உள்ளடக்கத்துக்குச் செல்

நீடாமங்கலம் என். டி. எம். சண்முக வடிவேல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நீடாமங்கலம் என். டி. எம். சண்முக வடிவேல் (1929 – 26 ஜனவரி 1963) தமிழகத்தைச் சேர்ந்த தவில் இசைக் கலைஞராவார். தவில் – நாதசுவர இசையுலகில் தம்பி என அன்புடன் அழைக்கப்பட்டவர்.

பிறப்பும், இசைப் பயிற்சியும்

[தொகு]

பிரபல தவில் கலைஞர் நீடாமங்கலம் மீனாட்சி சுந்தரம் பிள்ளைக்கும் நாகம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். தவிலிசை தன்னோடு போதுமென தந்தை விரும்பினாலும், படிப்பில் நாட்டமில்லாது இசையின்மீது விருப்பம் கொண்டவராக இருந்தார் சண்முக வடிவேல். நாளடைவில் முறையான பயிற்சி எதனையும் மேற்கொள்ளாமலேயே தனது தந்தையுடன் சேர்ந்து கச்சேரிகளில் வாசிக்கத் தொடங்கினார்.

இசை வாழ்க்கை

[தொகு]

தனது தந்தையாருடன் இணைந்து திருவீழிமிழலை சகோதரர்களுக்கு சிறிது காலம் வாசித்தார். தருமபுரம் அபிராமிசுந்தரம் பிள்ளை, செம்பொன்னார் கோவில் சகோதரர்கள் ஆகியோருக்கு தவில் வாசித்து வந்தார். தனது தந்தையின் மறைவிற்குப் பின்னர், அக்காலத்து புகழ்வாய்ந்த நாதசுவரக் கலைஞர்களுக்கு தவில் வாசித்து புகழ் பெறத் தொடங்கினார்.

திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை, ‘கக்காயி’ நடராஜ சுந்தரம் பிள்ளை, திருவிடைமருதூர் வீருசுவாமி பிள்ளை, சிதம்பரம் ராதாகிருஷ்ண பிள்ளை, திருவெண்காடு சுப்பிரமணிய பிள்ளை, பெரம்பலூர் அங்கப்ப பிள்ளை, செம்பொன்னார் கோவில் வைத்தியநாதன் சகோதர்கள், திருமெய்ஞானம் நடராஜசுந்தரம் பிள்ளை, கோட்டூர் ராஜரத்தினம் பிள்ளை, சீர்காழி திருநாவுக்கரசுப் பிள்ளை, திருவள்ளா ராகவ பணிக்கர், காருகுறிச்சி அருணாச்சலம், நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன் ஆகியோருக்கு சண்முக வடிவேல் தவில் வாசித்துள்ளார்.

நன்கு பாடத் தெரிந்த இவர், நாதசுவரக் கலைஞர்கள் பலருக்கு தில்லானா பாடுதலைக் கற்பித்தார். மிருதங்கம், கஞ்சிரா வாசிப்பிலும் விருப்பம் கொண்டவராக இருந்துள்ளார் சண்முக வடிவேல்.

மறைவு

[தொகு]

மது அருந்தும் பழக்கத்தின் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்ட இவர், 26 ஜனவரி 1963 அன்று காலமானார்.

உசாத்துணை

[தொகு]