தம்பிலுவில் படுகொலைகள்
தம்பிலுவில் படுகொலைகள் இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்திலுள்ள தம்பிலுவில் கிராமத்தில் 1985 மே 16 முதல் மே 18 வரை இடம்பெற்றது. நற்பிட்டிமுனை, துறைநீலாவணை, சேனைக்குடியிருப்பு கிராமங்களில் விசேட அதிரடிப்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்ட 60 தொடக்கம் 63 வரையான தமிழ் இளைஞர்கள் இங்கு கொண்டு வரப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.[1]
சுற்றிவளைக்கப்பட்ட இளைஞர்களில் சிலர் அவ்விடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டு அவர்களின் உடல்கள் அப்புறப்படுத்தப்பட்டன. 18 முதல் 25 வயது வரை மதிக்கப்பட்ட சுமார் 40 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு, 18 மைல் தெற்கேயுள்ள தம்பிலுவில் இடுகாட்டுக்கு அழைத்து வரப்பட்டு அவர்களைக் கொண்டே குழிகள் தோண்டப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டார்கள். சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் அங்கேயே புதைக்கப்பட்டார்கள். இவ்வாறு மூன்று நாட்கள் வெளியூர் இளைஞர்களை இரவு நேரத்தில் பலருக்கும் தெரியாமல் அழைத்து வந்து இடம்பெற்று வந்த இக்கொலைகள் உள்ளூர் மக்களால் சர்வதேச ஊடகங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டதை அடுத்து நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பின்னர் ஏற்பட்ட சர்ச்சையை அடுத்து இவர்களின் உடல்கள் அங்கிருந்து இரகசியமாக அப்புறப்படுத்தப்பட்டு, மட்டக்களப்புக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு புதைக்கப்பட்டன.[1] எனினும் இப்படி ஒன்று நடக்கவேயில்லை என்று அரசு தரப்பில் சொல்லப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Cycles of Violence: Human Rights in Sri Lanka Since the Indo-Sri Lanka Agreement, Barnett R. Rubin, டிசம்பர் 1987