தாகித்தி
தாகித்தி கரும் கடற்கரைகளுக்குப் பெயர்பெற்றது. | |
புவியியல் | |
---|---|
அமைவிடம் | பசிபிக் பெருங்கடல் |
தீவுக்கூட்டம் | சொசைட்டி தீவுகள் |
உயர்ந்த புள்ளி | ஒரொஹேனா மலை |
நிர்வாகம் | |
பிரான்சு | |
Overseas collectivity | பிரெஞ்சு பொலினீசியா |
பெரிய குடியிருப்பு | பப்பியேட்டி (மக். 131,695 நகர்ப்புறம்) |
மக்கள் | |
மக்கள்தொகை | 178,133 (ஆகஸ்ட் 2007) |
தாகித்தி அல்லது தாயித்தி (Tahiti) என்பது பசிபிக் பெருங்கடல் பகுதியில் பிரெஞ்சு பொலினீசியாவில் அமைந்துள்ள விண்ட்வார்ட் தீவுக் கூட்டத்தில் உள்ள மிகப் பெரிய தீவாகும். பிரெஞ்சுப் பொலினீசியாவின் பொருளாதார, அரசியல், பண்பாட்டு மையமாக இத்தீவு விளங்குகிறது. எரிமலை வெடிப்பினால் உருவாகிய இத்தீவு பவளப் பாறைகளை சுற்றிவரக் கொண்ட பெரும் மலைகளைக் கொண்டுள்ளது. இத்தீவின் மக்கள் தொகை 2012 கணக்கெடுப்பின் படி 183,645 ஆகும். பிரெஞ்சுப் பொலினீசியாவில் மக்கள் அடர்த்தி கூடிய தீவு இதுவாகும். பிரெஞ்சுப் பொலீனீசியாவின் மொத்த மக்கள் தொகையில் 68.5% விழுக்காட்டினர் தாகித்தியில் வாழ்கின்றனர். இதன் தலைநகரம் பப்பியேட்டி ஆகும்.[1]
வரலாறு
[தொகு]தாகித்தியில் பொலினேசியர்கள் கிபி 300 முதல் 600 ஆண்டளவில் இருந்து தொங்கா, மற்றும் சமோவா ஆகிய நாடுகளில் இருந்து வந்ததாகக் கருதப்படுகிறது.
1606 இல் முதன் முதலில் ஸ்பெயின் நாட்டுக் கப்பல் முதன் முதலில் இங்கு வந்தது. ஆனாலும் அவர்கள் இத்தீவில் குடியேறுவது பற்றிக் கவலைப்படவில்லை. அதன் பின்னர் சூன் 18, 1767 இல் சாமுவேல் வாலிஸ் தலைமையில் ஆங்கிலேயர்கள் வந்தனர். இத்தீவின் அமைதியான சூழலும் உள்ளூர் மக்களின் அன்பான உபசரிப்பும் ஆங்கிலேயரை மிகவும் கவர்ந்தது. ஆங்கிலேயரைத் தொடர்ந்து ஏப்ரல் 1768 இல் பிரெஞ்சு நாடுகாண் பயணி லூயி-அண்டன் டி போகன்வில் இங்கு தரையிறங்கினார்.
ஜூன் 2, 1769 இல் கப்டன் ஜேம்ஸ் குக் இங்கு வந்து ஆகஸ்ட் 9 வரை தங்கியிருந்தான். அக்காலத்தில் இத்தீவின் மக்கள் தொகை 50,000 ஆக இருந்தது. பல ஐரோப்பியக் கப்பல்கள் இதன் பின்னர் இங்கு வந்து போயின. ஐரோப்பியர்களின் வருகை இங்குள்ள மக்கள் வாழ்க்கை நிலையையும் பாதிக்க ஆரம்பித்தது. அவர்கள் தம்முடன் பல நோய்களையும் இங்கு கொண்டு வந்தனர். இதனால் இத்தீவின் மக்கள் தொகை பெருமளவில் குரைய ஆரம்பித்தது. 1797 இல் மக்கள் தொகை 16,000 ஆகக் குறைந்தது. அதன் பின்னர் 6,000 ஆகக் குறைந்தது[2].
1842 இல், தாகித்தியின் அரசியாக இருந்த நான்காம் பொமாரே என்பவள் இத்தீவை பிரான்சின் காப்பாட்சியாக அமைக்கச் சம்மதித்தாள். பிரெஞ்சு அட்மிரல் "டுப்பேட்டி தௌவார்ஸ்" தலைமையில் 1843 இல் பல பிரெஞ்சு மாலுமிகளுடன் தாகித்தியில் இறங்கி அந்நேரம் பிரித்தானிய ஆளுநரைக் கைது செய்து நாட்டை விட்டுத் துரத்தினான்.
எனினும் தாகித்தியர்களுக்கும் பிரெஞ்சுக்களுக்கும் இடையில் 1847 ஆம் ஆண்டு வரையில் போர் நீடித்தது. இத்தீவு ஜூன் 29, 1880 வரையில் ஒரு பிரெஞ்சுக் காப்பாட்சியாக இருந்து ஜூன் 29 இல் ஐந்தாம் பொமரே மன்னன் நாட்டின் இறைமையை விட்டுக் கொடுத்து பிரான்சிடம் முழுமையாக ஒப்படைத்தான். 1946 முதல் தாகித்தி உட்பட முழு பிரெஞ்சு பொலினீசியாவும் பிரெஞ்சு கடல்கடந்த பிராந்தியமாக ஆக்கப்பட்டன. தாகித்தியர்கள் அனைவருக்கும் பிரெஞ்சுக் குடியுரிமை வழங்கப்பட்டது[3]. 2003, பிரெஞ்சு பொலினீசியா பிரெஞ்சு கடல்கடந்த சமூகம் என்ற நிலைக்கு மாற்றப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Chart of the Island Otaheite, by Lieut. J. Cook 1769 பரணிடப்பட்டது 2011-08-02 at the வந்தவழி இயந்திரம். National Maritime Museum. nmm.ac.uk
- ↑ Emerging Infectious Diseases and the Depopulation of French Polynesia in the 19th Century
- ↑ The Pacific Islands: An Encyclopedia
வெளி இணைப்புகள்
[தொகு]- தாகித்தி சுற்றுலாத் துறை
- பிரெஞ்சு பொலினீசியாவின் வரைபடம் பரணிடப்பட்டது 2008-09-14 at the வந்தவழி இயந்திரம்
- சிஐஏ தரவுநூல் பரணிடப்பட்டது 2016-05-15 at the வந்தவழி இயந்திரம்