உள்ளடக்கத்துக்குச் செல்

டேனிஷ் ஆளுநர் மாளிகை, தரங்கம்பாடி

ஆள்கூறுகள்: 11°1′45″N 79°50′58″E / 11.02917°N 79.84944°E / 11.02917; 79.84944
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டேனிய ஆளுநர் மாளிகை
மாளிகையின் முன்புறத் தோற்றம்
Map
பொதுவான தகவல்கள்
நகரம்தரங்கம்பாடி
நாடுஇந்தியா
ஆள்கூற்று11°1′45″N 79°50′58″E / 11.02917°N 79.84944°E / 11.02917; 79.84944
கட்டுமான ஆரம்பம்1773
கட்டுவித்தவர்டேனிஷ் ஆளுநர்கள்
உரிமையாளர்இந்தியத் தொல்லியல் ஆய்வகம், தமிழ்நாடு அரசு

டேனியக் கோட்டை ஆளுநர் மாளிகை என்பது தமிழகத்தின், தரங்கம்பாடியில், வங்கக் கடலை ஒட்டியுள்ள டென்மார்க்காரர்களின் கோட்டையான டேனியக் கோட்டைக்கு எதிரில் அமைந்துள்ள ஒரு மாளிகையாகும். இந்த மாளிகையில் டென்மார்க் நாட்டின் 14 ஆளுநர்கள் தங்கியிருந்து ஆட்சி புரிந்திருக்கிறார்கள்.

வரலாறு

[தொகு]

பதினேழாம் நூற்றாண்டில் தரங்கம்பாடியானது டேனிஷ்காரர்களின் முக்கிய வணிகத்தலமாக இருந்தது. இங்கு டேனிஷ் காரார்கள் கி.பி. 1620 கோட்டைக் கட்டி, அதன் அருகிலேயே குடியிருப்புகளை அமைத்துக்கொண்டு வசிக்கத் தொடங்கினார்கள். இந்த டேனிஷ் ஆளுநர் மாளிகை கி.பி. 1773 இல் கட்டப்பட்டது. முதலில் இந்த மாளிகையானது இங்கிலாந்தைச் சேர்ந்த எட்வர்டு வில்லியம் ஸ்டீபன்சன் என்ற வணிகரால் கட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த மாளிகையை, 1775 இல் விலைக்கு வாங்கிய அப்போதைய டேனிஷ் ஆளுநர் டேவிட் பிரவுன், அதை தனது தனிப்பட்ட வசிப்பிடமாக்கிக் கொண்டார். இவரையடுத்து, 1779 இல் ஆளுநராக வந்த பீட்டர் ஹெர்மன் அபஸ்ட்டி என்பவரும் இந்தக் கட்டிடத்தை தனது தனிப்பட்ட வசிப்பிடமாகவே பயன்படுத்தினார். இதைத் தொடர்ந்து, டென்மார்க் அரசு நிர்வாகமே இந்தக் கட்டிடத்தை விலைக்கு வாங்கி ஆளுநரின் அதிகாரப்பூர்வ மாளிகையாக்கியது. அதற்கு பிறகு வந்த பீட்டர் ஆங்கர், யோஹான் பீட்டர் ஹெர்மான்சன் உள்ளிட்ட 12 ஆளுநர்களுக்கு 1845 வரை இந்த மாளிகையே ஆளுநர் மாளிகையாக இருந்தது.

18ஆம் நூற்றாண்டின் மத்தியில் இந்நகரத்தின் வர்த்தகரீதியான முக்கியத்துவம் குறைந்து, வங்காளத்தின் சிறீராம்பூர் ஜவுளி உற்பத்தி மையமாக ஆனது. என்றாலும் தரங்கம்பாடியிலேயே காலனியின் தலைமையகம் இருந்துவந்தது. 1845இல் இந்த நகரமும், கோட்டையும் பிரித்தானியருக்கு விற்கப்பட்டது. இதன்பிறகு தரங்கம்பாடியும் அதன் கோட்டையும், இந்த ஆளுநர் மாளிகையும் தன் முக்கியத்துவத்தை இழந்தன.[1][2][3][4][5][6]

அதன்பிறகு 1860 வரை இந்த மாளிகையை பிரித்தானியரால் காலியாக வைக்கப்பட்டிருந்தது. பின்னர் 1860 - 1884 காலகட்டத்தில் இக்கட்டடம் நீதிமன்றமாகவும், 1910 - 1985 காலகட்டத்தில் உப்புக் கிடங்காகவும் பயன்படுத்தப்பட்டது. 2004 ஆழிப்பேரலையின்போது இந்த மாளிகை மிகக் கடுமையாக சேதமுற்றது. இதையடுத்து, டென்மார்க் நாட்டினரின் உதவியோடு 2011 இல் இந்த மாளிகை தமிழக அரசால் புதுப்பிக்கப்பட்ட நிலையில், தற்போது இது தொல்லியல் துறையின் வசம் இருக்கிறது.

மாளிகையின் அமைப்பு

[தொகு]

இந்த மாளிகையின் முன்பக்கமானது நெடிதுயர்ந்த தூண்களால் தாங்கி உள்ளது. தூண்கள் மீது மர உத்திரங்கள் பதிக்கப்பட்டு கான்கிரீட் கூரை போன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த மாளிகையின் முகப்பு தொடங்கி பின்பக்கத் தோட்டம் வரையிலும் நீளவாக்கில் பாதை செல்கிறது. இடதுபுறம் மூன்று அறைகள், வலதுபுறம் மூன்று அறைகள். இவற்றில் ஒரு அறையிலிருந்து இன்னொரு அறைக்குச் செல்லும் வகையில் வழிகளும் உள்ளன. இரண்டு பக்க அறைகளுக்கும் நடுவே மிக அழகானதொரு திறந்தவெளி முற்றம் உள்ளது. இந்த மாளிகையின் முதல் தளத்திலிருந்து பார்த்தால், ஊருக்குள் வரும் வழி, எதிரே உள்ள கோட்டை, அப்போதிருந்த துறைமுகம் என அத்தனையும் தெரியும்விதத்தில் உள்ளது.[7]

இதையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Thomas, Alastair H. (2010). The A to Z of Denmark. Scarecrow Press. p. 254. ISBN 9781461671848.
  2. Guillot, Claude; Lombard, Denys; Ptak, Roderich (1998). From the Mediterranean to the China Sea: Miscellaneous Notes. Otto Harrassowitz Verlag. p. 215. ISBN 9783447040983.
  3. Prakash, Om (1998). European Commercial Enterprise in Pre-Colonial India, Volume 2. Cambridge University Press. p. 208. ISBN 9780521257589.
  4. M.S., Naravane (1998). The Maritime and Coastal Forts of India. APH Publishing. p. 110. ISBN 9788170249108.
  5. Hoiberg, Dale (2004). Students' Britannica India: Select essays. Popular Prakashan. p. 407. ISBN 9780852297629.
  6. Subrahmanyam, Sanjay (2002). The Political Economy of Commerce: Southern India 1500–1650. Cambridge University Press. p. 182. ISBN 9780521892261.
  7. கரு. முத்து (6 செப்டம்பர் 2017). "ஆண்டுகள் எழுபது ஆண்டவர்கள் பதினான்கு.. !". கட்டுரை. தி இந்து. Retrieved 6 செப்டம்பர் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)