தமிழக மணற் சுரங்கங்கள்
தமிழக மணற் சுரங்கங்கள் என்பவை சட்டத்திற்கு உட்பட்டும், சட்டத்திற்கு உட்படாமல் திருட்டுத்தனமாகவும் தமிழக ஆற்றங்கரைகளில் தோன்டப்படுவதாகும். காவிரி, பாலாறு, வைகை மற்றும் தாமிரபரணி போன்ற தமிழக ஆற்றுப்படுகைகளில் தினந்தோறும் எடுக்கப்பட்டு தமிழகம் மட்டுமல்லாது கேரளா, கர்நாடகா மாநிலங்களிலும் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. [1]
ஆறுகள் தண்ணீரை மட்டுமன்றி செழிப்பான வண்டலையும் மணலையும் அளித்து சுற்றிசூழலுக்கு அரும் பங்காற்றி வருகின்றன. இவைகளை அளவுடன் பயன்படுத்தினால் தொடர்ந்து இந்த வளங்கள் நமக்குக் கிடைக்கும். ஆனால் தற்போது உள்ள காலகட்டத்தில் தண்ணீரும் மணலும் வணிகப் பொருளாகி தலைமுறையாகிவிட்டன. பருவகால வேறுபாடு காரணமாக குளிர்காலங்களில் இறுக்கமாகவும், வெயில் காலத்தில் விரிவடைந்து இலகுவாகியும் நொறுங்குகின்றன பாறைகள். இவ்வாறு நொறுங்கும் பாறைகள் மழைக்காலம் வரும்போது, மழைநீரின் வேகத்தால் உருட்டப்பட்டு, உடைந்து சிறுசிறு துகள்களாகி மணலாக மாற்றம் அடைகின்றன. இத்தகைய தன்மையுடைய மணலை மனிதனால் செயற்கையாக உருவாக்கவே முடியாத்தாகும். இயற்கையாக உருவானாலும், சில மாதங்களில் அல்லது வருடங்களில் உருவாகிடும் பொருள் அல்ல மணல். ஒரு கன அடி மணல் உருவாக, குறைந்தபட்சம் 100 வருடத்துக்கு மேல் ஆகும்.
குச்சிகளையும், கம்புகளையும் வைத்து வீடுகள் கட்டிய மனிதன், மண்ணையும், கற்களையும் வைத்து கட்டுமானங்களை அமைக்கத் தொடங்கியபோதுதான், கட்டுமானப் பணிகளுக்கு மணல் பயன்படத் தொடங்கியது. உலகமயமாக்கலின் காரணமாக 1990 ம் ஆண்டுகளில் பல பன்னாட்டு நிறுவனங்கள், இந்திய தொழில் மற்றும் கட்டுமானத் துறையில் கால்பதித்தன. நிலங்களின் மதிப்பு எக்கச்சக்கமாய் உயர்ந்தன. அடுக்குமாடி குடியிருப்புகளில் வாழ்வதுதான் சந்தோஷமான வாழ்க்கை என அடையாளப்படுத்தப்பட்டு எங்கு பார்த்தாலும் அடுக்குமாடி குடியிருப்புகளும், நிறுவனங்களுமாக நகரங்களை அலங்கரிக்கத் தொடங்கின.
இந்தக் கட்டுமானப் பணிகளுக்கு எல்லாம் மணல் அதிகளவில் தேவைப்பட, மணல் எடுப்பதில் நவீனமுறைகள் புகுத்தப்பட்டது. அதுவரை மாட்டு வண்டியில் சுமந்து மணலை எடுத்துவந்த நிலையில், மணல் எடுக்கும் தொழிலில் களம் இறங்கிய நிறுவனங்கள், மணல் அள்ள இயந்திரங்களைப் பயன்படுத்தத் தொடங்கி ஓரேநாளில் பல டன் கணக்கில் மணல் அள்ள துவங்கினர். கட்டுமான நிறுவனங்களோடு மறைமுக கூட்டணி வைத்திருந்த அரசியல் பிரமுகர்கள்தான் மணல் தொழிலிலும் ஆதிக்கம் செலுத்தினர். விஸ்வரூபம் எடுத்த கட்டுமானத் தொழிலுக்குத் தீனிபோட, ஆற்றங்கரைகள் மணல் குவாரிகளாக மாற்றப்பட்டன. கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டித்தரும் தொழிலாக மணல் விற்பனை மாறிவிட்டது. குத்தகை அடிப்படையில் ஏலம் எடுத்து ஆறுகளில் மணல் எடுக்கும் பணி தீவிரமடைந்தது. இப்படித்தான் மணல் கொள்ளை 1990-களில் விஸ்வரூபம் எடுத்தது.
வரலாறு
[தொகு]சுற்றுச்சூழல் மற்றும் கனிமவள பாதிப்பை உறுதிப்படுத்தவும், ஆறுகளைக் காப்பதற்கும் 1884-ல் ஆற்றுப் பாதுகாப்புச் சட்டம் ஒன்றை ஆங்கிலேய அரசு கொண்டுவந்தது. இன்றும் அச்சட்டம் நடைமுறையில் உள்ளது. அச்சட்டத்தின் தொடர்பாக இடப்பட்ட அரசு ஆணை எண் 123/24-8/15.4.1911-ன் படி
- ஆற்றின் இருபுறமும் வெள்ளக்கரைகளுக்கு அப்பால் 100 அடிவரை (தனியார் நிலங்கள் உட்பட) மண் அல்லது மணல் அள்ளக்கூடாது.
- தேவைக்காக மணல் எடுக்க வேண்டுமெனில் குறிப்பிட்ட ஆற்றுக்குப் பொறுப்பான பொதுப்பணித்துறை அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் அந்த அலுவலர் மணல் எடுக்க உத்தேசித்திருந்த இடத்தைப் பார்வையிட்டு மணல் எடுப்பதனால் ஆற்றின் பாதுகாப்பிற்கு இடையூறு உள்ளதா என்பதை ஆய்வு செய்தபின் சில விதிகளுடன் அனுமதி வழங்குவார். மணல் எடுப்பதை எப்போது வேண்டுமானாலும் தடுக்கும் அதிகாரம் அந்த அலுவலருக்கு உண்டு. விதிகளை மீறி மணல் அள்ளினால் சிறைத்தண்டனையுடன் ரூபாய் 50 அபராதமும் விதிக்கப்படும்.
மேலும் சென்னை பஞ்சாயத்துகள் சட்டம் 1958 (Madras Panchayat Act 1958) சட்டப்பிரிவு 84-ன் படி, பஞ்சாயத்துகளுக்கு ஏரி குளங்கள் மீது உரிமைகள் இருந்தன. எனவே ஆறு, குளங்களில் மணல் அள்ளுவதை அனுமதிப்பது கிராமப்பஞ்சாயத்துகளின் அதிகார வரம்பிற்குட்பட்டது. 1993-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அரசியல் சட்ட 73-வது திருத்தப்படி பஞ்சாயத்துகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டது. இந்த அடிப்படையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அந்தந்த மாநில அரசுகள் சட்டம் இயற்றின. இதன்படி சென்னை கிராமப் பஞ்சாயத்துச் சட்டம் 1958-லிருந்து பிரிவுகள் 83 மற்றும் 85, 1994-ம் ஆண்டு தமிழ்நாடு பஞ்சாயத்துச் சட்டத்தில் பிரிவு 132 மற்றும் 133 ஆகவும் சேர்க்கப்பட்டன. பஞ்சாயத்துகளுக்கு நீர்நிலைகளிலிருந்த உரிமை வழங்கிய பிரிவு 84 புதிய பஞ்சாயத்துக்கள் சட்டத்தில் நீக்கப்பட்டது. பிரிவு 85-ல் வழங்கப்பட்டிருந்த அதிகாரம் புதிய பஞ்சாயத்துகள் சட்டத்தின் பிரிவு 133ன்படி மாவட்ட ஆட்சியாளருக்கு அளிக்கப்பட்டது. அதோடு நீர்நிலைகள் பஞ்சாயத்துகளிடம் ஒப்படைக்கப்படாமல் பஞ்சாயத்து ஒன்றியங்களிடம் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பஞ்சாயத்துகளிடமிருந்து அதிகாரங்கள் பறிக்கப்பட்டு மாவட்ட ஆட்சியாளரிடம் அளிக்கப்பட்டதன் மூலம் மணல் கொள்ளைக்கு வழிவகுக்கப்பட்டது.[2]
1957-ல் மத்திய அரசு ஆற்று மணலை சிறு கனிமம் என்று வகைப்படுத்தியது. இந்திய அரசின் சுரங்கங்கள் கனிமங்கள் (பயன்பாடும் கட்டுப்பாடும்) 1957 சட்டத்தின் வழிகாட்டுதலில் 1990 ம் ஆண்டு உருவான தமிழ்நாடு சிறுகனிமங்கள் பயன்பாட்டு விதிகளின்படி ஆற்றில் உள்ள மணல் சிறு கனிமம் (Minor Mineral) என்று வரையறுக்கப்பட்டு மாவட்ட ஆட்சியாளருக்கு மணல் உரிமையாக்கப்பட்டது. ஆறுகளில் மணல் அள்ளுவதைக் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக, இச்சட்டம் மணல் அள்ளுவதைக் குத்தகைக்கு விடுவதைக் குறித்த சட்டமாகக் கருதப்படுகிறது. இதன்மூலம் எந்தவொரு ஏலமும் நடத்தாமல் மணல் குவாரிகளை குத்தகைக்கு விடும் அதிகாரத்தை அரசு பெற்றது.ஆனால் ஆற்றில் இயந்திரங்கள் மூலம் மணல் அள்ளுவதை இச்சட்டம் அனுமதிக்கவில்லை. பிறகு 19.04.2004 இல் ஒரு அரசு ஆணையின்படி அரசு தொழில்துறை செயலாளர் அனுமதியுடன் இயந்திரங்கள் பயன்படுத்தலாம் என்று சட்டம் திருத்தப்பட்டது. இதனைப் பயன்படுத்தி அப்போதை ஆளும் அரசு பாலாறு ஆற்றுப்படுகைகளில் மணல் அள்ளும் உரிமையை ஓரே நபருக்கு அளித்தது.
மணல் விற்பனை அதிகரித்ததன் மூலம் கருப்பு பண பதுக்கல்கள் அதிகரித்தது. மேலும் மணல் குவாரிகளை குத்தகைக்கு எடுப்பதில் சாதி மற்றும் அரசியல் மோதல்களும் அதிகரித்தன. இத்தகைய குத்தகைதாரர்களின் மீதான புகார்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் எக்கச்சக்கமாக பதியபட்டன. எனவே இது தொடர்பாக நிபுணர் குழு அமைத்து அரசு விசாரித்தது. அந்தக் குழு, மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்தலாம் என யோசனை சொல்ல, அதை ஏற்றார் அன்றைய முதல்வராக இருந்த ஜெயலலிதா. அந்தக்குழு பரிந்துரையின் படி 2003-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து அதுவரையில் குத்தகை அடிப்படையில், தனியாரால் ஏலம் எடுத்து நடந்து வந்த மணல் குவாரிகள், 2003-ம் ஆண்டு தமிழக அரசு வசமாகி தமிழக பொதுப்பணித்துறையால் மணல் விற்பனை நடைபெற்றது.
மணலை தனியார் விற்பதைவிட அரசு விற்கும்போது வருமானம் அரசை நேரடியாகச் சென்று சேரும். சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் தவிர்க்கப்படும் என்பதால், இந்த முறைக்கு பல்வேறு தரப்பிலும் வரவேற்புகள் இருந்தது. பொதுப்பணித் துறை சார்பில் மணல் நேரடியாக விற்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அதனைக் கண்காணித்தார். ஆனால், இது சில மாதங்களே நீடித்தன.சில மாதங்களுக்கு பின்னர் மணல் அள்ளுதல் மற்றும் ஏற்றுதல் குத்தகை எனும் பெயரில் மறுபடியும் தனியாருக்கு அனுமதிக்கப்பட்டது. குத்தகை மறுபடியும் ஒரே நபரிடம் வழங்கப்பட்டது. குவாரிகளில் இருந்து மணல் எடுப்பது, அதை லாரிகளில் கொண்டுசெல்வதுதான் இந்த குத்தகைதாரர்களின் வேலை. மணல் தேவைப்படுபவர்கள், இவர்களை நாட வேண்டும் என்ற நிலை உருவானது. பின்னாளில் "மணல் சேமிப்புக் கிடங்கு"களுக்கான அனுமதியைப் பெற்று, மணலை இருப்பு வைத்து விற்கத் தொடங்கினர். இதனால், அரசு மணல் குவாரிகளை ஏற்று நடத்தினாலும், அதிகாரம் முழுவதும் தனியாரிடமே இருந்தன.
அரசு ஒரு யூனிட் மணலுக்கு நிர்ணயிக்கும் விலை ரூ.305. மூன்று யூனிட் மணலுக்கான விலை ரூ.915 மட்டுமே! ஆனால், இது வெளியில் 10 மடங்குக்கும் மேலாக, அதாவது ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை விற்கப்பட்டது. 2003-ம் ஆண்டில் இருந்து மக்கள் வாங்கும் மணலின் விலை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே வந்தது. ஆனால், அரசிடம் தனியார் வாங்கும் மணலின் விலை மட்டும் கூடவே இல்லை. ஆரம்பத்திலிருந்து கடந்த 10 ஆண்டுகளாக அரசிடம் ஒரு யூனிட் மணல் ரூ.315 என்ற விலையில்தான் தனியார் பெற்று வருகின்றனர். இதன்படி 15000 கோடி அளவிற்கு மணல் திருட்டுதனமாக சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.[3].மணல் அள்ளும் உரிமை தனியாரிடம் கொடுக்கப்பட்ட பின்னர்தான், இயந்திரங்கள் மூலம் மணல் அள்ளுவது அனுமதிக்கப்பட்டது. 2004-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இயந்திரங்கள் மூலமாக மணல் அள்ள அனுமதி வழங்கப்பட்டது. இதன் பின்னர்தான் மணல் கொள்ளை தீவிரமானது. அரசு, அதிகாரிகளின் ஆதரவுடன் அனுமதிக்கப்பட்ட அளவுக்கும் மேலாக, போடப்பட்ட சட்டங்களை மீறி மணல் அள்ளப்பட்டது.
சுற்றுச்சூழல் விளைவுகள்
[தொகு]- நிலத்தடி நீர் மட்டம் குறைதல் [4]
- குடிநீர் ஆதாரங்கள் அழிதல்,
- நீர் பாதைகள் தடுக்கப்பட்டு மணல் அள்ளுவதால், உழவுத் தொழில் பாதிப்புக்கு உள்ளாதல்
- கடலோரங்களில் மணல் அள்ளப்படுவதால் கடல்நீர் உள்ளே புகுந்து மீனவர் குடியிருப்புகள் பாதிப்புக்குள்ளாதல்
- கடற்கரையில் மணல் அகழ்வினால் வெப்ப மண்டல சூறாவளிகளும் சுனாமியுடன் தொடர்புடைய அலைகளும் புயலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி பாதுகாப்பு அற்ற நிலையை ஏற்படுத்துகின்றன.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Illegal sand mining rampant in Palar basin". The Hindu. October 10, 2013. பார்க்கப்பட்ட நாள் 2014-02-04.
- ↑ "தமிழக ஆறுகளில் மணல்கொள்ளை".
- ↑ "Illegal sand mining in Tamil Nadu worth Rs 15,000 crore?". The Times of India. Aug 21, 2013. Archived from the original on 2014-02-04. பார்க்கப்பட்ட நாள் 2014-02-04.
- ↑ "Promote manufactured sand to save rivers: Natchiappan". The Times of India. Jan 21, 2014. Archived from the original on 2014-02-04. பார்க்கப்பட்ட நாள் 2014-02-04.
- ↑ http://coastalcare.org/sections/inform/sand-mining/