உள்ளடக்கத்துக்குச் செல்

திருவாரூர் தியாகராஜர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(திருவாரூர் தியாகராசசுவாமி கோயில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தேவாரம் பாடல் பெற்ற
திருவாரூர் (திருஆரூர்) தியாகராஜர் கோயில்
திருவாரூர் (திருஆரூர்) தியாகராஜர் கோயில் is located in தமிழ்நாடு
திருவாரூர் (திருஆரூர்) தியாகராஜர் கோயில்
திருவாரூர் (திருஆரூர்) தியாகராஜர் கோயில்
தியாகராஜர் கோயில், திருவாரூர், தமிழ்நாடு
புவியியல் ஆள்கூற்று:10°46′34″N 79°38′01″E / 10.7761°N 79.6335°E / 10.7761; 79.6335
பெயர்
புராண பெயர்(கள்):க்ஷேத்ரவரபுரம், ஆடகேசுரபுரம், தேவயாகபுரம், முசுகுந்தபுரம், கலிசெலா நகரம், அந்தரகேசுபுரம், வன்மீகநாதபுரம், தேவாசிரியபுரம், சமற்காரபுரம், மூலாதாரபுரம், கமலாலயபுரம்
பெயர்:திருவாரூர் (திருஆரூர்) தியாகராஜர் கோயில்
அமைவிடம்
ஊர்:திருவாரூர்
மாவட்டம்:திருவாரூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு: இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:வன்மீகநாதர், புற்றிடங்கொண்டார், மூலட்டானமுடையார், பூங்கோவில் புண்ணியனார்
உற்சவர்:தியாகராஜர், வீதிவிடங்கர், தேவரகண்டப்பெருமான், தியாகப்பெருமான், ஆடரவக்கிண்கிணிக்காலழகர், செங்கழுநீரழகர், செவ்வந்தித்தோடழகர், கம்பிக்காதழகர், தியாகவிநோதர், கருணாகரத் தொண்டைமான், அசைந்தாடும் அப்பர், அடிக்காயிரம் பொன் வழங்கியவர், கமலேசர், செம்பொன் தியாகர், தேவசிந்தாமணி, தியாகசிந்தாமணி
தாயார்:அல்லியம்பூங்கோதை (நீலோத்பலாம்பாள்), கமலாம்பிகை
உற்சவர் தாயார்:அல்லியங்கோதை
தல விருட்சம்:பாதிரி
தீர்த்தம்:கமலாலயம், சங்கு தீர்த்தம், கயா தீர்த்தம், வாணி தீர்த்தம்
சிறப்பு திருவிழாக்கள்:திருவாதிரை, பங்குனி ஆழித்தேர் திருவிழா, மகா சிவராத்திரி
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:அப்பர், சம்பந்தர், சுந்தரர்,மாணிக்கவாசகர்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:தமிழர்கள் கட்டிடக்கலை
வரலாறு
தொன்மை:4000-5000 ஆண்டுகள்
நிறுவிய நாள்:தெரியவில்லை
கட்டப்பட்ட நாள்:தெரியவில்லை
அமைத்தவர்:சோழர்கள்
திருவாரூர் தியாகராஜர் கோவில்

திருவாரூர் தியாகராஜர் கோயில் (Tiruvarur Thyagaraja Temple) திருவாரூரில் அமைந்துள்ள மிகப் பழமையானதும், பிரம்மாண்டமானதுமான கோயில் ஆகும். இக்கோயில், சைவ மரபில் பெரிய கோயில் எனவும் திருமூலட்டானம் எனவும் பூங்கோயில் எனவும் அழைக்கப்படுகிறது. சமயக் குரவர் நால்வராலும் தேவாரப் பாடல் பெற்ற இத்திருத்தலம், பஞ்சபூதத் தலங்களில் பிருதிவித் தலமாகவும் உள்ளது. உலகிலேயே மிகப் பெரிய தேரான ஆழித்தேர் திருவாரூர் கோவில் தேராகும்.[சான்று தேவை] தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாட்டின் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 87-ஆவது சிவத்தலமாகும். திருவாரூர், சப்தவிடங்க ஸ்தலங்களின் தலைமையிடமாகவும் திருவாசகத் திருத்தலங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. இக்கோவிலில்தான், மனு நீதி சோழன் பசுவிற்கு நீதி வழங்கினார்.[1] மேலும், இது திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருத்தலங்களில் ஒன்றாகும்.[2]

தல சிறப்புகள்

[தொகு]

திருவாரூர் கோவில் சிதம்பரம் நடராசர் கோயிலைவிட பழமையானது என்பதைக் குறிக்கும் வகையில், இங்கு பாடப்படும் தேவாரத்தில் திருச்சிற்றம்பலம் என்ற சொல் குறிப்பிடப்படுவது இல்லை. மேலும், இதற்குச் சான்றாக அப்பர் திருவாரூரில் கோவில் கொண்டது எந்நாளில் எனப் பாடிய 10 பாடல்களில் திருவாரூர் தில்லைக்கு முற்பட்டது எனக் குறிப்பிட்டுள்ளார். கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள் தோன்றிய திருத்தலம். திருவாரூர் கோவில் அளவும், தெப்பக்குளமும் ஒரே அளவுகொண்டதாகும். இக்கோவில் 9 இராஜகோபுரம், 80 விமானம், 12 உயர மதில்கள், 13 மண்டபங்கள், 15 தீர்த்தக் கிணறுகள், 3 தோட்டம், 3 பிரகாரம் என பிரமாண்டமான கட்டட அமைப்பாகும். 24 உட்கோவில்களையும், 365 சிவலிங்கங்களையும், 86 விநாயகர் சிலைகளையும் கொண்ட திருத்தலம். இக்கோயிலில் சிவனுக்கு இரண்டு சன்னிதிகள் உள்ளன. ஒன்றில் வான்மீகிநாதர் என்றும் மற்றொன்றில் தியாகராஜர் என்றும் சிவன் அழைக்கப்படுகிறார். இவற்றில் வான்மீகி நாதர் சந்நிதி அதன் தொன்மையை அறுதியிட்டு கூறமுடியாத அளவிற்கு மிகப் பழமையானது. சமயக்குரவர்களாலும் இதர நாயன்மார்களாலும் பாடப்பெற்ற தலம். ஆரூர் அறநெறி திருக்கோயில் நமிநந்தியடிகள் நாயனார் தண்ணீரால் திருவிளக்கேற்றி வைத்து வழிபட்ட திருக்கோயிலாகும். இத்தலம் "பிறக்க முத்தி திருவாரூர்" என்று புகழப்படும் சிறப்பினது.

தண்டியடிகள், கழற்சிங்கர், செருத்துணையார், விறன் மிண்டர், நமிநந்தியடிகள் முதலிய நாயன்மார்களின் தொண்டுகள் பரிமளித்த பதி இதுவே. கமலை ஞானப்பிரகாசரும் இங்கிருந்தவரே. திருவாரூர்த் தேரை அப்பர் தனது தேவாரத்தில் குறிப்பிடுகிறார். இத்தலம் வீதிப் பிராகாரங்களையும் சேர்த்து ஐந்து பிராகாரங்களைக் கொண்டுள்ளது. கோயில் ஐந்து வேலி, குளம் ஐந்து வேலி (கோயில் ஐந்துவேலி, குளம் ஐந்துவேலி, ஓடை ஐந்துவேலி என்பது இங்கு வழங்கப்படும் பழமொழி) என்று போற்றப்படும் மிகப் பெரிய சிவன் கோயிலும், கமலாலயம் என்ற தீர்த்தமும் உடைய தலம். ஆரூர் தலம் இரண்டு பாடல் பெற்ற தலங்களையும் ஒரு வைப்பு தலத்தையும் கோயிலுக்குள்ளும், ஆரூர் பரவையுண் மண்டளி என்ற மற்றொரு தலத்தை கோவிலுக்கு அருகிலும் கொண்ட மேன்மை மிக்கது. இது முசுகுந்த சோழன், மனு நீதிச் சோழன் ஆகியோர் ஆட்சி (வாழ்ந்த) செய்த சீர்மையுடைய பதி. திருவாரூர் தெற்குக் கோபுரத்திற்கு வெளியே, பரவையார் வாழ்ந்த கிழக்கு நோக்கிய மாளிகை வளாகத்தில் இசைஞானியாருக்குத் திருவுருவச் சிலை உள்ளது. சோழர்கள், பாண்டியர்கள், விசயநகர பேரரசின் நாயக்க மன்னர்கள் ஆகியோரின் கல்வெட்டுகள் மொத்தம் 65 உள்ளன.

வன்மீகநாதர் பெருமை

[தொகு]

திருவாரூர் தியாகராஜர் கோயிலில் அமைந்திருக்கும் லிங்கம் புற்றிலிருந்து சுயம்புவாக தோன்றியதாக வழங்கப்படுகிறது. எனவே, அப்பர் சிவபெருமானைப் புற்றிடங்கொண்டார் என்ற பெயரால் அழைக்கிறார். இத்தலத்தின் தொன்மையை வியக்கும் அப்பர், சிவனின் திருவிளையாடல்கள் ஒவ்வொன்றையுமாய் சொல்லி, அந்தத் திருவிளையாடல் நடப்பதற்கு முன்பாகவா, அல்லது பின்பாகவா, திருவாரூரில் எழுந்தருளிய நாள் என வினவுகிறார்.

ஆரூரைப் போற்றும் இலக்கியங்கள்

[தொகு]
தமிழ் இலக்கியங்கள் வடமொழி இலக்கியங்கள் தெலுங்கு மொழி இலக்கியங்கள் மாராட்டிய மொழி நூல்கள்
தேவாரம்

திருவாசகம்

திருவாரூர் மும்மணிக்கோவை

திருநாட்டுச் சிறப்பு.(பெரிய புராணம்)

திருவிசைப்பா திருப்பல்லாண்டு

கந்த புராணம்

தியாகேசர் தாலாட்டு

திருவாரூர் புராணம்

தியாகராஜ லீலை (மீனாட்சி சுந்தரம் பிள்ளையால் தமிழில் யாக்கப்பட்டது)

ஸ்காந்தம்

அஜபா ரகஸ்யம்

கமலாலய மகாத்மியம்

கமலாலய ஸ்துதி

தியாகராஜ முசுகுந்த சஹஸ்ர நாமாவளி

நாகர கண்டம்

முத்துசாமி தீட்சதர் கீர்த்தனம்

சங்கர பல்லக்கி சேவ பிரபந்தம்

தியாகேச பதமுலு

தியாகராஜ விலாச

தியாகராஜ தியான

கோயில் அமைப்பு

[தொகு]

33 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள, மிகவும் பிரம்மாண்டமான இக்கோயிலில், 9 ராஜ கோபுரங்கள், 80 விமானங்கள், 12 பெரிய மதில்கள், 13 மிகப்பெரிய மண்டபங்கள், 15 தீர்த்தக்கிணறுகள், 3 நந்தவனங்கள், 3 பெரிய பிரகாரங்கள், 365 லிங்கங்கள் (இவை வருடத்தின் மொத்த நாட்களை குறிப்பதாக சொல்கிறார்கள்), 100க்கும் மேற்பட்ட சன்னதிகள், 86 விநாயகர் சிலைகள், 24க்கும் மேற்பட்ட உள் கோயில்கள் அமைந்துள்ளன. இந்தக் கோயிலை சுற்றிப் பார்க்கவே, முழுமையாக ஒருநாள் ஆகும்.

மண்டபங்கள்

[தொகு]
இந்திர மண்டபம் கீழராஜ கோபுரத்திற்கு எதிரே உள்ள திருமண்டபம். ஆழித்தேருக்கு தியாகேச வள்ளல் எழுந்தருளுங்கால் சத்யோஜாத முகமாக ஆடும் பேரு பெற்ற மண்டபம்.
தட்டஞ்சுற்றி மண்டபம் தியாகேச வள்ளல் கிருஷ்ணகாந்த சாயரட்சை கண்டருளும் இடம். வல்லப கணபதி பிரதிஸ்டை செய்யப் பெற்றுள்ளார்.
உத்திர பாத மண்டபம் பங்குனி உத்திர நன்னாளில் வீதிவிடங்கர் தனது வலப்பாதத்தை காட்டி அருளும் திருமண்டபம். சபாபதி மண்டபம் என்று தற்போது அறியப்படுகிறது.
தேவாசிரியன் மண்டபம் ஆரூர் பெருமை பகரும் மண்டபம். ஸ்வஸாமி மித்ரர் (சுந்தரர்) திருத்தொண்டத் தொகை பாடியருளிய மண்டபம்.
இராஐநாரயண மண்டபம் திருவாதிரை மகாபிஷேகம் கண்டருளி தியாகேசர் வலப் பாத தரிசணம் அருளும் இடம்.
சுந்தரர் மண்டபம் தியாகேச வள்ளலின் திருமந்திரப் பிரசாதம் (திருநீறு) தயாரிக்கும் மேலான இடம்.
கமலாம்பிகை மண்டபம் கமலாம்பிகை சன்னதிக்கு எதிரே உள்ள முகமண்டபம் ஆகும். உச்சிஸ்ட கணபதி பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ளார்.
சந்திரசேகரர் மண்டபம் தியாகேச புராணத்தை எடுத்துரைக்கும் சிற்பத்தொகுதியைக் கொண்ட மண்டபம். 15 பிரிவுகளாக இச்சிற்பத் தொகுதியினைப் பகுக்கலாம்.

மன்னர்களின் அரும்பணி

[தொகு]
மூன்றாம் குலாத்துங்கன்- கீழ ராஜ கோபுரத்தில் காணப்படும் கற்படிமம்
ஈஸ்வர சிவர்- மூன்றாம் குலோத்தங்கனின் ஞான குரு
மேற்கு ராஜகோபுரம்

இக்கோயில் இடைக்காலச் சோழர்கள் காலத்தில் கற்கோயிலாக கட்டப்பெற்றதாகும். அதற்கு முன்பு மகேந்திரப் பல்லவன் காலத்தில் செங்கல் கோயிலாக இருந்துள்ளது. சோழப் பேரரசர் கண்டராதித்த சோழரது மனைவியாராகிய செம்பியன் மாதேவியாரால் கட்டப்பெற்ற கற்றளியை உடையது. சோழர்கள் மட்டுமல்லாமல், பல்லவர்கள், பாண்டியர்கள், விஜயநகர், தஞ்சை நாயக்கர்கள் மற்றும் மராத்திய மன்னர்களும் தத்தம் ஆட்சியில் இக்கோயிலுக்கு ஆதரவளித்துள்ளார்கள். மூன்றாம் குலோத்துங்கன் கீழக்கு ராஜ கோபுரத்தை கட்டுவித்தார். அச்சுதப்ப நாயக்கர் வடக்கு ராஜ கோபுரத்தை கட்டுவித்தார்.

மூன்றாம் குலோத்துங்கன் கட்டுவித்த 118 அடி உயரம் கொண்ட கிழக்கு ராஜகோபுரம்

அன்னை கமலாம்மாள் — நீலோத்பலாம்பாள் சந்நிதி

[தொகு]

கமலாம்பிகை (யோக சக்தி)

[தொகு]

திருவாரூர் தியாகராஜர் கோயில் அமைந்துள்ள அன்னை கமலாம்பாள் சந்நிதி மிகவும் பெயர்பெற்ற சக்தி தலம் ஆகும். இத்திருக்கோவில் மூன்றாம் பிரகாரத்தின் வடகிழக்கு திசையில் உள்ளது. சந்நிதியில் இரண்டு கால்களையும் மடக்கி யோகினியாய் அன்னை அமர்ந்திருக்கிறார். திருச்சுற்றின் தென்மேற்கு மூலையில் அட்சர பீடம் உள்ளது.

அன்னையின் அருட்கோலத்தை 'தியாகேச குறவஞ்சி' கீழ்கண்டவாறு வர்ணிக்கிறது.

விளங்கு தென்னாரூர் வியன்பதி தழைக்க

உளங்கனிவாக யோகாசனத்தில்

அண்டருந் துதிக்க அரசிருந்தருள் பூ

மண்டலம் துதிக்க வளர் பராசக்தி.

முத்துசுவாமி தீட்சிதர் அன்னை கமலாம்பாளைத் துதித்து நவாவர்ணக் கீர்த்தனைகளைப் பாடி இருக்கிறார்.

நீலோத்பலாம்பாள் (போக சக்தி)

[தொகு]
தியாகவள்ளல் உமையம்மையுடன் வேடுவ வடிவம் தாங்கி சோமாசியார் யாகத்திற்கு எழுந்தருளல் - மராத்திய கால ஓவியம் - நீலோத்பலாம்பிகை சன்னதி

இத்திருக்கோவில், இரண்டாம் பிராகரத்தின் வடபுறம் கொடிமரத்தின் எதிரே அமைந்துள்ளது. தென்மொழியில் அல்லியங்கோதை என்னும் திருப்பெயரோடு விளங்குகிறாள். இரண்டு திருக்கைகளோடு, இடக்கை சேடிப்பெண் சமந்திருக்கும் முருகனின் சிரசை தீண்டிய வண்ணம் உள்ளது. இதே போன்று உற்சவ மூர்த்தியும் இருப்பது சிறப்பு. இச்சந்நிதியின் முகமண்டபத்தில் தியாகேசர் சோமாசி யாகத்திற்கு செல்லுதல், மாணிக்க நாச்சியருக்கு அருள் புரிதல், மராத்திய மன்னர் வீதிவிடங்கனை வணங்குதல் போன்ற பல மராத்திய ஓவியங்கள் உள்ளன.

திருவாரூர் ஆழித்தேர்

[தொகு]

"ஆழித்தேர் வித்தகனை நான் கண்ட தாரூரே" என்பது அப்பர் தம் வாக்கு. ஆசியாவிலயே மிகப் பெரிய தேர் திருவாரூர் ஆழித்தேர் ஆகும்.

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் நடைபெறும் தேர்த்திருவிழா மிகவும் பெயர் பெற்றது. "திருவாரூர் தேரழகு" என்று சிறப்பிட்டுச்சொல்லும் அளவிற்கு புகழ் பெற்றது. இத்திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களும் பொதுமக்களும் தேரினைக் கோயிலைச் சுற்றி உள்ள வீதிகளில் இழுத்து வருவார்கள்.

யஜூர் வேதத்தில் ஸ்ரீ ருத்ரத்தில் தியாகேசர்

ரதிப்யோ ரதேப்யச்ச வோநமோ நமோ ரதேப்ய: ரதபதிப்யச்ச வோநமோ நமோ:

தேராகவும் தேர்த் தலைவனாகவும் உள்ள சிவபெருமான் எனக் குறிப்பிடப்படுகிறார் என்பது திருவாரூரின் தொன்மையை உணர்த்தும்.

1000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நடைப்பெற்ற தேர்த்திருவிழா, 1927 ஆம் ஆண்டு ஆழித்தேரோட்டத்தின்போது தேர் முற்றிலும் எரிந்துவிட்டது. கமல வசந்த வீதிவிடங்கப் பெருமானை முத்துக் கொத்தனார் என்பவர் காப்பாற்றினார்.

நின்றுபோன தேர்த் திருவிழா, பிறகு 1930 ஆம் ஆண்டு புதிய தேர் உருவாக்கப்பட்டு மீண்டும் தேரோட்டம் 1948 ஆம் ஆண்டு வரை நடைபெற்றது. பிறகு 1970 ஆம் ஆண்டு மு. கருணாநிதி மற்றும் வடபாதிமங்கலம் தியாகராஜ முதலியார் முயற்சியால் ஆழித் தேரோட்டம் நடைபெறத் தொடங்கியது.[3] 

வீதிவிடங்கனின். பிரம்மாண்டமான ஆழித்தேர்

ஆழித்தேரின் உயரம் 96 அடி ஆகும். இது வீதிவிடங்கன் 96 தத்துவங்களைக் கடந்தவன் என்று குறிக்கிறது. தேரின் மேல் பகுதி கமலவடிவமாக காட்சி அளிக்கும்.

அமைவிடம்

[தொகு]

மயிலாடுதுறை - திருவாரூர், தஞ்சாவூர் - நாகப்பட்டிணம், காரைக்குடி - திருத்துறைப்பூண்டி - திருவாரூர் இரயில்பாதையில் உள்ள நிலையம். தஞ்சாவூர், கும்பகோணம், மன்னார்குடி, மயிலாடுதுறை, திருத்துறைப்பூண்டி, காரைக்கால் ஆகிய இடங்களிருந்து பஸ் வசதி உள்ளது.

திருத்தலப் பாடல்கள்

[தொகு]
  • இத்தலம் பற்றிய தேவாரப் பதிகங்கள் சிலவற்றைக் கீழே காணலாம்:

திருநாவுக்கரசர் பாடிய பதிகம் மொத்தம் 21 சில

மெய்யெலாம் வெண்ணீறு சண்ணித்த
மேனியான் தாள்தொ ழாதே
உய்யலா மென்றெண்ணி உறிதூக்கி
யுழிதந்தென் உள்ளம் விட்டுக்
கொய்யுலா மலர்ச்சோலைக் குயில்கூவ
மயிலாலும் ஆரூ ரரைக்
கையினாற் றொழா தொழிந்து
கனியிருக்கக் காய்கவர்ந்த கள்வனேனே.

திருஞானசம்பந்தர் பாடிய பதிகம் மொத்தம்-5

சித்தம் தெளிவீர்காள், அத்தன் ஆரூரைப்
பத்தி மலர்தூவ, யாகுமே.
பிறவி யறுப்பீர்காள், அறவன் ஆரூரை
மறவா தேத்துமின், துறவி யாகுமே.
துன்பந் துடைப்பீர்காள், அன்பன் அணியாரூர்
நன்பொன் மலர்தூவ, இன்ப மாகுமே.
உய்ய லுறுவீர்காள், ஐயன் ஆரூரைக்
கையி னாற்றொழ, நையும் வினைதானே.

சுந்தரர் பாடிய பதிகம் மொத்தம்-8

இறைகளோ டிசைந்த இன்பம்
இன்பத்தோ டிசைந்த வாழ்வு
பறைகிழித் தனைய போர்வை
பற்றியான் நோக்கி னேற்குத்
திறைகொணர்ந் தீண்டித் தேவர்
செம்பொனும் மணியும் தூவி
அறைகழல் இறைஞ்சும் ஆரூர்
அப்பனே அஞ்சி னேனே.

திருவாசகத்தில் திருப்புலம்பல் என்ற பகுதி திருவாரூரில் பாடப்பெற்றதாகும். அது அன்றி ஆறு இடங்களில் திருவாரூர் குறிப்பிடப்பட்டுள்ளது. பன்னிரு திருமுறைகளிலும் பாடப்பெற்ற ஒரே தலம்.

குடமுழுக்கு

[தொகு]

இக்கோயிலில் நவம்பர் 8, 2015 அன்று குடமுழுக்கு நடைபெற்றது.[4]

அடிக்குறிப்பு

[தொகு]
  1. வீ. ஜெயபால், சைவ நால்வரால் பாடல் பெற்ற திருத்தலங்கள், திருவாசகத் தலங்கள், அம்மையப்பா பதிப்பகம், சைவ சித்தாந்த ஆய்வு மையம், சீனிவாசபுரம் விரிவாக்கம், தஞ்சாவூர் 613 009, டிசம்பர் 2014
  2. வீ.ஜெயபால், திருவிசைப்பா திருப்பல்லாண்டு சிவத்தலங்கள், அருணகிரிநாதசுவாமிகள் அருளிச்செய்தி திருப்புகழ் பாடல் பெற்ற முருகன் திருத்தலங்கள், 108 வைணவ திவ்ய தேசங்கள், அம்மையப்பா பதிப்பகம், சைவ சித்தாந்த ஆய்வு மையம், சீனிவாசபுரம் விரிவாக்கம், தஞ்சாவூர் 613 009, மே 2016
  3. "ஆரூர் அழகுத் தேர்". ஆனந்த விகடன்.
  4. திருவாரூரில் தியாகராஜர் கோயில் கும்பாபிஷேகம், தினமணி, நவம்பர் 8, 2015

இவற்றையும் பார்க்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Thyagaraja Temple, Tiruvarur
என்பதில் ஊடகங்கள் உள்ளன.