவு இரண்டும் மதிப்பிடப்படுகின்றன.
பாய்தலை மதிப்பிடல்
[தொகு]ஒருபாய்தலை மதிப்பிட விதிகள் உள்ளன. பொதுவாக பாய்தலின் மூன்று அம்சங்களான புறப்பாடு, பயணப்படல், நுழைவு கணக்கில் எடுக்கப்படுகிறது. மதிப்பிடுவதில் முதன்மையான காரணிகள்:
- தேர்ந்தெடுத்த மேடை (10 மீட்டர், 7.5 மீட்டர், அல்லது 5 மீட்டர்)
- கைப்பிடி தேவைப்பட்டால், பிடித்த விதம் மற்றும் கால அளவு
- பாய்தலில் போட்டியாளர் எய்திய மிகச்ச உயரம், கூடுதல் உயரம் கூடுதல் மதிப்பெண்களைப் பெறும்
- தாவு கருவியிலிருந்து போட்டியாளர் தம் பயணம் முழுமையும் எவ்வளவு தள்ளி உள்ளார் (அபாயகரமாக மிக அண்மையிலோ மிக சேய்மையிலோ இல்லாது 2 அடிகள் (0.61 m) தூரத்தில் இருத்தல்)
- எடுத்துக்கொண்ட பாய்தல்வகைக்கு வரையறுக்கப்பட்ட விதத்தில் உடல் இருப்பது (பாத விரல்கள் சுட்டலாக வைத்திருப்பது,கால்கள் இணைந்திருப்பது போன்றன)
- தகுந்த கரணங்களும் சுழற்றல்களும் நிகழ்த்தி நீரில் நுழைதல்
- நுழைதலின் கோணம் - பாய்பவர் நீரில் நேராக எந்தவிதக் கோணமுமின்றி நுழைதல் வேண்டும். பெரும்பான்மையான நீதிபதிகள் எவ்வளவு நீர் தெறித்தது என்பதேக் கொண்டே இதனை கணக்கிடுகின்றனர்.குறைந்த நீர் தெறிப்பு கூடுதல் மதிப்பெண்களைப் பெற்றுத் தரும்.
போட்டி மதிப்பெண்களை தனிநபர் விருப்புவெறுப்புகளுக்கு அப்பால் இருக்குமாறு செய்ய பெரிய போட்டிகளில் ஐந்து அல்லது ஏழு நீதிபதிகள் இருப்பர். ஐந்து நீதிபதிகள் இருப்பின், மிகக் கூடுதலான மற்றும் மிகக் குறந்த மதிப்பெண்கள் புறம் தள்ளப்பட்டு ஏனைய மூன்று மதிப்பெண்களும் கூட்டப்பட்டு கடினத்தன்மை எண்ணால் பெருக்கப்பட்டு இறுதி மதிப்பெண் அறிவிக்கப்படுகிறது. பன்னாட்டுப் போட்டிகளில் ஏழு நீதிபதிகள் நியமிக்கப்பட்டு அதிலும் மிகவும் கூடுதலான,குறைந்த மதிப்பெண்கள் தள்ளப்பட்டு நடு ஐந்து மதிப்பெண்கள் 3/5 வீதத்தில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. இதனை கடினத்தன்மை எண்ணால் பெருக்கப்படுகிறது. இவ்வாறான செய்கையால் எந்தவொரு நீதிபதியும் தான் விரும்பவருக்கு மதிப்பெண்களை சமாளிக்க இயலாது.
ஒருங்கிசை பாய்தலில் ஏழு அல்லது ஒன்பது பேர் மதிப்பிடுவர்; இருவர் ஒரு போட்டியாளரின் பாய்தலையும் மேலும் இருவர் மற்ற போட்டியாளரின் பாய்தலையும் ஏனைய மூவர் அல்லது ஐவர் ஒருங்கிசைவையும் மதிப்பிடுவர்.
போட்டிக்கில்லாத பாய்தல்
[தொகு]நீரில் பாய்தல் போட்டிகளுகின்றியும் விரும்பப்படும் செயலாகும். காற்றில் மிதக்கும் இன்பத்திற்காகவும் உயரத்திற்காகவும் விரும்ப்படுவதேயன்றி நீரில் எவ்வாறு நுழைகிறான் என்பதற்கு முதன்மை கொடுக்கப்படுவதில்லை. நீரினடியில் பாயும்திறன் ஆபத்துக்காலங்களுக்கு மிக உதவியாக இருக்கிறது. கடற்படை பயிற்சிகளில் நீரடி பாய்தல் முதன்மை அளிக்கப்படுகிறது. நீர்நிலைகளில் ஆழ்ந்தவர்களை மீட்பதிலும் ஆழ்நீர் பொருள் தேடலிலும் இவர்கள் மிகவும் உதவியாக உள்ளனர். இதேபோல மலைமுகடுகளிலிருந்து பாய்தலும் மிகவும் விரும்பப்படுகிறது.
வெளியிணைப்புகள்
[தொகு]- FINA
- USA Diving
- AAU Diving
- NCAA
- USA Masters' Diving.
- NCAA Woman's Swimming and Diving
- Northern Virginia Swimming League -- Diving பரணிடப்பட்டது 2016-03-18 at the வந்தவழி இயந்திரம்
- FINA table of degree of difficulty
- Hobie Billingsly பரணிடப்பட்டது 2011-07-28 at the வந்தவழி இயந்திரம்
- Diving mentality
- அனிமேஷன் கருத்துரையுடன்