தொல்லியல் அருங்காட்சியகம், ஹம்பி
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
தொல்லியல் அருங்காட்சியகம், ஹம்பி, இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் பெல்லாரி மாவட்டத்தில் உள்ள ஹம்பியில் அமைந்துள்ள ஒரு தொல்லியல் அருங்காட்சியகம் ஆகும். ஹம்பி, விசயநகரப் பேரரசுக் காலத்துத் தலைநகரமான விசயநகர அழிபாடுகளுக்கு இடையே அமைந்துள்ளது. இதனால் விசயநகரத்தோடு தொடர்புடைய பல நினைவுச் சின்னங்களை ஹம்பி தன்னகத்தே கொண்டுள்ளது.
தொடக்கத்தில் இங்கு கிடைத்த சிற்பங்களும், கட்டிடக் கூறுகளும் பிரித்தானிய அதிகாரிகளால் யானைப் பந்திகளில் சேகரித்து வைக்கப்பட்டன. இந்திய தொல்லியல் ஆய்வகம் தனது முதல் அருங்காட்சியகத்தை இங்கு அமைத்தது. 1972 ஆம் ஆண்டில், இவ்வாறான தொல்பொருட்கள் கமலாப்பூரில் அமைக்கப்பட்ட புதிய கட்டிடத்துக்கு மாற்றப்பட்டன. தற்போது இந்த அருங்காட்சியகம் நான்கு காட்சிக்கூடங்களைக் கொண்டதாக உள்ளது. இந்த அருங்காட்சியக வாயிலில் விஜயநகரப் பேரரசின் புகழ் பெற்ற பேரரசரான கிருஷ்ணதேவராயர், அவரது அரசிகளினதும் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.
முதல் காட்சிக்கூடத்தில் சைவ சமயத்துடன் தொடர்புடைய சிற்பங்கள் உள்ளன. வீரபத்திரர், வைரவர், பிட்சாடனமூர்த்தி, மகிசாசுரமர்த்தனி, சக்தி, கணேசர், கார்த்திகேயர், துர்க்கை போன்ற கடவுளரின் சிற்பங்கள் இவற்றுள் அடங்குகின்றன. ஒரு கோயிலைப் போன்ற அமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ள நடுக்கூடம் சிவலிங்கம், நந்தி, வாயில் மண்டபம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
இரண்டாம் காட்சிக்கூடத்தில், ஆயுதங்கள், செப்பேடுகள், சமயத் தேவைகள் தொடர்புடைய உலோகப் பொருட்கள், பித்தளைத் தட்டுகள் போன்ற பலவகையான அரும்பொருட்கள் உள்ளன. இவற்றோடு, விசயநகரக் காலத்தைச் சேர்ந்த செப்பு நாணயங்களும், பொன் நாணயங்களும் இந்தக் காட்சிக்கூடத்தில் உள்ளன.
பல்வேறு அகழ்வாய்வுகளில் கிடைத்த வரலாற்றுக்கு முந்திய காலத்தைச் சேர்ந்த பல அரும்பொருட்களும், மத்திய கால நடுகற்கள், சாந்தினாலான உருவங்கள், இரும்புப் பொருட்கள் போன்ற அரும்பொருட்களும் இந்த அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]வெளியிணைப்புக்கள்
[தொகு]- இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் இணையத்தளத்தில் பரணிடப்பட்டது 2014-06-25 at the வந்தவழி இயந்திரம்