தொலைக்காட்சிப் பெட்டி
தொலைக்காட்சிப் பெட்டி (வழக்கில் தொலைக்காட்சி, TV set, TV, அல்லது ஐக்கிய இராச்சியத்தில் "இட்டெல்லி" ) என்பது தொலைக்காட்சியை காண்பதற்கான மின்னணுவியல் கருவியாகும். இதில் அதிர்வெண் இசைவி, காண்திரை மற்றும் ஒலிபெருக்கிகள் அமைக்கப்பட்டிருக்கும். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் பயனர் கருவியாக தொலைக்காட்சிப் பெட்டி விளங்குகிறது. முதல் தொலைக்காட்சிப் பெட்டிகள் 1923ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்டன. துவக்கத்தில் வெற்றிடக் குழல்களையும் எதிர்முனைக் கதிர்க்குழல் காண்திரைகளையும் பயன்படுத்தினர். 1953ஆம் ஆண்டில் வண்ணத் தொலைக்காட்சிகள் அறிமுகமான பிறகு இதன் பரவல் கூடுதலானது. பல சுற்றுப்புறப் பகுதிகளிலும் வீடுகளின் கூரைகளில் தொலைக்காட்சி அலைவாங்கிகளைக் காண முடிந்தது. முதல் தலைமுறை வீட்டுக் கணினிகளின் கணித்திரையாக தொலைக்காட்சிப் பெட்டிகளே விளங்கின.
தற்கால தொலைக்காட்சிப் பெட்டிகளில் நீர்மப் படிக தட்டை காண்திரைகளும், திண்மநிலை மின்சுற்றுக்களும், நுண்செயலி கட்டுப்பாடுகளும் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் பல்வகையான ஒளிதக் குறிப்பலை இடைமுகங்களுடன் அமைந்துள்ளன. இதனால் தொலைக்காட்சிப் பயனர் வான்வழி இலவசமாக ஒளிபரப்பப்படும் தொலைக்காட்சிகளுடன் கட்டணம் செலுத்திக் காணக்கூடிய கம்பிவடம் மற்றும் செய்மதித் தொலைக்காட்சிகளையும் எண்ணிம ஒளிதக் குறுவட்டுகள் அல்லது பதிவு நாடாக்களில் பதிவு செய்யப்பட்ட ஒளிதங்களையும் காண முடிகிறது. இதே கருவி மூலம் வீட்டுப் பாதுகாப்பு அமைப்புகளின் ஒளிதங்களையும் காணலாம்.
தொலைக்காட்சிப் பெட்டியின் முதன்மை அங்கங்கள்
[தொகு]- இசைவித்த மின்காந்த அலைவெண் வாங்கி (டியூனர்)
- மின்காந்த அதிர்வெண் மிகைப்பி (ஆர்.எஃப். ஆம்பிளிபையர்)
- கலவைக்கருவி (மிக்சர்)
- இடைநிலை அதிர்வெண் மிகைப்பி (ஐ.எஃப் ஆம்பிளிபையர்)
- ஒளிதப் பிரிவு (வீடியோ செக்சன்)
- ஒலிதப் பிரிவு (ஆடியோ செக்சன்)
- படக்குழல் (பிக்சர் டியூப்)
- மின்திறன் அளிப்பு (பவர் சப்ளை)
இசைவித்த மின்காந்த அலைவெண் வாங்கி
[தொகு]தொலைக்காட்சி அலைவாங்கியிலிருந்து பல்வேறு அலைவரிசைகளும் பெறப்படுகின்றன. விரும்பிய அலைக்கற்றையிலிருந்து விரும்பிய அலைவரிசையை மட்டும் பிரித்தெடுக்கும் வண்ணம் அலைவெண் வாங்கி விரும்பிய அலைவரிசையுடன் இசைந்து அதனை மட்டும் வெளிப்படுத்தும். இதன் வெளியே வேண்டாத அலைவரிசைகள் வடிகட்டப்படுகின்றன. துவக்கத்தில் தனியான மின்னணு பொருட்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டன; தற்காலத்தில் எண்ணிம வடிவத்தில் வடிகட்டப்படுவதால் நெருங்கி அமைந்த அலைவரிசைகளையும் வடிகட்ட முடிகிறது. மேலும் இசைவிப்பதும் மிக எளிதாக அமைந்துள்ளது.
மின்காந்த அதிர்வெண் மிகைப்பு
[தொகு]விரும்பி வடிகட்டப்பட்ட அலைவரிசை வெகுதொலைவு பயணித்திருப்பதால் ஆற்றல் குறைந்திருக்கலாம். எனவே இதன் ஆற்றலைக் கூட்டுவதற்கு மின்காந்த அதிர்வெண் மிகைப்பி பயன்படுகிறது. அடுத்த நிலை கலவைக்கருவியில் மின் இரைச்சல் கூட்டப்படக் கூடுமாகையால் வேண்டிய குறிப்பலை ஏற்றிய அலவரிசையின் ஆற்றலைக் கூட்டுவது இன்றியமையாகிறது.
கலவைக்கருவி
[தொகு]ஆற்றல் கூட்டிய மின்காந்த அலைவரிசையை இடைநிலை அதிர்வெண் கொண்ட உட்புற அலைவரிசையுடன் கலக்க வைத்து தொலைக்காட்சி குறிப்பலைகள் ஏற்றப்பட்ட இடைநிலை அதிர்வெண் அலைகள் கலவைக்கருவியில் பெறப்படுகின்றன. இதனால் எந்த அலைவரிசையில் ஏற்றப்பட்டிருந்தாலும் ஒரே அதிர்வெண் அலைக்கு தொலைக்காட்சி குறிப்பலைகள் மாற்றப்படுகின்றன.
இடைநிலை அதிர்வெண் மிகைப்பி
[தொகு]கலவைக்கருவியிலிருந்து வெளியாகும் மின்காந்த அலைகளின் ஆற்றலைக் கூட்டுவதற்காக இந்த மிகைப்பி பயன்படுகிறது.
ஒளிதப் பிரிவு
[தொகு]ஒருமை வண்ணத் தொலைக்காட்சி (கருப்பு/வெள்ளை) பெட்டியில் ஒளிர்மை, உறழ்பொருவு, கிடைமட்ட ஒருங்கிணைவு, நெடுமட்ட ஒருங்கிணைவு போன்ற உட்பிரிவுகள் உள்ளன. இடைநிலை அதிர்வெண் அலைவரிசையினின்றும் பிரிக்கப்பட்ட தொலைக்காட்சி ஒளிக் குறிப்பலைகள் இங்கு முறைப்படுத்தப்படுகின்றன. வேண்டிய மிகைப்பும் அளிக்கப்பட்டு படக்குழலில் காட்டக்கூடிய வடிவத்திற்கு மாற்றப்படுகின்றன.
வண்ணத் தொலைக்காட்சிகளில் கூடுதலாக நிறப்பொலிவு குறிப்பலைகள் பெறப்பட்டு மூன்று ஆதார வண்ண குறிப்பலைகளாக படக்குழலுக்கு அனுப்பப்படுகின்றன.
ஒலிதப் பிரிவு
[தொகு]அலைமருவிய தொலைக்காட்சி அமைப்பில் ஒலி அதிர்வெண் பண்பேற்றி தனி ஊர்தி அலைவரிசையில் அனுப்பப்படுகிறது. இந்தத் தனி அலவரிசையை பிரித்து அதிலிருந்து ஒலிக்கான குறிப்பலைகள் பிரிக்கப்படுகின்றன. இவற்றை மிகைப்படுத்தி ஒலிபெருக்கிகளில் ஒலிக்கச் செய்வதற்கான மின்சுற்றுக்கள் இப்பிரிவில் அமைக்கப்பட்டுள்ளன. தற்கால எண்ணிமத் தொலைக்காட்சி முறைமையில் ஒலி தனி அலைவரிசையில் அல்லாது எண்ணிம முறையில் கலக்கப்பட்டு அனுப்பப்படுகின்றன. இதனையும் இப்பிரிவில் தகுந்த மின்சுற்றுக்கள் மூலம் முறைப்படுத்தப்படுகின்றன. சூழொலி மற்றும் இருசெவிகேள் ஒலி ஆகிய செயற்பாடுகளும் இங்கு முறைப்படுத்தப்படுகின்றன.
மின்திறன் அளிப்பு
[தொகு]தொலைக்காட்சிப் பெட்டியின் பல்வேறு மின்சுற்றுக்களுக்கும் நேர் மின்னோட்டம் தேவை. இப்பகுதியில் வணிக வழங்கல் அளிப்பான 220 வோல்ட் மாறுதிசை மின்னோட்டத்திலிருந்து அலை திருத்தி மூலம் நேர் மின்னோட்டம் பெறப்படுகிறது. மேலும் எதிர்முனை கதிர்க்குழல் பயன்படுத்தப்பட்ட முந்திய தொலைக்காட்சிப் படக்குழல்களில் எதிர்முனை கதிரோட்டம் நிகழ உயர் அழுத்தத்தில் நேர் மின்னோட்டம் (கிட்டத்தட்ட 15 கி.வோல்ட் அளவில்) தேவைப்படுகிறது. இந்த உயரழுத்த மின்திறனை உருவாக்கிடும் மின்சுற்றுக்களும் இப்பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும்.
காண்திரை தொழினுட்பங்கள்
[தொகு]தொலைக்காட்சிப் பெட்டிகளில் காட்சிப்படுத்த பல்வேறு காண்திரை தொழினுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன; அவை சிஆர்டி, எல்சிடி, பிளாஸ்மா, எண்ணிம ஒளி முறைப்படுத்தல் (DLP) மற்றும் ஓஎல்ஈடி ஆகும். சில முன்புற படமெறி கருவிகளும் தொலைக்காட்சி இசைவிகளைக் கொண்டிருப்பதால் அவற்றையும் தொலைக்காட்சிப் பெட்டியாக எண்ணலாம்.
வெளி இணைப்புகள்
[தொகு]- Essay on recent developments in television sets
- Early Television Foundation and Museum
- Television's History — The First 75 Years பரணிடப்பட்டது 2013-06-25 at the வந்தவழி இயந்திரம்
- The Encyclopedia of Television பரணிடப்பட்டது 2013-10-06 at the வந்தவழி இயந்திரம் at the Museum of Broadcast Communications
- MZTV Museum of Television Some of the rarest sets in America