நிக்கோலோ டா கொன்ட்டி
நிக்கோலோ டா கொன்ட்டி | |
---|---|
பிறப்பு | c. 1395 |
இறப்பு | 1469 வெனிசு |
பணி | தேடலாய்வாளர் |

நிக்கோலோ டா கொன்ட்டி (Niccolò de' Conti - 1395–1469) என்பார் ஒரு வெனிசிய வணிகர். இவர் 15 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், இந்தியா, தென்கிழக்காசியா போன்ற இடங்களிலும் பயணம் செய்தார் இவர் இக் காலத்தில் தென் சீனாவுக்கும் சென்றிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. போலோசு என்பவர் சீனாவில் இருந்து திரும்பியதற்குப் பின்னர், நிக்கோலோ டா கொன்ட்டி கடல்வழியாக 1439 ஆம் ஆண்டில் திரும்பி வரும்வரை வேறெந்த இத்தாலியப் பயணியும் சீனாவிலிருந்து திரும்பியதாகத் தெரியவில்லை. நிக்கோலோ 1419 ஆம் ஆண்டளவில் வெனிசில் இருந்து புறப்பட்டார். சிரியாவில் உள்ள டமாசுக்கசு நகரில் தங்கியிருந்து அரபி மொழியையும் கற்றார். 25 ஆண்டுகளாக ஒரு முசுலிம் வணிகராகப் பல ஆசியப் பகுதிகளிலும் பயணம் செய்தார். இசுலாமிய உலகின் பல மொழிகளையும், அவர்கள் பண்பாட்டையும் அறிந்திருந்ததால் இசுலாமிய வணிகர்களின் கப்பல்களில் பல நாடுகளுக்கும் அவர் செல்ல முடிந்தது.
நிக்கொலோவின் பயணம் ஏறத்தாழ சீனாவின் அட்மிரல் செங் ஹேயின் பயணங்கள் இடம்பெற்ற அதே காலத்திலேயே நிகழ்ந்தது. நிக்கோலோவின் குறிப்புகள் மேற்படி சீனப் பயணக் குழுவினரின் குறிப்புக்களுக்கு ஒத்தவையாக இருப்பதைக் காண முடியும்.