நள்ளிரவுச் சூரியன்
நள்ளிரவுச் சூரியன் அல்லது துருவப் பகல் என்பது, ஆர்க்டிக் வட்டத்தின் வடக்கிலும், அதற்கு அண்மையில் ஓரளவு தெற்கிலும், அண்டார்டிக் வட்டத்துக்குத் தெற்கிலும் அதற்கு ஓரளவு வடக்கிலும் காணப்படும் ஒரு தோற்றப்பாடு ஆகும். இது அப்பகுதிகளில் உள்நாட்டு நேரம் நள்ளிரவு 12 மணிக்கும் சூரியன் தெரிவதைக் குறிக்கும். காலநிலை தெளிவாக இருப்பின் 24 மணி நேரமும் சூரியன் தெரியக்கூடியதாக இருக்கும். ஓராண்டில் நள்ளிரவுச் சூரியன் தெரியும் நாட்களின் எண்ணிக்கை துருவங்களை நோக்கிச் செல்லும்போது அதிகரிக்கும்.[1][2][3]
அண்டார்க்டிக் வட்டத்துக்குத் தெற்கே நிரந்தர மனிதக் குடியிருப்புகள் எதுவும் இல்லை. எனவே இத் தோற்றப்பாட்டைக் காணும் வாய்ப்புப் பெற்றவர்கள் ஆர்க்டிக் வட்டப் பகுதியில் வாழும் மக்கள் மட்டுமே. இப் பகுதிகள், ஐக்கிய அமெரிக்கா, கனடா, கிறீன்லாந்து, நார்வே, சுவீடன், பின்லாந்து, ரஷ்யா, ஐஸ்லாந்தின் வடபகுதி ஆகியவற்றில் உள்ளன. பின்லாந்தின் கால்பங்கு பகுதி ஆர்க்டிக் வட்டத்துள் அடங்கியுள்ளதுடன், அதன் வடக்குக் கோடியில், கோடை காலத்தில் சூரியன் 73 நாட்களுக்கு மறைவதே இல்லை. ஐரோப்பாவில் கூடிய தொலைவு வடக்கில் அமைந்த குடியிருப்பான நார்வேயின் சுவல்பார்ட்டில் ஏறத்தாழ ஏப்ரல் 19 ஆம் தேதி தொடக்கம் ஆகஸ்ட் 23 வரை சூரியன் மறைவதில்லை. துருவங்களில் தொடர்ந்து ஆறு மாதங்கள் சூரியன் மறைவதில்லை.
இதன் எதிர்த் தோற்றப்பாடான துருவ இரவுத் தோற்றப்பாடு மாரி காலத்தில் ஏற்படும். இக் காலத்தில் சூரியன் நாள் முழுதும் அடிவானத்துக்குக் கீழேயே இருக்கும்.
சூரிய வீதிக்குச் சார்பாகப் புவியின் அச்சு 23 பாகை 27 கலை அளவு சரிந்து இருப்பதால், உயர் நிலநேர்க்கோட்டுப் பகுதிகளில், உள்ளூர் கோடை காலத்தில் சூரியன் மறைவதில்லை. நள்ளிரவுச் சூரியனின் கால அளவு துருவ வட்டத்தில் ஒரு நாள் தொடக்கம் துருவத்தில் ஏறத்தாழ ஆறு மாதங்கள் வரை மாறுகிறது. துருவத்துக்கு அண்மையிலான நிலநேர்க்கோட்டுப் பகுதிகளில் சூரியன் அடிவானத்துக்கு மேலிருக்கும் காலம் ஆர்க்டிக் வட்டத்திலும், அண்டார்க்டிக் வட்டத்திலும் 20 மணி நேரத்தில் தொடங்கி வட, தென் துருவங்களில் 186 நாட்களாக உள்ளது. துருவங்களில் ஒவ்வொரு ஆண்டும் சூரியன் ஒரேயொரு முறை எழுந்து ஒரேயொரு முறை மட்டுமே மறைகிறது.
வெளி இணைப்புகள்
[தொகு]- Midnight sun seen from Fjellheisen Tromsø - 360 panorama பரணிடப்பட்டது 2021-03-17 at the வந்தவழி இயந்திரம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Nuorgam, Lapland, Finland — Sunrise, Sunset, and Daylength, May 2022
- ↑ "Time and Date.com - North Pole". Time and Date.com. பார்க்கப்பட்ட நாள் March 12, 2024.
- ↑ "Time and Date.com - South Pole, Antarctica". Time and Date.com. பார்க்கப்பட்ட நாள் March 12, 2024.