சோணாட்டுப் பிடவூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன்
Appearance
சோணாட்டுப் பிடவூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன் சங்ககால அரசர்களில் ஒருவன். இவன் சிறந்த வள்ளலாகவும் விளங்கினான். பிடவூர் இவனது தலைநகர். மதுரை நக்கீரர் பிடவூர் அறப்பெயர்ச் சாத்தன் எனக் குறிப்பிடுகிறார். [1] ஒருநாள் இந்தப் புலவரின் சுற்றம் இவனது வாயிலில் நின்றுகொண்டு தன் தடாரிப் பறையை முழக்கியது. அது கேட்டு வெளியே வந்த சாத்தன் அரிய செல்வங்களைக் கொண்டுவரச் செய்து வழங்கினான். அத்துடன் நில்லாது அங்கு நின்ற புலவரைத் தன் மனைவிக்குக் காட்டி அவரை, அவனைப்போலவே போற்றுமாறு அறிவுறுத்தினானானாம்.[2] அது கேட்ட புலவர் வறண்ட காலத்திலும் வளம் குன்றாமல் அவன் ஊர் சிறக்க வேண்டும் என வாழ்த்தினார். மேலும் இந்தப் புலவர் பிறரை நாடாமல் அவன் நினைவாகவே வாழ்ந்தாராம்.
அடிக்குறிப்பு
[தொகு]- ↑
- சிறு கண் யானைப் பெறல் அருந் தித்தன்
- செல்லா நல் இசை உறந்தைக் குணாது,
- நெடுங் கை வேண்மான் அருங் கடிப் பிடவூர் 20
- அறப் பெயர்ச் சாத்தன் கிளையேம், பெரும!புறம் 395 இந்தப் பாடல் சிதைந்த நிலையில் உள்ளது.
- ↑
தன் கடைத் தோன்றி, என் உறவு இசைத்தலின்,
தீம் குரல்......... கின் அரிக் குரல் தடாரியொடு,
ஆங்கு நின்ற எற்கண்டு,
சிறிதும் நில்லான், பெரிதும் கூறான்,
அருங் கலம் வரவே அருளினன் வேண்டி,
...........யென உரைத்தன்றி நல்கி, தன் மனைப்
பொன் போல் மடந்தையைக் காட்டி, 'இவனை
என் போல் போற்று' என்றோனே; அதற்கொண்டு,
அவன் மறவலேனே; பிறர் உள்ளலேனே; (புறம் 395)